Home இலங்கை ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு – கிளிநொச்சியில் சம்மந்தன்:-

ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு – கிளிநொச்சியில் சம்மந்தன்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரின் முழுமையான உரை வருமாறு

இன்றைய நிலைமை ஒரு மிகவும் சிக்கலான நிலைமை இந்த நிலையில் கருத்துக்கள் கூறுவது இலகுவான விடயமல்ல. அரசியல் தீர்வு சம்மந்தமான முயற்சிகளை குழப்புவதற்கு பல தரப்புகள் மிகவும் தீவிரமாக செயற்படுகின்றன. பெரும்பான்மை இனத்தின் மத்தியிலும் தீவர போக்குடையவர்கள் இந்த முயற்சியை குழப்புவதற்கு மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள். மகிந்த ராஜபக்ஸ அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் அவருடன் சேர்ந்து செயற்படுகின்ற வேறு சில கட்சிகளை சேர்ந்தவர்களும், தீவிரமாக புதிய அரசியல் தீர்வு விடயத்தை குழப்ப தீவிரமாக செயற்படுகின்றார்கள். பெரும்பான்மையின மக்களை குழப்பி ஒரு தீரவு ஏற்படுவதை தடுக்க இவர்கள் முற்படுகின்றார்கள்.

அதேசமயம் மக்களால் இ;ந்த கருமங்களை கையாள்வதற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் இன்றைக்கு இடம்பெறுகின்ற முயற்சிகளை பல விதமான குறைகள் குற்றங்களை கூறி மக்களின் மனங்களில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதை நாங்கள் அவதானிக்கிறோம். நாங்கள் பகிரங்கமாக கூறி நிற்கின்றோம் ஒரு இரகசிய தீர்வு சம்மந்தமாக தற்போது ஆக்கபூர்வமான உறுதியான முயற்சி நடைபெறுகிறது ஒரு நிதானமான நல்ல சூழல் காணப்படுகிறது. நியாயமான நல்ல சூழல் என்று நான் கூறுவதற்கு காரணம் என்னவென்றால் இந்த அரசாங்கம் ரணில் விக்கிரசிங்க தலைமையில் உருவாக்கியது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைதிரிபால சிறிசேனவினுடைய சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது ஆனபடியால் இன்று ஆட்சி செய்கின்ற அரசாங்கம் இந்த இரண்டு கட்சிகளை சார்ந்த ஒரு அரசாங்கம். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாது விட்டாலும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன்,ஜனத்தா விமுக்தி பெரமுனவின் ஆதரவுடன், ஏனைய இஸ்லாமிய தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறக் கூடிய நிலைமை இருக்கிறது.

இந்த நிலைமை சமீப காலத்தில் இருக்கவில்லை சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியல் சாசனத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய அரசியல் சாசனத்தை பெருமளவில் நியாயமான அதிகார பகிர்வை உருவாக்கி ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் துரதிஸ்டவசமாக அவரால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியவில்லை. ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டால் மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்கினால் அதற்கு நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையின சிங்கள மக்கள் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள அனைவரும் தங்களுடைய ஆதரவை வழங்கினால் மேற்படி கட்சிகள் ஆதரவை வழங்கினால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்கலாம். இந்த கட்சிகள் மக்கள் மத்தியில் முறையான வகையில் பிரச்சாரம் செய்தால் அந்த அரசியல் தீர்வுக்கு மக்களின் ஆங்கீகாரத்தை பெறலாம்.

ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாக இருந்தால் தற்போதைய அரசியல் சாசனத்தின் பிரகாரம் அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும். அதன் பிறகு மக்களின் அங்கீகாரத்தை பெறவேண்டும் அவ்விதமாக பெற்றால்தான் அது ஒரு புதிய அரசியல் சாசனமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

புதிய அரசியல் சாசனம் அமைக்கப்பட்ட பிறகு பாராளுமன்ற ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்படும். நாட்டுக்கு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதற்கு மிகவும் கட்டுக்கோப்பான முயற்சி அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்தப் பணியை தமிழ் மக்கள்சார்பாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாங்கள் இருவர் செய்து வருகின்றோம்.

புதிய அரசியல் சாசனத்தில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வு இரண்டாவது ஜனாதிபதி நிர்வாக ஆட்சி முறை மூன்றாவது தற்;போதைய தேர்தல் முறை தற்போதைய விகிதாசார முறை மற்றும் விருப்பு வாக்கு முறை இதனை மாற்றியமைப்பதா இல்லையா மாற்றியமைப்பதாக இருந்தால் எவ்விதமாக மாற்றி அமைப்பது என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். மற்றும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் முயற்சி தொடர்பில் நாங்கள் அதிகம் பத்திரிகைகளுக்கு கூறுவதில்லை அவ்வாறு கூறினால் சம்மந்தன் இப்படிச் சொல்கிறார் என சொன்னவுடன் தெற்கு பகுதியிலிருந்து பத்து பேர் அதற்கு பதில் சொல்ல வந்துவிடுவார்கள் அது பெரும்பான்மை இனத்தின் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் ஆனப்படியால் எமது மக்கள் ஓரளவுக்கு நிலைமைகளை அறியாமல் இருக்கும் சூழல் இருந்தாலும் கூட நாங்கள் மௌனிகளாக இருக்க வேண்டிய ஒரு கட்டாய சூழல் இருக்கதான் செய்கிறது. ஏன்னென்றால் பல கருமங்கள் பல தடவைகள் குழப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன் பல மதங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக கேட்டு அவர்களுடன் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு தலைமைத் தாங்கியவர் ஒரு பௌத்த குரு அவர் மகரகம பகுதியில் உள்ள ஒரு விகாரையில் குருவாக உள்ளார். கூட்டம் நிறைவுற்றதும் அந்த தேரர் சொன்னார் உங்களுடை நான் தனியாக பேச விரும்புகிறேன் என்னுடைய விகாரைக்கு வருவீர்களா என்று அதற்கமைவாக இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவரை சந்திக்க சென்றேன்.அப்போது அவர் சொன்னார் பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக நாங்கள் போராடிய போது 1957 ஆம் ஆண்டு அவரது இல்லத்திற்கு முன் அந்த ஒப்பந்ததை நான் எரித்தேன். இப்போது நாங்கள் 2017 இல் நிற்கின்றோம். இப்போது நான் நினைக்கிறன் அன்று அதனை எரித்தது மூலமாக நான் எவ்வளவு பெரிய தவறை செய்திருகிறேன் என்று.

ஆரம்பத்தில் நாங்கள் குழம்ப கூடாது ஒரு கட்டத்தில் எல்லாம் வெளிவரும் ஒரு தீர்வு நியாயமாக வருமாக இருந்தால் அதனை நாங்கள் எங்கள் மக்களுக்கு முன்னால் கொண்டு வருவோம் அதன்போது இவ்விதமான கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் ஏற்பாடு மக்களுடன் கலந்துரையாடுவோம் , மக்களுக்கு விளக்குவோம் மக்களின் கருத்துக்கள் கேட்டு மக்களின் கருத்துக்களை அறிந்துதான் நாங்கள் ஒரு முடிவெடுப்போம் எங்களுடை மக்களின் அனுமதி இல்லாம் எந்தவொரு தீர்வையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் அது எங்களுடைய கடமை. இதுவரை நடந்த பேச்சு வார்த்தையின் படி மிகவும் கூடியளவில் அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காணி சட்டம் ஒழுங்கு. பொலீஸ் கல்வி சுகாதாரம் விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு, சமூக பொருளாதார விடயங்கள்,எமது மக்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், மக்கள் தங்களால் தெரிவு செய்ய கூடிய பிரதிநிதிகளால் தங்களின் கருமங்களை கையாளக கூடிய வகையில் அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படும்.

இதேவேளை வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும், மீளப்பெறப்படாத வகையில் இருக்க வேண்டும், அந்த அதிகாரங்களுக்கு எவ்விதமான தடைகளும் இல்லாது இருக்க வேண்டும் எவ்விதமாக குறுக்கு வழியில் அதிகாரங்களை உடைக்க முடியாத அளவில் இருக்கவேண்டும் அந்த அதிகாரங்கள் சம்மந்தமாக மத்திய அரசு அதனை பயன்படுத்தமுடியாத அளவுக்கு இருக்க வேண்டும் அவ்விதமாக இருந்தால்தான் அது உறுதியாக இருக்கும். ஒரு சமஸ்டி ஆட்சி முறையின் அடிப்படையில் சமஸ்டி முறையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அது நிச்சமாக நடைபெறும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த நாட்டில் சமஸ்டி எனும் சொல் ஒரு பயங்கரவாத சொல்லாக கருதப்படுகிறது. சமஸ்டி என்றால் அது பிரிவினைக்குச் செல்லும் எனும் கருத்து இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சமஸ்டியை ஏற்க மறுத்தனாங்கள். தற்போது ஒற்றையாட்சி எனும் சொல்லும் இல்லாமல் சமஸ்டி எனும் சொல்லும் இல்லாமல் அவ்விதமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் அதிகாரங்கள் கூடியளவுக்கு பகிர்தளிக்கபடுமாக இருந்தால் அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீள பெறப்பட முடியாத ஒரு நிலைமையை உருவாக்கி அந்த அதிகாரஙக்ளை மத்திய அரசாங்கம் தான் பயன்படுத்தமுடியாத நிலைமையை உருவாக்கி எமது மக்களின் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் எமது மக்கள் சுதந்திரமாக அந்த அதிகாரங்களை பயன்படுத்தலாமா? என்பதை நாங்கள் அலசி விசாரணை செய்து அது சம்மந்தமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.

ஒற்றையாட்சி எனும் சொல் இருக்க கூடாது ஒற்றையாட்சி எனும் சொல்லை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது சமஸ்டி எனும் சொல் இல்லாவிட்டாலும் கூட சமஸ்டி அடிப்படையிலான நிலைப்பாடு கருத்து அரசியல்சாசனத்தில் இருக்குமாக இருந்தால் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொள்ளலாமா இல்லை என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும்.

இந்தியா பல மாநிலங்களை கொண்ட ஒரு நாடு அங்கு எல்லாவற்றிலும் அதிகார பகிர்வு ஒரே விதமாக இருக்கிறது. அங்கே சமஸ்டி எனும் சொல் பாவிக்கப்படவில்லை. ஒற்றையாட்சி எனும் சொல்லும் பாவிக்கப்படவில்லை இவ்வாறே உலகில் பல நாடுகளில் ஒற்றையாட்சி எனும் சொல்லும் சமஸ்டி எனும் சொல்லும் அரசியல்சாசனத்தில் இல்லை ஆனால் அங்கெல்லாம் அதிகார பரவாக்கல் காணப்படுகிறது. எனவே எங்களும் அதிகார பகிர்வு தேவை இருக்கிறது அதிகாரம் மத்தியில் குவிந்து கிடப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்கள்.மகிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் உள்ள ஜனாதிபதி முறைக்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க முடியாது அதுவொரு சர்வதிகார முறை. மிகவும் தவறான முறை ஒரு தனிக்குடும்பம் நாட்டை ஆட்சி செய்கின்ற முறை எனவே நாங்கள் அவ்வாறான ஒரு முறையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மற்ற விடயம் சமயம் சம்மந்தமான விடயம் 1972,1978 ஆண்டுகளில் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பலர் பலவிதமாக சிந்தித்திருக்கின்றார்கள். வணகத்திற்குரிய மல்கம் றஞ்சித் கர்த்தினால் அவர்களை கூட நான் சந்தித்திருக்கிறேன் அவர் கூறினார் பௌத்திற்கு முன்னுரிமை என்பதை உதாசீனம் செய்ய முடியாது, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்ற மதங்களுக்கு எவ்வித பாதங்களும் ஏற்படாது நாட்டில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை அவர் கூறியிருக்கின்றார். எனவே நாம் எதிர்ப்பது பௌத்த பெரும்பான்மையை அல்ல பௌத்த கோட்பாடுகள் கொள்கையின் படி ஆட்சி நடந்தால் ஒரு முறைப்பாடு சொல்வதற்கு இடமிருக்காது ஆனால் பௌத்த பெரும்பான்மையின் பேரில் பௌத்த சமயத்தை சில பேர் தாங்கள் விரும்பிய பிரகாரம் தங்களுடை தேவைகளுக்காக பயன்படுத்துகின்ற நிலைமை காரணமாகதான் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது ஆனப்படியால் அதனை நாங்கள் பரிசீலக்க வேண்டிய விடயம்.

தமிழரசு கட்சி பதவிகளுக்காக விலைபோகின்றவர்கள் அல்ல அமரர் திருச்செல்வத்தை தவிர வேறு எவரும் அமைச்சர்களாக இருக்கவில்லை, அமிர்தலிங்கத்தின் காலம் முதல் எங்களுக்கு முக்கிய அமைச்சுப்பொறுப்பு தருவதாக பல அரச தலைவர்கள் உறுதியளித்தார்கள் ஆனால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே இங்கு கூச்சல் இடுக்கின்ற தம்பிமார்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் தமிழரசுக் கட்சி பதவிகளுக்கு விலைபோகின்றவர்கள் அல்ல விலைபோக மாட்டோம், எங்கள் மக்களை நாம் கடைசி வரையிலும் கைவிடமாட்டோம் நாங்கள் தந்தை செல்வாவின் வழி வந்தவர்கள் தந்தை செல்வாவுக்கு துரோகம் செய்ய மாட்டோம். மீண்டும் ஒரு குழப்ப நிலைமைக்கு நாங்கள் காரணிகளாக இருக்க கூடாது.இறுதியில் அரசியல் சாசன வடிவம் வந்த பின்னர் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தால் அதன் பின்னர் மக்களுடைய கருத்தை மாவட்டம் தோறும் சென்று பெற்று மக்களுடன் ஆலோசித்துதான் ஒரு முடிவை எடுப்போம்.என்றார்

Spread the love
 
 
      

Related News

1 comment

Eliathamby Logeswaran July 15, 2017 - 1:27 pm

1.எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டால்,
2.மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்கினால்,
3.சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் தங்களுடைய ஆதரவை வழங்கினால்,
4.மற்றும் கட்சிகள் மக்கள் மத்தியில் முறையான வகையில் பிரச்சாரம் செய்தால்,
5.அரசியல் தீர்வுக்கு மக்களின் ஆங்கீகாரத்தை பெறலாம் என்று சம்பந்தர் கண்டுபிடித்துள்ளார்.

மேலே குறிப்பிட்ட பணிகளைச் செய்ய கூட்டமைப்பினரால் வெளிப்படையாக சொல்லக்கூடிய முயற்சிகள் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன?

முதல் அமைச்சர் எடுக்கும் முயற்சிகளை பல விதமான குறைகள் குற்றங்களை கூறி மக்களின் மனங்களில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் சுமந்திரனை ஒற்றுமையாக செயல்பட சம்பந்தர் செய்தது என்ன?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More