
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரியும் என கூறிய இருவரிடமும் தாம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டதாக ஊர்காவற்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ. சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதன் போது இரு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , குறித்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரியும் என கூறிய இரு நபர்களிடமும் வாக்கு மூலத்தை தாம் பெற்றுக்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அது தொடர்பில் தெரிவிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி நீதிமன்றில் திருட்டு குற்றம் தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி , தனக்கு கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் சில தகவல்கள் தெரியும் என நீதிமன்றில் தெரிவித்தார்.
அதனை அடுத்து கிளிநொச்சி நீதிபதி அந்த நபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவு இட்டு இருந்தார். அதேவேளை சிறைசாலையில் சந்தேக நபர்களிடம் தனக்கு இந்த சம்பவம் குறித்து சில தகவல்கள் தெரியும் அதனை நீதிமன்றில் தெரிவிக்க வேண்டுமாயின் தனக்கு 5 இலட்ச ரூபாய் தர வேண்டும் என பேரம் ஒருவர் பேரம் பேசியதாக கூறப்பட்ட நபரிடமும் தாம் வாக்கு மூலங்களை பதிவு செய்து உள்ளதாக ஊர்காவற்துறை போலீசார் தெரிவித்தனர்.
சிறைசாலையில் சந்தேக நபர்களுடன் பேரம் பேசியதாக கூறப்படும் நபர் நெடுந்தீவில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றத்திற்காக யாழ்.மேல் நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment