இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – கடிதம் இணைக்கப்பட்டுள்ளது -வட மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார்

வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தனது அமைச்சு பதவியை இன்று திங்கட்கிழமை இராஜிநாமா செய்துள்ளார்.
தளது இராஜிநாமா குறித்து செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை மாலை தனது வவுனியாவில் உள்ள அமைச்சின் உப அலுவலகத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் நீண்ட விளக்கமளித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழரசுக் கட்சியின் வடமாகாணசபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் அவசரமாகக் கூடியபோது மேற்கொண்ட தீர்மானத்தையடுத்து. அமைச்சர் சத்தியலிங்கம் தனது பதவியை இராஜிநாமா செயதுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
வடமாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து இடம்பெற்ற விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஒரு குழப்பகரமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலைமை தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் கொழும்பில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியிருந்தனர்.
தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பி;ன கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வடமாகாணசபையின் அமைச்சர்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்து விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இக்கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. வடமாகாண அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது என்பது அவற்றில் முக்கிய முடிவாகும்.
இந்தத் தீர்மானங்களின் பின்னர் தமிழரசுக் கட்சியின் வடமாகாணசபை உறுப்பினர்கள் கூடி நிலைமைகள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தி, தழிழரசுக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் அமைச்சர் பதவியை ஏற்பதில்லை என்று தீர்மானத்திருந்ததன் பின்னணியிலேயே அமைச்சர் சத்தியலிங்கம் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
வடமாகாண சபையின் அமைச்சர்களாக யார் வருவது என்பதே தமிழ் மக்களின் இப்போதைய முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது என வடமாகாண சபையின் பிரச்சினைகளுக்கு ஊடாக நிலைமையைத் திரித்துக் காட்டுவதற்கான ஒரு சதித்திட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கருதுகின்ற நிலையிலேயே தனது அமைச்சுப் பதவியை தான் இராஜிநாமா செய்துள்ளதாக அமைச்சர் சத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவியை இராஜநாமா செய்யுமாறு தமிழரசுக் கட்சியோ அல்லது வேறு எவருமே தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், அதேபோன்று தான் எந்தவிதமான குற்றங்களும் செய்யவில்லை என்பதையும் அமைச்சர் சத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் தெளிவாக எடுத்துக் கூறினார்.
தனது இராஜிநாமா கடிதம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சு பதவியை இராஜிநாமா செய்தபோதிலும், மாகாண சபை உறுப்பினராக தொடர்ந்தும் தனக்கு வாக்களித்த மக்களுக்கும் வடமாகாண மக்களுக்கும் தனது சேவைகளைத் தொடர்ந்து ஆற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கௌரவ முதலமைச்சர் அவர்கள்,
வடக்கு மாகாண சபை.அமைச்சர்வாரியத்திலிருந்து விலகல் தொடர்பானது

மேற்படி விடயம் தொடர்பாக, 2013ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாணத்தின் முதலாவது மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வவுனியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நான் தங்களாலும், கட்சித்தலைமையினாலும் பொறுப்பளிக்கப்பட்டதன் அடிப்படையில் மாகாண சுகாதார அமைச்சராக கடமையாற்றி வருகின்றேன்.

30 வருட ஆயுதப்போராட்டகாலத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக வாழ்ந்தவன் என்பதன் அடிப்படையிலும், மக்களின் துன்பதுயரங்களில் நேரடியாக பங்குகொண்டவன் என்பதன் அடிப்படையிலும் தங்களால் எனக்கு பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சர் பதவியினூடாக சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் போரால் சின்னாபின்னமாக்கப்ட்ட எமது தேசத்தையும், அதன்பால் துன்பங்களை அனுபவித்த மக்களின் தேவைகளை இனங்கண்டு இருக்கும் வளங்களை பயன்படுத்தி மனச்சாட்சிக்கு விரோதமில்லாது எனது கடமையை திறம்பட செய்து வருகின்றேன். நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போலல்லாது வேறுபட்ட தேவைகளை கொண்ட மாகாணமாக உள்ள எமது மாகாணத்தில் வாழுகின்ற மக்களுக்காக அவர்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்ய விசேடமான பல செயற்திட்டங்களை வடிவமைத்துள்ளதுடன் அவற்றினை தங்களினதும், மாகாண அமைச்சர் வாரியத்தினதும் பூரண ஆதரவுடன் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு என்னாலான பணியை செய்தவருகின்றேன்.

எனினும் துரதிஸ்ரவசமாக அமைச்சர்களுக்கெதிராக முறைகேடுகளை விசாரிக்கும் வகையிலான விசாரணைக்குழுவொன்று தங்களால் அமைக்கப்பட்டு அதில் நானும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன். எந்தவிதமான குற்றங்களையும் இழைக்காதவனாக நான் இருந்தபோதும்  தங்கள்மீதும,; தங்களின் நீதி தவறாத தீர்ப்பிலும்  நம்பிக்கை கொண்டவனாய் தங்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் ஆஜராகி விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்பை நல்கியிருந்தேன். இந்த நிலையில் விசாரணைக்குழுவின் இறுதி தீர்ப்பில் நான் குற்றமற்றவன் என்றும் என்னால் நடைமுறைப்படத்தப்படுகின்ற நல்ல செயற்திட்டங்களுக்கு மாகாண நிர்வாகம் பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டுமென்றும் விசாரணைக்குழு பரிந்துரைகளை செய்திருந்த நிலையில் மீண்டும் எனக்கு எதிராக மீள்விசாரணை நடாத்தப்படல் வேண்டுமென்றும் அதற்காக கட்டாய விடுமுறையில் என்னை அனுப்புவதாகவும் தாங்கள் அறிவித்திருந்தீர்கள்.

அவ்வாறானதொரு விசாரணைக்குழு நீதியானதாகவும், சட்டபூர்வமானதாகவும் இருக்கும் பட்சத்தில் நான் மீண்டும் விசாரணைக்கு சமூகமளிக்க தயாராகவே இருந்தேன். எனினும் கடந்த 05.08.2017 தங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித்தலைவர்களுடனான சந்திப்பில் தாங்கள் என்னை அமைச்சர் வாரியத்திலிருந்து வெளியேற்றவேண்டுமென்று கருத்து தெரிவித்தமையும், அதில் தாங்கள் பிடிவாதமாக இருந்தமையும் அமைச்சர் வாரியத்திலிருந்து என்னை வெளியேற்றுவதில் தாங்கள் கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடானது அரசியல் உள்நோக்கம் கொண்டதென என்னால் புரியக்கூடியதாக இருந்தது. இவ்வாறனதொரு சூழ்நிலையில் தொடர்ந்தும் தங்கள் தலைமையிலான அமைச்சர் வாரியத்தின் அங்கத்தவனாக தங்களுடன் இணைந்து கடமையாற்றுவதென்பது சிந்திக்கவேண்டியதாகும்.

இந்த நிலையில் 06.08.2017 யாழ்ப்பாணத்தில் கூடிய இலங்கை தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தில் வடக்கு மாகாணசபையின் தங்களின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சர் வாரியத்தில் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் எந்தவொரு தமிழரசுக் கட்சிசார்ந்த உறுப்பினரும் அங்கம் வகிக்கப்போவதில்லை என்ற தீர்மானம் தமிழரசுக் கட்சியின்  உயர்பீடத்திற்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்டையிலும், தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் முன்னால் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு, காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகள், அரசியல் கைதிகள் விடுவிப்பு, புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள் இன்னும் பல அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய நாங்கள் மாகாணத்தின் அமைச்சர்வாரிய பிரச்சனைகளை முதன்மைபடுத்தவிரும்பாதன்; அடிப்படையிலும்; வடக்கு மாகாண அமைச்சர் வாரியத்திலிருந்து விலக திர்மானித்துள்ளேன் என்பதை தங்களுக்கு தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதுவரைகாலமும் தங்கள் வழிகாட்டுதலின்கீழ் என்னால் முன்மொழியப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட, எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்பதை எதிர்பார்ப்பதோடு தொடர்ந்தும் மக்களின் தேவைசார்ந்த விடயங்களில் அர்ப்பணிப்போடு இணைந்து சேவையாற்றுவேன் என்றும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தங்களுண்மையுள்ள,

னுச.பத்மநாதன் சத்தியலிங்கம்,(மா.ச.உ)
சுகாதார அமைச்சர்,
வடக்கு மாகாணம்.

பிரதிகள்- கௌரவ மாவை சேனாதிராஜா, தலைவர், இலங்கை தமிழரசு கட்சி
கௌரவ இரா சம்பந்தன், தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers