இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

காலம் கடத்தும் செயற்பாடு -செல்வரட்னம் சிறிதரன்

இனியும் காலம் கடத்த முடியாது. இது நடவடிக்கைகளுக்கான காலம். எனவே, வார்த்தைகள் போதும். செயற்பட வேண்டும். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை நோக்கி சர்வதேச மன்னிப்புச் சபை இடித்துரைத்திருக்கின்றது.
வடபகுதிக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச்சபையின் பொதுச் செயலாளர் சாளில் ஷெட்டியின் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை, அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களில் நேரடியாகச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர்.
மன்னார் முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, மன்னார் நகரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தமது காணிகளை மீட்பதற்காகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, அரசு பொறுப்பு கூற வேண்டும் என்பதற்காகவும் போராட்டம் நடத்தி வருகின்ற மக்களிடம் நேரடியாக் கலந்துரையாடியிருக்கின்றனர்.
இத்தகைய சந்திப்புக்களில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத் தன்மையையும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்களுடைய உள்ளங்களில் கொழுந்துவிட்ட எரிந்து கொண்டிருக்கின்ற ஆவேசத் தீ உணர்வையும் அவர்கள் மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயம் புதிய அரசாங்கத்தினாலும் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை அவர்கள் நன்றாக அறிந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய பின்னணியிலேயே, சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாளில் ஷெட்டி, உடனடியாகச் செயற்பட வேண்டும் என்று கடுமையான வார்த்தைகளில், அராசங்கத்திற்கு இடித்துரைத்திருக்கின்றார்.
மன்னிப்புச் சபை என்பது பாதிகப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்ற ஓர் அனைத்துலக அமைப்பாகும். அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஒரு கருத்தை வெளியிடுகின்றார் என்றால், அதனை சாதாரணமானதாகக் கருதிவிட முடியாது. அதிலும் ஓர் இறைமையுள்ள அரசாங்கத்தை நோக்கி அவர் கடும் தொனியில் கருத்துரைக்கின்றார் என்றால், அங்கு நிலைமைகள் எல்லை மீறிவிட்டன என்பதே பொருளாகும்.
காலம் கடத்தியது போதும். கதைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஆகவேண்டிய வேலைகளைச் செய்யுங்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் கூறுவதென்றால் வார்த்தை ஜாலங்களும் வாய் வீரமும் போதும். அவற்றை இனிமேலும் சகிக்க முடியாது. உடனடியாகச் செயலில் இறங்குங்கள் என்பது அவருடைய கூற்றின் பொருளாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட காலமாக காத்திருந்துவிட்டார்கள். அவர்கள் இப்போது பொறுமை இழந்துவிட்டார்கள். நீதிக்காக அவர்கள் காத்திருந்தது போதும். இனிமேலும் அவர்களை அவ்வாறு காத்திருக்கச் செய்ய வேண்டாம் என்பது சாளில் ஷெட்டி அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிவுரையையும், இடித்துரைப்பையும் அரசாங்கம் உதாசீனம் செய்வது நல்ல முடிவாக இருக்க முடியாது. கடந்த ஒன்றரை வருட காலமாக காலத்தை இழுத்தடித்துள்ள அரசாங்கத்திற்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது.
இது பிரச்சினைகளை இழுத்தடிப்பதற்கும் காலத்தைக் கடத்துவதற்குமான தருணமல்ல. அரசாங்கம் இனிமேலும் தாமதிக்காமல் செயற்படுவதற்காக வழங்கப்பட்டுள்ள அவகாசமாகும் என்றும் சாளில் ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள்
 ‘இலங்கையில் என்ன நடந்தது என்பதை உலகம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது. எனவே, அந்த உண்மைகளை இனியும் எவரும் வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையில்லை. அந்த விடயங்கள் குறித்து விவாதிக்கவோ, ஆய்வு செய்யவோ இனிமேல் அவசியமில்லை. ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை உருவாக்குதல், நிவாரணமாக நீதியும், இழப்பீடும் வழங்குவது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது,  உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் இலங்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை பிரதமரைச் சந்தித்த போது நாங்கள் அவருக்கு எடுத்துக் கூறியிருக்கின்றோம்’ என செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது அரச படைகள் மனித உரிமைகளை மீறியிருக்கின்றன. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்கத் தவறியிருக்கின்றது. அந்த சட்ட விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரச படைகள் மேற்கொண்டிருந்தன என்பது இலங்கை அராசங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.
பொதுவான இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் பல்வேறு போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளமை பற்றிய தெளிவான தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. நேரடி சாட்சியங்களாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள், அவர்களுடைய உடல்களில் காணப்பட்ட அடையாளங்களாகிய சான்றுகள் மருத்துவ ரீதியாக வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உள்ளுரில் உள்ள பாதிக்கப்பட்டவர்களும் இரகசிய வாக்குமூலங்களின் ஊடாக அரச படைகளின் போர்க்குற்றச் செயல்களை அம்பலப்படுத்தியிருக்கின்றார்கள்.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, சர்வதேச செய்தியாளர் கலம் மக்ரே தயாரித்து அளித்துள்ள இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்கள் பற்றிய ‘இலங்கையின் கொலைக்களம்’- கில்லிங் பீல்ட்ஸ் (Killing Fields),  அதன் இரண்டாம் பாகமாக தண்டிக்கப்படாத போர்க்குற்றங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘இலங்கையின் கொலைக்களம்’, அதன் மூன்றாம் பாகமாக மோதல்கள் அற்ற பிரதேசம் – நோ பயர் ஸோன் (No Fire Zone) ஆகிய ஆவண வீடியோ படங்கள் இலங்கை அரச படைகளின் போர்க்குற்றச் செயல்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.
இந்த ஆவணப்படங்களை, தனக்கு எதிரான திட்டமிட்டதொரு பிரசாரச் செயற்பாட்டின் வெளிப்பாடாகச் சுட்டிக்காட்டி, இலங்கை அரசாங்கம் முற்றாகப் புறந்தள்ளியிருக்கின்றது. இருந்த போதிலும், அவற்றின் உண்மைத் தன்மைக்காகவும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களுக்காகவும் இந்தப் படங்கள் இருபது வரையிலான சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அரச படைகள் ஒருபோதும் மனித உரிமைகளை மீறவில்லை. போர்க்;குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்று யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடித்துக் கூறியிருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் யுத்தத்தில் வெற்றி பெற்று பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த வீரர்களாகிய படைவீரர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அனுமதிக்கமாட்டேன் என்று அவர் சூளுரைத்திருந்தார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடென்ன?
யுத்தத்தில் அடைந்த வெற்றியையடுத்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நல்லாட்சி புரிவதற்குப் பதிலாக, இராணுவத்தை முதன்மைப்படுத்தியதோர் எதேச்சதிகாரப் போக்கினை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடைப்பிடித்து வந்தார்.
அவருடைய இந்த எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. அரசியல் ரீதியான எதிர்ப்பு கிளம்பியது.  நாட்டில் அழிந்து சென்ற ஜனநாயகத்திற்குப் புத்துயிரளித்து, புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் நாட்டில் தீவிரமாகத் தலையெடுத்திருந்தது.
மூன்றாவது முறையாகவும், தானே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற பேராசை கொண்ட ஆவேசத்துடன் 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச வலிந்து ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். ஆனால் அவர் எதிர்பார்த்த வகையில் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. தேர்தலில் அவரைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேனவை புதிய ஜனாதிபதியாக மக்கள் தெரிவு செய்தார்கள். அதனையடுத்து நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் மலர்ந்தது.
ஆனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொருத்தமட்டில், அதன் பெயருக்கு ஏற்ற வகையில் அது நல்லாட்சியாக அமையவில்லை. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போலவே, இராணுவத்தினர் மீது போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படமாட்டாது. அவர்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படமாட்டார்கள். அவ்வாறு அவர்களை குற்றக் கூண்டில் நிறுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் திருத்தமாக அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் நிலையிலேயே தாங்களும் இருப்பதாக பிரதமரும் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான 30ஃ1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி ஒப்புதல் அளித்துள்ள போதிலும், கடந்த ஒன்றரை வருடங்களாக, காலத்தை இழுத்தடிப்பதிலேயே இந்த அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.
யுத்த மோதல்களின் போது என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும். நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் உள்ளக விசாரணை பொறிமுறையின் கீழ் பொறுப்பு கூற வேண்டும். மூன்றாவதாக நிவாரணம் வழங்க வேண்டும். நான்காவதாக நாட்டில் மீண்டும்; யுத்தப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நான்கு செயற்பாடுகளை உள்ளடக்கியதாகவே 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளுடன் உள்ளுர் நீதிபதிகளும் கலந்து இருந்து நீதி விசாரணை நடத்துகின்ற கலப்பு நீதி விசாரணை பொறிமுறையை எந்தவொரு கட்டத்திலும் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் இதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று அவர் எடுத்துரைத்திருக்கின்றார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கூற்றும், மறுப்புரையும்
இதே கருத்தைத்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எந்தக் காரணத்தைக் கொண்டும் இராணுவத்தினர் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படமாட்டார்கள் என்ற தமது சூளுரைப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே போர்க்குற்றங்கள் என்று எதுவுமே நிகழவில்லை. ஆகவே நீதிவிசாரணை என்பது அவசியமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியிருக்கின்றார்.
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று தமிழ் மக்கள் மீது, அரசியல் ரீதியாக அனுதாபம் கொண்டவராகத் தோற்றம் காட்டிய அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இருந்து இத்தகைய கருத்துக்கள் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவி;ல்லை. இதனால், அவருடைய இந்தக் கூற்று தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்திருந்தது.
தமிழ் மக்களுடைய இந்த ஏமாற்ற உணர்வை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கூற்றிற்கு ஆட்சேபணையையும், கண்டனத்தையும் வெளியிட்டார்.
அவருடைய உரையின்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவ்வாறு தான் கூறவில்லை என மறுத்துரைத்தார். தான் கூறாதவற்றையே யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருந்தன என்று அவர் சுட்டிக்காட்டிய போதிலும், அவருடைய மறுப்பு எடுபடவில்லை. அப்படியே அமுங்கிப் போனது.
இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஐநாவும், சர்வதேசமும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்ற வகையில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை – அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அனுசரணை வழங்கியுள்ள நிலையில் – அனைவருக்கும் எடுத்துரைத்திருப்பதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா எடுத்துரைத்திருக்கின்றார்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் வாய்பேச்சுக்கள் போதும் ஆகவேண்டிய காரியங்களைச் செய்யுங்கள் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் பொதுச் செயலாளர் சாளில் ஷெட்டி அரசாங்கத்திற்கு இடித்துரைத்திருக்கின்றார்.
காலத்தை இழுத்தடித்து, சாக்குபோக்குகளைக் கூறிக்கொண்டிருக்கின்ற அரசாங்கம் ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
அத்துடன் அவர் நின்றுவிட வி;ல்லை. அந்தத் தீர்மானத்தை உள்ளது உள்ளபடி நிறைவேற்றும் வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு கொழும்பிலும், சர்வதேச மட்டத்தில் ஜெனிவாவிலும், உலக நாடுகளிலும் அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாகவும் சாளில் ஷெட்டி கூறியிருக்கின்றார்.
உலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தையும் நீதியையும் பெற்றுக்கொடுப்பதற்கும் அயராமல் உழைத்து வருகின்ற சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கான ஆதரவை வெளியிட்டதுடன் நின்றுவிடவில்லை.
அரசாங்கத்திற்கு நேரடியாக விடயங்களை எடுத்துக் கூறி அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்திருக்கின்றது.
‘கதைத்தது போதும் ஆக வேண்டிய காரியங்களைப் பாருங்கள்’ 
ஆனால். தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இத்தகைய அர்ப்பணிப்புடன் காரியங்களை முன்னெடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பாதி;க்கப்பட்ட மக்கள் தங்களுடைய குடியிருப்பு காணி உரிமைக்காகவும், தமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்காகவும், வடக்கிலும் கிழக்கிலும் வீதிகளில் இறங்கி வாரக் கணக்கில் தொடர்ச்சியானதொரு போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.
அவர்களுடைய போராட்டம் ஒரு மாத காலத்தைக் கடந்த நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அதுபற்றி ஆராய்ந்திருக்கின்றார். அதுவும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சாந்தி சிறிஸ்கந்தராசா, சாள்;ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற மக்களுடைய போராட்டங்கள் குறித்து எடுத்துரைத்ததன் பின்னரே, அதுபற்றி அவர் கலந்துரையாடியிருக்கின்றார்.
காணி உரிமைகள் பற்றிய விடயத்தைக் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் குறித்து அங்கு பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
இருப்பினும், இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதாகவும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்துப் பேசுவதாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாகின்றன. ஆனால், வடக்கு கிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுடைய காணிகள் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் இல்லை என கூறப்படுவதுதான், வேடிக்கையான விடயமாக இருக்கின்றது. சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று நாட்களுக்குள் இந்த விபரங்களைத் திரட்டி வழங்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் வேடிக்கையான விடயமாகக் கருதப்படுகின்றது.
சர்வதேசத்தின்; உதவியோடு பிரச்சிகைளுக்குத் தீர்வு காணப் போவதாகவும், அதற்கான நகர்வுகளையே கூட்டமைப்பு மேற்கொண்டிருப்பதாகவும் பிரசாரம் செய்யப்படுகின்றது.
ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்ற பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும், சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திற்குக் கூறியிருப்பதே பொருத்தமாக அமைந்துள்ளது.
‘காலம் கடத்தியது போதும். கதைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. செயற்படுங்கள். ஆகவேண்டிய வேலைகளைச் செய்யுங்கள்’.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.