Home இலங்கை வடமாகாண சபையில் தொடரும் இழுபறி – செல்வரட்னம் சிறிதரன்:-

வடமாகாண சபையில் தொடரும் இழுபறி – செல்வரட்னம் சிறிதரன்:-

by admin

வடமாகாண சபையின் அமைச்சரவை பற்றிய விவகாரம் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமான காலமே இருக்கின்றது. இந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள அதன் அமைச்சரவை சர்ச்சைகளில் இருந்து துளிர்த்து தலையெடுக்குமா? அதனைத் தொடர்ந்து மிஞ்சியுள்ள காலப்பகுதியில் சீரான நிர்வாகத்தை வடமாகாணசபை கொண்டு நடத்துமா? – என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்ததையடுத்து, நான்கு வருடங்களின் பின்னர் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வடமாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபையின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதன் முதலாவது கூட்டம் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் நான்கு பேரைக் கொண்ட அமைச்சரவையொன்றும் நியமிக்கப்பட்டது. ஐந்து வருட காலத்தைக் கொண்ட இந்த மாகாண சபையின் நிர்வாகம் மூன்று வருடங்களைக் கடந்து நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைத்ததையடுத்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பிராந்திய சுய ஆட்சியைக் கோரிய தமிழ் அரசியல் தலைவர்கள், தமது நிர்வாக பொறுப்பில் வந்துள்ள வடமாகாண சபையை சரியான முறையில் நிர்வகித்து, அதன் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குரிய காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்ற கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

மாகாண சபையின் அமைச்சர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையையடுத்தே, இந்த மோசமான நிலைமைக்குரிய பிரச்சினைகள் ஆரம்பமாகின.

அமைச்சர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படுவதில் ஏற்பட்ட சிக்கல்கள், புதிய அமைச்சரவையை உருவாக்குகின்ற நிலைமைக்கு வடமாகாண சபையைத் தள்ளியுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஊழல்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகள், அந்த விசாரணைகளின் பின்னர் முதலமைச்சரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பன அரசியல் ரீதியான பல்வேறு குழப்பங்களை உருவாக்கியது மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இருப்பையே ஒரு கட்டத்தில் தீவிரமான கேள்விக்கு உள்ளாக்கும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியிருந்தது.

அமைச்சர்களுக்கு எதிரான ஊழல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து மாகாண சபைக்குள் ஒரு கொந்தளிப்பான நிலைமையே ஏற்பட்டிருந்தது.

இந்தக் கொந்தளிப்பின் உச்ச கட்டமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபையின் 38 மொத்த உறுப்பினர்களில 30 பேரைக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் முக்கியமான கட்சியாகிய தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்களின் வழி நடத்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வடமாகாண ஆளுனரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதில் முக்கியமாக சபையின் அவைத்தலைவரும் கலந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த, கூட்டமைப்பின் ஏனைய மூன்று பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து, இந்த நம்பிக்கையில்லப் பிரேரணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

அதேவேளை பொதுமக்களும், பொது அமைப்புக்களும் கிளர்ந்தெழுந்ததன் மூலம், முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்த நடவடிக்கைக்கு எதிராக வலுவான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்படும்போது அவர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற தனது நிபந்தனையை முதலமைச்சர் விலக்கிக்கொண்டார். அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கைவிடப்பட்டது.

விசாரணைக்குழுவும் இராஜிநாமாவும்

இருப்பினும் மாகாணசபையின் அமைச்சரவை விவகாரத்திற்கு முடிவு ஏற்படவில்லை. புதிய அமைச்சரவையை நியமிக்கும் நடவடிக்கையில் இறங்கிய முதலமைச்சரின் செயற்பாடு மீண்டும் சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் உருவாக்கியிருக்கின்றது. ஊழல் முறைப்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகளையடுத்து, கல்வி அமைச்சர் குருகுலராஜாவும், விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசனும் பதவி விலகினார்கள்.

ஏனைய இரண்டு அமைச்சர்களான சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனிஸ்வரன் ஆகிய இருவருக்கும் எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், முறையிட்டவர்கள் அது தொடர்பான விசாரணைகளுக்கு சமூகமளிக்காத நிலையில் அந்த விசாரணைகள் நடத்தப்படவில்லை.

அதேநேரம், அவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் முறைப்பாடு செய்தவர்களினால் விலக்கிக் கொள்ளப்படவுமில்லை.

இந்த நிலையில் இந்த அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக விசாரணை நடத்தப்படும் என அறிவித்து முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அந்த அமைச்சர்கள் இருவரும் உடன்பட மறுத்துவிட்டார்கள்.

முதலமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற விசாரணைக்குழுவுக்குப் பதிலாக சட்டரீதியானதும், நியாயமானதுமான ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த விசாரணைக்குழு முன்னிலையிலேயே தாங்கள் விசாரணைக்கு முன்னிலையாக முடியும் என்றும் அவர்கள் தீர்க்கமாகத் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு விசாரணைக்குழுவை அமைப்பதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கவில்லை. ஆனால், அந்த அமைச்சர்கள் இருவரும் தமது பதவிகளை இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் உறுதியாக இருந்தார்.

இவர்கள் இருவரும் இராஜிநாமா செய்தால் அமைச்சரவைக்குப் புதியவர்களை நியமித்து நிர்வாகத்தைக் கொண்டு நடத்த முடியும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடாகும். ஆயினும் இந்த அமைச்சர்கள் இருவரும் இராஜிநாமா செய்வதற்கு உடன்படவில்லை.

சாண் ஏற முழம் சறுக்கியது போல……..

இத்தகைய இழுபறிநிலையிலேயே, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடன் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினார்கள்.

இக்கலந்துரையாடலில் அமைச்சரவைக்குப் புதியவர்களை நியமிக்கும் விடயத்தில் முதலமைச்சர் சுயமாகச் செயற்படுவதற்கும், கட்சித் தலைவர்களின் பரிந்துரைகளை ஏற்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

அதேநேரம், பிரச்சினைக்குரிய இரண்டு அமைச்சர்களும் இராஜிநாமா செய்து புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், அதனையடுத்து, அவர்களுக்கு எதிரான விசாரணைகளைக் கைவிடுவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.

வடமாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்காக கட்சித் தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடுகள் எட்டப்பட்ட போதிலும் பிரச்சினைக்கு முடிவேற்படவில்லை.

சாண் ஏற முழம் சறுக்கியதைப் போன்று பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் வகையிலேயே தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடு காணப்பட்ட பின்னரும் காரியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிவுற்ற உடனேயே, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் தமது கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஒன்று கூடி, முதலமைச்சரினால் புதிதாக நியமிக்கப்படுகின்ற அமைச்சரவையில் தமது கட்சியைச் சேர்ந்த எவரும் பதவியேற்பதில்லை என்று தீர்மானித்தனர்.

தமது இந்த முடிவை தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும் உடனடியாகத் தெரிவிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது,

இரண்டு காரணங்களை முன்வைத்தே, புதிய அமைச்சரவையில் தாங்கள் எவரும் பதவியேற்பதில்லை என்று தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து நடைபெற்ற விசாரணைகளின் விளைவாக இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை அந்தக் கட்சி பரிந்துரைத்திருந்தது.

அந்தப் பரிந்துரையை முதலமைச்சர் புறந்தள்ளியமை முதலாவது காரணம். அதேவேளை, தமிழரசுக் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாகாண சபை உறுப்பினராகிய திருமதி அனந்தி சசிதரனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சராக நியமித்தது இரண்டாவது காரணம். இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழரசுக்கட்சியைப் பழிவாங்கும் எண்ணத்துடன் அரசியல் உள்நோக்கம் கொண்டு முதலமைச்சர் செயற்பட்டார் என்பதற்காக அந்தக் கட்சியினர் அவர் மீது ஆத்திரமுற்றிருந்தனர்.

அதனை வெளிப்படையாகக் காட்டுவதற்குப் பதிலாக, புதிய அமைச்சரவையை நிராகரிக்கும் வகையிலேயே, அமைச்சரவையில் தாங்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டனர்.

இந்த நிலைப்பாடானது புதிய அமைச்சரவையை நியமிப்பதிலும், தமிழரசுக்கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களின் உடன்பாடோ அல்லது பங்களிப்போ இல்லாத நிலையில் புதிய அமைச்சரவையையும் மாகாணசபையையும் கொண்டு நடத்துவதில் முதலமைச்சருக்கு சிக்கல்களை உருவாக்குவதற்கே வழியேற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலைப்பாட்டினால் மாகாணசபையின் குழப்ப நிலைமைகள் சீரடைவதற்குப் பதிலாகப் பின்னடைவே ஏற்பட்டிருக்கின்றது.

முதலமைச்சரும் தமிழரசுக்கட்சியும்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் பொதுவாகவே, அரசியல் ரீதியாக நெருக்கமான உறவு நிலவவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தபோது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால், வடமாகாண அரசியல் அரங்கத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், ஆரம்பத்தில் இருந்தே முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியில் இருந்து எட்டத்திலேயே இருந்து வந்துள்ளார்.

முக்கியமான சந்தர்ப்பங்களில் தான் எந்தவொரு கட்சியையும் சார்ந்திருக்கவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்ததையும் இங்கு நிiனைவுறுத்த வேண்டியுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னணி கட்சியாக, தலைமைத்துவ நிலையில் உள்ள தமிழரசுக்கட்சியானது, எல்லா விடயங்களிலும் தனது விருப்பத்திற்கு ஏற்ற வகையிலேயே காரியங்களை முனைப்புடன் நகர்த்திச் செல்கின்றது. தேர்தல்களில் வேட்பாளர்களைப் பங்கிடுவதில் இருந்து, கூட்டமைப்பின் சார்பில் தமிழ் மக்களுக்கான முடிவுகளை மேற்கொள்வது வரையில் அனைத்து விடயங்களிலும் தன்னிச்சையாகவே அது செயற்பட்டு வருகின்றது என்பது அந்தக் கட்சியின் மீதான பொதுவான குற்றச்சாட்டாகும்.

இது வெறும் குற்றச்சாட்டு என்று கூறுவதற்கில்லை. தன்னிச்சையான போக்கிலேயே அந்தக்கட்சி செயற்பட்டு வருவதை அதன் நடவடிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன.

தமிழரசுகட்சியின் இந்தப் போக்கினை, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் விரும்பாத போதிலும், அதனை முழுமையாக எதிர்த்து முறியடிக்க முடியாத நிலையிலேயே அவைகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ஈபிஆர்எல்எவ் கட்சி இந்த வகையில் தமிழரசுக்கட்சிக்கும், கூட்டமைப்பின் தலைமை நிலையில் உள்ள தலைமைக்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், தமிழரசுக்கட்சியின் போக்கை, அந்தக் கட்சியினால் இதுவரையிலும் மாற்ற முடியவில்லை. ஏனைய பங்காளிக்கட்சிகள் இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதைத் தவிர்த்துச் செயற்பட்டு வருவதையே காண முடிகின்றது.

எதிர் நடவடிக்கையா…….?

எனவே, தான் விரும்பியவாறு ஏனைய கட்சிகளும் ஏனையோரும் காரியங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு முரணான வகையில் வடமாகாண முதலமைச்சர் மாத்திரமே செயற்பட்டு வருகின்றார் என்ற யதார்த்த நிலையை அந்தக் கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமது கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுகின்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக மாற்று அரசியல் தலைமையொன்றை உருவாக்கும் நோக்கத்துடனேயே, தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைவராக இணைந்துள்ளார் என்ற கடும் சீற்றத்துடன் கூடிய குற்றச்சாட்டும் தமிழரசுக்கட்சியினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில் தனது வழிநடத்தலையும், பரிந்துரையையும் மீறி, தனது உறுப்பினராகிய அமைச்சர் சத்தியலிங்கத்தை அமைச்சுப்பதவியில் இருந்து விலகுமாறு நிர்ப்பந்திப்பதை தமிழரசுக்கட்சியினால் எளிதில் சீரணிக்க முடியவில்லை.

அந்த கசப்புணர்வினால் ஏற்பட்டிருந்த சீற்றத்தின் விளைவாகவே, அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளின் பின்னர் முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி ஆளுனரிடம் கையளித்தது.

முதலமைச்சரை வழிக்குக் கொண்டு வருவதற்கு அல்லது அவருக்குத் தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும் என்பதற்காக, தமிழரசுக்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நடவடிக்கை பிசுபிசுத்துப்போனது.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, மாகாண சபையின் எதிர்காலச் செயற்பாடுகளில் முதலமைச்சருக்கு சிக்கல்களை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய அமைச்சரவையில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எவரும் பதவியேற்பதில்லை என அந்தக் கட்சி முடிவு செய்திருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

டெனிஸ்வரன் விவகாரம்

இது ஒரு புறமிருக்க, முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடன் இணநை;து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட முடிவுக்கு அமைவாக முதலமைச்சர், புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களை நியமிப்பதற்கு வசதியளிப்பதற்காக, டாக்டர் சத்தியலிங்கம், டெனிஸ்வரன் ஆகிய இரண்டு அமைச்சர்களையும் தமது அமைச்சுப்பதவிகளை இராஜிநாமா செய்யுமாறு அவர்கள் சார்ந்த கட்சிகளான தமிழரசுக்கட்சியும், தமிழீழ விடுதலை இயக்கமும் (டெலோ) அவர்களிடம் கோரியிருந்தன.

இந்தக் கோரிக்கையை ஏற்று தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்து, அமைச்சர் சத்தியலிங்கம் தனது அமைச்சுப்பதவியை இராஜிநாமா செய்திருந்தார். ஆனால் அமைச்சர் டெனிஸ்வரன் பதவியை இராஜிநாமா செய்ய முடியாது என்று ஆணித்தரமாகக் கூறி, தனது நிலைப்பாட்டை தர்க்க ரீதியாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அமைச்சுப்பதவியை இராஜிநாமா செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
டெனிஸ்வரனின் இந்த நிலைப்பாட்டையடுத்து, தமது கட்சியைச் சேர்ந்த அவர், கட்சியின் ஆலோசனையைப் பெறாமலும், கட்சியின் அங்கீகாரம் இல்லாமலும், முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் கையெழுத்திட்டதைக் காரணம்காட்டி, அவரை கட்சியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் கோரியிருந்தது.

இதற்கான விளக்கத்தை அந்தக் கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில்; அவர் நேரடியாகத் தெரிவித்திருந்தார். ஆயினும் அவருடைய விளக்கத்தை ஏற்க மறுத்த தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அவரை, தற்காலிகமாக அறு மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக முடிவெடுத்து அறிவித்துள்ளதுடன், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அந்தக் கட்சி, கடிதம் மூலமாக முதலமைச்சருக்கும் தெரிவித்துள்ளது.

கட்சியின் இந்த நடவடிக்கையை எள்ளி நகையாடும் வகையில், தமிழிழ விடுதலை இயக்கக் கட்சியின் உறுப்பினரே அல்லாத தன்னை எவ்வாறு 6 மாதங்களுக்குக் கட்சி உறுப்பினரின் அடிப்படை உரிமைகளை, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) மறுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அதேநேரம், முடியுமென்றால், முதலமைச்சர் தன்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கட்டும், அவ்வாறு ஒரு நீதியரசர் என்ற வகையில் தன்னை அவர் நீக்கினால், தான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் டெனிஸ்வரன் சூளுரைத்துள்ளார்.

சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுப்பும்

இத்தகைய பின்னணியில் டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுனருக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றார் என்பது பிந்திய தகவலாகும். அதேவேளை, முதலமைச்சரின் கடிதத்திற்கு முன்னதாகவே போக்குவரத்து அமைச்சர் பதவியில் தான் இன்னும் தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்து வடமாகாண ஆளுனருக்கு டெனிஸ்வரன் ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவரே தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

தமிழரசுக்கட்சியினர் புதிய அமைச்சரவையில் பதவி ஏற்பதில்லை என தெரிவி;த்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் முரண்பட்டிருக்கின்ற நிலையில் போக்குவரத்து அமைச்சுப் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள டெனிஸ்வரனின் செயற்பாடுகள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்கியிருப்பதைக் காண முடிகின்றது.

வடமாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் விமர்சனங்கள், அவற்றையொட்டிய இழுபறி நடவடிக்கைகள் யாவும் வடமாகாண அமைச்சுப்பதவிக்கான அரசியல் போட்;டா போட்டியாகவும், அரசியல் போராட்டமாகவுமே பாதிக்கப்பட்ட பொதுமக்களினாலும், பொதுமக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்களினாலும் நோக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அசரியல் நடவடிக்கைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருப்பதாகக் கூறுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வடமாகாண அமைச்சரவை விடயத்தில், பொதுமக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, சகிப்புத் தன்மையுடனும், விட்டுக்கொடுப்புடனும் நடந்து கொள்ள முடியாதிருப்பது கவலைக்குரியதாகும்

பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பையும், மிக முக்கியமாக அவர்களுடைய நாளாந்த வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதாரம் தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டையும் கொண்டுள்ள வடமாகாண சபை தனது அமைச்சரவை விடயத்தில் பிரச்சினைகளில் மூழ்கிக் கிடப்பது என்பது தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழப்பதற்கே வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரசியல் ரீதியான இந்த நம்பிக்கை இழப்பானது, இதோ வரப்போகிறேன், அதோ வரப்போகிறேன் என தெரு முனையில் வந்து மிரட்டிக்கொண்டிருக்கின்ற தேர்தலில் மோசமான விளைவுகளையே தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More