இந்தியா கட்டுரைகள் பிரதான செய்திகள்

வாழ்வே சிறையில்! பேரறிவாளவன் சிறைசென்று இன்றுடன் 26 ஆண்டுகள் – குளோபல் தமிழ் செய்தியாளர்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன்  1991, ஜூன் 11 அன்று கைது செய்யப்பட்டார். இன்றுடன் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்துவிட்டன.

ராஜீவ் காந்தி கொலைக்கு சிறிய ரக பற்றிகள் இரண்டு வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 1991ஆம் ஆண்டில் ஒரு இளைஞனாக கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன் தன்னுடைய வாழ்வின் முக்கியமான காலம் கட்டம் முழுவதையும் சிறைக்குள் இழந்தார். தான் குற்றமற்றவன் என்றும் தனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறி சிறை விடுவிப்பு போராட்ட  வாழ்வில் பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபடுகிறார்.

மிக நீண்டகாலமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனுக்கு 2011 செப்டம்பர் 9 இல் தூக்குத்தண்டனை  நிறைவேற்றப்படவிருந்து பின்னர் அத் தண்டனை பின்போடப்பட்டது. இதேவேளை  2014 பிப்ரவரி 18இல் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.முன்னாள் சிபிஐ அதிகாரியான தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ‘உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பேரறிவாளன் குற்றமற்றவர் என்று அவர் குறிப்பிட்டார்.

பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், இவைகள் அவருக்கு இருந்த சாதகத்தை இல்லாமல் செய்ததாகவும் தியாகராஜன்  பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிட்டார்.

சிறையில் தான் அனுபவித்த வாழ்க்கையை குறித்து பேரரிவாளன் எழுதிய  “An Appeal From The Death Row (Rajiv Murder Case — The Truth Speaks)”  என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பையும் ஓகஸ்ட் 23, 2011இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ. பி. பர்தன் டில்லியில் வெளியிட்டு வைத்தார். இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு தூக்கு கொட்டிலிலிருந்து ஒருமுறையீட்டு மடல்என்ற பெயரிலும் வெளியானது.

சிறைச் சாலையில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சிறைத்துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desktop Publishing) டிப்ளோமாப் பட்டப் படிப்பில் முதல் மாணவராகத் சித்தியடைந்து தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது தாயார் அற்புதம்மாள் தனது மகனை விடுவிக்க தொடர்ச்சியாக போராடி வருகிறார். தமிழக அரசு பேரரிவாளன் உள்ளிட்ட நால்வரையும் விடுவிக்க தீர்மானித்தபோதும் மத்திய அரசால் அது தடுக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன்சிறை சென்ற இன்றைய நாளில் அவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link