Home இலங்கை நிரந்தர அரசியல் தீர்வு எனும் இலக்கை அடையும்வரையாவது மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம்.

நிரந்தர அரசியல் தீர்வு எனும் இலக்கை அடையும்வரையாவது மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம்.

by admin

 

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதொரு அரசியல் தீர்வு எட்டப்படும் வரையிலாவது பொதுச்சிந்தனயுடன் மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம். நம்மிடையே உள்ள கட்சி பேதங்களை மறந்து நிரந்தனமான அரசியல்தீர்வு கிடைக்கும் வரையாவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எனும் அரசியல் இயக்கம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அதுவரை கூட்டமைப்பு உடைந்துபோவதை அனுமதிக்கமுடியாதென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா கோவில்குளத்தில் நேற்று (16.07) நடைபெற்ற வீரமக்கள் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையின் முழுவடிவம் இதோ. தமிழ் மக்களுக்கான விடுதலையை நோக்காக கொண்ட ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழீழ விடுதலைக்கழகம்(புளட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) போன்றன பொதுவுடமைக்கொள்கையை கொண்ட போராட்ட இயக்கங்களாக இருந்தன. அதிலும் வவுனியாவை பொறுத்தவரை புளட் இயக்கம் அதில் முன்னிலை வகித்தது. எனது தகப்பனார் 70களிலிருந்த பொதுவுடமை கொள்கையில் பற்றுள்ளவராக, இலங்கை கம்யூனிசக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டவர். குறிப்பாக 80 களில் புளட் இயக்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்றவற்றின் தலைவர்கள் எனது தந்தையாரை பலதடவைகள் சந்தித்துள்ளனர். அவ்வாறான தலைவர்கள் எனது தந்தையாரை சந்திக்க வந்தநேரங்களில் அவர்களை காண்பதற்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நான் பாக்கியமாக கருதுகின்றேன்.

புளட் இயக்கத்தின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரனாக இருந்தாலும் சரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் தலைவர் தோழர் பத்மநாபாவாக இருந்தாலும் சரி வவுனியா வரும்போதெல்லாம் எனது தந்தையாரை சந்தித்து அரசியல் விடயங்களை கலந்தரையாடுவார்கள்.

கடைசியாக 1987 ஆம் ஆண்டு யாழ்பாணத்திலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் தோழர் பத்மநாபா அவர்கள் எனது தந்தையாரை சந்திக்க விரும்புவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தகப்பனாரை நான் யாழ்ப்பாணம் அழைத்து சென்றிருந்தேன்.

வவுனியாவை பொறுத்தவரை 1980 களில் எங்களது நண்பர்கள், உறவினர்கள் என பலரும் புளட் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டார்கள். எனது கிராமத்தை சூழவுள்ள பகுதிகளில் அந்தக்காலங்களில் பல இளைஞர்கள் புளட் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டார்கள். எமது பகுதி புளட் இயக்கத்தின் கோட்டையாக அந்தக்காலத்தில் விளங்கியது.

எனது சிறுபராயத்தில் மனங்கவர்ந்த ஒரு சிறந்த போராளியாக தோழர் சந்ததியார் அவர்களை பார்க்கின்றேன். மிகவும் எளிமையானவர். பழைய சைக்கிள், அழுக்கடைந்த சாரம், பழைய சேட்டு அணிந்திருப்பார். பழையஉமல்பை ஒன்று அதற்குள் புத்தகங்கள் இருக்கம். எங்கள் வீட்டுக்கு வந்தால் தகப்பனாருடன் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருப்பார். அவர் மட்டுமல்ல பல்வேறு இளைஞர்கள் வருகைதருவார்கள்.

இன்றைய இளம் சந்ததிக்கு புளட் இயக்கம் என்றால் கோவில்குளத்திலிருந்த புளட் இயக்கத்தை மட்டும்தான் தெரியும். எனது தனிப்பட்ட கருத்து யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். அதல்ல புளட் இயக்கம். அதற்கு முதல் இருந்ததுதான் புளட் இயக்கம். மக்களை அரசியல்மயப்படுத்தி மக்கள் எழுச்சியூடாக பொதுவுடமைக்கொள்கையுடைய சுதந்திர தமிழீழ அரசொன்றை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்த இயக்கம்தான் புளட் இயக்கம். எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தார்கள், தங்களின் இளமைக்காலத்தை இழந்து அந்த இலக்கை அமைவதற்காக கஸ்ரப்பட்டார்கள். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் புளட் இயக்கத்திற்கு ஒரு வரலாறு இருக்கின்றது. ஆனாலும் பின்னைய காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் நடந்தேறின. அவற்றைப்பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை.

என்ன நோக்கத்திற்காக நாஙகள் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தோமோ அந்த நோக்கத்தை அடையாது திசைமாறிய போராட்டங்களாக மாறியுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். இன்று முகவரியற்ற சில இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் சிலர் எழுதும் அரசியல் கருத்துக்களைப் பார்த்தால் இந்த நாட்டில் இருப்பவர்கள் யாருக்குமே அரசியல், ஆயதப்போராட்டம் பற்றிய அறிவில்லாத முட்டாள்போல தங்கள் கருத்துகளை எழுதுகின்றார்கள். எனவே எமது இளைய சந்ததிக்கு எமது விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை எடுத்துசொல்லவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. இயக்கவேறுபாடின்றி மக்களின் விடுதலைக்காக போராடிய, தமது இளமைக்காலத்தை தொலைத்த, சொந்த பந்தங்களை இழந்த அனைத்துப்போராளிகளையும் நினைவு கூரவேண்டிய கடப்பாடு எம்அனைவருக்கும் உள்ளது.

முதற்தடவையாக இன்று வீரமக்கள் தினத்தில் பங்கெடுத்துள்ளேன். அதற்கு காரணம் உள்ளது. அண்மையில் வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்பங்களில் விரும்பியோ விரும்பாமலோ நானும் சம்பந்தப்பட்டிருக்கின்றேன். அந்தக்குழப்பத்தின்போது கௌரவ பா.ம.உறுப்பினர் அண்ணன் சித்தார்த்தன் அவர்களுடன் நான் பலதடவை பேசியிருக்கின்றேன். அதன்போது எனது அமைச்சுப்பதவி தொடர்பில் நான் எதுவும் பேசவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பற்றி பேசினேன். ஏதோ ஒரு காரணத்திற்காக நாங்கள் தற்போத பிரிந்து செயற்படுகின்றோம். இது பிரிந்து செயற்படுவதற்கான காலமல்ல. யுத்தம் முடிந்து 8 வருடங்கள் கடந்து விட்டது. இப்போதும் நாங்கள் ஒருவரையொருவர் குற்றம் சொல்லுபவர்களாகவே இருக்கின்றோம். அவ்வாறு நாங்கள் செய்வதால் மல்லாக்கா படுத்து துப்புபவர்களாகவே செயற்படுகின்றோம்.

தற்போதைய சூழ்நிலை நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படவேண்டிய காலமாகும். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் ஏனைய இனங்களைப்போன்று சம அந்தஸ்த்துடன் வாழுவதற்கான அரசியல் தீர்வை நோக்கி பயணிக்கவேண்டிய காலமாகும். இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிடுவோமாக இருந்தால் எமது இனத்திற்கு நாங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். சம்பந்தன் ஐயா சொன்னார் 2016 ல் தீர்வு வருமென்று. தற்போது 2017ல் தீர்வு வருமென்கிறார்கள் இப்படி முகப்புத்தகங்களில் பலர் பதிவிடுகிறார்கள். தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றார்கள். நிரந்தரமான அரசியல் தீர்வு என்பது அவ்வளவு சுலபமானதல்ல. வடக்கு மாகாண சபையில் ஆளும் த.தே.கூட்டமைப்புக்குள் தோன்றிய பிரச்சனை இதுவரை தீர்க்கப்படவி;ல்லை. தொடர்ந்தவண்ணமே உள்ளது. அப்படியிருக்கையில் இரண்டு தேசிய இனங்களுக்கிடையில் 60 வருடங்களாக நிலவிய பிரச்சனை, இருபகுதியலும் பலர் உயிர்களை மாய்த்திருக்கின்றார்கள், மனரீதியாக வடுக்களை சமந்துகொண்டிருக்கின்றார்கள். இரண்டுபகுதியரும் பல விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டும். அண்மையில் இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் முதன்மையான அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள பௌத்த மதத்தின் உயர்பீடங்களை சேர்ந்தவர்கள் வெளியிட்ட கருத்து நாங்கள் அனைவரும் அறிந்ததே. ஆக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வென்பது சாதாரண விடயமல்ல. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு சாவால்கள் நிறைந்த காலமிது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் மக்களின் சக்தியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் ஒற்றுமையுடன் செயற்பாடாதுவிட்டால் எமக்கான அரசியல் தீர்வு எம்மைவிட்டு விலகிச்சென்றுவிடும்.

இந்த இடத்தில் தமிழ் மக்களுக்கான விடியலை நோக்கிய பயணத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு தமிழ் பேசும் மக்களென்ற வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நமக்கிடையே உள்ள கருத்துவேறுபாடுகளை புறந்தள்ளி மக்களின் நலனில் அக்கறைகொண்டவர்களாக ஒற்றுமையுடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More