இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஆளுமைகளைக் காணுதல் – அனுபவங்களைப் பகிர்தல் – ஆற்றல்களை கொண்டாடுதல் – க.மோகனதாசன்:-


(11.08.2017 அன்று பி.ப.6 மணிக்கு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் இடம்பெற இருக்கின்ற, யூட் நிரோசனின் பின்னணி இசையில் கலைமாமணி உன்னி கிருஷ;ணன் அவர்கள் கலந்து கொள்ளும் இசைநிகழ்ச்சிக்கான முன் குறிப்பு)

க.மோகனதாசன்

‘சங்கீதம் பயிலும் அனைவருக்கும் நான் கூறிக் கொள்வதெல்லாம் எல்லாவிதமான இசைகளையும் பழகுங்கள் என்பதே. முறையாகக் கர்நாடக சங்கீதம் பயில்பவர்கள் மற்ற விதமான இசையைப் பழகுகையில் இசையின் மீது ஒரு பாண்டித்யம் வரும்;’ என்பது கலைமாமணி உன்னி கிருஸ்ணன் அவர்கள் நேர்காணல் ஒன்றின் போது கூறிய கருத்தாகும். உன்னிகிருஸ்ணன் அவர்களைக்கொண்டாடுவதன் பின்னணி என்ன?

இசை ஒரு கேட்டல் கலையென்பதற்கப்பால் ஆற்றுகைக்கலைகளாகப் பரிணமித்துள்ள இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் போன்றனவற்றின் பெறுமதியை அல்லது அதன் இயங்கு நிலையைத் தீர்மானிப்பவர்களாக பார்வையாளர்கள் முக்கிய வகிபாகத்தினைப்பெறுகின்றனர். உலக மயமாக்கற் சூழலிலும் உயர் தொழிநுட்பப்பின்னணியிலும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்க நிலைமையிலும் பார்வையாளர் இன்று பல்வேறு இசை வடிவங்களுக்கும் , புதிய கலைப்பெறுமானங்களுக்கும் பரிச்சயமாகின்றனர். இதனால் கலைவடிவங்களுக்கான ஒப்பீட்டு விவாதங்களை உலகளவில் நின்று பார்வையாளர் நிகழ்த்தக்கூடிய நிலைமை உருவாகிவிட்டது.

இந்தப்பின்னணியோடு, திரையிசைப் பாடல்களில் முழுவதுமாய் அமிழ்ந்து போய் கர்நாடக இசையானது புறந்தள்ளப்படும் சூழலில், கர்நாடக சங்கீதத்தின் நுட்பமான அம்சங்கள் அவ்வளாக விளங்கிடாத சாதாரண ரசிகரையும் கட்டிப்போடும் வசீகரக் குரலால் கங்கீத சபாக்களை இன்று அலங்கரிப்பவர் பாடகர் கலைமாமணி உன்னி கிருஷ;ணன் அவர்கள். இசையினை எவ்வாறு பயன்படுத்தவேண்டும், பார்வையாளர்களிடம் எவ்வாறு சேர்ப்பிக்க வேண்டும், சமகாலத்திற்கு ஏற்ப இசையனுபவத்தை பார்வையாளரிடையே ஏற்படுத்த அவர்களை எவ்வாறு இசை நுட்பங்களுக்குள் அழைத்துச்செல்ல வேண்டுமென்ற சாத்தியமான வழிகளைச் சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர் பின்னணிப்பாடகர் உன்னி கிருஷ;ணன் அவர்கள். இதனாலேயே காலத்திற்கேற்ற கலைஞனுக்கான உதாரணமாக எம்முன்னே உயர்ந்து நிற்கிறார் இவர்.

ஆளுமைகளைக்காணுதல், அவர்களது அனுபவங்களைப்பகிர்தல், அவர்களது நிகழ்ச்சிகளில் பங்குபற்றுதல் என்பது, குறிப்பிட்ட விடயம் சார்ந்து ஈடுபடுவோருக்கான புதிய தரிசனங்களை தருவதோடு ஒரு உள உந்துதலையும் வழங்கி நிற்கின்றது. சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகமானது சரியான அளுமைகளைக்கண்டறிந்து கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாகப்பயன்படுத்தி, ஆளுமைகளை அறிமுகப்படுத்துதல், அவர்களது செயற்பாடுகளைப்பார்வையிடுதல், கலந்துரையாடுதல் என்ற வகையில் தொடர் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. அந்த வகையில் உன்னி கிருஷ;ணன் அவர்களை மையமாகக் கொண்ட இந்த இசை நிகழ்ச்சியும் முக்கியமாகின்றது.

இன்று மட்டக்களப்பு மட்டுமல்லாது, பல பிரதேசங்களிலும் தனது தனித்துவமான இசையினால் தமது அடையாளத்தினை பதித்து வரும் மட்டக்களப்பு தீபம்ஸ் இசையணியினர், உன்னிகிருஸ்ணன் அவர்களின் இந்த இசை நிகழ்ச்சிக்கான பின்னணி இசையினை வழங்குகிறது. இசைத்திறனும் கற்பனையாற்றலும் கொண்ட கலைஞன் யூட் நிரோஷனால் வழி நடத்தப்படும் இந்த தீபம்ஸ் இசைக்குழுவானது இன்றைய சூழலில் ஒரு முன்னணி இசைக்குழுவாகத் திகழ்கின்றது. 2000 ஆம் ஆண்டுகளில் தனது 16 வயதில் இசைப்பயணத்தினைத் தொடங்கிய யூட் நிரோசன் தனது தேடலாலும் அனுபவத்தாலும் தென்னிந்திய பிரபல்ய பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுக்காக பரிந்துரைக்கின்ற ஒரு இசையணியினை வழிநடத்துகின்ற ஒரு ஆளுமையாக மாறிவிட்டார். இதனாலேயே சென்ற முறை தேனிசைத்தென்றல் தேவா அவர்களின் இசை நிகழ்ச்சிக்காக இவரது இசையணியானது சிறப்பான இசையினை வழங்ககியிருந்ததோடு தேவா அவர்களினால் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. இந்தப்பின்னணியோடு இம்முறை உன்னிகிருஸ்ணனும் அவர் மகள் உத்ராவும் கலந்து இசையால் சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சிக்கு இவர்கள் பின்னணி இசையினை வழங்குகின்றனர். யூட் நிரோசனின் இசையமைப்பில் மட்டக்களப்பின் கலைஞர்களும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்களோடு மாணவர்களும் இவ்விசை நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.

பல்வேறு தளங்களில் தன் துறை சார்ந்து வேலை செய்யும் யூட் நிரோசன் அவர்கள், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் ஆலோசனையின் கீழ், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கான தனியான ஒரு மெல்லிசை அணியினையும் உருவாக்கியிருக்கின்றார். ஈழத்து இசை வடிவங்களை முன்னிலைப்படுத்தியிருக்கும் இவ் இசையணியானது. காத்திரமான பல இசையாற்றுகைகளை இதுவரை வழங்கியிருக்கின்றது.

எனவே ஆற்றல்களைக்கொண்டாடுதல், அதனை ஊக்கியாகக்கொண்டு பயணித்தல் எனும் நோக்கோடு இவ் இசை நிகழ்ச்சி ஒரு முக்கியமானதாக கொள்ளப்படுகின்றது. கலைமாமணி உன்னி கிருஷ;ணன் அவர்களுக்கும் அவர் மகள் உத்ராவிற்கும் மேலும் இசை வழங்குகின்ற யூட் நிரோசன் மற்றும் அவரது அணியினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers