இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

கரடிக்குன்று இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கிறது. – செல்வம்:-

பேய் விரட்டுபவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்களை அணுகி எப்படி விரட்டுகின்றீர்கள் என்று கேட்டிருக்கீர்களா? பேய் பிசாசு பிடித்திருப்பவர்களை விட அதனை விரட்டுபவர்கள் பல முறைகளைக் கையாண்டு வருகின்றனர். வேப்பம் இலையால் அடித்து பேய் விரட்டுவார்கள். எந்தப் பேய் பிடித்திருக்கிறது என்று பார்த்து அந்தப் பேய்க்குப் பிடித்தமான உணவுப் பண்டங்களை படைத்து பேய் விரட்டுவார்கள். மந்திரங்கள் ஓதி பேய் விரட்டுவார்கள். இப்படியான முறைகளில் பேய் விரட்டுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். தியானம் மூலமும் பேய் விரட்டுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கரடிக்குன்று கிராமத்தில் இப்படியாக பேய் விரட்டுகிறார்கள்.

பூநகரி முழங்காவில் கரடிக்குன்று கிராமத்தில் பிரம்மம் ஆதிபரா சக்தி நாகபூசணி அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது இந்தக் கோயிலின் பூசகராக அ.அம்பிகைதாஸன் இருந்து தியானம் மூலம் பேய் விரட்டுவது மட்டுமல்ல தீராத நோயினால் அவதிப்படுகின்றவர்களையும் குணமாக்கி விடுகிறார். இந்தக் கோயிலின் பூசைகள் 1995 ஆம் ஆண்டு 5 மாதம் 5ஆம் திகதி தொடங்கப்பட்டது. ஆத்மீக வழிபாடு முறையில் இங்கு பூசை இடம்பெறுகிறது. வைதீக வழிபாட்டு முறையை இங்கு கடைப்பிடிப்பதில்லை.. பொங்கல் படையல் நூல் கட்டுதல் போன்ற சம்பிரதாய முறைகள் எதுவும் இல்லை. நீரால் அபிசேகம் செய்து பூ வைத்து தீபம் மட்டும் காட்டி பூசை வழிபாடு இடம்பெறுகிறது. இந்தக் கோயிலில் எல்லா மத மக்களும் வந்து தாங்களாகவே பூசை செய்து வழிபட முடியும். வைதீக முறை மாதிரி வரையறுக்கப்பட்ட எல்லை இல்லை.

மந்திரம் தந்திரங்களால் பேய் பிடிக்கப்பட்ட நோயாளர்கள் உட்பட உடலில் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி நின்று பேயை விரட்டியும் நோயை குணப்படுத்தியும் செல்கிறார்கள். இவர்களிடம் இருந்து எந்தவிதமான சலுகைகளையும் பூசகர் எதிர்பார்ப்பதில்லை.

உடுக்கு அடித்தோ அல்லது சத்தம் போட்டோ பேயை அவர்களின் உடம்பில் இருந்து விரட்டுவதற்கு முயற்சி செய்வதில்லை. அமைதியான முறையில் தியானம் செய்து பேயை விரட்டுகிறார்கள். அக்கினி மூட்டி அதிலே பஸ்பம் ஆக்கிறது தான் வேலை. மற்றும் படி பேய்களுக்கென்று கழிப்பு எதுவும் செய்வதில்லை. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வந்து தமது நோயைக் குணப்படுத்திச் சென்றிருக்கிறார்கள். இலங்கையின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள். 7 நாட்கள் இங்கிருப்பார்கள். 7 நாட்களுக்குள் குணமாகவில்லை என்றால் தமிழ் மருந்துகளைப் பயன்படுத்தி அவர்களைக் குணப்படுத்துகிறார்கள்.

18 வருடங்களுக்கு முனனர் சுகயீனம் காரணமாக யாழ் வேலணையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை மல்லாவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் இறந்துவிட்டதாகத் தெரிவித்து சடலத்தை பிரேத அறையில் போட்டுள்ளனர். உறவினர்கள் அந்தப் பெண்ணின் உடலை இந்த ஆலயத்துக்கு கொண்டு வந்தனர். ஆலயத்தில் பெண்ணின் உடலை வைத்து விட்டு பூசகர் தியானத்தில் இறங்கிவிட்டார் அன்றிரவு 12 மணியளவில் அந்தப் பெண் எழுந்துவிட்டார்.

அதேபோல் பூநகரியைச் சேர்ந்த மெக்கானிக் தொழில் செய்யும் ஒருவர் இடம்பெயர்ந்து குமுழமுனையில்  இருந்த போது இறந்துவிட்டதாகத் தெரிவித்து இந்தக் கோயிலுக்கு கொண்டு வந்தனர். அவர் 2 மணித்தியாலத்தில் எழும்பிவிட்டார். அவரின் செத்த வீட்டுக்கு வந்தவர்கள் எல்லோரும் இங்கு கூடி நின்று பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் சென்றுவிட்டனர். மேலும் நடக்க முடியாமல் வந்தவர்கள் பலர் குணப்பட்டு நடந்து சென்றனர்.

விஞ்ஞான உலகில் பேய் பிசாசு உடம்பில் பிடிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள். ஆனால் நேரில் சென்று பார்க்கும் போது உண்மை என்று நம்ப முடிகிறது. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல் பேய் பிடித்தவர்கள் மட்டும் அதனை உணருகிறார்கள்.

இந்த கோயில் சூழலில் இன்னுமொரு அதிசயம் இடம்பெறுகிறது. இரத்தினக் கல்லுடன் நாக பாம்புகள் உலாவுகின்றன. கோயிலுக்கு வழிபட வருகின்ற எல்லோரும் பார்த்திருப்பதாகக் கூறுகின்றனர். போரின் போது இடம்பெயர்ந்த அன்றைய நாள் 16 நாக பாம்புகளின் வாய்க்குள் இருந்து இரத்தினக்கற்கள் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருக்க வரிசை கட்டி நின்றதைப் பார்த்ததாகவும் பின்னர் மறைந்து போய்விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோயில் பதிவு செய்யப்பட்ட கோயில் ஆனாலும் எந்தவிதமான சலுகைகளும் இதுவரை இந்தக் கோயிலுக்கு கிடைக்கவில்லை. அந்தக் கிராமத்தவர்கள் தாங்களாகவே கோயில் கட்டி பராமரித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கும் ஏனைய நாள்களில் காலை 8 மணிக்கும் பூசைகள் இடம்பெறும். இங்கு பிரம்மம் தான் மூலமான தெய்வம் பிரம்மம் என்பது உருவம் இல்லாத பரம்பொருள். சக்தி வழிபாடு எல்லாம் இருக்கிறது.

இந்த ஆலயத்தின் ஊடாக பின்தங்கிய மாணவர்களுக்கு வருடத்துக்கு ஒரு முறை கற்றல் உபகரணங்கள்  5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதுடன் 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற பிள்ளைகளுக்கு அவர்களின் பெயரில் வங்கியில் கணக்கொன்றைத் திறந்து ஆயிரம் ரூபாவினை வைப்பில் இடுகின்றனர். மேலும் இந்து வீட்டில் யாராவது இறந்தால் அந்த வீட்டு ஈமைக்கிரியை செலவுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்கி அவர்களுக்கு இரவு உணவும் வழங்கப்படுகிறது.

அ.அம்பிகைதாசன்
( பூசகர்)
——————————–
எனக்கு 8 வயது இருக்கும் போது ஒரு நாள் இரவு வீட்டில் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு மண்ணெண்ணெய் இல்லாமல் அணைந்துவிட்டது. அம்மா என்னை பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்று மண்ணெண்ணெய் வாங்கி வருமாறு கூறினார். நானும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக கானை எடுத்துக் கொண்டு வீட்டுக் கதவைத் திறந்தேன். மழை காலத்தில் மின்னல் மின்னியது போல ஒரு மின்னல் போன்ற வெளிச்சம் எனது கண்ணைப் பறித்தது. எனக்கு முன்னே சிவப்புச் சேலையுடன் தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு ஒரு அம்மா தோன்றினார். எனது பக்கத்தில் வந்து  ‘மகன் வா வீதியில் பள்ளம் இருக்கிறது நான் கூட்டிக் கொண்டு போகிறேன்’ என்று எனது கையைப் பிடித்து வீதியில் இருக்கும் பள்ளத்தின் அருகாக கடைக்கு கூட்டிச் சென்று மண்ணெண்ணெய் வாங்கியதும் மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டதும் மறைந்து விட்டார். அந்த உருவத்தை இன்றும் என்னால் மறக்க முடியாமல் இருக்கிறது.

ஒரு நாள் அருகில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் 40 நாள் உபவாசம் நடந்தது. அங்கு நான் சென்றிருந்தேன். மாலை 6 மணி இருக்கும் ஒரு மின்னல் தோன்றியது எனது முன்னே இயேசு தோன்றி எனது காதில் நடக்க இருப்பதை சொல்லி விட்டு மறைந்தாh.; உடனே நான் அங்கு வழிபட வந்தவர்களுக்கு ஏதோ ஒரு குழப்பம் இந்த ஆலயத்தில் நடைபெறவுள்ளது என்று அறிவித்தேன் ஆனால் நான் இந்துக்காரன் என்று இவர் சும்மா சொல்லுகிறார் என்று அவர்கள் அதை நம்பவில்லை. பின்னர் நான் சொன்னது போல் உபவாசம் குழம்பிவிட்டது.

முஸ்லிம் மக்களின் பெருநாள் அன்று ஒரு உயரமான வெள்ளை மனிதர் என்முன்னே தோன்றினார். யார் என்று கேட்டேன் நான் தான் நபிகள் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். இதனால் இவர் இந்த மதத்தைச் சேர்ந்தவர் அவர் இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஒருவரையும் நான் ஒதுக்கமாட்டேன். எல்லோரும் இறைவன் படைத்த உயிர். மதம் வந்து மக்களை வழிநடத்தும் ஒரு பாதையே ஒழிய அது வெறியாக இருக்கக் கூடாது. அப்படி என்றால் கடவுள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap