இலங்கை பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பின்னணி ஒரு தலை காதலா ?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வித்தியாவை கடத்த 20 ஆயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் , அதற்கு பின்னர் நடந்தவைகளை திறந்த மன்றில் கூறினால் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஐந்தாவது சாட்சியான அரச சாட்சியான உதய சூரியன் சுரேஷ் கரன்  ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள்,  இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில்  ” ரயலட் பார்  முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில் , லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரங்க பாலசிங்க மற்றும் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது, அதன் போது இந்த வழக்கின் ஐந்தாவது சாட்சியும் சட்டமா அதிபரினால் நிபந்தனைகளுடன் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அரச சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ்கரன் சாட்சியம் அளித்தார்.
அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் ,

நான் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்தனான். பல வருடங்களாக கொழும்பில் கடை ஒன்றில் வேலை செய்தேன். இந்த வழக்கு தொடர்பில் கொழும்பு 4ஆம் மாடியை சேர்ந்த புலனாய்வு துறையினர் முதலில் என்னை கைது செய்து விசாரணை செய்த பின்னர் விடுவித்தனர். பின்னர் மீண்டும் நான் சில நாட்களில் கைது செய்யப்பட்டேன்.

இந்த வழக்கு தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவானின் சமாதான அறையில் எனது வாக்கு மூலத்தை வழங்கி இருந்தேன்.
ஒரு தலை காதல். 
கொலை செய்யப்பட்ட வித்தியாவை எனக்கு தெரியும். அவரது குடும்பத்தினரையும் எனக்கு நன்கு தெரியும். வித்தியா எவரையும் காதலித்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெரியம்பி என அழைக்கப்படும் துஷந்த் (6ஆவது எதிரியான சிவதேவன் துஷந்த்) என்பவர் வித்தியாவை காதலிப்பதாக கூறினார்.
அதனால் நானும் பெரியம்பியும் வித்தியா பாடசாலை செல்லும் நேரம் பாடசாலையால் வீடு திரும்பும் நேரங்களில் தினமும் வித்தியாவின் பின்னால் பெரியம்பியின் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோம். அவ்வேளைகளில் வித்தியாவுடன் பெரியம்பி கதைக்க முற்படுவார்.ஆனால் வித்தியா கதைக்க மாட்டார். வித்தியா சில வேளைகளில் அவரின் அண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலை சென்று வருவார். அண்ணா இல்லை என்றால் சைக்கிளில் சென்று வருவார்.
பெரியம்பியும் நானும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வித்தியாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தோம். அவ்வேளைகளில் அவருடன் கதைக்க முற்பட்டால் அவர் கதைப்பதில்லை. ஒரு நாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எனவும் கூறி இருந்தார்.
வித்தியா செருப்பால் எறிந்தார். 
கொலை செய்யப்படுவதற்கு ஒன்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பு  ஒருநாள் வித்தியா பெரியம்பிக்கு செருப்பால் எறிந்து பேசி இருந்தார். அப்போது நான் சொன்னேன் ‘அந்த பிள்ளைக்கு விருப்பம் இல்லை போல அந்த பிள்ளையை விடு ‘ என
காலையில் கள்ளு குடிப்போம். 
நாங்கள் புங்குடுதீவில் மாப்பிளை ( நடராஜா புவனேஸ்வரன் ) என்பவரிடம் கள்ளு வாங்கி குடிப்போம். அவர் சீவல் தொழில் செய்பவர். அவரின் வீட்டுக்கு நானும் என்னுடன் கொழும்பில் இருந்து வந்திருந்த சந்திரஹாசன் , நிஷாந்தன் , கண்ணா மற்றும் சசி என்போரும் கள்ளு குடிக்க போறனாங்க. காலையில் பத்து மணிக்கு முன்னர் நாம் கள்ளு குடிக்க போயிடுவோம்.
போதையில் வித்தியா வீட்டுக்கு சென்றனர். 
சம்பவ தினத்திற்கு சில நாட்கள் முன்னர் மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடித்த பின்னர் , மதியம் 12 மணி போல பெரியம்பியும் நானும் கடற்கரை வழியாக வித்தியாவின் வீட்டுக்கு சென்று இருந்தோம். நான் வீட்டுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டேன். பெரியம்பி மாத்திரம் வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு ஒருவரும் வீட்டில் இல்லை என வந்து கூறினான்.
அன்று பின்னேரம் மீண்டும் கள்ளு குடிக்க போனோம். அப்போது எம்முடன் சந்திரஹாசனையும் அவரது வீட்டுக்கு சென்று அழைத்து சென்றோம். நாங்கள் கள்ளு குடித்துக்கொண்டு இருந்த நேரம். அங்கே தவக்குமார் மற்றும் ரவி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கள்ளு குடித்தோம்.
அந்நேரத்தில் தவக்குமாருக்கும் ரவிக்கும் , பெரியம்பி வித்தியா தனக்கு செருப்பால் எறிந்து போட்டாள் என கூறினான். அதற்கு ரவி ‘ நீ வித்தியாவை காதலிக்கிறியா ? ‘ என கேட்டான். அதற்கு பெரியம்பி ஓம் என்று சொன்னான்.
 
வித்தியாவை தூக்கி தாரேன்.
பின்னர் போகும் போது ரவி, பெரியம்பிக்கு சொன்னான் “ஏதேனும் உதவி தேவை என்றால் சொல்லு, வித்தியாவை தூக்கி தாறது என்றால் தூக்கி தாரேன் ” என சொன்னான். அதற்கு ரவி தேவை என்றால் சொல்லுறேன் என சொன்னான்.
அதன் பிறகு இரண்டு மூன்று நாள் கழித்து நாங்கள் மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடித்துக்கொண்டு இருந்த போது அங்கே வந்த ரவியிடம் வித்தியாவை தூக்கி தர சொல்லி பெரியம்பி கேட்டான். அப்போது அந்த இடத்தில் நானும் பெரியம்பி ரவி சந்திரஹாசன் மற்றும் தவக்குமார் ஆகியோர் இருந்தோம்.
வித்தியாவை கடத்த 20 ஆயிரம் பேரம்.
வித்தியாவை தூக்கி தாறது என்றால் எனக்கு 20 – 23 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என ரவி பெரியம்பிக்கு கூறினான். அதற்கு பெரியம்பி தான் சம்பளம் எடுத்த உடனே பணத்தை தருகிறேன் என கூறினான்.
அதன் படி ரவிக்கு பெரியம்பி பணம் கொடுத்தான். வித்தியாவை தூக்கி தர கூறி என தனது சாட்சியத்தை அளித்தார். அதன் போது எவ்வளவு பணம் ரவிக்கு கொடுக்கப்பட்டது என பிரதி சொலிஸ்டார் ஜெனரல் குமார் இரட்ணம் சாட்சியம் இடம் கேள்வி எழுப்பிய போது ,  இந்த கேள்விகளுக்கு நான் பதில் அளித்தால் எனது அம்மா மற்றும் தங்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என  ” ரயலட் பார் ” முன்னிலையில் கூறினார்.
 
சாட்சியத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியும். 
அதன் போது  ” ரயலட் பார் ” நீதிபதிகளில் ஒருவரான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் சாட்சியத்திற்கான பாதுகாப்பை வழங்க முடியும். எனவே சாட்சியத்தை தொடர்ந்து தெரிவிக்கமாறு கூறினார்
அதன் போது ரயலட் பாரின் தலைமை நீதிபதியான பாலேந்திரன் சசிமகேந்திரன் சாட்சியத்திடம் ” நீராக விரும்பி தான் சாட்சியம் அளிக்க வந்துளீரா . சட்டமா அதிபரின் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பின் அடிப்படையில் சாட்சியம் அளிக்க வந்துள்ளீரா என வினாவினார்
அத்துடன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வாக்கு மூலத்தை பதிவு செய்த பின்னர் ,உமக்கோ , குடும்பத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டதா ?எனவும் வினாவினார்.
அதற்கு சாட்சி ‘ ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவானின் சமாதான அறையில் வாக்கு மூலம் அளித்தேன். அதனால் நான் வாக்கு மூலம் அளித்தது எவருக்கும் தெரியாது என கூறினார்.
ரகசிய சாட்சி பதிவு. 
அதனை அடுத்து ” ரயலட் பார் ” நீதிபதிகள் மூவரும் ஏக மனதாக முடிவெடுத்து ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்களை வெளியேற்றி இரகசியமாக  குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவுகளை மேற்கொண்டனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.