உலகம் கட்டுரைகள் பல்சுவை பிரதான செய்திகள்

உறவுகளை தொலைத்து பணத்திற்காக அலையும் உலகில் சொத்துகளை விற்று மாற்றுத்திறனாளி மகளுக்கு தீம் பார்க் கட்டிய தந்தை:-

அமெரிக்காவின் டெக்சாஸில் வசிக்கும் கோர்தன் ஹர்ட்மன், குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தார். சில குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது மகள் மோர்கன் அவர்களிடம் பழக விரும்பி சென்றபோது, அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.

மொர்கன் வொண்டர்லேண்டில், பெற்றோர்களுடன் மொர்கன்
மொர்கன் வொண்டர்லேண்டில், பெற்றோர்களுடன் மொர்கன்

மாற்றுத் திறனாளியான ஒருவருடன் நடந்து கொள்வது பற்றி அவர்களுக்குத் தெரியாததால்தான் அவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றதற்கு காரணம் என்பதை ஹர்ட்மன் புரிந்துக் கொண்டார். ஏனெனில் அவரது 12 வயது மகள் மொர்கனுக்கு ஐந்து வயது குழந்தைக்கு இருக்கும் மனவளர்ச்சியும், ‘ஆட்டிசம்’ குறைபாடும் இருந்தது. இந்த சம்பவம் அவருக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

“மொர்கன் அற்புதமானவள். எப்போதும் புன்சிரிப்புடன் இருக்கும் அவள், கட்டியணைத்து அன்பை தெரிவிப்பாள். ஆனால் பல இடங்களுக்கு அவளை அழைத்துச் செல்லமுடியவில்லை” என்று அவர் ஆதங்கத்துடன் கூறுகிறார்.

மகளை எங்கு அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும், மற்றவர்கள் அவளுடன் இயல்பாக இருக்கும் இடம் எது என்று தெரிந்து கொள்வதற்காக, மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோரிடம் ஹர்ட்மனும் அவரது மனைவி மேகியும் ஆலோசனை கேட்டபோது, அப்படியொரு இடமே இல்லை என்று தெரியவந்தது. எனவே, 2007ஆம் ஆண்டு மகளை அழைத்துச் செல்வதற்கு ஏற்ற ஓர் இடத்தை தானே கட்ட தீர்மானித்தார் ஹார்ட்மன்.

தந்தையுடன் மொர்கன்

வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், 2005ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தை விற்றுவிட்டு, ‘கோர்டன் ஹார்ட்மன் குடும்ப அறக்கட்டளை’யை தொடங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் அந்த தன்னார்வ அறக்கட்டளை மூலம், “அனைவரும் அணுகக்கூடிய உலகின் முதல் அல்ட்ரா தீம் பார்க் எனப்படும் கேளிக்கைப் பூங்காவை” உருவாக்கினார்.

“அனைவரும் பயன்படுத்தக்கூடிய தீம் பார்க்கை உருவாக்க விரும்பினோம். அங்கு பல்வேறு சிறப்புத் தேவைகள் அவசியமாகும். மாற்றுத் திறனாளிகளும் விளையாடலாம்” என்கிறார் ஹர்ட்மன்.

மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் உடல் குறைபாடு உடையவர்கள், குறைபாடு இல்லாதவர்கள், சிறப்பு கவனம் தேவைப்படுபவர்கள் என பலரையும் கலந்தாலோசித்து, பல்வேறு தரப்பினரின் தேவைகளை தெரிந்துக் கொண்டு தீம் பார்க்கை கட்டியமைத்தார்.

டெக்ஸாசின் சேன் அன்டொனியோவில் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த தீம் பார்க் அமைந்துள்ளது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள்

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள்

34 மில்லியன் டாலர் (26 மில்லியன் பவுண்ட்) செலவில் கட்டப்பட்ட ‘மொர்கன் வொண்டர்லாண்ட்’ என்ற அந்த புதிய தீம்பார்க் 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஃபெர்ரிஸ் சக்கரம், சாகச விளையாட்டரங்கம், மினியேச்சர் ரயில் ஆகியவை கொண்டது இந்த தீம் பார்க். முதன்முறையாக இத்தகைய இடங்களுக்கு வந்து, இவற்றை அனுபவிக்க முடிந்தது என பார்வையாளர்கள் ஹர்ட்டனைப் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள், மேலும்- கீழுமாக அசையும் சக்கர நாற்காலிகளுடன் இணைக்கப்பட்ட விலங்கு வடிவ ரதங்கள் என குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் வகையில் தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முதல்முறை அவற்றை பயன்படுத்தும்போது, மொர்கன் எச்சரிக்கையாக இருந்ததை ஹார்ட்டன் சுட்டிக்காட்டுகிறார்.

“முதலில் மொர்கன் மிகவும் அச்சப்பட்டாள். ஏன் அது சுற்றுவதும், விலங்கு பொம்மைகள் மேலும்-கீழும் செல்வதும் அவளுக்கு புரியவில்லை” என்கிறார் அவர்.

“முதலில் பக்கத்தில் நின்றாள், பிறகு விலங்கின் மீது அமர்ந்தாள். ஆனால் அதை இயக்கவில்லை. நாளடைவில் இயல்பான பிறகு, அச்சத்தில் இருந்து வெளிவந்த பிறகு இயக்கினோம். மெதுவாக ஆனால் பெரிய அளவில் மொர்கனிடம் மாற்றங்கள் ஏற்பட்டன.

மொர்கன் வொண்டர்லாண்ட் திறக்கப்பட்ட பிறகு, 67 நாடுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வந்துள்ளனர். அங்கு பணிபுரிபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாற்றுத் திறனாளிகள். மொர்கன் வொண்டர்லாண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி இலவசம்.

“மொர்கன் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். அவளுக்குத் தேவையான பல விசயங்கள் கிடைத்துவிட்டன. சிறப்புத் தேவைகள் தேவைப்படும் சவாலோடு வருகின்ற பிறருக்கு கட்டணம் என்ற சுமையை சுமத்த விரும்பவில்லை” என்கிறார் ஹர்ட்மன்.

“ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் (750 ஆயிரம் பவுண்ட்) அளவுக்கு நட்டம் ஏற்படும் என்பது தெரியும், அவற்றை நன்கொடை மற்றும் வர்த்தக பங்காளிகளிடம் இருந்து சமாளிக்க வேண்டும்” என்று அவர் சொல்கிறார்.

சக்கர நாற்காலியில் ஊஞ்சலாடும் பெண்
சக்கர நாற்காலியில் ஊஞ்சலாடும் பெண்

‘மொர்கன் இன்ஸ்பிரேஷன் ஐலேண்ட்’ இந்த ஆண்டு திறக்கப்பட்டது, மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் முழுமையாக அணுகக்கூடிய நீர் பூங்காவாக இந்த தீம் பார்க் விரிவாக்கப்பட்டது.

“சக்கர நாற்காலி மிகவும் சூடாக இருப்பதால், அருகிலேயே ஒரு நீர்பூங்காவை உருவாக்கினோம்” என்று ஹார்ட்மன் கூறுகிறார்.

தசை பிரச்சனை கொண்டவர்கள் பயன்படுத்த ஏதுவாக அந்த தீவின் ஒரு பகுதியில் சூடான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. பேட்டரிகளில் அல்லாமல் அழுத்தப்பட்ட காற்றால் இயங்கும் நீர்ப்புகா மோட்டார் சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. படகு சவாரி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த தீம் பார்க்கை உருவாக்க செலவான தொகை 17 மில்லியன் டாலர் (13 மில்லியன் பவுண்ட்).

ஸ்பிலாஷ் பார்க் ஒன்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது
ஸ்பிலாஷ் பார்க் ஒன்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

“சிறப்பு கவனம் தேவைப்படும் தனது மகன் இதுவரை தண்ணீரில் விளையாடியது இல்லை” என்று சொல்லி இன்ஸ்பிரேஷன் தீவுக்கு வந்த ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார் என்று சொல்கிறார் ஹர்ட்மன். ஒன்றல்ல, ஓராயிரம் நன்றிகள் தொடர்ந்து ஹர்ட்மனுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த தீம் பார்க்கிற்கு வரும் நான்கில் மூவர் மாற்றுத் திறனாளிகள் அல்ல என்பதை குறிப்பிட்டுச் சொல்லும் ஹர்ட்மன், தனது விருப்பம் நிறைவேறிவிட்டதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

“சில வழிகளில் நாம் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் அடிப்படையில் ஏதாவது ஒரு வழியில் ஒன்றே என்பதை மக்கள் உணர இது உதவுகிறது” என்று அவர் கூறுகிறார்.

“சக்கர நாற்காலி உதவியுடன் இயங்கும் ஒரு பெண், மாற்றுத் திறனாளி அல்லாத மற்றொருவரிடம் சென்று ஒன்றாக விளையாடுவதை பார்த்தேன், அதைத்தானே நான் விரும்பினேன்!”

மாற்றுத் திறன் கொண்டவர்களும், மற்றவர்களும் மொர்கன் இன்ஸ்பிரேசன் தீவில் ஒன்றாக விளையாடலாம்
மாற்றுத் திறன் கொண்டவர்களும், மற்றவர்களும் மொர்கன் இன்ஸ்பிரேசன் தீவில் ஒன்றாக விளையாடலாம்

தங்கள் பகுதியிலும் இதுபோன்ற தீம் பார்க்குகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்தாலும், சிறப்புத் தேவை கொண்டவர்களுக்கு கல்வி வசதிகளை சேன் அன்டோனியோவில் ஏற்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தவிருக்கிறார்.

“மொர்கன் வொண்டர்லேண்ட் போன்று, தீம் பார்க் உருவாக்கும் பல்வேறு முயற்சிகளில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்”, என்று அவர் கூறுகிறார்.

தீம் பார்க்கில் விளையாடும் மொர்கன் அங்கு பிரபலராகிவிட்டார்.

“என் மகள் இங்கு வரும்போது, அவள் தான் அனைவரின் ஈர்ப்பு மையம். மொர்கனுடன் பேசவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனைவரும் விரும்புவார்கள், அவளுக்கும் அது பிடித்தமானது” என்கிறார் பாசத் தந்தை.

தீம் பார்க்கின் சில இடங்களில் சுடுநீர் பயன்படுத்தப்படுகிறது
தீம் பார்க்கின் சில இடங்களில் சுடுநீர் பயன்படுத்தப்படுகிறது

தற்போது 23 வயதாகும் மொர்கனின் உடல்நிலை சீரடைந்து வருகிறது.

“மொர்கன் இப்போது பேசுகிறாள், பல அறுவை சிகிச்சைகள் மூலம் உடல் சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன. அவள் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்கிறார் மொர்கனின் தந்தை. தன்னால் மற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியைப் பற்றி அறியாமல், மொர்கன் அங்குள்ள ஊஞ்சல்களிலும், மணல் பகுதிகளிலும் மகிழ்வாக விளையாடுகிறார்.

“தன்னுடைய பெயரைக் கொண்டது தீம் பார்க் என்று மொர்கனுக்கு தெரியும், ஆனால், அதன் பின்னணியையும், தன்னால் மற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியின் ஆழத்தையும் அவளால் புரிந்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்” என்கிறார் ஹர்ட்மன்.

“வாழ்க்கையில் விஷயங்களை எப்படி கையாண்டார் என்பதையோ, அவள் கொடுத்துள்ள உண்மையான உத்வேகத்தையோ மொர்கன் உணரவில்லை” என்கிறார் மொர்கனின் அன்பான அப்பா.

Thanks – BBC

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.