Home இலங்கை பரராசா முதல் ஹேமச்சந்திர வரை – அருணன்:-

பரராசா முதல் ஹேமச்சந்திர வரை – அருணன்:-

by admin
Demonstrative performance of professional shooters outside Kyiv.

நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நீதிபதியை இலக்குவைத்து நடத்தப்படவில்லை என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். ‘நிச்சயமாக இது சந்தர்ப்ப சூழ்நிலையில் நடந்த விடயமே. நீதிபதிக்கு எந்தவித மரண அச்சுறுத்தலும் இல்லை என்பதை விசாரணைகளின்போது அறிந்து கொண்டுள்ளேன்’ என்றும் அவர் கூறியிருந்தார்.

வடக்கு முதல்வர் விடயத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு ஒன்றும் புரியாது என்று நினைத்துச் செயற்பட்ட மாதிரித்தான் இக்கூற்றும் உள்ளது. குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காகச் செய்யப்பட்ட தாமதங்கள் பல தமிழர் வரலாற்றில் நடந்துள்ளன.

ரெலோவும் புலிகளும் இணைந்து செயற்பட்ட காலத்தில் நீர்வேலியில் ‘மக்கள் வங்கி’ கொள்ளை நிகழ்ந்தது. வங்கியின் வாகனத் தொடரணியைத் தடங்கலுக்குள்ளாக்கினர்.  பார ஊர்தி ஒன்றை அந்த வாகனத் தொடரணிக்கு முன்னால் செல்லக் கூடிய வகையில் நிறுத்தி வைத்திருந்தனர். தொடரணி வருவதைக் கண்டதும்  பார ஊர்த்தியை இயங்கச் செய்து மிகக் குறைந்த வேகத்தில் செலுத்தத் தொடங்கினார் சாரதி. பொலிஸ் சென்ற வாகனம் அதனை முந்தவிடாமலும் பார்த்துக் கொண்டார். பொலிஸாரின் வாகனம் வேகத்தைக் குறைக்க வேண்டி வந்தது. அப்போது இன்னொரு வாகனத்தில் வந்த பிரபாகரன் துப்பாக்கியுடன் இருந்த பொலிஸாரின் தலையை நோக்கிச் சுட்டார். நகரும் வாகனத்தில் இருப்பவரை இன்னுமொரு நகரும் வாகனத்திலிருந்து சுடுவதற்கு அபாரமான திறமை இருந்திருக்க வேண்டும். பொலிஸ் வாகனம் நின்றதும்  திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. தொலைத் தொடர்புக் கருவிகள் ஏதும் அல்லாத நிலையில்  கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இத்திட்டம் தீட்டப்பட்டது.

வவுனியாவில் ஐ.தே.க. அமைப்பாளரை ஒரு ஆயுதக்குழு சுட்டது. (புளொட் அல்ல). புலேந்திரன் ரூபவாஹினியில் தமிழ் திரைப்படம் பார்க்கும் நாளில் சுடவேண்டும் என அக்குழு திட்டமிட்டது. வவுனியா நகர்ப் பகுதியில் அவர் வீடு இருந்தது. அவரைச்  சுட்டால்  பாதுகாப்புத் தரப்பினர் உடனடியாக அங்கு வந்துவிடுவர். சத்தம் கேட்டகாத மாதிரி ஏற்பாடு செய்ய வேண்டும். இரவு தபால் புகையிரதம் வரும் நேரத்தை இதற்குச் சரியான தருணமாக இனங்கண்டனர். புகையிரதம் வருவதற்குச் சற்று முன்னால் சமிக்ஞை விழாமல் ஏற்பாடு செய்தனர். சமிக்ஞை கிடைக்கவில்லை என்றதும் புகையிரத சாரதி ஹோர்ண் அடித்தார்.  அந்தக் கணத்திற்காகவே காத்திருந்த ஆயுததாரிகள் (ஷொட் கன்) ஜன்னலினூடாக அவரைச் சுட்டனர். ஹோர்ண் ஒலியில் துப்பாக்கிச் சத்தம் வெளியில் கேட்கமுடியாததால்  பொலிஸார் அங்கு உடனடியாக வரமுடியாமல் போயிற்று. ஆயுததாரிகள் தப்பிச் செல்ல அவகாசம் கிடைத்தது.

மட்டு. களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மீது தமிழ் பாதுகாப்புப் பேரவை ஒரு தாக்குதலை மேற்கொண்டது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹமடசா உட்பட பொலிஸ் ஜீப்பில் சென்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அரச திணைக்களம் ஒன்றின் வாகனத்தை (ஜீப்) முதலில் கடத்தினர். ‘வேணுமெண்டா போய்ப் பொலிஸிலை சொல்லு’ என்று சாரதியிடம் சொன்னார்கள் பாதுகாப்புப் பேரவையினர். அதன்படி சாரதி போய்ப் பொலிஸில் சொன்னார். பழுகாமம் செல்லும் திசையில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். சாரதி போய்ச் சொன்னதும் ஜீப்பில் புறப்பட்டார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி. ஜீப் பொலிஸ் நிலையத்தை விட்டுப் புறப்படுவதைக் கண்டதும் தாங்கள் கடத்தி வந்த ஜீப்பை இயக்கினார்கள் பேரவையினர். அந்த ஜீப்பைத் துரத்திய பொலிஸார் பழுகாமத்தைத் தாண்டி அம்பிளாந்துறை செல்லும் பாதையில் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை நெருங்கியதும் பேரவையினர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தனர். அவர்களைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பொலிஸார் வந்தபோது கண்ணிவெடியில் சிக்கினர். தங்களது வேகத்தைக் குறைத்ததன் மூலம் பொலிஸாரின் வாகனம் கண்ணிவெடியில் சிக்கும் வகையில் திட்டமிட்டிருந்தனர் பேரவையினர்.

நல்லூர் சம்பவமும் திட்டமிட்டபடியேதான் நடந்தது. இன்றைய தொலைத் தொடர்பு யுகத்தில் மண் கடத்தல்காரர்களே எவ்வளவு நேர்த்தியாகத் தகவல்களைப் பரிமாறுகையில் இவ்வாறான நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவது ஒரு பெரிய காரியமல்ல. பொலிஸாரின் வாகனம் வேகத்தைக் குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்றே சச்சரவு ஒன்றை ஏற்படுத்தினர். சச்சரவுக்கு உள்ளானவருக்கு சிலவேளை இந்த விடயம் தெரியாமலிருக்கலாம். (மறுதரப்பு) எதிர்பார்த்தபடியே பொலிஸார் இறங்கினர். பிஸ்ரலும் கைப்பற்றக் கூடிய வகையில் இருந்தது. யுத்த காலமென்றால் பிஸ்ரலைக் கையிலேடுத்தபடியே நீதிபதியின் மெய்ப் பாதுகாவலர்கள் இறங்கியிருப்பர். மண்வெட்டியோ அல்லது கோடாரியோ என்றால் எடுத்தவுடன் எப்படியாவது பாவிக்கலாம். எனவே பிஸ்ரலைக் கையாளத் தெரிந்தவர்கள்தான் இம்முயற்சியில் இறங்கினர். ஆனால் விசுவாசமிக்க பாதுகாப்பு நீதிபதிக்கு இருந்திருக்கிறது. அவர்கள் அவரைப் பாதுகாக்க எடுத்துக் கொண்ட அக்கறை செய்திகள் மூலம் தெரியவருகிறது. கடமை என்பதற்கு அப்பால் அவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பழகியமுறை மதிப்பிற்குரியதாக இருந்திருக்க வேண்டும்.

பொதுவாகப் பாதுகாவலர்கள் என்போர் குறிப்பிட்ட பிரமுகர்களின் ஆணை, அறிவுறுத்தல்களையும் தாண்டி முடிவெடுக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். அப்படிக் கிடைப்பது ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும்.  அது நீதியரசர் இளஞ்செழியனுக்குக் கிடைத்திருக்கிறது. இப்படியொரு பதில் தாக்குதல் நடைபெறுமென ஆயுததாரிகள் எதிர்பார்;த்திருக்க  மாட்டார்கள். உலகில் பாதுகாவலர்களால் ஆபத்தும் வந்திருக்கிறது. உதாரணம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி. அடுத்து எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், இவர் இராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்டிருந்தபோது அணிவகுப்பிலிருந்து தாக்கதல் நடத்தப்பட்டது. அவரது மெய்ப் பாதுகாவலர்கள் அவரைப் பதுங்கு குழிக்குள் இழுத்துச் சென்றார்கள். எனினும் தாக்குதலாளிகள் பதுங்கு குழிக்குள் கைக்குண்டை வீசியதால் சதாத் உயிரிழக்க நேரிட்டது.

இலங்கையில் கடற்படை அணிவகுப்பைப் பார்வையிட்டார் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரைக் கடற்படை சிப்பாய் துப்பாக்கியால் அடித்துக் கொல்ல முயற்சித்தார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் அவர் அன்று தப்பினார். ‘துப்பாக்கியில் குண்டு இருக்கவில்லை. அதனால்தான் துப்;பாக்கியால் அடிக்க வேண்டி ஏற்பட்டது. இல்லையேல் சுட்டிருப்பேன்’ என அந்தச் சிப்பாய் விளக்கமளித்திருந்தார். ( அவரைத் தேசியவாதி என்று கொண்டாடியது சிங்கள இனம். தன்னைப் பிரிந்து சென்ற தனது மனைவியையும் மகனையும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமெனவும், குறிப்பிட்டதொரு தொகை பணத்தைத் தனக்கு  வழங்க வேண்டுமெனவும் கேட்டு அதடதாலிய விமானத்தைக் கடத்திய சேபால எக்க நாயக்காவை ‘ஜயவே வா’ கோஷத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றவர்களல்லவா சிங்களவர்?)

இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் குண்டுதாரியிடமிருந்து காப்பாற்றியது அவரது மெய்ப் பாதுகாலவலர்களே. பிரபாகரனின் முனைவையும் மீறிச் செயற்பட்டதாலேயே இந்திய இராணுவ காலத்தில் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது. தலைவரின் மெய்ப்பாதுகாப்புக்குப் பொறுப்பான சொர்ணத்தின் செயலால் அது சாத்தியமானதெனப் பல தகவல்கள் வெளியாகின. மட்டு. கரடியனாற்றிலும்  தளபதி பானுவின் மீது படுத்துக்  கிடந்து தம்மைக் கொடுத்து அவரைக் காப்பாற்றினர் மட்டு. நகர்ப் போராளிகள்.

மெய்ப் பாதுகாலவர்கள் சுயமாக முடிவெடுக்க முடியாதவர்களாக இருந்ததாலேயே சு.ப. தமிழ்ச்செல்வனை இழக்க நேர்ந்தது. நள்ளிரவிலிருந்து வேவு விமானம் சுற்றிக் கொண்டிருந்தபோதும் பொருத்தமான சமயோசிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அதனாலேயே மெய்ப் பாதுகாவலர்கள் தாமும் உயிரிழந்து தமிழ்ச்செல்வனும் உயிரிழக்கும் நிலை ஏற்ப்பட்டது என அன்றைய காலகட்டத்தில் தகவல்கள் தெரிவித்தன. 1993 இல்மே தினத்தன்று  ஜனாதிபதி பிரமதாஸவும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஏற்பாட்டைப் புறந்தள்ளியதாலேயே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.

இன்றைய இனப்பிரச்சினை பூதாகாரமாக வெடிப்பததற்குக் காரணம் இந்த நாட்டுச் சட்டங்கள் தமக்குப் பாதகமானவை என்று தமிழர்கள் உணர்ந்ததும் ஒரு காரணம். செம்மணியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் பரராசா என்ற இளைஞன். சிறிமாவின் ஆட்சிக் காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. கொலையாளியான பொலிஸாரை விடுதலை செய்ய ஏதுவாக அவ்வழக்கைக் கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலி வந்த அதிகாரியொருவர் நீதிபதியிடம் இந்த உத்தரவைக் கையளித்தார். விடுதலை செய்யப்பட்ட கொலையாளிப் பொலிஸைத் தமது தோள்களில் சுமந்தவாறு  நீதிமன்றச் சுற்றாடலில் ஊர்வலம் சென்றனர் சக பொலிஸார்.

யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனின் நியமனத்திற்குப் பின்னரே சட்டத்தின் ஆட்சி மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்ப்பட்டது. 17வருட காலமாக அவரது மெய்ப் பாதுகாவலராக இருந்த சரத் ஹேமச்சந்திரவின் சாவு தமிழ் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தியிருக்கிறது என்றால் அதன் விளைவை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாண அரச அதிபராக இருந்த லயனல் பெர்னாண்டோவின் தாயாரின் மறைவுக்குப் பின் தமிழர்கள் ஒன்று திரண்டு ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பல்வேறு வழிகளில் தமது உணர்வை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர் ‘சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் முதன்மையானவர்கள்’ என்று யாழ்ப்பாண மக்கள் பற்றி எழுத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த மக்களை ஆயுத வழிக்குத் திசை திருப்பியது தொடர்ச்சியாக வந்த அரசுகளே.

அதுபோல சுனாமி அனர்த்தத்தின் போதும் நல்ல மாற்றம் ஏற்பட்டது.  தீமையிலும் நன்மையாக விளைந்த சூழல் அது. மக்கள் அனைவரும் இன, மத பேதங்களை மறந்து செயற்பட்டனர். பக்கியேல்ல போன்ற இடங்களிலிருந்து சிங்கள மக்கள் கால்நடையாக சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனை மக்களுக்கு உணவு கொண்டு வந்தனர். வன்னியிலிருந்து மூதூர் முஸ்லிம் மக்களுக்கு உதவிப் பொருள்கள் சென்றன. உயிரிழந்த தமிழ் பெண்களின் சடலங்களில் இருந்து எந்தநகைகளையும் கழற்றாமல் அப்படியே அவர்களது உறவினர்களிடம் கையளித்தனர் முஸ்லிம் இளைஞர்கள். திருக்கோவில் கடலில் குதித்து மக்களை காப்பாற்றினர் விசேட அதிரடிப் படையினர். மட்டு. கல்லடியில் படையினரின் முகாமுக்குச் செல்ல முடியாதபடி இடிபாடுகள் காணப்பட்டன. தமது புல்டோசர்களைக் கொண்டு சென்று அவற்றை அகற்றினார் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பானு. வெள்ளத்தில் அடிபட்டுப் படுவான்கரைக்குச் சென்ற சிப்பாயைக் காப்பாற்றிப் படையினரிடம் ஒப்படைத்தனர் புலிகள். அந்தச் சூழலிலே மக்களிடம் ஏற்பட்ட மனமாற்றத்தைப் பயன்படுத்தி துணிச்சலான முறையில் இனப் பிரச்சினைக்கு வழிகாட்டத் தவறிவிட்டார் சந்திரிகா.

இதன் பின் வித்தியாவின் மரணம் நாடளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. எல்லா மக்களும் தமது பிள்ளையாகவே வித்தியாவை நினைத்தனர். இன்று ஒரு மேல் நீதிமன்ற நீதிபதியை தனது உயிரைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறார் ஹேமச்சந்திர. அவருக்காகத் தமிழினம் கண்ணீர் வடிக்கிறது. நீதிபதி இளஞ்செழியன் வெளிப்படையாகவே தமது உணர்வைக் காட்டியுள்ளார். பௌத்த மத பீடங்களும் ஒன்றாக இணைந்து நின்ற சம்பவம் இது. தீமையிலும் விளைந்த நன்மையாக இதனைக் கொண்டு இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும்.

பொலிஸ்பேச்சாளர் எஸ.பி. ருவான் குணசேகர இச் சம்பவம் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்றல்ல’ எனக் குறிப்பிட்டமை சட்டத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க வைக்கும் முயற்சியாகும். நாட்டிலுள்ள எல்லா பிரஜைகளும் பிஸ்ரலை இயக்கத் தெரிந்தவர்கள் எனக் கருதியிருக்கிறார் போலும். அச் சம்பவத்தில் பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் அரியாலைப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாகப் பொலிஸாரைத் திசை திருப்பும் முயற்சியாகவே இது நடைபெற்றிருக்கிறது. அவர்களின் வலையமைப்பு இன்னமும் தளர்ந்துவிடவில்லை. எனவே சட்டத்தின் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கூடவே இனப் பிரச்சினை  தொடர்பான விடயங்களிலும் முன்னேற்றத்தைக் காட்டினால் சகல இன மக்களும் மகிழ்சியுறுவர்.

சுவிஸ் குமார் தப்பிச் சென்றபோது பொலிஸார் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இழந்த சூழலில் பல விபரீதங்கள் ஏற்ப்பட்டன. ஆனால் இன்றைய சூழல் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இதைத் தக்க வைப்பது அரசின் கடமை.

இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் தகவல்கள், மற்றும் கருத்துக்களுக்கு கட்டுரை ஆசிரியரே பொறுப்பு:

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More