இலங்கை பிரதான செய்திகள்

சர்வதேச ரீதியில் திட்டம்- வன்புணர்வை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர். தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முற்பட்ட சுவிஸ் குமார்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை சர்வதேச தரத்தில் திட்டம் தீட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் எனவும் , அதன் பின்னால் சர்வதேச ரீதியில் சிலர் செயற்பட்டு உள்ளதாகவும் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா  ” ரயலட் பார் ” முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் புதன் கிழமை  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில்  ” ரயலட் பார் ” முறைமையில் நடைபெற்றது.
பதில் சட்டமா அதிபர் முன்னிலை. 
இன்றைய வழக்கு விசாரணைக்கு பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தீர்ப்பாயம் முன்பில் முன்னிலையாகி இருந்தார். அவருடன் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நால்வர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரங்க பாலசிங்க மற்றும் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
05 சான்று பொருட்கள் , 12 சாட்சியங்கள் இணைப்பு. 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் ஆரம்பமானது. அதன் போது பதில் சட்டமா அதிபர் , குற்ற பகிர்வு பத்திரத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் , சான்று பொருட்கள் பட்டியலில் மேலும் 05 சான்று பொருட்களை உள்ளடக்கவும் , மேலும் 12 சாட்சியங்களை இணைக்க அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை நீதிபதிகள் அனுமதித்தனர்.
அதனை தொடர்ந்து திருத்தப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரம் திறந்த மன்றில் எதிரிகளுக்கு வாசித்து காட்டப்பட்டது. குறித்த எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் அதன் போது முன்வைக்கப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுகளையும் எதிரிகள் மறுத்தனர்.
 
05 எதிரிகள் மீது கடத்தல் , வன்புணர்வு மற்றும் கொலை குற்றம். 
04 எதிரிகள் மீது சதித்திட்டம் தீட்டியமை, உடந்தை ஆகிய குற்றம். 
அதில் 1ம், 2ம், 3ம், 5ம் மற்றும் 6ம் எதிரிகளுக்கு எதிராக மாணவியை பலவந்தமாக கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.  ஏனைய 4ம் , 7ம் , 8ம் மற்றும் 9ம் எதிரிகள் மீது குறித்த குற்ற சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியமை , அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
ரயலட் பாருக்கு நியாயாதிக்கம் இல்லை. 
 5ம் எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் விண்ணப்பம் செய்கையில் , அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல் , அதற்கு உதவுதல் , அதற்கு சதித்திட்டம் தீட்டுதல் , வெடி பொருட்கள் ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல் போன்ற குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யவே ட்ரயலட் பார் விசாரணைக்கு அதிகாரம் உண்டு.
இத்தகைய எந்தவிதமான குற்றசாட்டுக்களும் இங்குள்ள எதிரிகள் மீது சுமத்தப்படவில்லை எனவே இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் இந்த ட்ரயலட் பார் க்கு இல்லை என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
பதில் சட்டமா அதிபர் ஆட்சேபனை.
அதற்கு பதில் சட்டமா அதிபர் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். சட்டத்தரணி கூறிய குற்ற செயல்கள் தொடர்பில் கட்டாயம் ட்ரயலட் பார் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கு விசேட வழக்கு என்பதினால் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கவே பிரதம நீதியரசாரால் இந்த ட்ரயலட் பார் அமைக்கப்பட்டது என தனது ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தார்.
 ட்ரயலட் பாருக்கு நியாயாதிக்கம் உண்டு. 
அதனை தொடர்ந்து நீதிபதிகள் தமது கட்டளையில் , மூன்று நீதிபதிகளும் 5ம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை ஏக மனதாக நிராகரிக்கின்றோம். மூன்று நீதிபதிகளுக்கும் இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் உண்டு. நீதியின் தேவை கருதி , அதன் நலன் கருதி விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த ட்ரயலட் பார் அமைக்கபப்ட்டது. என தெரிவித்தது 5ம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை நிராகரித்தனர்.
பதில் சட்டமா அதிபர் மன்றில் முன் உரை ,
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பணத்தில் ட்ரயலட் பார் முறைமையில் விசாரணை நடைபெறுகின்றது. இது யாழ்ப்பணத்தில் சட்ட வலுவான நீதியை நிலைநாட்டப்படும் என திடமாக நம்புகின்றேன்.
இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டு , கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார் மாணவி சிவலோகநாதன் வித்தியா. இந்த கொடூர சம்பவம் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது. யாழ்ப்பாணத்தில் சட்ட நீதி ஒழுங்கில் பாரிய நீதி பிறழ்வையும் ஏற்படுத்தியது. மக்களிடையே பய பீதியையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருடன் இணைந்து குற்றபுலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனூடாக காட்டுமிராண்டி தனமாக படுகொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய 9 எதிரிகளை அவர்கள் இனம் கண்டனர்.
குற்றபுலனாய்வு துறையின் விசாரணைக்கு ஆலோசனைகளையும் , நெறிப்படுத்தல்களையும் சட்டமா அதிபர் வழங்கி இருந்தார். இரவு பகலாக குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பல சிரமங்கள் மத்தியில் முன்னெடுத்தனர்.
இந்த வழக்கின் விசாரணைகளின் ஊடான தீர்ப்பு நல்ல செய்தியினை சொல்லும் என நம்புகின்றேன். இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கபப்ட்டும் என எதிர்ப்பார்க்கிறேன். இந்த வழக்கில் சம்பந்தபப்ட்டவர்களின்  உரித்துக்களை பாதுகாக்கப்படும் எனவும் நம்புகின்றேன்.
எதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக புதிய வழக்கு.  
இந்த கொடூர சம்பவத்தின் பின்னர் , சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பாதுகாப்பதற்காக பலர் முயன்று உள்ளார்கள். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் எதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்கள் தொடர்பில் பிறிதொரு வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும்.
சர்வதேச ரீதியில் சதிதிட்டம். 
இந்த கொடூர சம்பவமானது சாதாரண கடத்தல் , வன்புணர்வு , கொலை போன்றது அல்ல. இது முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட குற்றம். இதற்கு சர்வதேச ரீதியில் திட்டம் வகுக்கபப்ட்டு உள்ளது. அதனால் இது சர்வதேச குற்றம் என்று கூட சொல்லலாம்.  இதன் பின்னணியில் இந்த நாட்டின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். என திட்டமிட்டு சர்வதேச ரீதியில் செயற்பட்டு உள்ளனர்.
இந்த குற்ற செயல் தொடர்பில் சூழ்நிலை சான்றுகளும் , நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குற்ற செயலுடன் தொடர்புடையவர்களின் சாட்சியங்கள் உள்ளன.
பிரதான சூத்திர தாரி சுவிஸ் குமார். 
அதன் அடிப்படையில் இந்த குற்றசெயலின் பிரதான சூத்திர தாரி ஒன்பதாம் எதிரி ஆவார். குறித்த எதிரி கூட்டு பாலியல் வன்புணர்வினை நேரடியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முயன்று உள்ளார்.
ஒன்பதாம் எதிரி இலங்கையில் பிறந்திருந்தாலும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர். அவர் சுவிஸ் நாட்டில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்பவர். அந்த நிலையில் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து 6 எதிரியுடன் தொடர்பு கொண்டு அது பற்றி பேசியுள்ளார்.
கூட்டு வன்புணர்வினை நேரடி ஒளிப்பதிவு. 
சர்வதேச சந்தையில் தெற்காசிய நாட்டை சேர்ந்த இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதனை நேரடி காட்சியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னுடன் சிறையில் இருந்த சக பாடிக்கு சொல்லி இருக்கின்றார்.
சுவிஸ் குமார் தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முயற்சி. 
அதேவேளை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னை இந்த குற்ற செயலில் இருந்து தப்பிக்க உதவுமாறு கோரி போலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20மில்லியன் ரூபாய் பணம் கைமாற்றம் செய்யவும் முயன்று உள்ளார்.
நால்வர் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டனர். 
இந்த வழக்கின் 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகளே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
வன்புணர்வை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்தனர்.
வெளிநாட்டுக்கும் வீடியோ விற்பனை செய்யப்ட்டு உள்ளது. 
இந்த கூட்டு வன்புணர்வினை 5ம் மற்றும் 6ம் எதிரிகள் வீடியோ காட்சியாக தமது கையடக்க தொலை பேசிகளில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை செம்மையாக்கி ஒரு முழுமையான வீடியோ காட்சியாக தயாரித்து அதனை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
விசாரணைகளின் ஊடாக வீடியோ காட்சிகளை மீள எடுப்பதற்கு குற்ற புலனாய்வு பிரிவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களால் அதனை பெற முடியவில்லை. இருந்த போதிலும் , விற்பனை செய்தமைக்கான சான்று ஆதாரங்களை பெற்றுகொண்டு உள்ளனர்.


மாணவியை 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் பாழடைந்த வீட்டினுள் வைத்தே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர். பின்னர் மாணவியின் சடலம் கிடந்த இடத்திற்கு மாணவியை தூக்கி வந்து அங்குள்ள மரங்களில் கைகள் மற்றும் கால்களை கட்டி கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். அதன் போது மாணவி மூச்சடக்கி மரணமடைந்துள்ளார். அதேவேளை மாணவியின் தலையின் பின் புறத்திலும் காயம் ஏற்பட்டு இருந்துள்ளது.
41 குற்ற சாட்டுக்களும் நிரூபிக்கப்படும். 
இந்த ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக முன் வைக்கப்பட்டு உள்ள 41 குற்ற சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும் என திடமாக நம்புகின்றேன் என தனது உரையில் பதில் சட்டமா அதிபர் தெரிவித்தார்.
கண்ணீருடன் சாட்சி கூண்டில் இருந்து மாணவியின் தாய் சாட்சியம். 
 
எமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் தான் செல்வார். வீட்டில் இருந்து பாடசாலை செல்ல ஒன்று தொடக்கம் ஒன்றரை மணித்தியாலம் தேவைப்படும். பெரும்பாலும் எனது மகன் (வித்தியாவின் அண்ணா ) வித்தியா பாடசாலை செல்லும் போது அழைத்து செல்வான் சில வேளைகளில் அவனுக்கு வேலை இருந்தால் வித்தியா கூட படிக்கும் சக பிள்ளைகளுடன் செல்வாள்.
எனது கணவர் பாரிச வாத நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பதனால் எமது குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மகன் இடையில் படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கி விட்டார்.
வீட்டில் இருந்து பாடசாலை செல்லும் வீதியின் இரு மருங்கிலும் பற்றை காடுகள் பாழடைந்த வீடுகள் உள்ளன. அவற்றை தாண்டியே செல்ல வேண்டும். வீதி குன்றும் குழியுமாக இருக்கும் மழை காலத்தில் அந்த வீதியினை பயன்படுத்த முடியாது. அந்த வீதியில் பெரும்பாலும் சன நடமாட்டம் குறைவாக காணப்படும். பாடசாலை நேரத்திலும் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்லும் நேரத்திலும் தான் அந்த வீதியில் சன நடமாட்டம் இருக்கும், ஏனைய நேரங்களில் சன நடமாட்டம் குறைவாக இருக்கும்.
சம்பவ தினத்தன்று காலை 7.30 மணிக்கு வித்தியா பாடசாலை செல்ல புறப்பட்டாள். நானே வீடு கேற் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன் .அன்றைய தினம் வித்தியா கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாக கூறி சென்றாள். ஆனால் அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால் வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கி சென்றாள்.
பாடசாலை சென்ற வித்தியா பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தை கடந்தும் வராததினால் வித்தியாவை பார்த்து வருமாறு எனது மகனை பாடசாலைக்கு அனுப்பினேன். அவன் அங்கு சென்று பார்த்து விட்டு பாடசாலை பூட்டி உள்ளதாக தொலை பேசியில் சொன்னான். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது வித்தியா இன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை என கூறினார்கள்.
அதன் பின்னர் நானும் எனது மகனும் வித்தியாவை தேடி அலைந்தோம். அந்நேரம் ஊரவர்கள் இது தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யுங்கள் என சொன்னார்கள். அதனால் மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்ய சென்றோம். அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. நீங்கள் ஊர்காவற்துறை போலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுங்கள் என தெரிவித்தனர்.
பின்னர் இரவு 8 மணியளவில் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு சென்ற முறைப்பாடு கொடுக்க முற்பட்ட போது இந்த வயது பிள்ளைகளை எங்கேனும் போயிருக்குங்கள் திரும்பி வருங்கள் என போலீசார் சொன்னார்கள். அதற்கு நாம் எங்கள் பிள்ளை அப்படி பட்டவள் இல்லை என கூறியதும் பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்றுகொண்டார்கள்.
போலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய ஓட்டோவில் சென்று இருந்தோம். ஓட்டோவில் இரவு 10 மணியளவில் வீடு திரும்பும் போது ஓட்டோ சாரதி சொன்னார் ‘நான் தினமும் 7.30 மணியளவில் வித்தியாவை ஆலடி சந்தியில் காண்கிறனான். இன்றைக்கு காணவில்லை. எனவே அவர் வீட்டுக்கும் ஆலடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் காணாமல் போயிருக்க வேண்டும். எனவே அந்த பகுதிகளில் தேடி பாருங்கள் ‘என கூறினார்.
அன்றைய தினம் மழை பெய்து கொண்டு இருந்ததாலும் மிகவும் இருட்டி விட்டதாலும் நாம் இரவு தேடாமல் வீட்டுக்கு சென்று விட்டோம். மீண்டும் மறுநாள்  காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்கள் இவர்களுடன் வித்தியாவை தேடி சென்றோம்.
அதன் போது வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடி சென்றோம். எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்து இருந்தது. திடீரென எனது மகனும் அயலவரும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி சென்றோம்.
அப்போது என் மகன் ஓடிவந்து “அம்மா வித்தியா ” என கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான். அதன் பின்னர் நானும் சுயநினைவின்றி போனேன். எம்முடன் வந்தவர்கள் தான் ஓடி சென்று வேறு ஆட்களை அழைத்து வந்தனர்.
நான் நினைவுக்கு வந்து வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு சுமார் 20அடி தூரத்தில் இருந்தே சடலத்தை பார்த்தேன். கிட்ட செல்ல வில்லை. மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால் மகனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
பின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண சிறையில் எதிரிகள். 
 
எதிரிகள் ஒன்பது பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம் முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என அனுராதபுர சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
நாளையும் சாட்சி பதிவு தொடரும். 
நாளைய தினம் ஏனைய சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap