Home இலங்கை இலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது. – சி.வி.

இலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது. – சி.வி.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் கல்வி முறைமை மாணவ மாணவியரை நடுத்தெருவிற்கு கொண்டு செல்வதுடன் அரசின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில்.உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண சபையில் அமைச்சுப்பதவிகள் யாவும் மறுசீரமைக்கப்பட்டு ஒவ்வொரு அமைச்சின் கீழும் இயங்குகின்ற திணைக்களங்கள் வினைத்திறன் மிக்க சேவைகளை ஆற்றக்கூடிய வகையில் உரிய அறிவுறுத்தல்கள், தொடர் கூட்டங்கள் எனப் பல்வேறுபட்ட வேலைச்சுமைகளில் ஈடுபட்டிருந்தேன்.

இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மாற்றங்கள் எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் சர்வதேச தரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு தடையாக அமைந்தது எனலாம். தாய் மொழிக்கல்வி மிகவும் சிறப்பானது. ஆனால் உயர் கல்வி அல்லது சர்வதேச தரத்திலான சட்டம் உள்ளடங்கலான கல்வியறிவை பெற்றுக் கொள்வதற்கு ஆங்கில மொழி அத்தியவசியமாகிற்று. அப்பொழுது புறக்கணிக்கப்பட்ட ஆங்கிலக் கல்வி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படவில்லை.

முதன் முதலாக சட்டத்தைத் தமிழில்க் கற்பிக்க என்னை 1971ம் ஆண்டில் அழைத்த போது தென்னிந்தியாவில் கூட சட்டம் தமிழில் படிப்பிக்கப்படவில்லை. உலகில் எங்கணுமே இல்லாத ஒரு கல்வி முறையை நாம் இங்கு புகுத்தினோம். ஆனால் சட்ட நூல்கள் தமிழில் இல்லாததால் என்னுடைய விரிவுரைகள் மட்டுமே மாணவ மாணவியர்க்குப் பயன்பட்டது. போதிய ஆங்கில அறிவு இருந்தவர்கள் உசா நூல்களைப் புரட்டி பார்த்துக் கொண்டனர்.

ஆரம்ப காலத்தில் அமெரிக்க திருச்சபைகள் மற்றும் தென் இந்திய திருச்சபைகள் கல்வி வழி சமயப்பரம்பல்களை மேற்கொண்ட போது மாணவர்களுக்கு சிறந்த கல்வியறிவு அமெரிக்காவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வரவழைக்கப்பட்ட ஆசிரியர்களால் வழங்கப்பட்டது. அக்காலத்தில் போதனையானது ஆங்கில மொழியிலேயே அமைந்திருந்தது. தமிழ் ஒரு பாடமாக மட்டும் இருந்தது.

தமிழ் மொழியில் கற்பிப்பு தொடங்கியதும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாக மாறியது. ஆனால் இரண்டாம் மொழியைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் குறைந்து காணப்பட்டனர். மாணவர்களும் அதில் நாட்டம் கொள்வதாகத் தெரியவில்லை. இன்று எம்மிடையே உயர் கல்வி பெற்ற பலர் ஆங்கிலத்தைப் பிழையாக எழுதிப் பேச எத்தனிக்கையில் பரிதாபமாக இருக்கின்றது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட தொடர் யுத்தங்களும், பாரிய அழிவுகளும் பல இலட்சக்கணக்கான மக்களை ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம் பெயரச் செய்தன. அவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தமது தராதரத்திற்கு ஏற்ப பல்வேறு தொழில்களை அந் நாடுகளில் புரிகின்றார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் ஆங்கில மொழிக்கல்வியில் கல்விபயின்று சிறப்பான பதவிகளில் அந் நாடுகளில் அமர்ந்திருப்பது மகிழ்வைத்தருகின்றது.

பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற இடங்களில் அந்நாட்டு மொழிகளில் கல்வி பயின்று நல்ல நிலையில் திகழ்கின்றார்கள்.
இவ்வாறான சூழலில் இங்கிருக்கின்ற இளைஞர் யுவதிகளை உரியவாறு நெறிப்படுத்தி மொழியிலும் கல்வியிலும் வல்லவர்களாக ஆக்க வேண்டும் என மேலை நாடுகளில் வசிக்கின்ற எம்மவர்களில் சிலர் சிந்திக்கின்ற காரணத்தினாலேயே இன்றைய இவ்வாறான நிகழ்வுகள்  இங்கு நடைபெறுகின்றன.

இங்கிருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற அவா நிறைய இருக்கின்றது. ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு அது உயர் கல்விக்காக அல்ல. மாறாக பொருள் ஈட்டங்களைத் தேடிக்கொள்வதற்கும் சுகமான வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்வதற்குமேயாகும்.

வெளிநாடுகளில் வசிக்கின்ற எமது உறவுகளின் இரண்டாம், மூன்றாம் தலைமுறைகள் எவ்வாறு இருக்கப் போகிறார்கள், என்ன மொழியைப் பேசப்போகின்றார்கள் என்பது பற்றி எமக்கு ஓரளவு உய்த்துணர முடியும். பலர் தமது தாய் மொழியை மறவாது தமது இளைய தலைமுறையினருக்குப் புகட்டி வருகின்றார்கள்.

ஆகவே இங்கிருக்கும் இளைஞர் யுவதிகள் கற்றறிந்தவர்களாக கல்வியில் மேம்பட்டவர்களாக உலக தரத்தில் பேசப்படுபவர்களாக மாற வேண்டுமாயின் அவர்கள் முறையாக வழிகாட்டப்பட வேண்டும்.

இன்று எமது இளைஞர் யுவதிகள் பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர்களாக இருப்பினும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான உரிய களமொன்று அமைக்கப்படாமையால் முறையான வழிகாட்டல்கள் இன்றி அவர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடத்துணிந்துள்ளார்கள்.

அதீத திறமையுடையவர்கள் தொடர்ச்சியாக ஏதாவது கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஓய்வில் இருப்பதென்பது அவர்களுக்கு விருப்பமற்ற ஒரு செயல். அவ்வாறானவர்கள் கவனிப்புக்கள் இன்றி விடப்படும் போது குற்றச் செயல்களில் அவர்களின் நாட்டம் தாவுகின்றது.

இலங்கையில் காணப்படுகின்ற பட்டப்படிப்புக்களில் பெரும்பாலானவை சான்றிதழ் கற்கை நெறிகளாகவே காணப்படுகின்றன. அவர்களது கற்கை நெறிகள் முடிவடைந்ததும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி முறையான திட்டங்கள் எதுவும் அவர்களுக்கு இல்லை.

பல்கலைக்கழகங்களும் பல புதிய புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்கின்றன. அவற்றைக் கற்று முடித்த பின்னர் அம் மாணவ மாணவியர் அக் கற்கை நெறி சார்ந்த தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற வழிமுறைகள் எதுவும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்பது மனவருத்தத்திற்குரியது.

அரசு தான் நினைத்த வகையில் தனது அரசுக் கொள்கைகளுக்கமைவாக நியமனங்களை மேற்கொள்கின்றது. பல்கலைக்கழகங்கள் தம் வழியில் கற்கை நெறிகளை அறிமுகப்படுத்திக்கொண்டு செல்கின்றார்கள். ஒன்றுடன் ஒன்று தொடர்பு அற்ற நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற கல்வி முறைமை மாணவ மாணவியரை நடுத்தெருவிற்கு கொண்டு செல்வதுடன் அரசின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன.

பிற நாடுகளில் இவ்வாறான மயக்க நிலை இல்லை என்றே சொல்லலாம். எந்த ஒரு கற்கை நெறிக்கும் ஏற்ற தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்கு அங்கு வசதிகள் பல உண்டு. அதனாலேயே இங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கற்றல் நடவடிக்கைகளுக்காக செல்கின்ற பல மாணவ மாணவியர் மீண்டும் தமது நாட்டிற்குத் திரும்பி வந்து வேலை செய்யப் பின்னிற்கின்றார்கள். தமது கல்விக்கேற்ற தொழில்களை இங்கு பெற முடியாது இருப்பதே இதற்குக் காரணம்.  என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More