Home பல்சுவை அடுத்த பிறவி என இருந்தால் சில்க் ஸ்மிதா என் மகளாக பிறக்க வேண்டும்! வினுசக்ரவர்த்தியின் பாசம்! – கதிர்பாரதி

அடுத்த பிறவி என இருந்தால் சில்க் ஸ்மிதா என் மகளாக பிறக்க வேண்டும்! வினுசக்ரவர்த்தியின் பாசம்! – கதிர்பாரதி

by admin

“ஏவி.எம் ஸ்டூடியோ முன்னாடி நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ பதினாறு, பதினேழு வயசுப் பொண்ணு, மாவு அரைச்சப் பையோடு என்னைக் கடந்து போனாள். அவ கண்ணும் அனாடமியும் என்னை ஆச்சர்யப்படுத்துச்சு. அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு, `சினிமாவுல நடிக்கிறீயா?’ன்னு கேட்டேன். `நல்ல ரோல் கிடைச்சா ஓகே. இங்கே சொந்தக்காரங்க வீட்லதான் வேலைபார்க்கிறேன். அவங்ககிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிருச்சு. ரெண்டு நாள் கழிச்சு வந்த அந்தப் பொண்ணைத்தான் நான் `வண்டிச்சக்கரம்’ படத்துல `சிலுக்கு ஸ்மிதா’வா அறிமுகப்படுத்தினேன். சிலுக்கோட நடிப்பைப் பார்த்துட்டு புரொடியூஸர் மணியும் சிவகுமாரும், ` இந்தப் பொண்ணை எங்க பிடிச்சீங்க?’னு அசந்துபோனாங்க’’ என ஒரு டி.வி பேட்டியில் நெகிழ்ந்தார் மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தி. “ஆயிரம் திரைப்படங்களுக்குமேல் நடித்திருக்கிறார். கதாசிரியர் என்பதெல்லாம் அவரது அடையாளங்களாக இருந்தாலும், முக்கிய அடையாளம், ‘சில்க் ஸ்மிதா’வைத் தென்னிந்திய சினிமாவுக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதுதான்” என்று திரையுலகத்தினர் சொல்வார்கள்.

“ஜெர்மன் நாட்டுக்கு ஒரு கலைவிழாவுக்காகப் போயிருந்தப்போ, `நீங்களும் சில்க் ஸ்மிதாவும் ஓர் அறையில் தனியாக இருக்கும் சூழ்நிலையில், உங்களுக்குள் என்ன மாதிரியான உறவு இருக்கும்?’னு கேள்வி கேட்டாங்க. அதுக்கு நான், `ஒரு வாத்தியாருக்கும் சீடருக்கு என்ன உறவு இருக்குமோ, அந்த உறவுதான் எங்களுக்குள்ள இருக்கும்’னு சொன்னேன். ஆனா, சில்க்குக்கும் எனக்கும் அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, அவ எனக்கு மகளா பிறக்கணும்னு ஆசைப்படுறேன்’’ நெகிழ்ந்தவர் வினுசக்கரவர்த்தி.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்த அளவுக்கு வேறு எந்த நடிகையின் வாழ்க்கையிலும் சடார் பள்ளங்கள், திடீர் உயரங்கள், அதலபாதாளச் சறுக்கல் பக்கங்கள் இருக்காது. `நடிக்க வராவிட்டால் நான் ஒரு நக்சலைட் ஆகியிருப்பேன்’ என ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தவர் `கவர்ச்சிக் கன்னி’ எனத் தென்னிந்தியத் திரையுலகமே கொண்டாடிய சில்க் ஸ்மிதா என்றால், நம்ப முடிகிறதா? பதினைந்து வயது வரையிலான அவரின்  வறுமை வாழ்க்கைத்தான் அவரை அப்படிச் சொல்லவைத்திருக்கிறது.

வாஹினி ஸ்டூடியோவில் சில்க் ஸ்மிதா நடிக்கும் ஒரு படத்தின் படப்படிப்பு. சில்க் ஸ்மிதா அணியவேண்டிய ஆடையைக் கொடுத்திருக்கிறார் காஸ்ட்டியூமர். அதன் அளவு சிறியதாக இருந்திருக்கிறது. வாங்கி பார்த்த சில்க், `என்ன ஆச்சு உங்களுக்கு? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய சைஸ்ல டிரெஸ் குடுக்கிறீங்க? இதைப் போட்டுக்கிட்டு நான் நடிச்சா, படம் எப்படி ஓடும்… புரொடியூஸருக்கு எப்படி லாபம் கிடைக்கும்? கத்தரிக்கோல் எடுத்துட்டு வாங்க’ எனச் சொல்லி, ஆடையை மிக மிகச் சிறியதாக்கி, `இதை ஸ்டிச் பண்ணி எடுத்துட்டு வாங்க. அப்பத்தான் நான் வாங்குற அதிக சம்பளத்துக்கு நியாயம் செஞ்சதா இருக்கும்’ எனச் சொல்லியிருக்கிறார். இப்படி சினிமாவில் சில்க் ஸ்மிதாவின் அதிரடிகள் மிகப் பிரசித்தம்.

அதே நேரத்தில் மிகவும் நெகிழ்வானவர் சில்க் ஸ்மிதா. படப்பிடிப்பில் கலந்துகொள்ள சிவாஜி கணேசன் வந்தால், எல்லோரும் எழுந்து நிற்பார்கள். ஆனால், சில்க் ஸ்மிதா மட்டும் சேரில் உட்கார்ந்தே இருப்பார். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, `எழுந்து நின்னா, என் குட்டைப் பாவாடை சிவாஜி சாருக்குக் கூச்சத்தையும் சங்கடத்தையும் உண்டாக்கிடும். அதனால்தான் உட்கார்ந்தே இருக்கேன்’ எனச் சொல்லி, சிவாஜியையும் நெகிழவைத்தவர் சில்க் ஸ்மிதா. எவ்வளவு கவர்ச்சியாகவும் நடிக்கக் கூச்சப்படாத சில்க்குக்கு, பிறரின் கூச்சத்தை மதிக்கும் மனம் இருந்ததற்கு ஒரு துளி உதாரணம் இது.

“1980-களில் வெளிவந்த தமிழ் சினிமாக்களில் சில்க்கின் நடனம் இடம்பெறாத படங்கள் மிகக் குறைவு. இதில் ரஜினி, கமல் நடித்த படங்களும் அடக்கம். அந்தப் படங்கள் ரஜினி, கமலுக்காக ஐம்பது சதவிகிதம் வியாபாரமாகின என்றால், சில்க்கின் ஒரு நடனத்துக்காக மீதி ஐம்பது சதவிகிதம் வியாபாரமானது. அப்போதெல்லாம் `படத்துல சில்க்கோட பாட்டு ஒண்ணு கட்டாயம் வெச்சுடுங்க’ என்பது தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் மறக்காமல் வைக்கும் கோரிக்கை. தமிழ் சினிமாவில் இந்த டிமாண்ட் வேற எந்த நடிகைக்கும் இருந்ததில்லை’’ என்கிறார் பிரபல சினிமா மக்கள் தொடர்பாளர் மௌனம் ரவி.

ஆந்திரா மாநிலம் ஏலூருதான் சில்க் ஸ்மிதா பிறந்த ஊர். பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கரூர் என்கிறார்கள். இயற்பெயர் விஜயலட்சுமி. இவரின் சிறுவயதிலேயே அப்பா வீட்டைவிட்டு வெளியேற, வறுமையில் தள்ளாடியது குடும்பம். வறுமை வாழ்வு தந்த அழுத்தத்தால், சினிமாவில் நடிக்க இவரை சென்னைக்கு அழைத்துவந்தவர் அன்னபூரணி என்கிற உறவுக்காரப் பெண்மணி. படிப்பில் சுட்டியாக இருந்தாலும் நான்காம் வகுப்புடன் நின்றுவிட்டது படிப்புவாசம். ஆனாலும் ஆங்கிலம் கற்பித்து, இவரை ஆங்கிலத்தில் பேசவைத்தார் நடிகர் வினுசக்கரவர்த்தியின் மனைவி. இரண்டாம்நிலை நடிகர்களுக்கான ஒப்பனைக் கலைஞராகத்தான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார் சில்க். ஆனால், தனது 17 வருட சினிமா வாழ்க்கையில் தென்னிந்திய மொழிகளில் 450 படங்களில் நடித்து முடித்திருந்தார். பெரும்பாலும் கவர்ச்சிக் கன்னியாக அறியப்பட்ட சில்க் ஸ்மிதாவுக்குள் தேர்ந்த நடிகை ஒருவர் இருந்ததற்கு இரண்டு படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஒன்று, `அலைகள் ஓய்வதில்லை’. மற்றொன்று, `அன்று பெய்த மழையில்’.

`அலைகள் ஓய்வதில்லை’ எஸ்தர் கேரக்டரில் கணவனை எதிர்த்து காதல் திருமணம் செய்துவைக்கும்போது அவர் முகத்தில் காட்டும் உறுதி, `அன்று பெய்த மழையில்’ இவர் நாயகியா, வில்லியா என்பதையெல்லாம் தாண்டி, நடிப்பால் பார்வையாளர்களை வசீகரித்தது, பாலுமகேந்திரா இயக்கத்தில் நடித்த `மூன்றாம் பிறை’… போன்ற படங்கள் நமக்கு உணர்த்துவது `நல்ல நடிகை ஒருவர், கவர்ச்சிக் கடலில் கரைந்துபோனார்’ என்பதைத்தான்.

நடித்த காலத்தில் கதாநாயகியைவிட அதிக சம்பளம் வாங்கியவர் சில்க். ஆனால், அதையெல்லாம் மறந்து சில்க்கின் நடை, உடை, மேக்கப், வசன உச்சரிப்பில் உள்ள குழைவு… ஆகியவற்றை இன்றளவும் புகழ்ந்து பேசுகின்றனர் ரேவதி, அமலா, நதியா போன்ற நடிகைகள்.
சில்க் கடித்த ஆப்பிளை ஏலம் எடுத்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால், தமிழ் சினிமா மீது கொஞ்சம் ஒவ்வாமையுடனேயே இருந்தார் சில்க்.

“அவர், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவன முதலாளி. அப்போது அவரின் நிறுவன தயாரிப்பில் ஒரு படம் நடித்துக்கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா. படப்பிடிப்புத் தளத்துக்கு அந்தத் தயாரிப்பாளர் வந்தபோது, எல்லோரும் எழுந்து வணக்கம் சொன்னார்கள். ஆனால், சில்க் மட்டும் கால்மேல் கால் போட்டு சேரில் உட்கார்ந்திருந்தார். தயாரிப்பாளர் அதைக் கண்டும் காணாததுபோல போய்விட்டார். அதைப் பற்றிக் கேட்டபோது, `அவர் படத்தில் எனக்குக் கௌரவமான வேடம் கொடுத்தா நடிக்கவைத்திருக்கிறார், நான் அவருக்கு எழுந்து மரியாதையோடு வணக்கம் சொல்ல? என்னால்தான் அவருக்கு லாபம். அவர்தான் எனக்கு வணக்கம் சொல்லணும்… நான் அல்ல’ என்று சொன்னார்’’ என்கிறார் இதை நேரில் பார்த்த சினிமா பத்திரிகையாளர் ஒருவர்.

மலையாளத் திரையுலகம், சில்க்கின் கவர்ச்சியோடு சேர்த்து அவரது தன்மானத்தையும் கொண்டாடியது. தமிழில் அறிமுகமான அதே 1979-ம் ஆண்டு `இணையே தேடி’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார் சில்க். தனது கடைசிக்காலம் வரை அந்தத் திரையுலகத்துடன் நெருக்கமாகவே இருந்தார். கிட்டத்தட்ட 450 படங்களில் நடித்து புகழ், பொருள் எல்லாம் கிடைத்திருந்தாலும் ஒருவித நிம்மதியின்மை சில்க்கைத் துரத்திக்கொண்டே வந்தது.

“கடைசிக்காலத்தில் யாரை நம்புவது யாரை தூரத்தில் வைப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். அவருக்கு மனரீதியாக சில பிரச்னைகள் இருந்தன. இவையே 35 வயதிலேயே அவர் மரணிக்க, 90 சதவிகிதக் காரணங்களாக இருந்திருக்கும். எல்லோரும் சொல்வதுபோல படத்தயாரிப்பில் பணத்தை இழந்தார் என்பதெல்லாம் இல்லை’’ என்கிறார் மௌனம் ரவி.

இந்தியில் ‘டர்டி பிக்சர்’ என தனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் அளவுக்கு உயர்ந்த சில்க் ஸ்மிதாவுக்கு, குடும்ப வாழ்க்கை மீது அதீத ஆர்வம் இருந்தது. குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு சராசரிப் பெண்மணியாக வாழ ஆசைப்பட்டார். அதைப் பயன்படுத்தி, சிலர் அவரது வாழ்வில் வந்து போனார்கள். ஆனால், அவரைக் கடைசியில் ஒரு மர்ம மரணம் மட்டுமே அரவணைத்துக்கொண்டது.

சில்க் ஸ்மிதா  மரணம் பற்றி, `ஆடை விதவையாகிவிட்டது’ என்ற தலைப்பில் கவிஞர் பழநிபாரதி ஒரு கவிதை எழுதியிருப்பார். அதில் இப்படி சில வரிகள் வரும்… `இன்னும் நம்ப முடியவில்லை / இதுவும் மரணத்துக்கு நீ கொடுத்த / மாடலாக இருக்கக் கூடாதா? / அணிந்துபார்க்க முடியாமல் / விதவையாகிவிட்டது உன் ஆடை / குங்குமத்தின் கனவோடு / நீ ஒரு ஸ்டிக்கர் பொட்டாகவே வாழ்ந்துவிட்டாய்…

நன்றி – விகடன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More