இலங்கை பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவர் கட்டுநாயக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர், வெளிநாடு செல்ல முயன்ற வேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் எனும் தமிழ் உத்தியோகஸ்தரே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார். 

பொலிஸ் தலைமையகத்திடம் உரிய அனுமதிகளை பெறாது இந்தியாவுக்கு செல்ல முயன்று உள்ளார். அதேவேளை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதனாலையே திருப்பி அனுப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரிடமே மாணவி கொலை வழக்கின்  பிரதான சூத்திரதாரி என குறிப்பிடப்படும் ஒன்பதாம் எதிரியான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் முதலில் (18 ஆம் திகதி மே மாதம் 2015ஆம் ஆண்டு) சரணடைந்ததாகவும் , 

அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தான் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுவிஸ் குமாரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் , 

சுவிஸ் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் , ஸ்ரீகஜன் எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் பொலிஸ் நிலையத்தினுள் அழைத்து சென்று அங்கிருந்த வாங்கில் அமர வைக்கும் வரை தான் அந்த இடத்தில் நின்றதாகவும் , 

அதன் பின்னர் மறுநாள் சுவிஸ் குமார் எவ்வாறு கொழும்பு சென்றார் என்பது  தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும், சட்டத்தரணியும் , சிரேஸ்ட சட்டவிரிவுரையாளருமான V.T. தமிழ்மாறன் கடந்த 05ஆம் திகதி நீதாய விளக்கத்தின்  ( ரயலட் பார் ) முன்பாக சாட்சியம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்பவர்கள் மற்றும் நகை கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலர் கப்பம் பெறுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்த நிலையில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த உப பொலிஸ் பரிசோதகர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

குறித்த இடமாற்றமானது வழமையாக இடம்பெறும் இடமாற்றம் தான் என பொலிஸ் தரப்பினர் கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers