இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

யாழில் A.O வால் முடங்கும் அலுவலகம் -கதையோடு கதையாக – அராலியூர் குமாரசாமி

A.O வாக அதாவது நிர்வாக உத்தியோகத்தராக இருப்பவர்களில் சிலர் தாங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றார்களா அல்லது வேணுமெண்டு இருக்கின்றார்களா என்று தான் தெரியாமல் இருக்கிறது. இதனால் பல பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரச உத்தியோகத்தர்களுக்கு அவர்களது வேலை தொடர்பில் ஒரு சுற்றுநிருபம் இருக்கிறது. அதற்கேற்ப அவர்கள் வேலை செய்கிறார்கள். அந்த சுற்றுநிருபத்தையே மாற்றியமைக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு. வேறு ஒருவருக்கும் கிடையாது அதாவது அரச அதிகாரிகளுக்கும் கிடையாது. இப்படி இருந்தும் கீழ் நிலை பணிநிலையில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களை வேலை செய்ய விடாது தடுத்து வருகின்றனர். கீழ் நிலை பணியாளர்களாக இருப்பவர்கள் அதாவது நிர்வாக உதவியாளர்கள் வாகன சாரதிகள். போன்றோர் இவர்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

யாழில் அரச அலுவலகங்களின் அதிகாரிகளுக்கு அவர்கள் வேலை செய்வதற்காக வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அலுவலகங்களின் தேவைக்காகவும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களுக்கு சாரதிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சாரதிகள் அலுவலகங்களின் வேலைக்கு மட்டும் வாகனம் ஓடுவதில்லை. அதிகாரிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கும் வாகனம் ஓடுகிறார்கள். அதாவது அதிகாரியின் தனிப்பட்ட தேவை என்று சொன்னால் அவரது உறவுகளின் பொது நிகழ்வுகள் மற்றும் மருத்துவ தேவைக்கும் சந்தைக்கும் அரச வாகனத்தை பயன்படுத்துகின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது சாரதி மட்டும் இல்லை மக்களும் தான். இரவு பகலாக அதிகாரி எங்கு போகச் சொல்லுகிறாரோ அங்கெல்லாம் அதிகாரியைக் கொண்டு சென்று வந்தும் சாரதிகளின் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு தடை போட்டு வருகின்றனர்.

யாழில் வீரம் பேசும் பண்டைய காலத்து வீரர் ஒருவர் வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருக்கும் ஒரு அரச அலுவலகத்திற்கு நிரந்தரமாக ஒரு A.O இல்லையாம். அதனாலை தற்காலிகமாக ஒரு A.O வை போட்டிருக்காம். தற்காலிகமாகத் தான் தான் இருப்பது தெரிந்தும் A.O வை விட மோசமாக பணியாளர்களுடன் நடந்து கொள்கிறாராம். விவசாயம் சம்பந்தமான இந்த அலுவலகத்துக்கு ஆணையாளர் இருந்தும் இவர் ஆட்டம் தான் செல்லுபடியாம். அப்படியென்றால் இவர் ஆணையாளருக்கு வேண்டப்பட்டவராக இருக்கிறார் என்று தான் அர்த்தம். அப்படி என்ன ஆணையாளருக்கும் இவருக்கும் நெருக்கம் என்று பார்த்தால் அதாவது தனிப்பட்ட விருப்பங்களை பூர்த்தியாக்கும் அளவிற்கு, வெளியே சொல்ல முடியாத அளவில் அசிங்கம் பாருங்கோ. இதனால் தான் இந்த தற்காலிக A.O தான் இந்த அலுவலகத்தின் அதிகாரியாக செயற்படுகிறார்.

இந்த அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் கால எல்லை முடிய முன்னர் அதிகாரிக்கு போட்டுக் கொடுத்து தனக்கு பிடிக்காதவர்களை இடமாற்றம் செய்து விடுவாராம். தான் மட்டும் 15 வருடங்களுக்கு மேல் இடமாற்றம் இன்றி பணியாற்றுகிறார் என்றால் பாருங்களேன். இந்த அலுவலக வாகன சாரதிகளின் மேலதிக கொடுப்பனவை வழங்க மறுத்து வருகிறாராம். இவர் தனது வேலையை விட குழிபறிக்கும் வேலையைத் தான் முழு நேரமாக பார்த்து வருகிறாராம். இவர் பணியாற்றும் அலுவலகத்தில் பல அபிவிருத்தி வேலைகள் கிடப்பில் இருக்கும் போது செய்த வேலைகள் ஒழுங்காகச் செய்யாமல் இருக்கும் போது அதைப் பற்றி அக்கறையுமின்றி தனது குழிபறிக்கும் வேலையை சரியாகச் செய்து வருகிறார்.

யாழில் வெளிவரும் ஒரு பத்திரிகையில் இவரைப் பற்றி செய்தி வெளிவந்தது. இவரைப் பற்றி அந்தப் பத்திரிகைக்கு அலுவலகத்தில் இருந்து தான் தகவல் வழங்கியிருக்கக் கூடும் என்ற காரணத்தால் தனக்கு இணங்காத 3 பெண் சில ஆண் உத்தியோகத்தர்களை இடமாற்றி இருக்கிறார் என்றால் பாருங்களேன். தற்சமயம் ஆணையாளர் வெளிநாடு ஒன்றிற்கு சென்றுள்ளார். இவரின் இடத்துக்கு தற்காலிகமாக ஒரு ஆணையாளர் சேவையில் இருக்கிறார். இவரைப் பயன்படுத்தி தனது திட்டத்தை தீட்டலாம் என்று இவர் நினைத்தார் அது தற்சமயம் முடியாமல் இருக்கிறது. போகப் போகப் தான் பார்க்க முடியும்.

கொக்குவிற்கு வில்லைப் பிடித்து அம்பு விட்டது போல் ஒரு சிறிய குளத்திற்கான வாய்க்கால் சரியாக புனரமைக்காததால் மழை நீர் ஊருக்குள்ளும் வடிகிறது. கோப்பையில் சாப்பாடு மட்டும் போடலாம் தண்ணீர் தாங்க முடியாதது போல் சிறிய குளம் ஒன்று புனரமைத்தும் பழைய குளம் போல் காட்சியளிக்கிறது. எத்தனை சிறிய குளங்கள் அதாவது குட்டைகள் இன்னும் புனரமைக்காமல் இருக்கிறது. இந்த வேலைகளை ஒழுங்காகச் செய்யும் பொறுப்பு இந்த அலுவலகத்திடம் இருக்கிறது. அதற்காகத் தான் இவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. சிறிய குட்டைகளை புனரமைக்க முடியாமல் இருக்கும் இந்த அலுவலகத்தின் ஆணையாளர் வெளிநாடு சென்று என்னத்தை தான் பார்த்து வரப் போகிறார் என்று தான் தெரியாமல் இருக்கிறது. அது மட்டும் இந்த நிர்வாக உத்தியோகத்தரின் ஆட்டம் தான். யார் தான் பாட்டை நிற்பாட்டப் போகிறார்களோ?

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers