இந்தியா பல்சுவை பிரதான செய்திகள்

மாமியர் பலரால் மருமகள்கள் அவஸ்த்தைப்படும் காலத்தில் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக கோடிகளை பெற்றுக் கொடுத்த மாமி:-

கர்நாடகாவில் விவகாரத்து வழக்கு ஒன்றில் மாமியார் ஒருவர் மருமகளின் பக்கம் நின்று, தன் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக ரூ. 4.85 கோடி வாங்கி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின் மகன் தேவானந்த் என்பவர்,    கடந்த 2011-ம் ஆண்டு தனது சகோதரியின் மகள் ரம்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் 2012-ம் ஆண்டில் இருந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்யா விவகாரத்துக் கோரி பெங்களூர் மாநகர 5-வது கூடுதல் முதன்மை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான ரம்யா, “எனது தாத்தாவும், மாமனாருமான கஷ்யப்பானவரின் கட்டாயத்தின் பேரிலே தேவானந்த் என்னை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட என்னுடன் வாழாத நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறோம். தற்போது எனக்கு 25 வயது ஆவதால், எனது எதிர்காலத்துக்காக ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்”என முறையிட்டு இருந்தார்.

இதையடுத்து நீதிமன்றம் தேவானந்தின் தாய் லட்சுமியை விசாரித்தபோது, “எனது மகனிடம் ஏராளமான சொத்துகள் உள்ளன. குவாரி தொழில் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் பயன்படுத்துகிறார்.

எனவே தேவானந்தால் எனது மருமகளுக்கு ரூ. 5 கோடி ஜீவனாம்சம் வழங்க முடியும்” என மருமகளுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.பாக்யா, “இந்து திருமண சட்டம், 1955 பிரிவு 13 (1) , 9 (b) ஆகியவற்றின்படி இருவருக்கும் விவகாரத்து வழங்கப்படுகிறது. தேவானந்த் தனது முன்னாள் மனைவியின் எதிர்கால தேவைக்காக ரூ. 4.85 கோடி ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு வெளியானதும் மருமகளும், மாமியாரும் ஆரத் தழுவி, அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

எதிரும் புதிருமான உறவாக கருதப்படும் மாமியார் மருமகள் இருவரும் இவ்வழக்கில் தாயாகவும், மகளாகவும் நடந்துக்கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் இந்த நடவடிக்கையால் தேவானந்த் கோபத்தில் நீதிமன்றத்தைவிட்டு, வேகமாக வெளியேறினார்.

நன்றி இந்து

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers