இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

மெய்யான ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக அரங்கன்:-

தென்னிந்திய நடிகர் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியானது. உலகமெங்கும் வெளியான இந்தப் படம் யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையாரங்குகளிலும் வெளியாகியிருக்கிறது. அந்தத் திரையாரங்குகளின் முன்னால் போய் நின்றால், அங்கு வைக்கப்பட்டுள்ள சில பதாகைகள் எமது இன்றைய சமூகத்தின் போக்கை மிகவும் துல்லியமாக பறைசாற்றுகின்றன. மாபெரும் விடுதலைப் போராட்டம் ஒன்று நடந்த மண்ணில், எண்ணற்ற – வியப்பூட்டும் ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில் நடிகர்களுக்கு விழா எடுக்கும் தலைமுறை வளர்வது அதிர்ச்சியானது.
படைப்புக்கள் ரசனைக்குரியவை. வாழ்வின் புதிரான பக்கங்களை, சுவையான பக்கங்களை, நெகிழ்ச்சியான பக்கங்களை உணர்த்துபவை. ஒரு படைப்பே அதன் உள்ளடக்கம் சார்ந்து பேசப்படவேண்டும். படைப்பாளியைக் காட்டிலும் அதன் உள்ளடக்கங்கமும் அந்த உள்ளடக்கத்தை தாங்கி வரும் தனித்துவமான பாத்திரங்களும் சுவைஞனனின் உள்ளத்தை தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த அனுபவத்திற்கு முற்றிலும் மாறானவை தென்னிந்திய வணிகத் திரைப்படங்கள்.
தென்னிந்திய திரை உலகிலிருந்து, அல்லது தமிழக திரையுலகிலிருந்து வெளிவரும் நல்ல திரைப்படங்கள் வெற்றி பெறுவதும் பேசப்படுவதும் மிகவும் நெருக்கடியானதும் அரிதானதுமாகும். அந்தளவுக்கு வணிக சினிமாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. சில நடிகர்களை மையப்படுத்தி பார்வையாளர்களின் மூளையைச் சலவை செய்து கொஞ்சமும் சிந்தனையற்ற ரீதியில் நடிகர்களை தெய்வாக்களாக்கியிருப்பதே இங்குள்ள ஆபத்தாகும்.
தமிழகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனின் காலத்திலிருந்தே சினிமாவின் தாக்கம் அரசியலிலும் மக்கள் வாழ்வியலிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. தமிழகத்தின் வரலாற்றில் சினிமா மிக முக்கிய ஊடகம். அதனால் பல நல்ல தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன. எனினும் தமிழகத்தின் அரசியல், சமூக நிலவரங்களை பின்தள்ளியதில் சினிமாவின் பங்கும் இருக்கிறது என்பது வெளிப்படை.
ஈழத்தில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் பண்பாடே இருந்து வந்தது. ஒரு காலத்தில் சினிமா நடிகர்களின் பதாகைகள் அவர்களின் பாத்திரக் குணாம்சத்தை வெளிப்படுத்தும் நோக்கிலேயே திரையரங்குகளில் நிறுத்தப்பட்டன. இன்றைய காலத்தில் அந்தக் கட்டவுபட்டுக்களுக்கு பூ வைத்து, பொட்டு வைத்து, பாலூற்றி பூசை செய்யும் அளவுக்கு நிலமை ஏற்பட்டுள்ளது. இதனை செய்பவர்கள் குறைந்த எண்ணிக்கையினர் என்றபோதும் இது, இன்றைய ஈழத்திற்கு பொருத்தமற்ற ஒரு செயற்பாடு என்பதினாலேயே விதர்சிக்கப்படுகிறது.
பதாகைகள் எங்கும் வன்மமும் வெறியும் கலந்த வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு இளைய தலைமுறையின் எண்ணம் இப்படிச் செல்லுகிறதே என்ற வருத்தமே எஞ்சுகிறது. திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல், அதனை நடித்த நடிகரின் வழிபாட்டுப் பண்டமாக இவர்கள் கருதுகின்றனர். சினிமாவுக்கும் கலைக்கும் முற்றிலும் முரணான இந்த அணுகுமுறை சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும். வன்முறைகளை ஊக்குவிப்பதாகவே அமையும்.
யாழ்ப்பாணத்தில் சமீப காலத்தில் வாள்வெட்டுக்கள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. வன்முறையை பரப்பும் திரைப்படங்களில் வருபவர்களைப் போன்ற இளைஞர்களை காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு காலத்தில் அறிவாற்றலாலும், போராட்ட சிந்தனையாலும் நிறைந்த இளைஞர்கள் உலவிய யாழில், ஈழத்தில் இன்று இப்படியான காட்சிகளையே காண நேரிடுகிறது.
ஈழப்போராளிகள் உலகில் கவனத்தை ஈர்த்த கொரில்லாப் போராளிகள். தரைப்படை, கடற்படை, வான்படை, ஈரூடகப் படை, உளவுப்படை என்று மிகவும் நுணுக்கமான பிரிவுகள் மூலம் கவனத்தை ஈர்த்தவர்கள். அவர்கள் நிகழ்த்திய வியப்பூட்டும் சாதனைகளை எதிரிகளே ஏற்றுக்கொள்ளுவர். அத்தகைய சாதனைகள் இந்த மண்ணிலிருந்தே உருவெடுத்தன. இந்த மண்ணையும் தமது சிந்தனையையும் வைத்தே அவர்கள் அதனைக் கட்டமைத்தனர்.
எண்ணற்ற ஹீரோக்கள் நம்ப முடியாத சாதனைகளை நிகழ்த்தினர். இராணுவ முகாம் ஒன்றுக்குள் ஊடுருவி அதற்குள்ளேயே வாழ்ந்து அந்த முகாம் பற்றிய தகவல்களை திரட்டிக்கொண்டு தளம் திரும்பிய போராளிகளின் சாதனையையும் இராணுவத்தின் சித்திரவதை முகாம் ஒன்றை விட்டு தப்பி வரும் போராளிகளின் கதைகளையும் இந்த மண் அறிந்து வைத்திருக்கிறது.
அத்தகைய, மெய்யான ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில்  சினிமா கட்டவுட்டுக்களை காவல் தெய்வமாக வணங்குவது வேடிக்கையானதும் ஆபத்தானதும். எங்களை, எங்கள் வரலாற்றை, எங்கள் முக்கியத்துவத்தை, எங்கள் பொறுப்பை அறியாதிருக்கும் வெளிப்பாடே இது. நம்பிக்கையும் சிந்தனை விருத்தியும் கொண்ட இளைய சமூதாயம் ஒன்றை கட்டி எழுப்புவதிலேயே ஈழத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. அந்த வழியில் எம் இளையவர்கள் செல்ல வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக அரங்கன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers