இலங்கை

சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது – ஜனாதிபதி

சைட்டம் தனியார் மருத்துவ பீடத்தை அடிப்படையாகக்கொண்டு எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் கொள்கைசார்ந்த தீர்மானங்களை எடுத்துள்ள நிலையில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டு சிலர் வேலை நிறுத்தங்களில் ஈடுபவது கவலையளிக்கிறது என ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

அரசியல் சம்மட்டிகளாகவன்றி தங்களுடையவும் நாட்டினதும் எதிர்காலத்திற்காக தமது கல்வி நடவடிக்கைகளை  வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லுமாறு வைத்தியபீட மாணவர்களிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாட்டின் கல்வித்துறையில் எந்தவொரு பிள்ளைக்கும் அநீதி இடம்பெற தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தற்போது தீர்வுகளை வழங்கியுள்ளது. குறித்த மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சியை கட்டாயமாக்குதல், இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரிக்கும் தேர்வில் தோற்றுவதை கட்டாயமாக்குதல், மருத்துவ பட்டத்திற்கான ஆகக் குறைந்த தகைமைகளை அறிவித்தல், குறித்த தனியார் மருத்துவமனையை அரச உடைமையாக்குதல், தனிநபருக்கு சொந்தமாக உள்ள நிறுவனத்தை கூட்டு வியாபார நிறுவனமாக மாற்றுதல், நிறுவனத்தின் நிர்வாகத்தை அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்படும் ஒரு நிர்வாகக் குழுவின் கீழ் கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் தேவைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் இந்த வேலை நிறுத்தங்களின் மூலம் பாதிக்கப்படுவது நாட்டின் சாதாரண பொது மக்களாவர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரச்சினைகள் இருக்குமானால் எந்தவொரு தொழிற்சங்கமும் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென்றும் குறிப்பிட்டார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.