இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரை மீட்பதற்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.
இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன் இன்றையதினம் விசாரணை ஆரம்பமாகும் என அறிவித்திருந்தது. இந்தநிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் ஆரம்பமான நிலையில் இரு தரப்பும் வாதத்தை முன்வைக்க தலா 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
முதலில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்த இந்தியா ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் தெரிவித்தது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்றும், தவறான நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Add Comment