உலகம் பல்சுவை பிரதான செய்திகள்

விளையாட்டுப் பூங்காவை காக்கப் போராடும் ஏழு வயது சிறுமி!

தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் விளையாட்டுப் பூங்காவைப் பாதுகாக்க, டெல்லியைச் சேர்ந்த ஒரு ஏழு வயது சிறுமி நீதிமன்றத்தில் மனு செய்திருப்பதுடன் பிரதமர் நரேந்திர மோதிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பூங்காவில் விளையாடும் நவ்யா சிங்.
பூங்காவில் விளையாடும் நவ்யா சிங்.

“நீங்கள் நான் சொல்வதைக் கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்தப் பூங்காதான் எங்கள் உயிர்நாடி,” என்று நவ்யா சிங் என்னும் அந்தச் சிறுமி மோதிக்கு எழுதிய திறந்த மடலில் கூறியுள்ளார். அந்தப் பூங்கா அமைந்துள்ள இடத்தில், சமுதாயக் கூடம் கட்ட நடக்கும் முயற்சிகளை நிறுத்த அவர் முயன்று வருகிறார்.

கடந்த வாரம், அவர் மனு மீது விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

மேற்கு டெல்லியில் உள்ள, நெரிசல் நிறைந்த ரோஹிணி பகுதியில் நவ்யா வசிக்கிறார். தனது வீட்டில் இருந்து சில நிமிடங்களில் நடந்து செல்லக்கூடிய தொலைவில் உள்ள அந்தப் பூங்காவை, தனது ‘அபிமான இடம்’ என்று கூறுகிறார் நவ்யா.

தனது குழந்தைப்பருவத்தில் இருந்தே காலை மற்றும் மாலை வேளைகளில் அங்கு விளையாடச் செல்வதாக நவ்யா கூறுகிறார்.

“இதைப் போல ஆயிரம் கடிதங்கள் உங்களுக்கு வருவதால், நீங்கள் இதைப் படிக்கப் போவதில்லை என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் நான் சொல்வதை கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்தப் பூங்காதான் எங்கள் உயிர்நாடி,” என்று மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

மோதிக்கு எழுதியுள்ள கடிதம்

“எல்லோரும் உங்களை மிகவும் புத்திகூர்மை மிக்கவர் என்று கூறுகின்றனர். எங்கள் பூங்காவைப் பாதுகாக்க உதவுங்கள் மோதி அங்கிள்,” என்று தன் வேண்டுகோளை அவர் முடித்துள்ளார்.

“அங்குதான் நான் என் நண்பர்களைச் சந்தித்து விளையாடுவேன். அங்குள்ள ஊஞ்சலில் விளையாடுவதுடன், அப்பூங்காவினுள் நாங்கள் ஒளிந்து விளையாடுவோம்,” என்று பிபிசியிடம் கூறிய நவ்யா, அங்கு நிறைய மரங்கள் இருப்பதால் அந்தப் பூங்கா தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார்.

மோதிக்கு எழுதியுள்ள கடிதம்

“அங்கு வசிப்பவர்களுக்கு விளையாடவும், தூய காற்றைப் பெறவும் உள்ள வாய்ப்பை அந்தக் கட்டுமானம் மறுக்கும்,” என்று கூறி, வழக்கறிஞரான தனது தந்தை தீரஜ் குமார் சிங் மூலம், டெல்லி வளர்ச்சி ஆணையத்துக்கு எதிராக மனு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார்.

அதிகாரிகள், முன்கூட்டியே அங்கு வசிப்பவர்களிடம் இது பற்றி ஆலோசிக்கவோ, தகவல் தெரிவிக்கவோ இல்லை என்று தீரஜ் குமார் பிபிசியிடம் கூறினார். மாநகராட்சி மற்றும் மாநில அரசால் பராமரிக்கப்படும் இத்தகைய 14,000 பூங்காக்கள் டெல்லியில் உள்ளன.

பெரும்பான்மையானவை மோசமாகப் பராமரிக்கப்பட்டு இருந்தாலும், குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் உடல் பயிற்சி செய்யவும், முதியவர்கள் அளவளாவவும் அவையே பயன்படுகின்றன.

கட்டுமானப் பணிகளுக்காக அதிகாரிகளால் அமைக்கப்பட்ட தடுப்புகள்.
கட்டுமானப் பணிகளுக்காக அதிகாரிகளால் அமைக்கப்பட்ட தடுப்புகள்.

அதிகாரிகள் அங்கு வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கியபோது, பெரும்பானமையான பெண்கள் உள்பட ரோகிணி நகரில் வசிப்பவர்கள், அங்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால், காவல் துறையின் துணையுடன் அதிகாரிகள் அந்த இடத்தைக் கைப்பற்றினர்.

 

கடந்த ஜூன் 26-ஆம் நாள் முதல் அந்தப் பூங்காவினுள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, பெரும் இயந்திரங்கள் மற்றும் இரும்புத் தூண்களைக் கொண்டு கட்டுமானம் தொடங்கப்பட்டது.

“இனி நாங்கள் எங்கு விளையாடுவோம்? எங்களுக்கு யார் உதவுவார்கள்?” என்று என்னை அவள் ஆற்றாமையுடன் கேட்டாள். “ஒரு வழக்கறிஞரான எனக்கு, நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை,” என்கிறார் நீரஜ் குமார்.

நவ்யா சிங் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி.
நவ்யா சிங் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி.

அங்கு இருந்த கோவிலின் விரிவாக்கம், புதிதாக நிறுவப்பட்ட அலைபேசி கோபுரம் , திறந்தவெளி உடல் பயிற்சிக் கூடம் என்று, சமீப ஆண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பூங்கா சுருங்கிக்கொண்டே வந்தது.

அந்தப் பூங்காவில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் ஏற்கனவே ஒரு சமுதாயக் கூடம் இருப்பதால், புதிதாக வேறு ஒன்றைக் கட்டுவது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல் என்று நவ்யாவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“பூங்காக்கள் பூங்காக்கள் மட்டுமே. அவற்றை சமுதாயக் கூடமாக மாற்ற வேண்டாம். நீங்கள் மக்கள் பணத்துடன் விளையாடுகிறீர்கள்,” என்று வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி ஹரி ஷங்கர் ஆகியோர் கூறினர்.

கடந்த சில மாதங்களாக அங்கு ஒரு திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் செயல்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அங்கு ஒரு திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் செயல்படுகிறது.

வரும் செப்டம்பர் 18-ஆம் நாள் அந்த வழக்கு மீண்டும் விசாரணை க்கு வருகிறது. நீதிமன்றத்திற்கு பதில் மனுவை தங்கள் சட்டக் குழு தயார் செய்து வருவதாக டிடிஏ அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தன் மனு மீதான சட்ட நுணுக்கங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும், நவ்யா மற்றும் அவளது நண்பர்கள், தற்போது இடம் சுருங்கி நெரிசல் மிக்கதாய் உள்ள அந்தப் பூங்காவிற்குப் போகிறார்கள்.

நீதிமன்றம் மற்றும் பிரதமரின் உதவியுடன், இழந்தவை அனைத்தையும் மீட்க முடியும் என்று இப்போது அந்தச் சிறுமி நம்புகிறார்.

BBC

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.