Home இலங்கை அரசியலாக்கப்படும் இரத்த தானம் செல்வரட்னம் சிறிதரன்:-

அரசியலாக்கப்படும் இரத்த தானம் செல்வரட்னம் சிறிதரன்:-

by admin
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பெரும் சவாலாகியிருக்கின்றன. முன்னைய அரசாங்கத்தில் இந்த நிலைமை மோசமாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கி;ன்றது.
வெறுப்பூட்டும் பேச்சுக்கள் இனவாத அரசியலையே நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. மத ரீதியாக நிந்தனை செய்வதையும், இன ரீதியாக ஒடுக்குமுறை மேற்கொள்வதையும் அடிப்படையாகக் கொண்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களினால் வன்முறைகள் கிளர்ந்திருக்கின்றன. களுத்துறை மாவட்டத்தில் அலுத்கம, பேருவளை, தர்கா நகர் ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசமான இன வன்முறைகளினால் 4 பேர் உயிரிழந்தனர். எண்பதுக்கும் அதிகமானோர் காயமைடந்தார்கள்.
முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டார்கள். பெருமளவு சொத்துக்களுக்கு அழிவேற்பட்டது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன. இந்த அழிவுகளில் இருந்து அந்தப் பிரதேசத்து மக்கள் இன்னும் மீளவில்லை.
முன்னைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியுற்றதன் பின்னர் ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதாக உறுதியளித்து நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும், ஐக்கியமும், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மேலோங்கும். வெறுப்பூட்டும் பேச்சுக்களின் பாதிப்பு ஏற்படமாட்டாது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெறுப்பூட்டும் பேச்சுக்கள் முன்னைய அரசாங்க காலத்திலும் பார்க்க வேகமாக முன்னெடுக்கப்பட்டன. பௌத்த மதத் துறவிகளின் வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி இடப்படவில்லை. இதனால், முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள் பல அடையாளம் காண முடியாத வகையில் வௌ;வேறு சம்பவங்களில் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் முஸ்லிம் மக்கள் தமது பாதுகாப்பு குறித்து பெரும் அச்சமடைந்திருந்தார்கள்.
இந்த நிலைமைகளுக்குப் பின்புலத்தில் இருந்து செயற்பட்டதாகக் கருதப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் இழுத்தடிப்பு போக்கே கடைப்பிடிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அவரைக் கைது செய்வதற்காக பொலிசார் வலை விரித்திருந்த போதிலும், அது கைகூடவில்லை. நீதிமன்றத்தில் தானாகவே அவர் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிசாரின் செயற்பாடுகள் ஞானசார தேரரின் விடயத்தில் கேலிக்கூத்தாக மாறியிருந்தது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்திற்கும் மேலானவர்கள் என எவரும் கிடையாது என்ற நல்லாட்சியின் தத்துவம் மைத்திரி – ரணில் கூட்டாட்சியில் வலுவிழந்து போனதை நாட்டு மக்கள் நிதர்சனமாகக் கண்டார்கள்.
வெறுப்பூட்டும் பேச்சுக்களின் மூலம், நாட்டில் இனங்களுக்கிடையில் அமைதியின்மை உருவாகியிருந்தது. இதனால், கடந்த காலங்களிலும் பார்க்க, தீவிரமாக இன வன்முறைகள் தலைதூக்கவிடுமோ என்ற அச்சம் சிறுபான்மைன தேசிய இன மக்களிடையே தலையெடுத்திருந்தது.
ஆயினும், ஞானசார தேரர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர், முஸ்லிம்களுக்கு எதிரான மத ரீதியான வெறுப்பூட்டும் பேச்சுக்களும் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களும் குறைந்திருக்கின்றன.
குருதியில் இனபேதம்
இத்தகைய பின்னணியில்தான் வட மாகாணத்தை மையமாகக் கொண்ட வெறுப்பூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த இனவாத வெறுப்பூட்டும் செயற்பாட்டிற்கு மனித இரத்தம் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரத்த தானம் என்ற புனிதமானதொரு கைங்கரியத்தின் ஊடாக இனவாதத்திற்கும், இனப் பூசல்களுக்கும் அடித்தளம் இடப்பட்டிருக்கின்றது.
வடமாகாணமே யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். அங்கு ஏற்பட்ட யுத்தப் பாதிப்பை மூலதனமாகக் கொண்டு பல துறைகளையும் சார்ந்த பலரும் அங்கு படையெடுத்திருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமானப் போர்வையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் அவர்கள் இலாபமடைய முற்பட்டிருக்கின்ற ஒரு போக்கு வெளிப்பட்டிருக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உண்மையான மனிதாபிமான நோக்கத்துடன் வடமாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களுடைய நல்லெண்ணத்தில் வெளிப்பட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குப் பேருதவியாக அமைந்திருந்தன. அமைந்திருக்கின்றன.
ஆனால், அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் நலிவடைந்த நிலைமையை ஏளனமானமாக நோக்கி அவர்கள் மீது மதவாத அரசியலையும் சுயலாப அரசியலையும் திணிப்பதற்கான நடவடிக்கைகளை பலர் மேற்கொண்டிருந்தார்கள். இந்தச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களை ஆறுதலடையச் செய்வதற்குப் பதிலாக, அவர்களுடைய மனங்களைக் கீறி காயப்படுத்துவதற்கே வழி சமைத்திருந்தன.
இவ்வாறு வடமாகாணத் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று நடந்தேறியிருக்கின்றது.
நாட்டின் தென்பகுதியில் இருந்து வந்த சுமார் நூறு பௌத்த பிக்குகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கப் போவதாக முதலில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அந்தத் தகவலுக்கு அமைவாக பௌத்த பிக்குகள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, அவர்களில் பதினாறு பேர் திட்டமிட்டவாறு யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கியிருந்தார்கள்.
இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து நிகழ்வொன்றில் உரையாற்றிய வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே வடக்கில் தமிழ் மக்களுடைய உடல்களில் பௌத்த பிக்குகளின் இரத்தம் ஓடுகின்றது என குறிப்பிட்டிருந்தார். பௌத்த பிக்குகள் தமது பிரதேசத்திற்கு வெளியில் வந்து இரத்தம் வழங்கியதன் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய ஒரு சம்பவமாக இதனை அவர் சித்தரிக்க முற்பட்டிருக்கலாம்.
பௌத்த பிக்குகள் தமிழ் மக்களுக்காக இரத்தத்தைத் தானம் செய்தார்கள் என்ற பெருந்தன்மையை வெளிப்படுத்துவதற்காகத்தான் அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தாரோ தெரியவில்லை. ஆனால் அவருடைய இந்தக் கருத்து தமிழ் மக்களுடைய மனங்களைப் புண்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன.
தமிழ் மக்களுடைய உடலில் ஓடுகின்ற இரத்தம் தொடர்பாக இரண்டாவது முறையாக அவருடைய இந்தக் கருத்து வெளிப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னதாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு இராணுவத்தினர் இரத்தம் வழங்கியிருந்தார்கள். அந்த இரத்த தான நிகழ்வுக்குப் பின்னர் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, வட மாகாணத்தில் தமிழ் மக்களுடைய
உடல்களில் இராணுவத்தினருடைய இரத்தம் ஓடுகின்றது என அவர் கூறியிருந்தார். அப்போது அந்தக் கருத்தை எவரும் பெரிதுபடுத்தி சிந்திக்கவில்லை.
ஆனால், அதேவகையில் இரண்டாவது முறையாக பௌத்த பிக்குகள் இரத்தம் வழங்கியதையடுத்து, வடபகுதியில் தமிழ் மக்களுடைய உடல்களில் பௌத்த பிக்குகளுடைய இரத்தம் ஓடுகின்றது என கூறியிருப்பதை, உள்நோக்கம் கொண்டதொரு கருத்தாகவே நோக்கச் செய்திருக்கின்றது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராகிய வடமாகாண ஆளுனர், இனவாத உள்நோக்கம் கொண்ட வகையிலேயே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்று தமிழ் மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.
இரத்த தானம் புனிதமானது எந்தவகையிலும் பிரசாரத்திற்கு உரியதல்ல
இதற்கிடையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர நோயாளர்களுக்கு வழங்குவதற்குரிய இரத்தத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், யாழ் சமூகத்தி;ல் நிலவுகின்ற சாதிப்பிரச்சினை காரணமாக அங்கு பொதுமக்கள் இரத்தம் வழங்குவதற்குப் பின்னடிக்கின்றார்கள் என்றும் கொழும்பில் இருந்து வெளிவருகின்ற ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
மனித உடலில் ஓடுகின்ற இரத்தத்தையும், சமூகத்தில் உள்ள சாதிப்பிரச்சினையையும் இணைத்து புனையப்பட்ட இந்தச் செய்தியில் உண்மையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி மறுத்திருந்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு கிடையாது என்றும், சாதியை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் அந்த வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்க முன்வருவதில்லை என்ற கருத்தையும் அவர் அடிப்படையற்றது எனக் கூறி அதனைக் கண்டித்திருந்தார். அது மட்டுமல்லாமல், அந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதையும் அதே ஊடகத்தில் வெளிவரச் செய்திருந்தார்.
இராணுவத்தினர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கியதையடுத்து, அதனை இன ரீதியான கண்ணோட்டத்தில் வடமாகாண ஆளுனர் கருத்து வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்தே, யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு என்ற செய்தியை யாழ்ப்பாண சமூகத்தின் சாதிப்பிரச்சினையுடன் இணைத்து சம்பந்தப்பட்ட கொழும்பு ஊடகத்தின் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் அத்துடன் நிற்கவில்லை. யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தவறான முறையில் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே, தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் குழுவொன்று யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று இரத்த தானம் வழங்கியதும், அதனையடுத்து வடபகுதி தமிழ் மக்களுடைய உடல்களில் பௌத்த பிக்குகளின் இரத்தம் ஓடுகின்றது என்ற ஆளுனரின் கருத்தும் வெளியாகியிருந்தது.
இந்த நிலைமைகள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி, இரத்தம் என்பது அவசர நோயாளர்களின் உயிர்களைக் காப்பது. அதற்கான இரத்தத்தைத் தானம் செய்வது என்பது புனிதமான ஒரு செயலாகும். அதனை எந்த ஒரு தேவைக்காகவும் பிரசாரம் செய்வது அழகல்ல.
அது தவறான நடவடிக்கையாகும். இரத்தம் வழங்குகிள்ற ஒருவர் ஒருபோதும் தான் இரத்தம் வழங்கியதாகக் கூறி பெருமைப்படக் கூடாது. அவ்வாறு செய்வது அந்த இரத்த தானத்திற்கு முரணானதாகும். இரத்தத்தைப் பெற்றுக்கொள்கின்ற ஓர் இரத்த வங்கி அல்லது வைத்தியசாலை, தனக்கு இரத்தம் வழங்கப்பட்டதுபற்றிய கருத்தை வெளியிடலாம். அது ஏற்கத்தக்கது. ஆனால் இரத்தம் வழங்கிய ஒருவர் தான் இரத்த தானம் செய்தேன் என,  பெருமைக்காகக் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்தகல்ல என குறிப்பிட்டார்.
அது மட்டுமல்ல. இலங்கையில் வைத்தியசாலைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து இரத்தத்தைப் பெற்றுக்கொள்வதில் கொள்கை ரீதியான ஒரு நடைமுறையும் இருக்கின்றது. அதன்படி, எந்தவொரு பொதுமகனும் தனக்கு விருப்பமான நேரத்தில் தனக்கு அருகில் உள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் இரத்தம் வழங்கலாம். அல்லது இரத்த தானம் செய்யலாம். அது அவருடைய தனிப்;பட்ட உரிமையாகும். அவருடைய உடல் நிலைமைக்கு ஏற்றவகையில் அவரிடமிருந்து அங்கு இரத்தம் பெற்றுக் கொள்ளப்படும். அதுபற்றியும் டாக்டர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
ஒருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற இரத்தத்தை உடனடியாகப் பயன்படுத்தாமல் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் அதனைப் பயன்படுத்த வேண்டும். அதே நேரம் இரத்தத்தில் பல வகைகள் இருக்கின்றன. நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படும்போது, அவருடைய இரத்த மாதிரியை ஒத்த வகையான இரத்தத்தையே அவருக்கு வழங்க வேண்டும்.;
சிலவேளைகளில் குறிப்பிட்ட வகையான இரத்தம் வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கையிருப்பில் இல்லாமல் போகலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்களிடம் இருந்து இரத்த வங்கி தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும். அதேநேரம் ஏனைய இரத்த வங்கிகளுடன் தொடர்பு கொண்டு இரத்தத்தைப் பெற்றுக்கொள்வதும், மேலதிகமாக உள்ள இரத்தத்தை அவர்களுக்கு வழங்குவதும் உண்டு என டாக்டர் சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தினார்.
அதேநேரம் ஒருவருடைய இரத்தம் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும்போது அந்த இரத்தம் மாற்றமடைந்து விடும். எனவே, இரத்தம் வழங்கியவருடைய இரத்தம்தான் அந்த நோயாளியின் உடலில் ஓடுகின்றது என்று கூற முடியாது.
சுயவிருப்பத்தின் பேரில் இரத்தம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு பெறப்படுகின்ற இரத்தம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையிலேயே அது பயன்படுத்தப்படும். இனங்களின் அடிப்படையிலோ அல்லது ஆண் பெண் என்ற அடிப்படையிலோகூட இரத்தம் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, இரத்த தானம் என்பது மனிதாபிமானமானது. முற்றிலும் புனிதமானது.
எனவே, எந்த ஒரு காரணத்திற்காகவும் எந்தவொரு தேவைக்காகவும் இரத்தம் வழங்குவதைப் பிரசாரத்திற்குப்  பயன்படுத்தக் கூடாது என அவர் மேலும் விபரித்தார்.
வெறுப்பூட்டும் பேச்சு தண்டனைக்குரியது
நாட்டில் இனவாதத்தின் அடிப்படையிலேயே, பொதுவாக அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல், அரசியலுக்கே அதி முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இதனால் எதிலும் அரசியல் கலந்திருக்கின்றது. எங்கும் செல்வாக்கு செலுத்தக் கூடிய சக்தி படைத்ததாக அரசியல் திகழ்கின்றது. அரசியலில் முன்னேற வேண்டுமானாலும்சரி, அரசியலில் நிலைத்து நிற்க வேண்டுமானாலும்சரி, இனவாதத்தை அதற்காகப் பயன்படுத்துகின்ற ஒரு போக்கு நீண்டகாலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாகவே, முப்பது வருட சாத்வீகப் போராட்டம், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் பின்னரும், இனப்பிரச்சினைக்கு இன்னும் அரசியல் தீர்வு காண முடியாத அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதில் பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள் அரசியல் ரீதியாக மிகுந்த கரிசனையும் அக்கறையும் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், இங்கு வசிக்கின்ற தேசிய இனங்கள் மத்தியில் நல்லுறவும் ஐக்கியமும் நிலவ வேண்டும் என்பதில் அதனைக் காண முடியவில்லை. ஒற்றையாட்சி கொண்டதாகவும், பௌத்த மத மேலாதிக்கம் கொண்டதாகவும் இந்த நாடு திகழ வேண்டும் என்பதில் அவர்களுக்கிடையில் இறுக்கமானதோர் ஒற்றுமை நிலவுகின்றது.
அதேவேளை, மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த தம் இன அரசியல் தலைவர்களுக்கு இடம் கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தையும் அரசியல் பலத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் மிகத் தீவிரமாக இருக்கின்றார்கள். இதன் காரணமாகத்தான் சுய அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்தச் செயற்பாட்டில் பௌத்த மேலாதிக்கம் பிரித்தறிய முடியாத வகையிலும், பிரித்து ஒதுக்கிவிட முடியாத வகையிலும் இழையோடி காணப்படுகின்றது. இத்தகைய அரசியல் குணநலன் போக்கிலேயே இனங்கள், மதங்களுக்கிடையில் வெறுப்பூட்டுகின்ற பேச்சுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வெறுப்பூட்டும் பேச்சு என்பது பொதுவாக இலங்கையின் சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இன, மத, கலை, கலாசார, பால்நிலை, உடல் உள ரீதியான இயலாமை என்பவற்றின் அடிப்படையில் ஒருவரையோ அல்லது ஒரு இனக்குழுத்தையோ பாதிக்கச் செய்யும் வகையில் கருத்து வெளிப்படுத்துவதையே வெறுப்பூட்டும் பேச்சாகக் கருதப்படுகின்றது.
ஒருவர் தான் விரும்பியவாறு கருத்துக்களை வெளியிடுவதற்கு அடிப்படையில் உரிமை கொண்டிக்கின்றார். அது அவருடைய பேச்சுரிமையாகும். ஆனாலும் மற்றவர்களை இன, மத, பால் நிலை போன்ற நிலைமைகளில் அவர்களை நிந்தனை செய்யும் வகையில் அல்லது அவர்களுடைய மனங்கள் புண்படத்தக்க வகையில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்களாக வகைப்படுத்தப்பட்டு, அத்தகைய செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஒருவருடைய பேச்சுரிமை மதிக்கப்பட வேண்டும். அதேவேளை, மற்றவரை அல்லது ஓரினத்தை, ஓர மதக்கொள்கையுடையவர்களைப் பாதித்து மனம் நோகச் செய்கின்ற பேச்சுக்களைப் பேசக்கூடாது என்பதும் முக்கியமாகும். அவ்வாறு செய்வது குற்றவியல் தண்டனைக் கோவைக்கு அமைய ஒரு குற்றச் செயலாகவே கருதப்படும்.
வெறுப்பூட்டும் பேச்சுக்களைப் பேசுகின்ற ஒருவர் குற்றம் இழைத்தவராகவே சட்டம் கருதுகின்றது. அவ்வாறு செயற்படுகின்ற ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டம் பரிந்துரைத்திருக்கின்றது. ஆனாலும், குற்றம் இழைப்பவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிச் செல்கின்ற போக்கு, ஓர் அரசியல் கலாசாரமாகவே நாட்டில் பின்பற்றப்பட்டு வருவதனால், வெறுப்பூட்டும் பேச்சுக்களைப் பேசுபவர்களுக்கு எதிராக சட்டம் முடங்கிக் கிடக்கின்றது.
எனவே, புனிதம் நிறைந்த மனிதாபிமானச் செயற்பாடாகிய இரத்த தானம் செய்வதை, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய, குறுகிய மதபேதம் தோய்ந்த குறுகிய அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதை, பேரினவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளையில், அதற்கு நேர் முரணான இனவாத போக்கையும் இனவாத மதவாத ரீதியிலான வெறுப்பூட்டும் பேச்சுக்களையும் இறுக்கமான முறையில் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
இல்லையேல், நல்லிணக்க முயற்சி என்பது பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுகின்ற கைங்கரியமாகவே மாறிப்போகும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More