இலங்கை பிரதான செய்திகள்

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பழமையான சுற்றுக்கோயில் இடிக்கப்பட்டுள்ளதாக ஆட்சிக்குழு கவலை:-


மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நீண்டகாலமாக நிலவிரும் நிதி விடயங்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் புதிய சுற்றுக்கோயில் கட்டுவது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் 1976ஆம் ஆண்டு அடியார்களின் நன்கொடையுடன் கட்டப்பட்ட சுற்றுக்கோயிலில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கு மாத்திரமே ஆட்சிக்குழு அனுமதியளித்தது என்றும் ஆனால் அந்த சுற்றுக்கோயில் முற்று முழுதாக இடிக்கப்பட்டுள்ளது எனவும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

உறுதியான மூன்றடுக்கு அம்பாள் கோபுரத்துடன் சேர்ந்திருந்த பரிவாரங்கள் கோயில்கள், பள்ளியறைகள், ஆதிகால மாகாலிங்கம் ஸ்தாபிக்கப்பட்ட மண்டபங்கள் அனைத்தும் காரணம் இன்றி இடிக்கப்பட்டுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இடிக்கப்பட்ட சுற்றுக்கோயிலை புதிதாக கட்டுவதற்கு 32 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது அதேவேளை புணருத்தான திருப்பணிக்காக இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒன்பது கோடி ரூபா வழங்கப்பட்டது.

ஆனால் இரண்டு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மிகுதி ஏழுகோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நிவர்வாகம் பதிலளிக்கவில்லை என்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே நிதிமோசடி குறித்த விவகாரங்களுக்கு பதிலிக்காத நிலையில் புதிய சுற்றுக் கோயிலை கட்டுவது தொடர்பாக மேலும் பல குளறுபடிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த விடங்கள் தொடர்பாக ஆட்சிக்குழு உறுப்பினர்களான சிவகுமார் நமசிவாயம், த.கணநாதலிங்கம் ஆகியோர் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சிவநெறிச் செம்மல் அமரர் விஸ்வப்பா 1982ஆம் ஆண்டு ஆலய புனருத்தான பணிக்காக வழங்கிய சுமார் 74 இலட்சம் ரூபாவில் ஐந்து இலட்சம் மாத்திரமே திருப்பணி செலவுகளுக்காக வழங்கப்பட்டது.

ஏனைய மிகுதி பணத்தை முக்கிய பிரமுகர் ஒருவர் நிதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார் எனவும் இந்த விடயம் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் கண்டு பிடிக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டதாகவும் ஆனால் இதுவரை ஆட்சிக்குழுவுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என்றும் கண்காய்வில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை கணவனை இழந்து இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் ஆலய பணிகளில் ஈடுபடும் பெண்மனி ஒருவர் பூசையில் வைக்கப்பட்ட திரவியத்துடன் கூடிய வெண்சங்கை குருக்களின் ஆசியுடன் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கூடத்தில்  பதித்துள்ளார்.

இதற்கு நிர்வாகம் எவ்வாறு அனுமதித்தது என்று கேள்வி எழுப்பிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இவர்களிடம் இருந்து கணக்கு அறிக்கையில் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை ஆலயத்திற்குச் சொந்தமான சுமார் 50இற்கும் அதிகமான பசுமாடுகள் இறச்சிக்காக கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முறைகேடுகள் குறித்து அகில இலங்கை இந்து மா மன்றம் பதலிளிக்க வேண்டும் என ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆட்சிக்குழுவில் நூறுபேர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி குறித்து மாற்று கருத்து உடையோர் ஆதாரங்களுடன் தமது பக்க நியாயங்களையும் வெளியிட வாய்பு அளிக்கப்படும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.