இலங்கை பிரதான செய்திகள்

போர் பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து இயங்கியவர்களை தான் கண்டித்தேன். முன்னாள் போராளிகளை அல்ல. – சி.வி:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
போர்ப்பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள். காரணமில்லாமல் முன்னைய போராளிகளைப் பொலிசார் கைதுசெய்வதையும் நாம் கண்டிக்கின்றோம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட கணித போட்டி பரீட்சையின் பரிசளிப்பு விழா வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வெளிநாட்டு பணத்தை இளையோர் வீண் விரயம் செய்கின்றனர்.
இளைய தலைமுறையினரின் இன்றைய போக்கு மனவருத்தத்திற்குரியது. இதற்கு வலுவான காரணமாக அமைவது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே என்பது எமது தீர்க்கமான முடிவாக அமைந்துள்ளது.
தமது உறவுகளின் வாழ்வு நிலைமட்டங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நல்ல சிந்தனையில் தமது உடலை வருத்தி வெளிநாடுகளில் உழைத்த பணத்தின் ஒரு பகுதியினை தமது உறவுகளுக்கு எம்மவர்கள் அனுப்பி வைக்கின்றார்கள்.
அவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற பணம் எங்கள் இளைஞர் யுவதிகளுக்கு உழைத்துப் பெறாத பணம். அதனால் அவர்களுக்கு உழைப்பின் வலி தெரிவதில்லை. இங்குள்ள பெரியோர்கள் முதல் இளைஞர், யுவதிகள், குழந்தைகள் வரை இலவசமாகக் கிடைக்கும் பணத்தை வீணே விரயம் செய்கிறார்கள்.
எதிர்கால சிந்தனை இல்லை.
அவர்களுக்குத் தமது எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லை. முன்பு பெண்ணைப் பெற்றவர்கள் பொத்திப் பொத்தி அவர்களை வளர்ப்பார்கள். புகுந்த வீட்டில் எம் மகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஒழுக்கம், சீர்வரிசை, நகைநட்டு என எந்தக் குறையும் வைக்காது வளர்க்க எத்தனிப்பார்கள்.  அன்றெல்லாம் குழந்தை பிறந்த தினத்தில் இருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இன்று பெற்றோர்களுக்கு அந்தக் கவலை இல்லை என்றே கூற வேண்டும். திருமண வயதை அடைந்துவிட்ட பெண் பிள்ளைகளை வெளிநாடுகளில் வசிக்கின்ற இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றார்கள்.
அவ்வாறான திருமணங்களின் போது சீதனம், சீர்வரிசை என்று எதுவும் பேசப்படுவதில்லை. வெளிநாடுகளுக்கு போன பின்பும் பெற்றோர்களுக்கு அவ்வப்போது உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. இதனால் உழைப்பின் வலி சிறுவயதிலும் உணரப்படுவதில்லை; வளர்ந்த பின்பும் உணரப்படுவதில்லை. தெய்வாதீனமாகப் பல பிள்ளைகள் நன்றாக வாழ்கின்றார்கள். அதே நேரம் சில பிள்ளைகளின் வாழ்வு கேள்விக் குறியாகவும் மாறிவிடுகின்றது.
யுத்தத்தில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு உதவுதல் அவசியம். 
கடந்த 30 ஆண்டுகளாக தொடர் யுத்தத்தின் காரணமாக பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்ட குடும்பங்களின்; வாழ்வு நிலைகள் கருத்தில் கொள்ளப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு எம்மாலான உதவிகளைப் புரிவது அவசியம். அதை நாம் செய்தும் வருகின்றோம்.
ஆனால் அதே நேரம் எதுவித எதிர்கால சிந்தனையும் இன்றி தறிகெட்டுத் திரிகின்ற ஒரு கூட்டத்தை நல்வழிப்படுத்தி சமுதாய நீரோட்டத்தில் மீள இணைத்துக் கொள்ள வேண்டியதும் எமது கடமையாகும். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை துன்புறுத்துவதோ அல்லது உயிர்பிரியச் செய்வதோ பாவச் செயல் என அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன.
ஆனால் இன்று மனிதர்கள் மந்தைகளுக்கு ஒப்பாக வெட்டிச் சாய்க்கப்படுகின்றார்கள். வன்மமும்; வன்முறையும் சிலரிடம் தலைக்கேறிவிட்டது. போதைப்பொருட்கள் அதற்கு புத்துயிர் அளிக்கின்றன.
ஆயுத பயிற்சி பெற்றவர்கள் என்று விடுதலைபுலிகளை குறிப்பிடவில்லை. 
நான் அண்மைக்காலங்களில் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பது சம்பந்தமாகப் பேசப்போய் எமது விடுதலை வீரர்களை நான் குறிப்பிட்டதாக சிரேஸ்ட அரசியல் வாதிகள் கூட தமது கருத்துக்களை பிழையாக வெளியிட்;டமை கவலைக்குரியது. நான் புலிகள் இயக்கப்போராளிகள் பற்றிக் குறிப்பிடவில்லை. விடுதலைப்புலிகள் என்ற சொல்லே என்னால் பாவிக்கப்படவில்லை.
போர்ப்பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள்.
காரணமில்லாமல் முன்னைய போராளிகளைப் பொலிசார் கைதுசெய்வதையும் நாம் கண்டிக்கின்றோம். பயிற்சிகள் பெற்றுவிட்டு பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் நாம் கண்டிக்கின்றோம்.
மேற்படி வன்முறைகளினால் அப்பாவி வயோதிபர்களும் குடும்பங்களும் உடல் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து நடைப்பிணங்களாக மாறியிருப்பதை எத்தனை இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்?  அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும். இளைஞர்கள் சற்று அழமாகச் சிந்திக்கத் தொடங்கினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகிட்டும்.
 
குற்ற செயல்களுக்கு பெற்றோர்களும் காரணம். 
இன்றைய குற்றச் செயல்களுக்கு பல பெற்றோர்களும் காரணமாகிவிடுகின்றார்கள். தமது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், எவருடன் பழகுகிறார்கள் என்பதை அவர்கள் கண்டறிவதில்லை. நடுச்சாமத்தில், விடியற்காலையில் தமது பிள்ளைகள் கொண்டுவருகின்ற பணம், நகை நட்டு ஆகியவற்றை எங்கிருந்து எடுத்துவந்தார்கள் என்பதை அறியமுற்படுவதில்லை.
இத் தேட்டங்கள் முறையாக தேடப்பட்டனவா அல்லது முறைதவறிய தேட்டமா? இவ்வாறான கேள்விகள் எத்தனை பெற்றோர்களின் மனதில் உதித்திருக்கின்றன?
இவற்றுக்கெல்லாம் விடை காணப்படவேண்டுமாயின் சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டும். சமூக ஒற்றுமை மேலோங்க வேண்டும். எம்மைப்போல் பிறரையும் நேசிக்கும் தன்மை வளரவேண்டும். போதுமென்ற மனத்துடன் வருவாய்க்கேற்ப வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான்  வன்முறைகளுக்கும் முறையற்ற பொருள் தேடல்களுக்கும் முடிவு காலம் வரும். அதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers