இலங்கை

கேப்பாபுலவு காணியிலிருந்து வெளியேற படையினர் இணங்கியிருப்பது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் – டக்ளஸ் :

கேப்பாபுலவில் மக்களின் காணிகளுக்குள் இருக்கும் படையினர் அக்காணிகளிலிருந்து கட்டங்கட்டமாக வெளியேறும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியிலிருந்து வெளியேறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.  இந்த இணக்கமானது தமது நிலங்களை விட்டு படையினர் வெளியேற வேண்டுமென்று தொடர்ச்சியாகப் போராடிவரும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்றைய தினம் (26.07.2017) மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்ற கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

மக்களின் போராட்டத்தின் பயனாகவே, கேப்பாபுலவில் படையினரின் வசமிருக்கும் மக்களின் காணிகளை கட்டங்கட்டமாக விடுவித்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு படையினர் இணங்கியுள்ளனர். அந்தவகையில் முதல்கட்டமாக, 243 ஏக்கரையும், இரண்டாம் கட்டமாக 189 ஏக்கரையும் படையினர் விடுவித்துள்ள படையினர்,  மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியை விடுவித்து வெளியேறிச் செல்வதற்கு இணங்கியுள்ளனர்.

இன்னும் 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில், தாம் மூன்றாம் கட்டமாக விடுவிக்க இணங்கியுள்ள 111 ஏக்கர் காணியில் தமது முக்கிய முகாம்கள் இருப்பதால் அவற்றை அகற்றி வேறு இடத்தில் முகாம் அமைத்துச் செல்வதற்கு தமக்கு 148 மில்லியன் ரூபாய்கள் தேவையாக இருப்பதாகவும், அந்தப் பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு வழங்குமாக இருந்தால், ஆறுமாத கால அவகாசத்தில் தாம் அங்கிருந்தும் வெளியேறி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

படையினர் கோரியிருக்கும் 148 மில்லியன் ரூபாயை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கையை எடுப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருப்பதற்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எமது மக்கள் தொடர்ந்தும் தெருவில் துயரங்களைச் சுமக்காமல் வாழ்வதற்கு கால தாமதமல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் சுவாமிநாதனிடம் முன்வைத்திருக்கின்றேன்.

ஆறுமாத காலம் எடுத்துக்கொள்ளாமல், விரைவாக படையினர் வெளியேற வேண்டுமென கேப்பாபுலவு மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். மக்களின் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொண்டுள்ள படையினர் ஆறு மாதகாலம் அவகாசமாக இருந்தாலும், மிக மிக விரைவாக தாம் அவ்விடங்களைவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுவதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்ததாகவும்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற அக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், படை உயர் அதிகாரிகள், கேப்பாபுலவு மக்களின் பிரதிநிதிகள், திறைசேரியின் அதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள்;, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், காணி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers