Home உலகம் தமிழர் தாயகத்தில் செயற்பாட்டாளர்கள் மீது தொடரும் அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்- தமிழ் மக்கள் பேரவை

தமிழர் தாயகத்தில் செயற்பாட்டாளர்கள் மீது தொடரும் அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்- தமிழ் மக்கள் பேரவை

by admin

முள்ளிவாய்க்காலில்  நினைவேந்தல்  நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய , நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ அமைப்புகளில்  ஒன்றான தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளருமான   வணபிதா எழில்ராஜன் அவர்கள் மீது, விசாரணை எனும் பெயரில் தொடர்கின்ற  அச்சுறுத்தலை தமிழ் மக்கள் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்குள்ளான அவர், இந்த முறை மூன்றாவது தடவையாகவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது, அவரது பெற்றோர்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

நினைவுகூரும் உரிமையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் இந்த மிகவும் மோசமான அடக்குமுறை குறித்து, அதிலும், அடிகளாரின் வயோதிப பெற்றோரையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய இந்த அடக்குமுறை குறித்து தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது.

இது மட்டுமல்லாது, வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திய செயற்பாட்டாளர்கள் , கலந்துகொண்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது இராணுவப்புலனாய்வாளர்களால் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றது. இவற்றை ஆழ்ந்த விசனத்துடன் நாம் சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பிக்கின்றோம்.

பல்வேறு இடங்களிலும் தனித்தனியாக இடம்பெறும் இப்படியன அச்சுறுத்தல்களும் துஸ்பிரயோகங்களும், எதிர்காலத்தில் நினைவுகூரல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எமக்கு உணர்த்துகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட ரீதியில் இவை நடக்கும்போது, எம்மீதான அச்சுறுத்தல்களை குறைத்துக்கொள்ளமுடியும் எனவும் அப்படி அச்சுறுத்தல்கள் இடம்பெறுகின்றபட்சத்திலும் அதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை இலகுவாக எடுக்கமுடியும் எனவும் தமிழ்மக்கள் பேரவை கருதுகிறது.




நினைவுகூருதல் எனப்படுவது ஒரு அடிப்படை மனித உரிமை. நினைவுகூருபவர்களை அச்சுறுத்துவதென்பதானது, நினைவுகூரலை மறுதலிக்கின்ற ஒரு அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலேயாகும். இதன் மூலம் இப்படியான நினைவுகூரல்களை ஒழுங்குபடுத்துபவர்களும் கலந்துகொள்பவர்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளாவார்கள் எனும் செய்தியை எமது மக்களுக்கு வழங்கி, ஒரு அச்சமூட்டும் சூழலை தொடர்ந்தும் பேணி, அதன் மூலம் மக்களை தாமாகவே இப்படியான நடவடிக்கைகளிலிருந்து  ஒதுங்க வைக்கும் ஒரு  உளவியல் போராகவே நாம் இதனை பார்க்கின்றோம்.

நேரடி வன்முறையை பாவித்து முன்னைய அரசாங்கம் நினைவுகூரல்களை அடக்கியிருந்தது. நல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமானது, உளவியல் போரின் அங்கமான மறைமுக அழுத்தங்கள்  மூலம் நினைவுகூரும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறது.

நினைவுகூருதலை மறுதலிப்பதென்பது, ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமையை மறுதலிக்கிக்கின்ற ஒரு செயற்பாடென்பதோடு, அச்சமூகத்தின் கூட்டு உளவியலையும் தொடர்ந்தும் சிதைவுற்ற நிலையில் பேணும் ஒரு முயற்சியேயாகும்.

நினைவுகூரும் உரிமையை வழங்கியுள்ளோம் என வெளியுலகிற்கு கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் , களத்தில், உண்மையான நடைமுறையில் அந்த நினைவுகூரும் உரிமையை அச்சுறுத்தல்கள் மூலம் கபடமான முறையில் மறுதலிப்பது  என்பது முன்னைய அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கியே வேறு வடிவங்கள் மூலம் இந்த அரசாங்கமும்  நகர்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றது. அத்துடன், நல்லிணக்கம் எனக்கூறிக் கொண்டு, நல்லிணக்கத்தின் முக்கிய அங்கமான நினைவுகூரலை திட்டமிட்டரீதியில் மறுதலிப்பதென்பது, இந்த அரசாங்கத்துக்கும் இதயசுத்தியான நல்லிணக்கத்தில் அக்கறையில்லையென்ற விமர்சனங்களை நிரூபிக்கின்றது.


சிறிலங்காவின் நடைமுறைக் கள யதார்த்தத்தை பொறுத்தவரையில் , காவல்துறை விசாரணை என்பது சாதாரண சிவில் சட்ட நீதி நடவடிக்கையாக மட்டும் கருதப்படமுடியாதது. அரசின் தொடர்ச்சியான இன ஒடுக்குமுறை செயற்பாட்டில் கணிசமான பங்கை சிறிலங்கா காவல்துறையும் வகித்திருந்தது. சிறிலங்கா காவல்துறை குறித்து எதுவித நம்பிக்கையுமற்ற, அச்ச உணர்வும் உளவியல் வடுவுமே பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ் மக்களின் மனதில் இருக்கிறது என்ற பின்னணியிலேயே சர்வதேச சமூகம் இதனை அணுக வேண்டும்.

ஐநா மனித உரிமை பேரவை பலதடவைகள் தொடர்ச்சியாக பாதுகாப்பு பிரிவின் மீளமைப்புக்கு  வலியுறுத்தியும் , அதனை உதாசீனம் செய்து, எதுவித மறுசீரமைப்பும் செய்யப்படாது,  முன்னைய கட்டமைப்புடனும் அதே மனோநிலையிலும் இயங்கிவரும் சிறிலங்கா பாதுகாப்பு பிரிவின் ஒரு அங்கத்தின் அச்சுறுத்தல் நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டும் என நாம் சர்வதேச சமூகத்தை கோருகின்றோம்.

வண பிதா எழில்ராஜன்  மீதும் ஏனைய செயற்பாட்டாளர்கள் மீதும், குறித்த நினைவுகூரலோடு தொடர்புபட்ட பொதுமக்கள் மீதும் பிரயோகிக்கப்படுகின்ற  இந்த அச்சுறுத்தலை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து, தொடர்கின்ற அச்சுறுத்தல்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாம் வேண்டிக்கொள்கிறோம்.

அத்தோடு , செயல்பாட்டாளர்களை அச்சுறுத்துவதன்மூலம், மக்களின் ஒன்றுகூடும் உரிமையையும் நினைவுகூரும் உரிமையையும் பயத்திற்குரியதாக்கி, மக்களை தாமாகவே அப்படியான செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிநிற்கவைக்கும் இந்த அரசாங்கத்தின் கபடத்தனமான செல்நெறியையும் சரியாக அடையாளம் காணவேண்டும் எனவும் நாம் சர்வதேச சமூகத்தை வேண்டுகின்றோம்.


தமிழ் மக்கள் பேரவை
21 – 05 – 2017

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More