Home உலகம் குட்டை பாவாடையும் உகாண்டாவின் ஒழுக்க விதிகளும்!

குட்டை பாவாடையும் உகாண்டாவின் ஒழுக்க விதிகளும்!

by admin

உகாண்டாவில் அரசு ஊழியர்கள் எந்தவிதமான உடையை அணியலாம் என்று கொண்டுவரப்பட்டுள்ள வரைமுறைகள், ஆடைகள், பெண்கள் உரிமை மற்றும் நெறி சார்ந்த கடுமையான விவாதத்தை பற்றவைத்துள்ளது.

ஒழுங்காக ஆடை அணிவதற்கான புதிய வரைமுறைகளை இந்த புதிய உத்தரவு விளக்குகிறது.

பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டவை :

  • முழங்காலுக்கு மேலாக இருக்கும் பாவாடை அல்லது ஆடை அணிவது
  • ஸ்லீவ்லெஸ், வெளிப்படையாக அல்லது ஊடுருவக்கூடிய மேலாடைகள்
  • மார்பு, தொடை, முழங்கால் மற்றும் பின்புறம் தெரிவது போன்ற உடைகள்
  • பிரகாசமாக சாயமேற்றப்பட்ட முடி
  • 3 செமீ-க்கு அதிகமாக நகம் வளர்ப்பது அல்லது பல வண்ண நகப்பூச்சுகளை பயன்படுத்துவது

ஆண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது :

  • ஒழுக்கமான கால்சராய், முழுக்கை சட்டைகள், ஜாக்கெட் மற்றும் டை அணிய வேண்டும்.
  • மிகவும் இறுக்கமான கால்சராய்களை அணியக்கூடாது.
  • சுகாதார அடிப்படைகளின் பரிந்துரைகளைத் தவிர மற்ற நேரங்களில் திறந்த காலணிகளை அணியக்கூடாது
  • நன்றாக வாரிய குறுகிய முடியினை கொண்டிருக்க வேண்டும்

பொது சேவை அமைச்சகத்தின் மனித வள இயக்குனராக இருக்கும் அதா முவாங்கா, இதுகுறித்து தெரிவிக்கையில், உடல் பாகங்கள் கண்டிப்பாக மூடபட்டிருக்க வேண்டும் என பெண் அதிகாரிகள் மீது ஆண் அதிகாரிகள் தெரிவிக்கும் புகார்களுக்காக இந்த புதிய சுற்ற்றிக்கை தேவைப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

போராட்ட பதாகைள்

அரசு ஊழியர்களுக்கு அறிமுக நிகழ்வில் ஆடை விதிமுறைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டிருந்தது என மோசஸ் செம்பிரா என்ற ஆசிரியை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தொழிலும் அதற்கான நடத்தை விதிகளைக் கொண்டுள்ளது. பணியில் இருக்கும் போது நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற உடைகளை உடுத்தியிருக்க வேண்டும். எனக்கு இதில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை.

திசைதிருப்புதல் நடவடிக்கை?

உகாண்டாவின் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவியாக இருக்கும் ரிட்டா அச்சிரோ இதுகுறித்து விளக்குகையில், இந்த உத்தரவு ஒரு திசைதிருப்புதல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆடைகளுக்கான விதிமுறைகள் எந்த விதத்தில் சேவையை பாதிக்கும் என்றும் அவர் கேள்வியெழுப்பிய அவர், உகாண்டா மக்களுக்கு அதிக அளவிலான ஆசிரியர்களும், செவிலியர்களும்தான் தேவை என்றும் கூறியுள்ளார்.

இங்கு தாய் இறப்பு விகிதம் அதிக அளவில் உள்ளது என்றும் ஆசிரியர்களே இல்லாமல் குழந்தைகள் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கலைஞர் மற்றும் எழுத்தாளர்கலைஞரும் எழுத்தாளருமான லிண்ட்சி குக்குண்டா

குட்டைப் பாவாடைகள் மற்றும் பிரகாசமான ஆடைகளை தடை செய்வது எந்த விதத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்கும் என்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய ரக ஆடைகள் மற்றும் கழுத்தில் அணியப்படும் டைகள் மீதான விவாதம் பொது சேவைக்கான முறையான அமைப்பிற்கு அப்பாற்பட்டது.

கடந்த மே மாதம், நிகழ்ச்சி ஒன்றில் குட்டைப் பாவாடை அணிந்திருந்த மக்கரெரெ பல்கலைக்கழக மாணவிகள் இருவரின் புகைப்படம் உகாண்டா மக்களால் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு முகநூலில் பரவலாக பகிரப்பட்டது.

அந்தப் புகைப்படத்தில் இருந்த இரண்டு இளம் மாணவிகளில் ஒருவரான ரெபெக்கா நடம்பா இறுதியாண்டு கல்வியியல் மாணவியாவார். அவர் சிறிய ரக மேலாடையும் கால்கள் தெரியுமளவிற்கு பாவாடையும் அணிந்திருந்தார்.

இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட அவர், நான் மனநிலை சரியில்லாதவரா என்பது போன்ற கேள்விகளை அவர்கள் என்னை நோக்கி எழுப்பினர். சிலர் நான் ஆசிரியையாக அனுமதிக்க கூடாது என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழக நிகழ்வில் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்தையும் தெரிவிக்கும் படியும் குறிப்பிட்டிருந்தது.

ஏற்புடையதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதே ஆடை குறித்தான நடம்பாவின் எண்ணமாக இருக்கிறது. நான் ஆசிரியை ஆவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எனது மாணவர்களுக்கு வகுப்பறைகள், பணியிடங்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் உடையணிவதற்கான வேறுபாட்டை நான் கூறுவேன்.

வழக்கறிஞர் மற்றும் ஆர்வலருமான அக்குமு இதை பெண்கள் உடல் மீதான நிறுவனமயமாக்கல் கொள்கை என்று குறிப்பிட்டார். பொது நிறுவனமான இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும், எதை தேர்வு செய்யக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பெண்ணை அவருடைய நண்பர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய போது, அந்த பெண் ஜன்னலின் வழியே குதித்தார் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்ட பல்கலைக்கழகம் எந்தவித அறிக்கைகளும் வெளியிடவில்லை என்றும், ஏன் திடீரென அவர்கள் மூர்க்கமாக செயல்படுகிறார்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

உகாண்டா, விரைவான சமூக மாற்றத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்க திரைபடங்களில் காண்பிக்கப்படும் புதியவைகள் மற்றும் பாப் இசைகள் கம்பளாவின் தெருக்களை அடைய குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன.

`ஒரு பக்கம் பாலியல் பக்கங்கள்மறுபுறம் கலாசார கட்டுப்பாடு’

கிழித்து விடப்பட்ட ஜீன்ஸ், வெட்டப்பட்ட மேலாடைகள் மற்றும் இறுக்கமான கால்சாராய்களே ஆண்களுக்கான உடையாக எங்கும் காணப்படுகிறது.

ஒருபுறம் பத்திரிகைகள் பெண்களின் அரை நிர்வாண புகைப்படங்களையும், பாலியல் தொடர்பான பக்கங்களையும் வெளியிட்டு வளர்ச்சியடைந்து வருகின்றன. மற்றொருபுறம், முழுவதும் மூடும்படி மக்களிடம் அரசு ஊழியர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

நால் நகங்களில் வண்ணம்படத்தின் காப்புரிமைAFP

மேலும் வெளிப்படையான ஆடைகளை அணிந்து கொள்வதாக கருதப்படும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஒரு தடையும் ஏற்பட்டுள்ளது.

கலைஞரும் எழுத்தாளருமான லிண்ட்சி குக்குண்டா, இது கலாசாரம் மற்றும் மதம் சார்ந்து ஏற்படும் தொல்லைகள் என்றும், பெண்களை ஒடுக்கும் ஒரு காரணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆடைதான் ஒழுக்கத்தின் சின்னமா?

நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்களுடைய ஒழுக்கம் என்பது நீங்கள் உடுத்தும் உடையில்தான் இருக்கிறது. ஒழுக்கம் என்பது உடையோடு அடங்கியிருந்தால், பாலியல் வல்லுறுறவில் ஈடுபட்ட குற்றவாளி மற்றும் ஊழல் அரசியல்வாதிகளை கண்டுபிடிக்க நாம் வெகு தொலைவில் இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்களை ஆவணப்படுத்தி வரும் நாட் யுவர் பாடி என்ற இணைய இயக்கத்தின் இயக்குனராக இருக்கும் குக்குண்டாவும், கம்பளா வீதியினால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.

ஓர் ஆண்டிற்கு முன்பாக, சிறிய ரக ஆடையை அணிந்து நான் எனது நண்பரின் வருகைக்காக சாலையோரம் காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு ஆண் என்னை பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டார். நான் உதவிக்காக போக்குவரத்து காவலரை அழைத்த போது என்னை மேலும் கீழுமாக பார்த்த அவர் இதுதானே நீங்கள் எதிர்பார்த்தது, இல்லையா? என்று வினவியதாக குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர் மற்றும் ஆர்வலர் அக்குமுவிரும்பிய ஆடைக்கு தடை என்பது பெண்கள் உடல் மீதான நிறுவனமயமாக்கல் கொள்கை – வழக்கறிஞர் மற்றும் ஆர்வலர் அக்குமு

அவரை பொறுத்தவரை, பெண்களின் உடைகளை வைத்தே அவர்களை கேள்விக்குள்ளாக்கவும் அவர்களை தண்டிக்கவும் முடியும் என்பதே அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலையாக இருக்கிறது.

வானொலி அறிவிப்பாளரும் சமூக விமர்சகருமான ஜேம்ஸ் ஓனன், ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்கள் விரும்பும் ஆடையை அவர்கள் அணியலாம், ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறார்.

உரிமைகள் பறிக்கப்படுகிறதா?

பெண்களின் சில உடல் அங்க அமைவுகள் ஆண்களை ஈர்க்கும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

பொது இடங்களில் ஆடை அவிழ்ப்பை எதிர்த்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட முயன்ற பெண்கள் ஆயுதமேந்திய காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆடைபடத்தின் காப்புரிமைEPA

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சிறிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்களில் ஒருவரான அக்குமு தெரிவித்துள்ளார்.

உகாண்டா பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவி அச்சிரோ, பொது சேவை நிர்வாகத்தின் இந்த உத்தரவை காலணியாதிக்கமாக மாறிவருவதின் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் கழுத்தில் டை அணிவதற்கும் சூட் போன்ற முழுமையான ஆடைகள் அணிவதற்கும் வற்புறத்தப்படுகிறோம். ஆப்ரிக்காவின் பாரம்பரிய உடையான ஆஃப்ரிக்கன் – பாட்டிக் சட்டையை அணிய ஒரு ஆண் விரும்பினால் என்ன ஆகும்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

எங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது, மேலும் எங்கள் குரலை எழுப்புவதற்கான உரிமையும் வெகு விரையில் இல்லாமல் போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி BBC

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More