இலக்கியம் உலகம் பிரதான செய்திகள்

‘நாடற்றவரின் கடல்’ – தீபச்செல்வன்

 
 
தாய் நிலத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்ற மியன்மாரியக் குழந்தை இவள். ஈழத் தமிழர்கள் மீது காட்டப்படும் பாரட்சம் போலவே மியன்மாரிய முஸ்லீம் மக்கள்மீதும் காட்டப்படுகிறது. 2014/2015இல் அம் மக்கள் குறித்து தீபச்செல்வன் எழுதிய கவிதை.
‘நாடற்றவரின் கடல்’
தொழவும் தெரியாத குழந்தை
பலியிடப்பட்டிருக்கிறது புத்தருக்காய்
இன்னும் ஒரு வார்த்தையேனும் பேசியிராத குழந்தை
கொல்லப்பட்டிருக்கிறது அல்லாவை பழி தீர்க்க
நடுக்கடலில் மிதக்கின்றன
குட்டிப் பர்தாக்களும் தொப்பிகளும்
வாளோடும் துப்பாக்கிளோடும்
துரத்த வேண்டாம்
அவர்களாகவே தம்மை அழித்துக்கொண்டனர்
நாடற்றவர்களாக புறப்பட்ட வேளையில்
கரையற்றிருக்கின்றன கண்ணீராலும்
இரத்தத்தாலும் ஆன படகுகள்
கருணைக்காய் தவிக்கும் ஒரு ரோஹிங்ய
குழந்தைக்காய்
வன்முறையாளர்களிடம் அகப்பட்டுப்போன
புத்தரால் என்ன செய்யலும்?
பசியோடு மடியுமொருவரின் மரணத்திற்கும்
மியன்மார் இராணுவத்திற்கும் தொடர்பில்லை எனச் சொல்லுக
கரைகளுக்காய் கையேந்தி கடலில் புதையுண்டவருக்கும்
பவுத்த வெறியர்களுக்கும் தொடர்பில்லை எனச் சொல்லுக
எண்ணைய் படகுகளில் சனங்கள் புறப்பட்டமைக்கும்
மௌனிகளாக இருப்போருக்கும் தொடர்பில்லை எனச் சொல்லுக
நாடற்றவர்கள் தத்தளிக்கும் கடலில்
தெய்வமும் இல்லை
அரசும் இல்லை
இராணுவமும் இல்லை
ஐ.நாவும் இல்லை

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • மௌனமாக அழுக்கின்றன கண்கள், எங்கள் பிள்ளைகளையும் நினைத்து.