Home இலங்கை இராணுவ மய நீக்கமே நிலத்தையும் உளத்தையும் விடுவிக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

இராணுவ மய நீக்கமே நிலத்தையும் உளத்தையும் விடுவிக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

by admin

இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கும் சந்திப்பு ஒன்று அண்மையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான இராணுவப் படைதரப்புக்கும் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்க தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. எவ்வாறெனினும் காணிகளை விடுவிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்ற தொனியில் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதில் அக்கறை உடையவராக சில நிகழ்வுகளில் பேசிக் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வுகளை முன்னிட்டு சில தொகுதி காணிகளும் விடுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மைத்திரி அங்குள்ள அகதிமுகாங்களுக்குச் சென்ற பின்னர் அந்த முகாங்களில் உள்ள மக்களின் நிலமையை உணர்வதாகவும் பேசிக் கொண்டார். இவ்வாறான பேச்சுக்கள் இடம்பெற்றபோதும் காணி விடுவிப்பு விவகாரத்தில் மைத்திரி அரசின் போக்கு வழமையான இலங்கை அரசின் போக்காகவே இருந்தது.
முல்லைத்தீவு கேப்பாபுலவில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 62 நாட்களை கடந்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக கேப்பாபுலவில் உள்ள முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என்று பல தரப்பட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பிலக்குடியிருப்பில் முப்பது நாட்கள் போராட்டம் நடத்தப்பட்ட பின்னர் அந்த மக்களின் காணிகள் 84 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. கேப்பாபுலவு மக்கள் 60  நாட்கள் போராட்டம் நடத்தியும் இன்னமும் அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இதேவேளை முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியை சேர்ந்த மக்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடுபட்டுள்ளனர். வட்டுவாகல் கிராமத்தின் ஒரு பகுதி தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார் முள்ளிக்குளம் மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் மக்கள் போராடினர். வடக்கு கிழக்கு எங்கும் இராணுவத்தினர் அபகரித்துள்ள நிலங்களுக்கு முன்னால் போராடத் தொடங்கினால் வடக்கு கிழக்கு முழுவதும் போராட்ட மயமாகவே இருக்கும். அந்தளவுக்கு முழத்திற்கு முழம் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விடுதிகள், சலூன்கள், தோட்டங்கள் என்பன அமைக்கப்பட்டு இராணுவத்தினர் வடக்கு கிழக்கு மண்ணையே ஆக்கிரமித்து ஆள்கின்றனர்.
அண்மையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இரண்டு மூன்று நாட்களாக இராணுவத்தின் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இராணுவத்தின் விளையாட்டுப் போட்டி, இராணுவத்தின் சிங்களப் புத்தாண்டு இசை நிகழ்ச்சி என்று ஒரு பள்ளி மைதானம் இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அங்கு ஒரு போராட்டத்தை நடத்த இயலாது, ஆனால் இராணுவத்தினர் தமது கொண்டாட்டங்களு்ககு மைதானத்தை பயன்படுத்துகின்றனர் என்று கல்வித்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கவலையுடன் கூறினார். பாடசாலைகளின் மைதானங்கள் இராணுவத்தின் மைதானங்களாகவே இருக்கின்றன.
வடக்கில் 27ஆயிரத்து 230 ஏக்கர் காணிகளே முப்படையின் வசமிருப்பதாக தேசிய நல்லிணக்கச் செயலணி தெரிவித்துள்ளது. இராணுவத்தின் வசம் 3 ஆயிரத்து 92 ஏக்கர் தனியார் காணிகளும், 548.5 ஏக்கர் அரச காணிகளும் உள்ளதாகவும் கடற்படையினர் வசம் 513 ஏக்கர் தனியார் காணிகளும், 108 ஏக்கர் அரச காணிகளும் விமானப் படையினர் வசம் 646.5 ஏக்கர் தனியார் காணிகளும், 391.5 ஏக்கர் அரச காணிகளும் உள்ளதாக தெரிவித்துத. அத்துடன் யாழ். மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 252 ஏக்கர் தனியார் காணிகளும், 1047. 72 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 5 ஆயிரத்து 299.39 ஏக்கர் நிலம் இராணுவத்திடம் உள்ளதாகவும் குறிப்பிட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில்  இராணுவத்தினர் வசம் 217.5 ஏக்கர் தனியார் காணிகளும், 1372.5 ஏக்கர் அரச காணிகளும் கடற்படையினர் வசம் 10.38 ஏக்கர் தனியார் காணிகளும், 380.63 ஏக்கர் அரச காணிகளும் விமானப்படையினர் வசம் எந்த நிலங்களுமே இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. மொத்தமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 227.91 ஏக்கர் தனியார் காணிகளும், 1756.15 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 1984.06 ஏக்கர் நிலங்கள் படை வசம் உள்ளதாகவும் நல்லிணக்கச் செயலணி குறிப்பிடுகிறது.
ஆனால், வடக்கில் 65ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் இராணுவத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் 5000 ஏக்கர் காணிகளும் கிளிநொச்சியில் 380 ஏக்கருக்கும் அதிகமான காணிகளும் முல்லைத்தீவில் 35ஆயிரத்து 510 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளது. இதைப்போலவே வவுனியா, மன்னார் முதலிய மாவட்டங்களில் இராணுவத்தின் வசம் உள்ள காணிகள்  தொடர்பான உண்மையான தகவலை தேசிய நல்லிணக்கச் செயலணி வெளியிடவில்லை. சர்வதேச சமூகத்தின் முன்னால் உண்மை நிலையை மறைக்கவும் ஏனைய காணிகளை தொடர்ந்து  ஆக்கிரமிக்கவுமே தேசிய நல்லிணக்கச் செயலணி இவ்வாறு தவறான தகவல்களை வெளியிட்டதா?
இலங்கையின் புதிய அரசாங்கம் காணி விடுவிப்பு விகாரத்தில் வெளிப்படையாக இல்லை என்பதும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பதற்கே விரும்புகிறது என்பதையும் தெளிவாக உணரலாம். தமிழ் மக்களின் பெறுமதி வாய்ந்த நிலச் சொத்துக்களை இராணுவத்தினர் ஆண்டனுபவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவை மக்களின் நிலம். மக்களின் உழைப்பு. அந்த நிலத்தில் வாழ்வதற்காகவே தமிழ் மக்கள் இத்தனை ஆண்டு காலமாக உயிரை கொடுத்துப் போராடினார்கள். தமிழ் மக்களின் பிரச்சினையை விளங்கிக் கொள்கிறோம் என்று சொல்லும் இந்த அரசு, முகாங்களின் கொடுமையை விளங்கிக்கொள்கிறோம் என்று சொல்லும் இந்த அரசு எங்கள் மக்களை 62 நாட்களில் தெருவில் வாழ் வைப்பது ஏன்?
தமிழ் மக்களின் காணி விவகாரத்தில் இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இருதய சுத்தியுடன் அணுகியிருந்தால் இன்றைக்கு எங்கள் மக்கள் தெருவுக்கு வந்திருக்க மாட்டார்கள். கொடிய இனப்படுகொலைப் போரால் யாவற்றையும் இழந்த மக்களை நிலப்பறிப்பு மேலும் மேலும் கொல்கிறது. சொத்துக்கள், வளங்கள் என யாவற்றையும் இழந்த எங்கள் மக்களு்ககு நிலமற்ற இந்த வாழ்வு மேலும் மேலும் கொல்கிறது. 2009போரில் நிலத்தை இழந்தவர்கள் இன்னும் நிலத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது போரும் இல்லை, விடுதலைப் புலிகளும் இல்லை, எதற்காக மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு தரப்பு சந்திப்பில் இரா. சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். காணிகளை விடுவிக்கும் அதிகாரம் தமக்கில்லை என்றும் அது சிவில் அதிகாரமே என்றும் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என்றும் இராணுவத்தரப்பு கூறியுள்ளது. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஜனாதிபதி மைத்திரிபால இதனை அறியாதவரா? அல்லது காணி விடுவிப்பு தொடர்பான பொறுப்பற்ற செயலா? தமிழ் மக்களின் காணியின் அதிகாரம் யாருடைய கையில் உள்ளது?
காணி விடுவிப்புடன் இராணுவ வெளியேற்றம் எமது கோரிக்கையாக இருக்க வேண்டும். இராணுவ வெளியேற்றமின்றி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளுக்கு விடுதலை கிடைக்காது. தமிழ் மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்காது. பிலக்குடியிருப்பில் இருந்து வெளியேறும் இராணுவத்தினர் முல்லைத்தீவில் இன்னொரு பகுதியில் முகாம் அமைத்து வாழ்கின்றனர். இராணுவத்தினர் தமது முகாம் தேவைகளுக்காக வனங்களையும் வனப்பான பகுதிகளையும் அழித்து முகாமிடுவதன் மூலம் எங்கள் நிலத்தின் இயற்கை சமன்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் நிலத்தின் வளமும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
முதலில் இலங்கை இராணுவம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இராணுவம். ஸ்ரீலங்கா அரசுக்கு இலங்கை இராணுவம் பாதுகாப்பு படைகளாக தென்படலாம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இராணுவமும் இராணுவச் சீருடைகளும் இராணுவ முகாங்களும் இராணுவ வாகனங்களும் ஆக்கிரமிப்பின் அழிப்பின் சின்னம். என் தந்தையை அழித்தவர்கள், என் தாயை அழித்தவர்கள், என் பிள்ளையை அழித்தவர்கள் என்றே இராணுவ மயம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே காணி விடுவித்தலுடன் இராணுவ மய நீக்கம் அவசியம் என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும். எமது நிலமும் எமது உளமும் விடுவிக்கப்படவேண்டுமாக இருந்தால் இராணுவமே எங்கள் நிலத்தை விட்டு வெளியேறு என்று உரக்கக் குரல் எழுப்ப வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More