Home இலங்கை காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன்

காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன்

by admin

காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என கோரி நூறு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்ற உறவினர்களே இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார்கள்.
நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பவற்றில், காணாமல் போனோருக்கான செயலகத்தை நிறுவுவதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் அரசாங்கம் முன்னோக்கி அடியெடுத்து வைத்திருக்கின்றது என்று பாராட்டப்படுகின்றது.
இந்தச் சூழ்நிலையிலேயே காணாமல் போனோருக்கான செயலகம் பற்றிய விமர்சனமும், நிராகரிப்பும் வந்திருக்கின்றன.
நிலைமாறுகாலத்தில் நீதியை நிலைநாட்டி, நல்லிணக்கததை உருவாக்கி நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிரந்தரமாக நிலவச் செய்ய வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் வலியுறுத்தியிருக்கின்றது.
இதற்கான நடவடிக்கைகளின் மூலம் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்பதையும் அது சுட்டிக்காட்டியிருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் பொறுப்பு கூறும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச நாடுகளும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளின் மூலம், உண்மையைக் கண்டறிய வேண்டும்.  நீதியை நிலைநாட்ட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.  அத்தகையதொரு நிலைமை மீண்டும் இடம்பெறாத வகையில் நிலைமைகளை உறுதிசெய்தல் வேண்டும் என்ற நான்கு செயற்பாடுகளுக்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைப் பேரவை ஆலோசனை கூறி வழிகாட்டியிருக்கின்றது.
யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு யுத்தமோதல்கள் முடிவுக்கு வந்த தருணம் தொட்டு சர்வதேசத்தினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், முன்னைய அரசாங்கம் அந்தப் பொறுப்பை வெற்றிகரமாகத் தட்டிக்கழித்துச் சென்றுவிட்டது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கத்தை, மக்களுடைய பேராதரவுடன்  தோற்கடித்து, ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சிக்கான அரசாங்கம் பொறுப்பு கூறும் செயற்பாட்டை நிறைவேற்றுவதில் காலம் கடத்துகின்ற ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
இரண்டு வருடங்கள் ஒடிவிட்டன
நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டிய கடமைகளைச் செய்வதில் வாதப் பிரதிவாதங்களை நடத்தி, காலத்தை இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு வருடகாலம் கடந்த பின்பு – கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
அந்த சட்டமூலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வியாக்கியானங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அதனைக் குழப்பியடிப்பதற்கான முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை. வாக்கெடுப்பின்றியே அந்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆனால் அந்த செயலகத்திற்கான ஆளணியை நியமிப்பதிலும், அதனைச் செயற்படச் செய்வதிலும் அரசாங்கம் போதிய அளவில் அக்கறை செலுத்தவில்லை என்றே கூற வேண்டும். அதேநேரம், அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஜேவிபி கோரியிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று திருத்தம் செய்ய வேண்டியிருப்பதனால், அந்த செயலகத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் காரணம் கூறி வந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்ட காணாமல்போனோருக்கான செயலகம் தொடர்பான சட்டமூலத்தில் இந்த வருடம் ஜுன் மாதமே திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னதாக காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்கும் ஆலோசனையை நடைமுறைப்படுத்தப் போவதாக 2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான சட்டமூலத்தை ஒரு வருடத்தின் பின்பே புதிய அரசாங்கம் கொண்டு வந்தது. காணாமல் போனோருக்கான செயலகத்தை நிறுவுவதற்கான சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு வருடம், அதன் பின்னர் அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மேலும் ஒரு வருடம் என இரண்டு வருட காலம் கழிந்திருக்கின்றது.
சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர், அந்த அலுவலகம் எப்போது செயற்படும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. எப்போது அதனை அரசாங்கம் செயற்படுத்தப் போகின்றது என்பதுபற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
யுத்தமோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகள், போர்க்குற்றச் செயல்கள், அத்துமீறிய செயற்பாடுகள் என்பவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை அராhங்கத்திற்குத் தொடர்ச்சியாகவே ஐநா அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட உடன், அப்போதைய ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்து அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்கள் நடத்தியிருந்தார்.
இறுதி யுத்தமோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மேலாகத் தாழப்பறந்து பார்வையிட்டபோது அப்போதைய நிலைமைகள் தன்னை திடுக்கிடச் செய்யும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல், அங்கு இடம்பெற்ற உரிமை மீறல்கள் யுத்தமீறல்கள் தொடர்பில் அசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூனுடன் இணைந்து முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணை அறிக்கையொன்றையும் விடுத்திருந்தார்.
ஆனால் அதில் ஒப்புக்கொண்டவாறு பொறுப்பு கூறுவதற்கான செயற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லை.
மாறாக, உரிமை மீறல்களோ அல்லது யுத்தமீறல் சம்பவங்களோ எதுவுமே நடைபெறவில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அத்துடன் தமது படைகள் ஒரு கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் துப்பாக்கியையும் மறு கையில் மனிதாபிமானத்தையும் ஏந்தியே செயற்பட்டிருந்தார்கள் என்று வியாக்கியானம் வெளியிட்டிருந்தார்.
ஆனால், முன்னைய அரசாங்கத்தின் போக்கில் இருந்து மாறுபட்டு, மக்களின் மனங்களை வென்றெடுக்கத்தக்க வகையில் செயற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நல்லாட்சிக்கான அரசாங்கமும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் இதுவரையில் வெற்றிபெறவில்லை.
காணாமல் போனோருக்கான செயலகம் – சட்டம் 
காணாமல் போனோருக்கான செயலகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களளைக் கண்டு பிடிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செயலகத்திடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகள் எப்படி காணாமல் போனார்கள் என்பது குறித்து தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இந்த செயலகம் காணாமல் போனவர்களைப் பற்றிய விசாரணைகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இதற்கான சட்டமூலத்தில், இந்த அலுவலகத்திற்கு கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் அல்லது ஆட்களைக் காணாமல் ஆக்கியவர்கள் என கண்டறியப்படுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கோ சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறுமனே விசாரணைகளை நடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களைத் திரட்டுகின்ற பணிகளை மட்டுமே முன்னெடுக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றது. அதேநேரம், இந்த செயலகத்தி;ற்கு ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கின்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படமாட்டாது. உச்சகட்ட முறையில் அந்தத் தகவல்கள் பற்;றிய இரகசியம் பேணப்படும். தகவல் அறியும் சட்டமூலம் அல்லது நீதிமன்ற உத்தரவு போன்ற வழிமுறைகளின் ஊடாகக்கூட அந்தத் தகவல்களை எவரும் அறிந்து கொள்ள முடியாது என்பது அந்த சட்டத்தின் தன்மையாகும்.
இந்த நிலைமைகள் ஒருபுறமிருக்க, இந்த செயலகத்திற்கான உரிமைகள் அதிகாரங்கள் தொடர்பில் முக்கியமான ஒரு விடயத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அந்த சட்டத்தின் பொது விதிகள் பற்றிய விடயங்களில் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பைக் கொண்ட 11 (ஏ) என்ற இலக்கம் கொண்ட பந்தி, இந்த திருத்தத்தின் மூலம்  நீக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தில் வெற்றிவாகை சூடிய இராணுவத்தினரைத் தண்டிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே,  காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்கும் சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது என முன்னதாக சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காணாமல: போனவர்கறைப் பற்றி விசாரணை செய்யும் செயலகத்திற்கு அளவற்ற சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் அந்தச் செயலகம் இராணுவ வீரர்களைத் தண்டிக்கப் போகின்றது என்று இராணுவத்தில் இணைந்துள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், விடுதலைப்புலிகளுடனான யுத்த காலத்தில் மட்டுமல்லாமல், ஜேவிபியினர் நடத்திய ஆயுதப் போராட்ட காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் பற்றியும் இந்த செயலகம் விசாரணைகளை மேற்கொள்ளும். எனவே, இது தமிழர்களுக்காக மட்டும் கொண்டு வரப்படுகின்ற சட்டமல்ல. சிங்கள மக்களுக்கும் சேர்த்தே இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது என சிங்கள மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்ட பின்பே நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ள 11 (ஏ) பந்தியில் காணாமல் போனோருக்கான செயலகம் தனது செயற்பாடுகளுக்கு அவசியமான விடயங்களில் உளளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் சுதந்திரமாக ஒப்பந்தங்களைச் செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான ஒப்பந்தங்களைச் செய்வதற்கு அந்த செயலகத்திற்குப் பொறுப்பான அமைச்சிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரிடமிருந்தோ அனுமதி பெற வேண்டியதில்லை என்பது அந்தப் பந்தியின் உள்ளடக்கமாகும்.
காணாமல் போனோருக்கான செயலகம் – சட்டத் திருத்தம்
காணாமல் போனோர் பற்றிய தகவல்களில் ஏதேனும் மனிதப்புதைகுழி பற்றிய விபரங்கள் ஏதேனும் கிடைக்குமானால், அந்தப் புதைகுழிகளைத் தோண்டுவதில், அல்லது அவற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், மனித எலும்புகள் உள்ளிட்ட தடயங்களை சட்.டவியல் பரிசோதனைக்கு உட்படுத்துவதிலும் டிஎன்ஏ பரிசோதனைகள் போன்றவற்றைச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், அவை தொடர்பான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அந்தத் துறைகளில் முன்னேறியுள்ள நாடுகள் அல்லது நிறுவனங்களின் உதவி இந்த செயலகத்திற்குத் தேவைப்படலாம்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு ற ஒப்பந்த அடிப்படையில் அவற்றின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த 11 (ஏ) சட்டப்பிரிவு வழி செய்திருந்தது. ஆனால் அது நீக்கப்பட்டதையடுத்து, அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின் மூலம், காணாமல் போனோருக்கான செயலகத்தின் சில முக்கிய செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அந்த செயலகத்தின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காணாமல் போனோர் தொடர்பில் செயற்பட்டு வருகின்ற செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
செம்மணி மனிதப் புதைகுழி, திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி போன்றவற்றின் வழக்குகளில் டிஎன்ஏ பரிசோதனைகள் முக்கிய தேவையாக எழுந்திருந்தன. ஆயினும் அத்தகைய சட்டவியல் பரிசோதனைகளை உள்நாட்டில் செய்வதற்கு வசதியில்லாத காரணத்தினால், அந்த வழக்கு விசாரணைகளில் பெரும் பாதிப்பு எற்பட்டிருக்கின்றது என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள்.
ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை சரியாக அனுமானிக்க முடியாது. அவர்களுக்கு எதுவும் நடந்திருக்கலாம். அவர்கள் உயிருடன் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். உண்மையில் அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள், எப்படி இருக்கி;ன்றார்கள் என்பதைக் கண்டறிவதற்கு விரிவான – ஆழமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
அத்தகைய விசாரணைகளுக்குப் பொறுப்பான செயலகம் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். அதற்குரிய அதிகாரங்களும் ஆளணி மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் அவசியம். அவ்வாறில்லாமல், வேறு ஒருவருடைய அனுமதியைப் பெற்றுச் செயற்பட வேண்டும் என்ற நிலைமை இருந்தால், அந்தச் செயலகம் ஆக்கபூர்வமாகச் செயற்பட முடியாது.
எல்.எல்.ஆர்.சி மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு போன்ற குழுக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தியிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் அவற்றின் முன்னால் சாட்சியங்களை அளித்திருக்கின்றார்கள். ஆயினும் அந்த விசாரணைகள் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான சாட்சியங்கள் மொழிபெயர்ப்பிலேயே தங்கியிருக்க நேர்நதிருந்தது.
அந்த விசாரணைகளின்போது தமிழில் அளிக்கப்பட்ட சாட்சியங்களுக்கு முறையான  சரியான மொழிபெயர்ப்பு வழங்கப்படாத காரணத்தினால், அந்த விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். அத்துடன், இந்த குழுக்களினால் நடத்தப்பட்ட விசாரணைகளும் திறந்த மனத்துடன் நடத்தப்படவல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஏற்கனவே வரித்துக் கொண்ட ஒரு முடிவை நோக்கி சாட்சியங்களை வழிநடத்திச் செல்கின்ற ஒரு போக்கிலேயே அந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக, அந்த விசாரணைகளில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டு விசாரணைகளைக் கண்காணித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றார்கள். இந்த விசாரணைகளில் தமிழில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படாமை குறித்தும் அவர்கள் விமர்சித்திருந்தார்கள்.
இதேபோன்றதொரு நிலைமை தற்போது சட்டரீதியாக உருவாக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான செயலகத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது. அத்தகைய நிலைமை ஏற்படுமானால், புதிதாக அமைக்கப்படுகின்ற செயலகத்தினால் எந்தவிதமான பயனும் ஏற்படமாட்டாது.
உறவினர்களின் நிலைப்பாடு
காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக செயலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வரவேற்றுள்ளார்கள். நீண்டகாலமாக நிலவி வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினைக்கு இந்தப் பொறிமுறையின் மூலம் தங்களுடைய உறவினர்களைக் கண்டு பிடிக்க முடியும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் ஊடாக தமது உறவினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நியாயமும், நீதியும் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் சட்டரீதியாக உருவாக்கப்படுகின்ற காணாமல் போனோருக்கான செயலகம் சில விடயங்களில் சுதந்திரமாகச் செயற்பட முடியாத வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ருப்பது அவர்களை பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது.
அத்துடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தக்க வகையிலான அதிகாரங்கள், அந்தச் செயலகத்திற்கு வழங்கப்படாமல் இருப்பதும் அவர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கின்றது.
இந்தச் செயலகத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களின் ஆலோசனைகளும் கருத்துக்களும் அரசாங்கத்தினால் உள்வாங்கப்படும் என்று உறுதியளி;க்கப்பட்டிருந்தது. ஆயினும் நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் கருத்தறியப்பட்ட போது, அத்தகைய கருத்துக்கள் உள்ளடக்கப்படாமலேயே காணாமல் போனோருக்கான செயலகம் உருவாக்கப்பட்டது.
அதற்கான சட்டமூலம் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதனால், பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துக்களை உள்ளடக்குவதற்குக் கால தாமதம் செய்ய முடியாது என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேசத்திடம் இருந்து அழுத்தங்கள் வந்திருப்பதனால் உடனடியாக அந்த பொறிமுறையை உருவாக்க வேண்டியிருப்பதாகவும் காரணம் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது,
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்கான முனைப்பிலேயே இந்தப் பொறிமுறைக்கான சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கான அவசரத்தை அரசாங்கம் காட்டியிருந்தது. ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ள போதிலும், காணாமல் போனோருக்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதில் திருத்தம் செய்வதற்காக ஒரு வருட காலம் சென்றிருக்கின்றது.
இப்போது அந்தச் சட்டத்த்pல் திருத்தம் செய்யப்பட்டுவிட்ட போதிலும், காணாமல் போனோருக்கான செயலகத்திற்குரிய ஆளணியை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் மேற்கொண்ட இழுத்தடிப்பு ரீதியிலான போக்கில் இந்தச் செயலகம் செயற்படத் தொடங்குவதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மனச் சஞ்சலமடைந்திருக்கின்றார்கள்.
இத்தகைய பின்னணியிலேயே, காணாமல் போயுள்ள தமது உறவுகளைத் தேடிக்கண்டு பிடித்துத் தருமாறு கோரி நூறு நாட்களுக்கு மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பவர்கள்  சட்டரீதியான அதிகாரங்கள் இல்லாத காணாமல் போனோருக்கான செயலகத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்திருக்கின்றார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More