Home இலங்கை காணாமல் போனோருக்கான செயலகம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையா? செல்வரட்னம் சிறிதரன்

காணாமல் போனோருக்கான செயலகம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையா? செல்வரட்னம் சிறிதரன்

by admin

போருக்குப் பிந்திய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் ஒன்றாகும்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக காணாமல் போனோருக்கான செயலகம் ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் இது, காணாமல் போனோருக்கான செயலகமா அல்லது கண்துடைப்பு செயலகமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கேற்ற சூழல் காணப்படவில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று உள்ளுரில் பாதிக்கப்பட்டவர்களினாலும், சர்வதேச அளவில் மனித உரிமை மற்றும் மனிதநேய அமைப்புக்களினாலும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தன.
யுத்த மோதல்களின்போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்தி ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் பிரேரணைகள் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால், நிலைமாறுகாலத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாய நிலைமைக்கு அரசாங்கம் ஆளாகியிருந்தது.
வரவேற்பும் வலியுறுத்தலும்
இதனையடுத்து, உண்மைக்கும் நீதி;க்குமான ஆணைக்குழுவை உருவாக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுப்பதுடன்,  உண்மையைக் கண்டறியும் நோக்கில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான செயலகம், அத்துடன், நிவாரணங்களுக்கான செயலகம் என்பவற்றை உருவாக்கவும், ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்குமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஐநா மன்றமும், சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வரவேற்றிருக்கின்றன. அதேநேரத்தில் இந்தச் செயற்பாடுகளில் காணப்படுகின்ற ஆமை வேகத்தை சர்வதேச நாடுகளும், அந்த அமைப்புக்களும் சுட்டிக்காட்டி கண்டித்திருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்;மானங்களைத் துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தமும் இப்போது அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது.
வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான ஐநாவின் சாசனத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவதாக ஆசிய பிராந்தியத்தில் இலங்கையே முதலாவது நாடாக முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அது தொடர்பாக உள்ளுரில் உரிய சட்டமூலங்களை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் விருப்பமற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
முன்னைய அரசாங்கமானது யுத்த மோதல்களின்போது எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என அடியோடு மறுதலித்து, உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறலைப் புறந்தள்ளியிருந்தது. ஆயினும் நல்லாட்சி அரசாங்கமானது பொறுப்பு கூறுவதற்கான ஐநா மனித உரிமைப் பேரவையின் இரண்டு பிரேரணைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றுவதற்காக இணை அனுசரணை வழங்கியிருக்கின்றது. ஆயினும் அதனை நிறைவேற்றுவதற்குரிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தைக் காண முடியவில்லை.
ஏன் இந்த காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP – Office On Missing Persons)?
காணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் நல்லாhட்சி அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோருக்கான செயலகம் (உருவாக்குதல், நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும்) சட்டம் என்ற பெயரிலான அந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
‘பல தசாப்தங்களாக இலங்கை முகம் கொடுத்திருந்த முரண்பாட்டு நிலைமை காரணமாக அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்திருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் இதில் காணாமல் போயுள்ளனர். எனவே, இதனால் பாதிக்கப்பட்டவர்களினதும், அவர்களுடைய உறவினர்களினதும் துயங்களுக்கு முடிவேற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்த வகையிலேயே அரசாங்கம் காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்கியிருக்கின்றது. இது தொடர்பில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியாதவர்களாக பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரம் தொடக்கம் அதற்கும் அதிகமானவர்கள் என மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது’ என காணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளித்திருக்கின்றது.
ஆனால், இந்த சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விபரங்கள்; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைத் திருப்திப்படுத்தத் தவறியிருக்கின்றது. இந்தச் சட்டமூலம் தொட்பிலான விபரங்கள் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. இதனால், இந்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் ஒருமுகமாகத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்க வேண்டும். அரச படைகளின் பொறுப்பில் உள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் பல வருடங்களாகவே கோரி வருகின்றார்கள்.
மோசமான யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலச் சூழலில், கடத்தப்பட்டு விடுவார்கள் என்ற அச்சுறுத்தல் நிலவிய காலப்பகுதியிலும்கூட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததையடுத்து, இந்தப் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்து ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் இந்தப் போராட்டங்கள் இன்னும் தீவிரமடைந்திருக்கின்றன.
வீதிகளிலும் மறைவிடங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், கண்டன பேரணிகளாகவும் ஆர்ப்பாட்டப் பேரணிகளாகவும் போராட்ட வடிவம் பெற்றிருந்தன. ஆனால் அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் போக்கும் அமைந்திருந்தது. இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த ஆறு மாதங்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களைச் சந்தித்த அமைச்சர்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும், பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற வெற்று வாக்குறுதியையே வழங்கியிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர்கூட இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. அது மட்டுமல்லாமல் ஆட்களை வலிந்து காணாமல் ஆக்கிய ஒருவர்கூட இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அரசாங்கத்தின் இந்த அசமந்தப் போக்கானது வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களை எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளாக்கியிருக்கின்றது. காலத்தை இழுத்தடித்து, தங்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றது என்று அவர்கள் மனக்கசப்படைந்திருக்கின்றார்கள்.
.இந்த சட்டம் குறித்து அரசாங்கம் என்ன கூறுகின்றது?
என்ன ஆனார், எங்கு இருக்கின்றார் என நியாயபூர்வமாகத் தெரியாத ஒருவரே காணாமல் போனவர் என்பது காணாமல் போனோருக்கான செயலக சட்டத்தின் வரையறையாகும்.
வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற முரண்பாட்டு நிலைமையின்போது அல்லது அதன் விளைவாகவோ, அதன் பின்னரோ காணாமல் போனவர்கள் பற்றியும், ஆயுத மோதல்களின் போது காணாமல் போன ஆயுதப்படைகள் மற்றும் பொலிசார் பற்றியும் இந்த சட்டம் கவனம் செலுத்துகின்றது.
கடந்த 1972 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் இடம்பெற்ற இளைஞர்களின் கிளர்ச்சி போன்ற அரசியல் அமைதியின்மை, சிவில் அமைதிக்குலைவு உள்ளிட்ட சம்பவங்களின்போது காணாமல் போனவர்கள் பற்றியும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து ஆட்களைப் பாதுகாக்கும் ஐநாவின் சாசனத்தில் வரையறுக்கப்பட்டவாறு காணாமல் போயுள்ளவர்கள் பற்றியும் இந்த சட்டம் கவனம் செலுத்தும். நாட்டின் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாயினும். எந்த இனத்தை அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் காணாமல் போனவர்களுக்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயலக சட்டம் குறித்து விளக்கமளித்திருக்கின்றது.
இதில் ஆயுதப் படைகளினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றியும், இறுதி யுத்தத்தின்போதும், அதற்குப் பின்னரும், அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை ஏற்று, அந்த நம்பிக்கையில் ஆயுதப்படைகளிடமும், இராணுவ புலனாய்வு பிரிவினரிடமும் சரணடைந்ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றியும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஆசிய பிராந்தியத்தில், கிழக்கு திமோர், நேபாளம் ஆகிய நாடுகளிலும், ஆபிரிக்க பிராந்தியத்தில் கானா, தென்னாபிரிக்கா, உகண்டா போன்ற நாடுகளிலும், லத்தின் அமெரிக்க பிராந்தியத்தில் பொலிவியா, ஆர்ஜன்டினா, உருகுவே, சிலி, எல் சல்வடோர், கவுத்தமாலா, பெரு போன்ற நாடுகளிலும் காணாமல் போனவர்களின் தேவைகளுகளைப் பூர்த்தி செய்வதற்காக  உருவாக்கப்பட்டுள்ள பொறிமுறைகளிலும், இலங்கையில் முன்னர் செயற்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியதாகவே இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான செயலக சட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சந்தேகங்கள் 
மேலோட்டப் பார்வையில் காணாமல் போனோருக்கான செயலகம் (உருவாக்குதல், நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும்) சட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய ஒரு சட்டமாகத் தோற்றிய போதிலும், அதில் சட்ட ரீதியான சிக்கல்கள் பல காணப்படுகின்றன.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்லாமல், நாட்டின் ஏனைய பல பிரதேசங்களிலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தை முன்வைத்து, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரச படைகளினாலும், இராணுவ புலனாய்வு பிரிவினராலும் கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இந்தச் சட்டம் உரிய நியாயத்தையும் நீதியையும் பெற்றுத் தரும் என கூறுவதற்கில்லை. அதேபோன்று இறுதி யுத்தத்தின்போதும், அதற்குப் பின்னரும் சரணடைந்தவர்கள் தொடர்பில் இந்தச் சட்டத்தின் மூலம் நீதி கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரச படைகளும் இராணுவ புலனாய்வாளர்களுமே முக்கிய காரணம் என இதுகால வரையில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்திய ஆணைக்குழுக்களிடம் சாட்சியமளித்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அவர்களில் பலர் கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள், கண்கண்ட சாட்சிகளின் மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்ற அதிகாரிகள் அல்லது அவர்களைக் கைது செய்து கொண்டு சென்ற அதிகாரிகள் பற்றிய பெயர், பதவி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆதாரங்களையும் இந்த விசாரணைகளில் சான்றாக வழங்கியிருந்தார்கள்.
அதே வேளை, வி;டுதலைப்புலிகளினால் ஆட்சேர்ப்பின்போது கொண்டு செல்லப்பட்டவர்களும் காணாமல் போயிருப்பதாக, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு விடுதலைப்புலிகளும் காரணம் என்ற விபரத்தையும் இந்த ஆணைக்குழுக்களின் முன்னிலையில் சாட்சியமளித்த பலர் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு காணாமல் போனவர்கள், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அரச படைகளின் பொறுப்பில் காணப்பட்டதாகவும் அந்த சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் அவற்றின் மூலம் நீதி கிடைக்காத நிலையில் புதிய சட்டத்தின் மூலம் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஆணைக்குழுக்களிலும் பார்க்க சட்ட வலுவுள்ளது
இந்த பின்னணியில் காணாமல் போனோருக்கான செயலக சட்டம் ஆயுதப் படைகளைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை கண்டனம் செய்யவோ மாட்டாது என்று கூறப்பட்டிருக்கின்றது. இதற்கும் அப்பால், நாட்டின் அரச தலைவராகிய ஜனாதிபதியும் ஏனைய அரச முக்கியஸ்தர்களும் இந்தச் சட்டமானது, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரச படைகளைக் குற்றக் கூண்டில் நிறுத்தமாட்டாது என ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் அறுதியிட்டு கூறியிருக்கின்றார்கள்..
அரச படைகள் மீது குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக, விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் போது போர்க்களங்களில் காணாமல் போயுள்ள படைச்சிப்பாய்களின் உறவுகளுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களைப் பற்றியும் இந்த சட்டம் கவனம் கொள்ளும். அதேவேளை, காhணாமல் போனவர்களின் உறவினர்களுடைய ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாகவே இந்தச் சட்;டம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என அரசாங்கம் கூறுகின்றது.
குறிப்பாக சமூகத்தின் எல்லா பிரிவினருடைய நலன்களையும் கவனத்திற் கொள்வதற்காக காணாமல் போயுள்ளவர்களின் குடும்பங்களின் ஆலோசனைகள் மட்டுமல்லாமல், மிகுந்த உணர்வுபூர்வ நிலையில் இந்த விடயத்தைக் கையாள்வதற்காக, குறிப்பாக யுத்த மோதல்களின் போது காணாமல் போயுள்ளவர்கள் சார்பில், அரச படைகள் சார்ந்த குழுக்களின் பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசனை செய்யப்பட்டே இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை செய்வதற்காக  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவைப் போலல்லாமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமூலத்தின் மூலம் காணாமல் போனோருக்கான செயலகம், சட்ட ரீதியான அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது. இதனை விசேட அம்சமாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
சிக்கல்கள்
ஆனால், காணாமல் போயிருப்பவர்கள் பற்றிய விசாரணைகளை மட்டுமே இந்த செயலகம் மேற்கொள்ளும். அந்த விசாரணைகளின் மூலம் கிடைக்கின்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அது ஒரு நீதிவிசாரணைக்குரிய பொறுப்பையோ அல்லது அதிகாரத்தையோ கொண்டிருக்கமாட்டாது. நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு சட்டவலு உள்ள போதிலும், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்பதை நிலைநிறுத்துகின்ற அதிகார வipமை இந்த செயலகத்திற்கு வழங்கப்படவில்லை.
காணாமல் போயுள்ளவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை இந்த செயலகம் மேற்கொள்கின்ற போதிலும், அந்தத் தகவல்களை ஒரு நீதிமன்றத்திற்கோ அல்லது ஒரு நீதிவிசாரணைக்கோ சுயமாக அது முன்னிலைப்படுத்தமாட்டாது. அதற்கான அதிகாரமும் அதற்குக் கிடையாது. காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்தி அதுபற்றிய விபரங்களை ஜனாதிபதிக்குக் கையளிப்பதே இந்த செயலகத்தின் பிரதான பணியாக இருக்கும்.
இந்த நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற சம்பவங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களும், ஐநா மன்றமும், சர்வதேசமும் எதிர்பார்க்கின்ற அளவில் அரசாங்கத்தின் காணாமல் போனோருக்கான செயலகம் நடவடிக்கைகளை எடுக்கும் நீதியை நிலைநாட்டும் என்று கூறுவதற்கில்லை.
நிலைமாறுகால நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் ஒன்றாகிய இந்த காணாமல் போனோருக்கான இந்த சட்டம் வெறுமனே ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்ற காரணத்தினாலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புக்களும் அதனை ஏற்கப் போவதில்லை என கூறியிருக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More