இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

புதிய தலைமை சாத்தியமாகுமா? செல்வரட்னம் சிறிதரன்:-

தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மாற்று சிந்தனைக்கு வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மிகுந்த உரமூட்டியிருந்தது. மழை விட்டாலும், தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல, மாகாண சபையின் நெருக்கடிகள் சற்று தணிந்துள்ள போதிலும், மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனையின் தீவிரம் விட்டுப் போகவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும். விசேடமாக இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்பது எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தனின் நம்பிக்கை. இந்த அரசாங்கத்தின் மூன்று முக்கிய தூண்களாகிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தமிழ் மக்கள் மீது வைத்துள்ள அபிமானம், அந்த மக்களுடைய அரசியல் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பது அவருடைய நிலைப்பாடு.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் இந்த மூவர் கொண்ட அணி வெற்றிபெறும் வகையில் அமோகமாக ஆதரித்து வாக்களித்திருந்தமையும் அவர்கள் மீது சம்பந்தன் அளவற்ற நம்பிக்கை வைப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும்.

இதன் காரணமாகவே, நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கேற்றிருந்த சம்பந்தன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அவர்களுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. நல்லாட்சி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவுக்கு அவர் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. நல்லாட்சியின் கீழ் 2016 ஆம் ஆண்டு எப்படியும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று அவர் திடமாக நம்பினார். அவர் அவ்வாறு நம்பியது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையேயும், தமிழ் மக்கள் மத்தியிலும் வளர்த்தெடுப்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.

அவருடைய இந்த கருத்து நிலைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் புதிய ஆட்சியாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த ஆர்வம் இன்னும் தணியவில்லை. எனவே, புதிய அரசியலமைப்பின் ஊடாக ஓர் அரசியல் தீர்வை எட்டிவிடலாம் என அவர் எதிர்பார்த்திருக்கின்றார். அதற்கேற்ற வகையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் தூண்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் காட்டி வந்த மென்போக்கும் அவருக்கு சாதகமாக அமைந்திருந்தது.

அரசியல் தீரவு என்ற புளியங்கொப்பைப் பிடிப்பதற்காக சின்ன சின்ன பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி அரச தரப்பினருடன் முரண்படுவதற்கு அவர் விரும்பவில்லை. அவ்வாறு சிறிய சிறிய விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி ஆட்சியாளர்களுக்குத் தொல்லை கொடுக்கவில்லை. அதன் ஊடாக அவர்களைச் சலிப்படையச் செய்யவும் சம்பந்தன் தயாராக இருக்கவில்லை.

இருந்த போதிலும், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் பல்வேறு முனைகளையும் ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஆட்சியாளர்களினால் ஆமை வேகத்திலேயே முன்னெடுக்க முடிந்தது. இந்த முயற்சிகளில் காணப்பட்ட சிக்கல்களை சம்பந்தன் புரிந்து கொண்டிருந்தார். அதேநேரம், சிங்கள தேசியவாதிகளாகிய இனவாத சிந்தனை தோய்ந்த தீவிர பேரினவாத அரசியல்வாதிகளை உசுப்பி விடாத வகையில், அரசியல் தீர்வு விடயங்களில் மிக நிதானமானதொரு போக்கையே அவர் கடைப்பிடித்து வருகின்றார். அதற்காகவே, அவர் ஏனைய கூட்டமைப்பின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொறுமையாக இருக்குமாறும், நிதானமாகச் செயற்படுமாறும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

முட்டுக்கட்டை

ஆனாலும், பதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிக்கும் நிலையில் இனவாதம் தோய்ந்த சிங்கள பௌத்த தேசியவாதிகளின் குறுக்கறுப்பு வேலைகளினால், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி பெரும் முட்டுக்கட்டையைச் சந்திக்க நேர்ந்துவிட்டது.

அரசியல் நித்திரையில் இருந்து திடீரென விழித்தது போன்று பௌத்த மகாநாயக்கர்கள் இப்போதைக்கு புதிய அரசியலமைப்பும் அவசியமில்லை. அரசியலமைப்பில் திருத்தங்களும் தேவையில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள். அவ்வாறு புதிய அரசிலமைப்பு உருவாக்கப்படுமானால் அல்லது திருத்தங்கள் செய்யப்படுமானால், மூன்று விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

ஒற்றை ஆட்சி முறையை மாற்றக் கூடாது. பௌத்த மதத்திற்கான மேல் நிலையில் மாற்றம் செய்ய முடியாது. மாகாணங்களுக்குக் காணி அதிகாரங்கள் வழக்கப்படக் கூடாது என்று அந்த மூன்று விடயங்களையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

புதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் திருத்தங்களே இப்போது அவசியமில்லை என கூறியதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்த்துவதற்காகவே முயன்றிருக்கின்றார்கள் என்ற விமர்சனம் பௌத்த மகாநாயக்கர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. அத்துடன் மகிந்த ராஜபக்ச அணியினருக்கு ஆதரவாக மகாநாயக்கர்கள் அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்ற அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்தே தாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எவரையும் அரசியல் ரீதியாகத் தாங்கள் ஆதரிக்கவில்லை என சுயவிளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் நன்மையைக் கருத்திற்கொண்டு இந்த மூன்று விடயங்களையும் முன்வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகளைத் தாங்கள் தேடிப் போவதில்லை. அரசியல்வாதிகளே தங்களைத் தேடி வரவேண்டும். வருவார்கள் என்றும் மகாநாயக்கர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது.

மகாநாயக்கர்களின் இந்த கடும்போக்கு நிலைப்பாடானது, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரச தரப்பின் முயற்சிக்கு பேரிடியாக வந்துள்ளது. மகாநாயக்கர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அனைத்து விடயங்களையும் மகாநாயக்கர்களுக்குத் தெரிவித்தே செயற்படப் போவதாக உறுதியளித்திருக்கின்றார்.

மகாநாயக்கர்களை அல்லது பௌத்த உயர் பீடங்களை எதிர்த்து நின்று எந்தவோர் அரசியல்வாதியும் செயற்பட முடியாது என்பது இந்த நாட்டின் அரசியல் எழுதப்படாத விதியாகும். அவ்வாறு செயற்படுபவர்கள் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது. அந்தச் செயற்பாடு சில வேலைகளில் அவர்களுடைய இருப்புக்கே ஆபத்தாக முடிந்துவிடவும் கூடும். எனவே, இத்தகைய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அரசியல் ரீதியான தற்கொலைக்கு ஒப்பான காரியத்தில் துணிந்து இறங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறு மீளப் போகின்றது என்பது இன்று முக்கியதொரு கேள்வியாக எழுந்திருக்கின்றது.

மொத்தத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியானது, அரசியல் ரீதியாக வாழ்வா சாவா என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்பார்ப்பது போன்று புதிய அரசியலமைப்பின் ஊடாக ஓர் அரசியல் தீர்வு கிட்டும் என்றோ, தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எதிர்பார்த்த வகையில் தீர்க்கப்படும் என்றோ கூற முடியாதிருக்கின்றது.

நிலைமைகள் நள்றாகச் சென்று கொண்டிருப்பதாகவே தோன்றியபோதே, மகாநாயக்கர்களின் அரசியல் நகர்வானது பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமையானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு மட்டுமல்லாமல், தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியாக ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மாற்றுத் தலைமை அவசியமா?

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நிபந்தனையற்ற நம்பிக்கையை வைத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தனின் தலைமையிலான கூட்டமைப்பின் தலைமையானது, அதீத எதிர்பார்ப்பின் மூலம் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்ற எண்ணப்பாடே இப்போது, இந்த நெருக்கடியான சூழலில் தமிழ்த்தரப்பில் மேலோங்கியிருக்கின்றது. இது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றுத் தலைமை தேவையென்ற கருத்து நிலையை மேலும் வலுவடையச் செய்திருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது, கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தலைவர்களுடன் விடயங்களைக் கலந்தாலோசிப்பதில்லை. எந்த விடயமானாலும், தங்களுக்குள்ளேயே தீர்மானம் மேற்கொள்கின்றார்கள். தான் வண்ணமே நடந்து கொள்கின்றது. இதனால் கூட்டமைப்புக்குள் ஜனநாயக நடைமுறை இல்லை. சர்வாதிகாரப் போக்கிலேயே அந்தத் தலைமை சென்று கொண்டிருக்கின்றது என்ற எண்ணம் மேலோங்கியிருக்கின்றது.

அதே நேரம், கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் என்ன நடந்து கொண்டிருக்கி;ன்றது என்பது தெரியாமல் இருட்டில் தடுமாறத்தக்க வகையில், சர்வதேசத்துடன் நெருங்கிச் செயற்படுவதாகக் கூறிக்கொண்டு கூட்டமைப்பின் தலைமையானது, சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகின்றது. அது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் சரியான முறையில் பிரதிநித்துவம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தனித்துவமுடைய ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதை விடுத்து, கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்கான செயற்பாடுகளில் தலைவர் சம்பந்தனும், அவருடன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் தடுமாறாத தமிழர்களுக்குத் தலைமை ஏற்பது யார் என்ற தலைப்பிலான கருத்துப் பரிமாறல் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்திள் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிவகரனின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்குவதற்கான அரசியல் புறநிலைகள் என்ன? தற்போதுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் போக்கு எவ்வாறாக இருக்கின்றது? அது எந்தத் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது? மாற்றுத் தலைமையென்றால் அது தனி மனிதத் தலைமைத்துவத்தில் தங்கியிருக்கின்றதா அல்லது கூட்டுத் தலைமைப் பொறுப்பில் தேங்கியிருக்கின்றதா? அதனை எவ்வாறு உருவாக்கலாம்? அதற்கான அகப் புற அரசியல் நிலைமைகள் எவ்வாறிருக்கின்றன? – போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடைகளைத் தேடும் வகையில் இந்த நிகழ்வில் கருத்துக்கள் பரிமாற்றம் இடம்பெற்றன.

அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் பத்தி எழுத்தாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.

கருத்துக்கள்

மாற்றுத்தலைமை குறித்து சிந்திக்கின்ற நிலையில், அதற்கான அவசியம் குறித்தும், அதனை உருவாக்குவதற்கான ஏது நிலைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேவேளை மாற்றுத் தலைமையை ஏற்படுத்திய பின்னர் நடக்கப் போவது என்ன என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

ஏற்கனவே காலத்துக்குக் காலம் மாற்றுத் தலைமைகள் உருவாக்கப்பட்டன. ஆயினும் அந்த மாற்றங்கள் எதனையும் சாதித்ததாகத் தெரியவில்லை. நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளின் பிரதிநிதித்துவ அரசியல் செல்நெறியில் சென்று ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தியதைவிட ஆக்கபூர்வமான முறையில் அந்த மாற்றுத் தலைமைகள் சாதித்தது என்ன என்பதையும் கருத்திற் கொள்வது அவசியம்.

மாற்றுத்தலைமையை ஏற்படுத்துவதன் ஊடாக பிரதிநித்துவ ஜனநாயக அரசியல் செல்நெறிக்கு அப்பால் எதனைச் சாதிக்க முடியும், அதற்கான வேலைத்திட்டங்கள் என்ன என்பது போன்ற விடயங்கள் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய இனப்பிரச்சினை என்றால் என்ன என்பது குறித்து தெளிவான கருத்து நிலைப்பாடு மக்கள் மத்தியில் இருப்பது அவசியம். அந்த கருத்துத் தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும். மாற்றுத் தலைமை என்னும்பொழுது, தனி மனிதத் தலைமைத்துவத்தை மாத்திரம் இலக்கு வைத்துச் செயற்பட முடியாது. அவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட ஒருவர், தலைமைத்துவத்தை ஏற்பதற்கு முன்வராவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன – அது பறற்யியும் சிந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் இந்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.

அதேநேரம், தற்போதைய தமிழ் அரசியல் போக்கில் முக்கிய பங்கெடுத்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்லாமல், அதில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளிடமும், அரசியல் கட்சிக்குரிய கட்டமைப்புக்கள் கிடையாது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் எவ்வாறு ஜனநாயக நடைமுறை இல்லையோ அதேபோன்று ஏனைய கட்சிகளுக்குள்ளேயும் உட்கட்டமைப்புக்குள் ஜனாநாயகம் பேணப்படுவதில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே மாற்றுத்தலைமையொன்று உருவாக்கப்படுமானால், அதற்கு ஜனநாயக அரசியல் ரீதியான கட்டமைப்பு மிகவும் அவசியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது என்பது போன்ற வரைமுறைகளும், கட்சித் தலைவராகப் பதவி வகிப்பதிலும் கால வரையறைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பல கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டு அமைப்புக்கே வாக்களிக்கப் பழக்கப்பட்டிருக்கி;ன்றார்கள் என்பதைக் கவனத்;திற்கொள்ள வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்ட அதேவேளை, மக்கள் அந்தந்தக் காலப்பகுதியில் கொண்டிருக்கின்ற அரசியல் உணர்விலேயே அது தங்கியிருக்கின்றது என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது.

முன்னைய அரசியல் தலைமைகள் எதுவும் செய்யவில்லை என கூற முடியாது. பல்வேறு நடவடிக்கைகளை அந்தத் தலைமைகள் முன்னெடுத்திருந்தன. பல வடிவங்களில் போராடியிருக்கின்றன. ஆனால் அரசுகளிடம் இதய சுத்தியான செயற்பாடு இல்லாத காரணத்தினாலேயே பிர்ச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை என்ற தகவலும் வெளியிடப்பட்டது. இனவாதப் போக்கில் செயற்படுகின்ற சிங்கள தேசிய அரசியல்வாதிகள் அரசாங்கங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பின்னடித்து வந்துள்ளார்கள் என்ற வரலாற்றுப் பதிவும் கலந்துரையாடல்களில் வெளிப்படுத்தப்பட்டது.

வடமாகாண சபை அரசியல் தீர்வுக்கான ஒரு திட்ட வரைபை முன்வைத்திருக்கின்றது. அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையும்கூட ஒரு வரைபைத் தயாரித்து அளித்திருக்கின்றது. இதையும்விட ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்வுத் திட்ட யோசனைகளும்கூட இருக்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கைவிட்டு மாற்றுவழிகளில் செல்கின்ற காரணத்தினாலேயே மாற்றுத் தலைமை குறித்து சிந்திப்பதற்கான தேவை எழுந்திருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டுக்குள் கட்சிகள் இணைந்திருந்தாலும்கூட, அங்கு வெளிப்படைத் தன்மையும் ஜனநாயகமும், பேணப்படாமல் சர்வாதிகாரப் போக்கும் ஒரு கட்சியை வளர்த்தெடுப்பதற்கான முனைப்பும் முன்னெடுக்கப்பட்டிருப்பதே மாற்றுத் தலைமையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துவதற்கான தேவை எழுந்திருக்கின்றது என்பதும் இந்தக் கலந்துரையாடலின்போது விளக்கமளிக்கப்பட்டது.

ஆயினும் மாற்றுத்தலைமை எனும்பொது, அது, கூட்டுத்தலைமையா அல்லது தனிமனித தலைமைத்துவமா என்பதில் தீர்க்கமான முடிவெதுவும் எட்டப்படவில்லை.இரண்டு நிலைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எனினும் தீ;ர்மானம் எடுக்கத்தக்க வகையில் அந்த கருத்துக்கள் குறித்து ஆழமாகச் சிந்திக்கப்படவுமில்லை. கருத்துக்கள் பரிமாறப்படவுமில்லை.

யுத்தம் நடைபெற்றபோது ஆளுமை கொண்ட இராணுவமயப்பட்ட அரசியல் தலைமையொன்று தமிழ் மக்களுக்கு இருந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், வலுவான அரசியல் தலைமை தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. இலகுவில் கண்டறிய முடியாத வகையிலான மூலோபாயத் திட்டங்களை உள்ளடக்கிய இராஜதந்திர நகர்வுகளின் ஊடாக தமிழ் மக்களையும் அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார, கலை கலாசார விடயங்களையும் தமக்கேற்ற வகையில் கையாண்டு வருகின்ற சிங்கள பௌத்த அரசியல் போக்கு காரணமாக ஒரு நிழல் யுத்தமே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதனைச் சரியாக இணம் கண்டு, அதற்கேற்ற வகையில் அரசியல் சாணக்கியத்துடன் செயற்படத்தக்கதோர் அரசியல் தலைமையே இப்போதைய தேவiயாக உள்ளது. இந்தத் தேவையை, அரசியல் தீர்வு விடயத்தில் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை நிறைவு செய்யுமா என்பது தெரியவில்லை. அதேவேளை, அந்தத் தலைமைமீது அதிருப்தியடைந்து மாற்றுத்தலைமையை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளின் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத்தக்க வகையிலான புதிய அரசியல் தலைமை உருவாக்கப்படுமா என்பதும் தெரியவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.