இலங்கை பிரதான செய்திகள்

சுவிஸ்குமார் குடும்பத்துடன் பொலிசாரிடம் சரணடைந்தார் என சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் சாட்சியம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யபட்ட கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவர் நீதாய விளக்கத்தின்  ( ரயலட் பார் ) முன்பாக சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார்.

 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் ஐந்தாம் நாள் சாட்சி பதிவுகள்,  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில்  5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாந்த  மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஐந்தாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
மூக்கு கண்ணாடி விற்பனை கடை வைத்துள்ளேன். 

குறித்த வழக்கின் 14ஆவது சாட்சியமான கைத்தான்பிள்ளை ஜூட்ஸ் என்பவர் சாட்சியமளிக்கையில் , 

நான் குருநகர் பகுதியை சேர்ந்தனான். யாழ்.நகர் பகுதியில் மூக்கு கண்ணாடி விற்பனை நிலையம் வைத்து உள்ளேன். கண் பரிசோதனை தொடர்பில் 20 வருடத்திற்கு மேலான அனுபவம் எனக்கு உண்டு. அத்துடன் அது தொடர்பில் மூன்று வருட கற்கையையும் பூர்த்தி செய்துள்ளேன்.
என்னுடைய கடைக்கு வந்திருந்த குற்றத்தடுப்பு புலனாய்வு துறையினர் ஒரு மூக்கு கண்ணாடியினை கொடுத்து அது தொடர்பில் பரிசோதனை செய்யுமாறு கூறி இருந்தனர்.  அந்த கண்ணாடியினை பரிசோதித்த போது அது வலது கண் பக்க வில்லை சாதாரண வில்லையாகவும் , இடது கண் வில்லை பார்வை குறைபாடு உடையவர்களுக்கான வில்லையாகவும் காணப்பட்டது. என சாட்சியமளித்தார்.
அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் அந்த கண்ணாடியினை அடையாளம் காட்ட முடியுமா என கேட்டார். அதற்கு ஆம் என பதிலளித்தார். அப்போது மன்றினால் சான்று பொருளான மூக்கு கண்ணாடி அவருக்கு காட்ட ப்பட்டது. அவர் அந்த கண்ணாடியினை தான் பரிசோதித்த போது இடது கண் வில்லை கீறு பட்டு கோடுகள் காணப்பட்டு இருந்தது. இந்த கண்ணாடியிலும் அப்படி கோடுகள் காணப்படுகின்றன என கூறி அந்த கண்ணாடியினை அடையாளம் காட்டினார்.
அதன் போது மன்று சாட்சியிடம் இந்த மூக்கு கண்ணாடியினை சாதரணமானவர்கள் அணிவார்களா ? என கேட்டது. அதற்கு சாட்சி சாதரணமானவர்கள் இதனை அணிய முடியாது ஏனெனில் இதன் இடது பக்க கண் வில்லை பார்வை குறைபாடு உடையவர்களுக்காக விசேடமாக செய்யப்பட்டது. அதனால் சாதரணமானவர்கள் அணிய முடியாது. என தெரிவித்தார். அதை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி. 
அடுத்ததாக குறித்த வழக்கின் 19 ஆவது சாட்சியமாக சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த குயிண்டஸ் குணால் பெரேரா சாட்சியம் அளிக்கையில் ,
நான் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி விடுமுறையை முடித்து மீண்டும் சேவையில் இணைந்து கொண்டேன். அன்றைய தினம் இரவு 8.40 மணியளவில் , பாடசாலை சென்ற மாணவி இதுவரை வீடு திரும்பவில்லை என மாணவியின் தாயான சிவலோகநாதன் சரஸ்வதி என்பவர் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு , உப போலிஸ் பரிசோதகர் அநோசியஸ் தலைமையிலான போலிஸ் குழு சென்றது. மறுநாள் 14 ஆம் திகதி காலை அவரச போலிஸ் இலக்கமான 119 இலக்கத்திற்கு தொலைபேசியில் புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் பெண் பிள்ளை ஒருவரின் சடலம் காணப்படுவதாக தகவல் வந்தது அந்த தகவல் எமது போலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து நான் , உப போலிஸ் பரிசோதகர் தலைமையிலான போலிஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு காலை 7.20 மணியளவில் புறப்பட்டோம். காலை 8 மணியளவில் சம்பவ இடத்தை சென்றடைந்தோம்.
எமது போலிஸ் நிலையத்தில் இருந்து ஆலடி சந்தி பகுதி 22 கிலோ மீற்றர் தூரம். ஆலடி சந்தியில் இருந்து சடலம் கிடந்த இடமானது சுமார் 200 மீற்றர் தூரமாகும். அப்பகுதிக்கு ஒரு மணல் பாதை ஊடாக பற்றைகள் உடைந்த வீடுகள் பனைமரங்கள் உள்ள பகுதி ஊடாக  சென்றோம். அந்த பாதையை வல்லவன் பாதை என்பார்கள்.
நாங்கள் அங்கே சென்ற போது எமது போலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகட்டுவான் போலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி , இறந்த மாணவியின் தாய் , சகோதரன் உட்பட ஊரவர்கள் அந்த பகுதியில் நின்றார்கள்.
சப்பாத்தை மீட்டோம். 
சடலம் கிடக்கும் இடத்திற்கு செல்வதற்கு முன்பாக சுமார் 10 – 15 அடி தூரத்தில் மாணவியின் சப்பாத்து ஒன்று காணப்பட்டது. அதனை தாண்டி சடலம் கிடக்கும் இடத்திற்கு சென்றோம். சடலத்தினை மாணவியின் தாயார் அடையாளம் காட்டினார். அதன் போது சடலம் வெள்ளை துணியினால் மூடப்பட்டு இருந்தது.  சடலம் கிடந்த இடத்தில் இருந்து 8 மீற்றர் தூரத்தில் மற்றைய சப்பாத்து கிடந்தது.
சடலம் கண்டேடுப்பதற்கு முதல் நாள் அப்பகுதியில் மழை பெய்தமையால் சடலம் காணப்பட்ட பகுதி உட்பட அந்த பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றன.
அதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி ஊர்காவற்துறை நீதவான் , தடயவியல் பிரிவு ,திடீர் மரண விசாரணை அதிகாரி ,ஆகியோருக்கு அறிவித்தேன்.
முகம் , உடல் வீங்கி இருந்தன. 
அவர்கள் வந்த பின்னர் சடலத்தின் மேல் இருந்த வெள்ளை துணியை அகற்றி சடலத்தை பார்வையிட்டேன். முகம் , உடல் என்பன வீங்கி காணப்பட்டன.
சடலத்தின் அருகில் , குடை , சைக்கிள் , பாடசாலை புத்தக பை என்பன காணப்பட்டன. அதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதன வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தோம்.
அதன் பிறகு தமிழ் மொழி பேசும் போலிஸ் உத்தியோகஸ்தர் கோபி என்பவரை இறந்த மாணவியின் தாயாரிடம் வாக்கு மூலத்தை பெறுமாறு பணித்தேன்.
மூவரை கைது செய்தேன். 
தாயின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் 14 ஆம் திகதி மாலை புங்குடுதீவை சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தேன்.
தான் போது அவர்களது வீட்டில் மேற்கொண்ட தேடுதல்களின் போது ஜெயக்குமார் என்பவரின் வீட்டில் இருந்து மஞ்சள் கறுப்பு நிற ரீ. சேர்ட் ஒன்றினை கண்டெடுத்தோம். அதில் தோள் பட்டை பகுதியில் இரத்த கறையை ஒத்த கறையும் , சேறும் காணப்பட்டது. அதனால் அதனை சந்தேகத்தில் சான்று பொருளாக மீட்டோம்.
அதேபோன்று தவக்குமார் என்பவரை கைது செய்யும் போது அவரது வீட்டில் இருந்து சேர்ட் ஒன்றினையும் மீட்டோம் அதிலும் கறைகள் காணப்பட்டன.  கைது செய்யபப்ட்ட மூன்று சந்தேக நபர்களையும் மறுநாள் 15 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினோம்.
இறுதி கிரியை. 
மாணவியின் இறுதி கிரியைகள் 15ஆம் திகதி நடைபெற்றது. அதனால் அப்பகுதி பாடசாலைகள் , கடைகள் எல்லாம் மூடப்பட்டு , மாணவர்கள்,  பொதுமக்கள் வீதிகளில் இரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் அசாதாரண சூழ் நிலை காணப்பட்டது.
ஐவரை கைது செய்தேன்.
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் ஐந்து சந்தேக நபர்கள் உள்ளனர் எனும் தகவல் எனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் 17ஆம் திகதி மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரையும் கைது செய்தேன்.
காவலரண் சுற்றி வளைப்பு. 
கைது செய்யப்பட்டவர்களை குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் வைத்து அவர்களின் வாக்கு மூலங்கங்களை பதிவு செய்து கொண்டிருந்த வேளை ஊரவர்கள் ஒன்று கூடி தடிகள் பொல்லுகளுடன் காவலரணை சுற்றி வளைத்து சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்களை தாங்கள் கொல்ல வேண்டும் எனவும் கோரினார்கள்.
கடல் மார்க்கமாக சந்தேக நபர்களை கொண்டு சென்றோம்.
அதனால் நாம் காரைநகர் கடற்படை கட்டளையிடும் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அதிவிரைவு படகு (வேட்டர் ஜெட் ) ஒன்றில் சந்தேக நபர்களை ஏற்றி கொண்டு ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற வேளை எனக்கு தகவல் கிடைத்தது, ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்தை முற்றுகையிட மக்கள் சென்று கொண்டிருப்பதாக அதனால் நாம் உடனடியாக சந்தேக நபர்களை காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று , அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிசாரின் உதவியுடன் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து சந்தேக நபர்களின் வாக்கு மூலத்தை பதிவு செய்தேன்.
அதன் பின்னர் மறுநாள் எனக்கு மகரவில் நீதிவான் நீதிமன்றில் சாட்சியம் அளிக்க செல்ல வேண்டி இருந்தமையால் நான் சென்று விட்டேன்.
சுவிஸ் குமார் தொடர்பில் தெரியாது. 
பின்னர் 20ஆம் திகதி எனது போலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப போலிஸ் பரிசோதகர் சொன்னார் இந்த வழக்கில் ஒன்பதாவது சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பான போலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற வேளை வெள்ளவத்தை போலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனவும் அவரின் பெயர் சுவிஸ் குமார் எனவும். அதன் போதே நான் ஒன்பதாவது சந்தேக நபர் பற்றி அறிந்து கொண்டேன். என சாட்சியமளித்தார்.
சான்று பொருட்களை அடையாளம் காட்டினார்.
அதன்போது , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சடலத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான சைக்கிள் , சப்பாத்து , பாடசாலை புத்தக பை , கிழிந்த பாடசாலை சீருடை , தலைப்பட்டி (ரீபென் ) கைக்குட்டை , கழுத்துப்பட்டி (ரை) உள்ளிட்ட சான்று பொருட்களை அடையாளம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கு ஆம் என சாட்சி பதிலளித்து அவற்றினை அடையாளம் காட்டினார்.
அதேவேளை சந்தேக நபர்களை கைது செய்த வேளை அவர்கள் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ரீ. சேர்ட் மற்றும் சேர்ட் உள்ளிட்டவற்றை அடையாளம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கும் அதற்கும் ஆம் என சாட்சி பதிலளித்து அவற்றினையும் அடையாளம் காட்டினார்.
சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டினார். 
அதனை தொடர்ந்து நீங்கள் கைது செய்த எட்டு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்ட முடியுமா என கேட்டதற்கு ஆம் என பதிலளித்து , ஒன்று தொடக்கம் எட்டு வரையிலான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும்  ஜெயதரன் கோகிலன் ஆகிய எதிரிகளை அடையாளம் காட்டினார்.
அதனை தொடர்ந்து ஒன்பதாவது எதிரியை அடையாளம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கு நான் அவரை கைது செய்யவில்லை நான் நீதிமன்றில் முற்படுத்தவும் இல்லை. சிரேஸ்ட போலிஸ் அத்தியட்சகர் ஒன்பதாவது சந்தேக நபரை கைது செய்வதற்கு வீ  அறிக்கையை வெள்ளவத்தை பொலிசாருக்கு தொலைநகலில் (பாக்ஸ்) அனுப்புமாறு கோரிய போதும் அவர் தொடர்பிலான தகவல்கள் இல்லை என அந்த அறிக்கையை அனுப்பவும் இல்லை என தெரிவித்தார்.
சாட்சிக்கு மன்று கடும் எச்சரிக்கை. 
அதனை அடுத்து மன்று குறித்த போலிஸ் அதிகாரிக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து. மன்று இந்த சாட்சியாளர் சாட்சியம் அளிக்கும் முறையை இதுவரை அவதானித்துக்கொண்டு இருந்தது ,  பிரதி சொலிஸ்டர் ஜெனரலின் பிரதான விசாரணையை குழப்ப கூடாது எனும் நோக்குடனேயே அமைதியாக மன்று இந்த சாட்சியத்தை அவதானித்தது.
இந்த சாட்சியாளர் ஆரம்பத்தில் இருந்து ஒன்பதாவது சந்தேக நபர் தொடர்பில் கேட்டால் தெரியாது , நான் கைது செய்யவில்லை , நான் நீதிமன்றில் முற்படுத்தவில்லை.என பதிலளித்து வருகின்றார். ஒன்பதாவது சந்தேக நபர் தொடர்பில் கேட்டால் அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை , மறைக்கவும் முயல்கின்றார்.  உமக்கும் ஒன்பதாவது சாட்சியத்திற்கும் இடையில் ஏதேனும் பிரச்சனையா என மன்று சாட்சியிடம் கேட்டது. அதற்கு இல்லை என சாட்சியாளர் பதிலளித்தார்.
உமது பொலிஸ் நிலையத்திற்கு கீழ் உள்ள பகுதியில் ஒரு பெரிய சம்பவம் நடந்துள்ளது. அதனால் அந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை கூட ஏற்பட்டு உள்ளது. அந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த போலிஸ் அதிகாரி எட்டு சந்தே நபர்களை கைது செய்துள்ளீர் . ஆனால் ஒன்பதாவது சந்தேக நபர் பற்றி எந்த தகவலும் இல்லை.
எட்டு சந்தேக நபர்களை கைது செய்து பிரச்சனை இங்கே நடந்து கொண்டு இருக்கும் வேளை மகரவில் நீதிவான் நீதிமன்றில் சாட்சியம் அளிக்க என சென்று உள்ளீர். என மன்று குறித்த சாட்சியத்திற்கு எச்சரித்த பின்னர்  அங்கு என்று சென்று சாட்சியம் அளித்தீரா ? என கேட்டது. அதற்கு இல்லை என பதிலளித்த சாட்சியம்.  தான் அங்கே சாட்சி சொல்ல சென்று கொண்டிருந்த வேளை எனது உயர் அதிகாரி உடனே திரும்பி வருமாறு பணித்தார். அதனால் சாட்சியமளிக்க செல்லவில்லை என கூறினார்.
அதற்கு மன்று உமது உயர் அதிகாரிக்கு இருக்கும் அக்கறை உமக்கு இருக்கவில்லை. உமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சனை நடந்து கொண்டு இருக்கும் போது அதனை கட்டுபடுத்துவதற்கு பொறுப்பாக இருக்க வேண்டிய நீர் பொறுப்பற்று நடந்துள்ளீர் .
உமது பொறுப்பற்ற செயலால் தான் ஆத்திரமுற்றவர்கள் ஒன்று கூடி யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டார்கள். ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தாமல் சந்தேக நபர்கள் யாழ்ப்பான நீதிமன்றில் முற்படுத்த முயல்கின்றார்கள் எனும் வதந்தி பரவி தான் நீதிமன்று முன்னாள் கூடியவர்கள் நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டார்கள்.  என கடுமையாக மன்று குறித்த சாட்சியத்தை எச்சரித்தது.
அதனை தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் கிடைத்தது எப்போது என மன்று வினாவியது. அதற்கு சாட்சியம் 22. 05. 2015 ஆம் ஆண்டு (மாணவி கொலை செய்யப்பட்டு ஒரு கிழமைக்குள்) இடமாற்றம் கிடைத்தாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை மதிய போசன இடைவேளைக்காக மன்று ஒத்திவைக்கப்பட்டது.
3 நாட்களே விசாரணை நடத்தினேன். 
குறித்த போலிஸ் பொறுப்பதிகாரியை எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணை செய்யும் போது ,
குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் , 2016. 12. 10 அன்று கொடுத்த வாக்கு மூலத்தில் 4ஆம் மற்றும் 7ஆம் எதிரிகள் தொடர்பில் எதுவும் ஆதாரங்கள் கொடுக்கவில்லை தானே என சட்டத்தரணி கேட்ட போது ஆம் என பதிலளித்தார். எதற்காக 4ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளை கைது செய்தீர்கள் ? என சட்டத்தரணி கேட்ட போது , வித்தியா கொலையுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது. என தனக்கு கிடைத்த புலனாய்வு தகவல் ஊடாகவே கைது செய்தேன் என பதிலளித்தார்.
மாணவி கொலை தொடர்பில் எவ்வளவு காலம் விசாரணைகளை மேற்கொண்டீர்கள் ? என சட்டத்தரணி கேட்டதற்கு 2 அல்லது 3 நாட்களே விசாரணைகளை மேற்கொண்டேன் என பதிலளித்தார்.
குறித்த இரு எதிரிகள் தரப்பிலும் நான் சொல்கிறேன் அவர்கள் இருவரும் சம்பவ தினம் மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் கொழும்பில் நின்றார்கள் என்று கூறுகிறேன் என சட்டத்தரணி கூறினார்.
அதனை தொடர்ந்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மீள் விசாரணை செய்யும் போது . உங்களால் கைது செய்யப்பட்ட 4ஆம் , 5ஆம் , 6ஆம் , 7ஆம் மற்றும் 8ஆம் எதிரிகள் மீது சித்திரவதை புரிந்ததாக எங்கேனும் உமக்கு எதிராக முறைப்பாடு உள்ளாதா ? எதிரிகள் மீது  மனித உரிமை மீறல் மேற்கொண்டீர் என உச்ச நீதிமன்றில் உமக்கு எதிராக வழக்கு உள்ளாதா ? என கேட்டதற்கு இல்லை என சாட்சி பதிலளித்தார்.
அதன் பிறகு 3 நாட்களே இந்த விசாரணையை செய்தீர் என சாட்சியம் அளித்துள்ளீர் ஏன் அதற்கு பிறகு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என கேட்டதற்கு,  இந்த வழக்கின் விசாரணைகளை குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரிடம் பாரம் கொடுக்குமாறு போலிஸ் மா அதிபர் பணித்திருந்தார். அதனால் விசாரணை அறிக்கைகளை பாரம் கொடுத்த பின்னர் அது தொடர்பில் விசாரணைகள் செய்யவில்லை என பதிலளித்தார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பொறுப்பதிகாரி ஸ்ரீகஜன் , ஒன்பதாவது சந்தேக நபர் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தேவையானவரா என உம்மிடம் வினாவினாரா ? என கேட்டதற்கு , ஸ்ரீகஜன் என்பவர் எந்த சந்தர்ப்பத்திலும்  என்னிடம் சுவிஸ் குமார் என்பவர் பற்றி கதைக்கவே இல்லை என பதிலளித்தார். 
 
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியத்தின் சாட்சி முடிவுறுத்தப்பட்டு சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டார். 
 
7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார். 
 
குறித்த சாட்சியானது சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார்.  காலை 10 மணியளவில் சாட்சியம் அளிக்க தொடங்கி பின்னர் மதியம் 1.15 மணி முதல் 2 மணிவரை மதிய போசன இடைவேளைக்காக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர், மீண்டும் 2 மணியளவில் குறித்த சாட்சியத்திடம் எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவுகள் மாலை 5.30 மணியளவிலையே முடிவுறுத்தப்பட்டது. 
 
புங்குடுதீவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை கவலையாக இருந்தது. V.T. தமிழ்மாறன்  சாட்சி
 
அதனை தொடர்ந்து வழக்கின் 25ஆவது சாட்சியமான சட்டத்தரணியும் , சிரேஸ்ட சட்டவிரிவுரையாளருமான V.T. தமிழ்மாறன் சாட்சியம் அளித்தார். 
 
அதன் போது , நான் புங்குடுதீவை சேர்ந்தனான் 1974 ஆம் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி யாழ்.மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக சித்தி அடைந்தேன். 1976ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் கல்வி கற்று பட்ட பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் சட்ட கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக 1981ஆம் ஆண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டேன். சட்டத்தரணியாக சிவில் வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகியும் உள்ளேன். 
 
புங்குடுதீவில் நடைபெற்ற சம்பவம் தொடர்பிலும் அதன் பின்னர் புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பிலும் கவலையடைந்து அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த லலித் ஏ ஜெயசிங்காவுடன் தொடர்பு கொண்டு கதைத்தேன். 15ஆம் திகதி சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடனும் சம்பவம் தொடர்பில் கதைத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினேன். 
 
இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. 
 
மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள என்னால் முடியவில்லை அக் கால பகுதியில் கொழும்பு பல்கலைகழகத்தில் சட்ட பீட மாணவர்களுக்கு பரீட்சை காலமாக இருந்தமையால் எனக்கு வேலை சுமை இருந்தமையால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. 
 
பின்னர் 17ஆம் திகதி இரவு நான் யாழ்ப்பாணம் வந்து இருந்தேன். 18ஆம் திகதி நான் அப்போதைய  வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து , புங்குடுதீவில் அப்போது நிலவிய நிலைமைகள் தொடர்பிலும் , புங்குடுதீவில் இனிவரும் காலத்தில் இவ்வாறான குற்ற செயல்களை தடுக்க அப்பகுதியில் பொலிஸ் காவலரண் அல்லது உப பொலிஸ் நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனவும் கூறினேன். 
 
பிரதான சூத்திரதாரி. 
 
அத்துடன் , இந்த வழக்கு தொடர்பில் ஒரு நபர் இருப்பதாகவும் , அவரே இந்த குற்ற செயலுக்கு பிரதான சூத்திர தாரி என சிலர் எனக்கு தெரிவித்ததாக கூறி அவரை ஏன் கைது செய்யவில்லை என வினாவினேன். அதற்கு அவர் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் விபரங்களை எனக்கு கூறினார். அதில் எனக்கு வழங்கப்பட்ட தகவலில் பிரதான சூத்திர தாரி என குறிப்பிடப்பட்ட நபரின் பெயர் இல்லை. அதனை அவரிடம் கூறினேன். 
 
பின்னர் புங்குடுதீவில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றினை நடாத்துவது தொடர்பில் புங்குடுதீவு மக்களுடன் பேசுவதற்காக புங்குடுதீவு சென்றேன். அப்போது என் கூட யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் என்பவரையும் இன்னுமொரு பொலிஸ் உத்தியோகச்தரையும் சிவில் உடையில் அழைத்து செல்லுமாறு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் கூறியதை அடுத்து அவர்களையும் என்னுடன் அழைத்து சென்றேன். 
 
18 ஆம் திகதி என்னுடன் சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருடன் புங்குடுதீவு மக்கள் சிலரை சந்தித்தேன். அதன் போது ஒரு தகவல் கிடைத்தது, சம்பவம் தொடர்பில் இரு மாணவர்களுக்கு தகவல் தெரியும் என, அதனால் நாங்கள் குறித்த இரு மாணவர்களையும் நேரில் சந்தித்து கதைத்தால் ஏதேனும் தகவல் கிடைக்கும் எனும் எண்ணத்துடன் அவர்களை சந்திக்க பாடசாலைக்கு சென்றோம். 
 
அங்கு அதிபரை சந்தித்து குறித்த இரு மாணவர்கள் தொடர்பில் , கேட்ட போது அவர்கள் பாடசாலை வரவில்லை என கூறினார். நான் உள்ளே அதிபரை சந்தித்து கதைத்துக்கொண்டு இருந்தவேளை என்னுடன் வந்த ஸ்ரீகஜன் என்பவர் வெளியில் நின்று யாருடனோ தொலை பேசியில் கதைத்துக்கொண்டு இருந்தார். 
 
சுவிஸ் குமார் சரணடைந்தார். 
 
நான் அருகில் சென்றதும் இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி சரணடைய தயாராக இருக்கின்றார். அவரின் மனைவி , கைக்குழந்தை , மற்றும் அவரின் தயார் ஆகியோருக்கு பாதுக்காப்பு வழங்கினால் அவர்கள் சரணடைய தயாராக இருக்கின்றார். என என்னிடம் கூறினார். 
 
நான் உடனே பொலிஸ் வாகனத்தை அழைத்து போலீசாரிடம் ஒப்படைப்போம். என கூறினேன். அதற்கு அவர் பொலிஸ் வரும் வரையில் அவர்களை நாங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது புத்திசாலித்தனம் இல்லை. அதனால் அவர்களை எமது வாகனத்தில் ஏற்றி செல்வோம் என கூறினார். 
 
நானும் அதற்கு சம்மதித்து பொலீசாருக்கு உதவும் நோக்குடன் சரணடைந்தவர்களை எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் ஏற்றி சென்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இறக்கி விட்டேன். 
 
எனது வாகனத்தால் இறங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் சரணடைந்த சந்தேக நபரையும் அவரின் மனைவி , குழந்தை மற்றும் அவரின் தாயாரையும் பொலிஸ் நிலையம் உள்ளே அழைத்து சென்று உள்ளே இருந்த வாங்கு ஒன்றில் அமர வைத்தனர். அது வரையில் நான் அந்த இடத்திலே நின்றேன். பின்னர் நான் சென்று விட்டேன். 
 
மறுநாள் 19ஆம் திகதி காலை புங்குடுதீவில் மக்களுக்கும் பொலீசாருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. மதியம் 12 மணி வரையில் சுமூகமான முறையில் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தது. 
 
மக்களை தூண்டி விட்டார்கள். 
 
அந்த நேரம் அங்கு வந்த சிலர் , பொலீசாரிடம் சரணடைந்த சுவிஸ் குமார் என்பவர் பொலீசில் இருந்து தப்பி சென்று , கொழும்பில் தங்கி உள்ளதகாவும் , கூறினார்கள் அதனை அடுத்து அங்குள்ள மக்களை சிலர் எனக்கு எதிராக தூண்டி விட்டார்கள். 
 
அந்த மக்கள் சொல்லும் வரையில் எனக்கு சுவிஸ் குமார் கொழும்பு போன விடயம் தெரியாது. அதேவேளை சுவிஸ் குமார் என்பவர் சரணடையும் வரையில் எனக்கு சுவிஸ் குமார் என்பவர் யார் என்றே தெரியாது. அன்றைய தினமே நான் அவரை கண்டேன். 
 
அதன் போது அந்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டு இருந்த வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் சுவிஸ் குமார் எப்படி கொழும்பு போனார் என கேட்டேன். 
 
அதற்கு அவர் அந்த சந்திப்பிலையே எல்லோர் முன்னிலையிலும் சொன்னார் , சாட்சி ஆதாரங்கள் முறைப்பாடுகள் இல்லாவிடின் சுவிஸ் குமாரை பொலிசார் விடுவித்து இருக்கலாம் என தெரிவித்தார். 
 
ஆனால் அங்குள்ள சிலர் எனக்கு எதிராக மக்களை தூண்டி விட்டதனால் எம்மை மக்களை சுற்றி வளைத்து சுவிஸ் குமாரை கைது செய்தால் தான் விடுவோம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனால் பொலிசார் கடற்படையின் உதவியை நாடி எம்மை கடற்படையினர் பொது மக்கள் மத்தியில் இருந்து மீட்டு கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று எம்மை பின்னர் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தனர். என சாட்சியம் அளித்தார். 
 
தேடப்படும் குற்றவாளியை ஏன் உமது வாகனத்தில்  ஏற்றி நீர் ?
 
இதேவேளை நீதாய விளக்கத்தின் ( ரயலட் பார் ) தலைமை நீதிபதியான மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் , சாட்சியத்திடம் நீர் ஒரு சட்டத்தரணி ,உமக்கு தெரியதா போலிசாரால் தேடப்படும் குற்றவாளி ஒருவரை உமக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி செல்ல கூடாது என ? கேட்டதற்கு , தான் பொலிசார் கேட்டதற்கு இணங்க தான் ஏற்றி சென்றேன். ஒரு பொதுமகனா போலீசாரிடம் சரணடைந்த ஒருவரை பொலிசார் கேட்டதற்கு இணங்க பொலிஸ் நிலையம் அழைத்து சென்றேன். என பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து புங்குடுதீவு ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் தானே பிறகு எதற்கு நீங்கள் சந்தேக நபரை யாழ்ப்பாணம் கொண்டு சென்றீர்கள் ? என கேட்டதற்கு என்னுடன் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் யாழ்ப்பான பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடமே அவர்கள் சரணடைந்ததால் , என்னுடன் வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் யாழ்ப்பாணம் கொண்டு செல்வோம் என கூறியதால் யாழ்ப்பாணம் அழைத்து சென்றேன். என பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சியம் மன்றினால் விடுவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் விசாரணைகள் நாளைய தினம் (புதன் கிழமை) காலை 09 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அது வரையில் 09 சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.
அதேவேளை , இன்றைய தினம் சாட்சி பதிவுக்காக அழைக்கப்பட்ட சிவில் சாட்சி ஒன்று மன்றினால் முற்றாக வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது. அத்துடன் இன்றைய தினம் சாட்சி பதிவுக்காக அழைக்கப்பட்டு சாட்சி பதிவுகள் மேற்கொள்ள முடியாத மூன்று பொலிஸ் சாட்சியங்களையும் நாளைய தினம் புதன் கிழமை சாட்சியம் அளிக்க வருமாறு மன்றினால் பணிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.