இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண சபையில் பாட்டு பாட அனுமதி கோரிய ஆளும் கட்சி உறுப்பினர்.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் ஒன்றரை மணி நேரத்துடன்  எதிர்வரும் 21ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் 98ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில், நடைபெற்றது.
தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான பிரேரரனை ஒத்திவைப்பு.
அதன் போது முன்னதாக சபை அறிவிப்புக்களை அவைத்தலைவர் அறிவித்தார். அதனை தொடர்ந்து இன்றைய தினம் , ஆளும் கட்சி உறுப்பினர் அ.பரம்சோதி  , மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக்குழு ஒன்றினை அமைத்து மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி பிரேரணை ஒன்றினை முன் மொழிய இருந்தார்.
அரை மணி நேரத்தில் சபை ஒத்திவைப்பதாக அறிவிப்பு. 
குறித்த பிரேரணையில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என கோரி பிரேரணையை எதிர்வரும் 27 ஆம் திகதி அமர்வில் எடுத்துக்கொள்வோம் என அவைத்தலைவர் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் கேள்விகளை கேட்டு இருந்தார். அதனுடன் சபை அமர்வுகளை எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சர்கள் நடவடிக்கை குறித்த விவாதத்திற்காக ஒத்திவைப்பதாக காலை 10.15 மணியளவில் அவைத்தலைவர் அறிவித்தார்.
பாட்டு படிச்சுட்டு போவோமே ..
அதன் போது உறுப்பினர்கள் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. இன்றைய சபை அரை மணிநேரத்துடன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே , என சலசலப்பு ஏற்பட்டது. அவ்வேளை ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் வேடிக்கை சபை என தெரிவித்ததுடன் , வந்தனாங்க , வந்தவுடன் போகாமல் , வந்ததற்கு இரண்டு பாட்டாவது பாடி விட்டு செல்வோம் என சபையில் தெரிவித்தார். அதன் போது சபையில் சிரிப்பொலி எழும்பியது.
சபையை அமைதியாக நடாத்துவேன்.
இந்த சபையில் குழப்பங்கள் நடக்கும் என பலர் வெளியில் இருந்து ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். அதேபோல எதிராக எழுதுகின்றவர்கள் எழுதுகின்றார்கள். கதைக்கின்றார்கள் , கதைக்கின்றார்கள் ஆனால் இங்கே ஒன்றுமே நடக்க போவதில்லை.
ஊடகவியலாளர்களும் இங்கே எதோ பெரிசா நடக்க போகின்றது என நினைத்து ஓடிவாறாங்க , இங்கே ஒன்றுமே நடக்க போவதில்லை. பிறகு போய் ஒன்றுமே நடக்கவில்லை என்று செய்தி எழுதுகின்றார்கள்.
இந்த சபை கௌரவமான சபை. இதனை நான் கௌரவமாக நடாத்தி செல்வேன். இங்கே இந்த பிரச்சனையும் நடக்காது. சுமூகமாக சபையை நடாத்தி செல்வேன் என அவைத்தலைவர் தெரிவித்தார்.
மாகாண சபை செயற்பாடுகள் குறித்து விவாதம். 
வடமாகாண சபை ஆரம்பமானதில் இருந்து இதுவரையிலான மூன்றே முக்கால் வருடங்களில் மாகாண சபை அமைச்சுக்களின் சாதனைகள் , குறைப்பாடுகள் , அமைச்சுக்கள் எதிர்கொண்ட தடைகள்  , சிக்கல்கள் தொடர்பில் சபையில் விவாதம் நடாத்துவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்டோர் கோரியமைக்கமைவாக , எதிர்வரும் 21ஆம் திகதி விசேட அமர்வு நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.
11 மணிக்கு சபை ஒத்திவைப்பு.
அதற்கு உறுப்பினர்கள் இடையில் வாத பிரதிவாதங்கள்  இடம்பெற்றது. அது சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணியளவில் தேநீர் இடைவேளை நேரத்தை நெருங்கியதும் உறுப்பினர்கள் வாத பிரதிவாதங்கள் முடிவுக்கு வந்து சபை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 5 இலட்ச ரூபாய் செலவு. 
வடமாகாண சபையின் ஒரு நாள் அமர்வுக்காக 5 இலட்ச ரூபாய் செலவிடப்படுவதாக அவைத்தலைவர் பலதடவைகள் சபையில் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.