இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இன்று மே தினம்! தொழிற்சாலைகள் இராணுவமுகாங்களாக உள்ளன! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்


மே தினம் என்பது உழைப்பாளர்களின் தினம். உழைப்பாளர்களுக்கான தினம். ஒரு வகையில் உழைப்பாளர்களின் ஆயுதமே இந்தத் தினம். அவர்கள் தம்மை அடையாளப்படுத்தும் தினம். அவர்கள் தமக்காக தாம் போராடும் நாள். ஆனால் இப்போது இந்த நாள்கூட உழைப்பாளர்களிடமில்லை. இந்த நாள் முதலாளிகளின் வசம் சென்றுவிட்டது. இது முதலாளிகளின் தினமாகிவிட்டது. அரசியல் தலைவர்கள்தான் இப்போது இந்த நாளின் கதாநாயகர்கள் ஆகிவிட்டனர். உழைப்பாளர்கள் எங்கோ ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டுவிட்டார்கள். உண்மையில் உழைப்பாளர்களின் பிரச்சினையை அவர்களின் தளத்திலிருந்து அரசியல் ரீதியான கவனத்தை கோருவதுதான் உழைப்பாளர்களின் போராட்டம் மற்றும் மே தினம். ஆனால் இன்றைக்கு உழைப்பாளர்களின் அமைப்புக்களை அரசியல் கட்சிகள் குத்தகைக்கு எடுத்துவிட்டன. பல நாடுகளின் உழைப்பாளர்களின் அமைப்புக்கள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள். பெரும் முதலாளிகள் அரசியல் தலைவர்களாக உருவெடுத்து உழைப்பாளர் அமைப்புக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். தமது அரசியல் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர்.
18 மற்றும் 19ஆம் நூற்றாண்டில் மிகவும் அபாரமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு நாளில் 12 மணித்தியாலங்கள் வேலை நேரமாக செயற்படுத்தப்பட்டு மனித உழைப்பு சுறண்டப்பட்டது. கட்டாய வேலை பெறப்பட்டது. இதற்கு எதிராக உழைப்பாளர்களிடமிருந்து குரல்கள் வலுப்பெற்றன. இங்கிலாந்தில் சாசன இயக்கம் உருப்பெற்று 6 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது. முக்கியமாக 10 மணிநேர வேலையை அவர்கள் தமது போராட்டத்தின்போது கோரிக்கையாக முன்வைத்தனர். பிரான்சில் 1830களில் 15 மணிநேரம் கட்டாய வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் பிரான்ஸ் நெசவு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். இதனை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோசத்தை முன்வைத்து 1834இல் அவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1889 ஜூலை 14இல் சோசலிச தொழைிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் பாரிசில் கூடியது. இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பிரெட்ரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்ட முக்கியமான பலர் அதில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சோசலீசத்தின் தந்தை என்றும் உழைப்பாளர்களின் தலைவன் என்றும் போறப்பட்டும் கால்ஸ் மாக்ஸ் 8 மணிநேர வேலையை வலியுறுத்தினார். சிக்காகோ சதியை இந்த மாநாடு வன்மையாக கண்டித்தது. 1890இல் உலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றிணைத்து நடத்த வேண்டும் என்ற அறைகூவலையும் இந்தக் கூட்டம் விடுத்தது. அந்த அறைகூவலே மே முதல் நாளை உலக உழைப்பாளர் தினமாக – மே தினமாக கொண்டாட வழிவகுத்தது.
 
உலகில்உள்ள அனைவரும் எட்டு மணிநேர வேலையை செய்வதற்கு இந்தப் போராட்டமே காரமாண அமைந்தது. அதன் பின்னர் உழைப்பாளர்களின் உரிமையை வலியுறுத்தும் அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் நாளாக மே ஒன்று கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் இன்றும் பல தொழிலாளர்கள் எட்டுக்கு மேற்பட்ட மணிநேரங்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். அதிகாலை ஐந்து மணிக்கு வேலைக்குச் சென்று மாலை ஏழுமணிக்கு வீட்டுக்கு அனுப்பும் ஆடைத்தொழிற்சாலைகள் நமது மண்ணிலேயே உள்ளன.
 
அப்பாவி கூலித்தொழிலாளர்களின் நிலமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவர்கள் தினக்கூலிக்காக வேலை நேரத்திற்கு அதிகமாக வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தொழிற்சங்கங்களோ, அமைப்புக்களோ இல்லை. அவர்கள் சமூகத்தில் உதிரிகளாக பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இன்றைய மே தினத்தில்கூட அவர்கள் எங்கோ கூலிக்கு வேலை செய்தடியிருப்பார்கள். இன்றைய மே தினத்தை கொண்டாடும்முதலாளிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சமைத்து உணவுகொடுக்கும் சமையல் தொழிலாளியின் நிலைதான் இன்றைய உதிரி உழைப்பாளர்களின்நிலை.
 
இன்றைக்கு பல்தேசிய கம்பனிகள் உழைப்பாளர்களை கடுமையாக சுறண்டுகிறது. அங்கு பணியாற்றும் உழைப்பாளிகளின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் வாய் திறக்க முடியாது. வேலை நேரத்திற்கு அதிகமான வேலை, சுயமரியாதையை பாதிக்கும் அணுகுமுறைகள்என்பவற்றால் உழைப்பாளர்கள் உளமளவில் பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர். இலங்கையின் தலைநகர் கொழும்பில் இத்தகைய பல்தேசிய கம்பனிகள் தாராளமாய் விளைந்துவிட்டன. அவை வடகிழக்கிலும் பெருகிவிட்டன. ஒருவரது உழைப்பை முடிந்தவரை சுறண்டிவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பும் பல்தேசிய கம்பனிகள் தமதுகொள்கையாக வைத்துள்ளன. பின்னர் புதிய ஒருவரை எடுத்து அவரது குருதியை உறிஞ்சும் செயற்பாட்டை ஆரம்பிக்கும்.
 
இலங்கையில் மகிந்த ராஜபக்ச தலைமயில் மே தினக்கூட்டம் என்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மே தினக்கூட்டம் என்றும் செய்திகள் சில நாட்களாக வந்தன. மே தினம் முதலாளிகளின் அரசியலுக்காகவே இன்று அனுஷ்டிக்கப்படுகிறது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. தமது அரசியலை செய்யும் அரங்காகவே மே தின அரங்கை அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர். இதன்போது தொழிலாளர்களின் பிரச்சினையையும் அவ்வாறு அணுகி அதனை வலுவிழக்கச்செய்யும் செற்பாடும் இடம்பெறுகின்றது. இங்கு தொழிலாள்களின் குரலைக் காண முடியாது.
 
தமிழர் தாயகத்திலும் கட்சிகளின் மே தினம் கூட்டமே நடைபெறுகின்றது. தொழிலாளர்களின் மேதினக் கூட்டத்தைக் காணமுடியவில்லை. ஆனால் 2009இற்கு முற்பட்ட காலத்தில் தொழிலாளர்களின் கூட்டறவு அமையங்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து மேதினக்கூட்டங்களை நடத்தியுள்ளன. அதில் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வெளிப்பாடுகள், ஆற்றுகைகள்,உரைகள் என்று பலவும் நிகழ்த்தப்பட்டன. ஆனால் இன்றைக்கு கட்சிகளின் ஆதரவாளர்கள் மேதினத்தை கொண்டாடுகின்றனர்.
 
வடகிழக்கில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். மீனவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமது கடற்தொழிலை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களையும் தடைகளையும் ஒடுக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள். பரந்தன் இராசயனத் தொழிற்சாலை, கந்தபுரம் கரும்புத் தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் இராணுவத்தின் முகாங்களாக உள்ளன. இதில் தொழில்புரிந்த தொழிலாளர்கள் பல வருடங்களாக தொழிலின்றி தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
 
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுதல், இன ஒடுக்குமுறை, இராணுவ ஆக்கிரமிப்பு, இராணுவ ஆதிக்கம், உரிமையற்ற வாழ்வு என்பவற்றால் தொழிலாளர்கள்தான் முன்னரங்கில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களின் பாதிப்பே தமிழ் சமூகத்தின் பாதிப்பாக அமைகிறது. போருக்குப் பிந்தைய நிலையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குருதியையும் உழைப்பையும் சுறண்டும் நிறுவனங்கள் தமிழர் மண்ணில் கூடாரமிட்டுள்ளன. லீசிங் முறையில் ஒரு பொருளை கொடுத்துவிட்டு ஒரு லீசிங் கம்பனி உழைப்பாளி ஒருவரை கொல்லுகிற சம்பவங்களும் நடக்கின்றன.
 
போருக்குப் பின்னர் வடக்கில்தான் நிதி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இவை போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உழைப்பை – நிதியை வெகுவாக சுறண்டுகின்றன. இதனால் பல குடும்பங்கள் கண்ணீரில் தள்ளாடுகின்றன. நொந்துபோன, காயப்பட்ட சமூகத்தில் தமது எண்ணங்கள்ஈடேறும் என்று நிதி நிறுவனங்கள் கருதுகின்றன. இவ்வாறு பல வழிகளிலும் உழைப்பு சுறண்டப்படுகிறது. தொழிலாளர்களின் நிம்மதி பறிக்கப்படுகிறது. உழைத்துழைத்து நிம்மதியின்றி அல்லல்படும் உலகின் அனைத்து தொழிலாளர்களின் பிரச்சினையையும் தீரக்கப்படவேண்டும் அவர்களின் வாழ்வில் உண்மையான விடிவு ஏற்படவேண்டும் என்பதையே இந்த நாளில் வலியுறுத்துவோம். அதற்கான செயல்களில் ஈடுபடுவோம்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers