இலங்கை பிரதான செய்திகள்

கைதடி வீட்டுத் திட்ட சங்க மோசடி தொடர்பில் கட்டாணை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கைதடி வீட்டுத் திட்ட சங்கம் என்ற பெயரில் மோசடியாக அதற்கு சொந்தமான காணிகளை விற்று வந்தவர்களுக்கு எதிராக சாவகச்சேரி மாவட்ட நீதிபதி கட்டாணை.

கைதடி வீட்டுத் திட்டத் சங்கம் 1974 இல் ஓர் தனியார் நம்பிக்கை பொறுப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டது. அதற்கு 50 ஏக்கர்களுக்கு மேற்பட்ட ஆதனம் கைதடியில் உண்டு. 1970களில் 100க்கு மேற்பட்ட பயனாளிகள் சங்கத்தில் அங்கத்தவர்களாக சேர்ந்து இத்திட்டத்தின் கீழ் காணி உறுதி பெற்றுக் கொண்டார்கள்.

யுத்தத்தின் போது செயல் இழந்து உறங்குநிலைக்கு சென்ற சங்கத்தை சட்டத்திற்கு முரணாக வகையில் மீள் உருவாக்கம் செய்து அதன் காணிகளை எதேச்சையாக விற்று பணம் சம்பாதிக்கும் மோசடி செயற்பாடுகள் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருகின்றன. அப்பாவி மக்களை ஏமாற்றி வெளிப்படுத்தல் உறுதிகள், அறுதி உறுதிகள் மூலமாக அவர்களுக்கு இவ் மோசடிக் குழுவினர் வீட்டுத் திட்டச் சங்கத்தின் காணிகளை விற்று வருகின்றனர்.

இவ்விடயம் அரசாங்க அதிபர் அவர்களின் கவனத்திற்கு சென்ற வருடம் கொண்டு செல்லப்பட்டது. எனினும் கைதடி வீட்டுத் திட்ட சங்கம் ஓர் தனியார் நம்பிக்கை பொறுப்பு,  ஆதலால் அரசாங்க அதிபரால் சட்ட ரீதியாக மோசடியை தடுக்க முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் நிறுவனர் தலைவரின் மகள் திருமதி. ஞானகுமாரி சிவநேசன் நேற்றைய தினம் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணிகள் கு. குருபரன், நி. கேஷாந் ஆகியோர் மூலமாக மனு தாக்கல் செய்து இம்மோசடி செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறும், இது வரையில் சங்கத்தின் பெயரால் ஈட்டப்பட்ட பணம் தொடர்பிலான கணக்கு விபரங்களை எதிராளிகள் மன்றிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாறும், முறையாக புதிய நம்பிக்கைப் பொறுப்பாளர்களை நியமிக்குமாறும் கோரியிருந்தார்.

முதற்கட்டமாக, முகத் தோற்றமளவில் வழக்காளியின் மனுவில் திருப்தியடைந்த சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் எதிராளிகள் சங்கத்தின் பெயரால் செயற்படக் கூடாதெனவும், சங்கத்தின் ஆதனத்தை கையாளக் கூடாதெனவும் நேற்றைய தினம் (13.07.2017) கட்டாணை பிறப்பித்துள்ளார். வழக்காளியின் மனுவிற்கு எதிராளிகள் பதில் அளிக்க 27.07.2017 அன்று மன்று தவணையிட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap