Home இலங்கை நியூசீலாந்தின் மூத்த தமிழர் இராசலிங்கம் மறைவு ! -வரதன்

நியூசீலாந்தின் மூத்த தமிழர் இராசலிங்கம் மறைவு ! -வரதன்

by admin

நியூசீலாந்தில் தொழில் ரீதியாகக் குடியேறிவர்களில் முதன்மைக் குடியேற்றவாசிகள் என்ற பெயரைப்பெற்றவர்கள் இலங்கையர்கள் வைத்தியர்கள் என்ற விபரத்தை அமரர் டொக்டர் இராசலிங்கம் எழுதிய வைத்தாங்கி ஒப்பந்தம் பற்றிய ஆங்கில நூலில் அறிந்தேன்.

புதிதாக இங்கு வந்து குடியேறுபவர்களுக்கு Auckland Regional Migrant Services என்ற சேவை நிலையத்தினால் வழங்கப்படும் கை நூல் அது.அந்த நூல் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் அவர்.

அந்த நூலில் குறிப்பிட்டது போலவே 1969 இல் நியூசீலாந்து வந்து தம் குடும்பத்துடன் குடியேறிய,
நியூசீலாந்தின் மூத்த தமிழ்ப் பெரியார் டொக்டர் நாகலிங்கம் இராசலிங்கம் அவர்களின் மறைவு நியூசீலாந்து தமிழ் சமூகத்தினைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது . தமது 81 வயதில் அவர் தமது ஓக்லாந்து இல்லத்தில் காலமானார் .

கடந்த சனிக்கிழமை காலமான அன்னாரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஓக்லாந்தில் நடைபெறவுள்ளது .

தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் நியூசீலாந்தில் குடியேற்றவாசிகளுக்கும் அல்லது புகலிடம் தேடிக்குடியேறியவர்களுக்கும் கடந்த முப்பது ஆண்டுகளாக அவர் செய்த சேவைகள் பல பரிமாணங்கள் கொண்டவை .

தனிப்பட்டமுறையில் , கட்டமைப்பு என்ற வகையில் அவர் பல நலன் புரிச் சேவைகளை அவர் உருவாக்கி , உருவாக்குவதில் இணைபணியாற்றி புரிந்த சேவைகள் அளப்பரியவை.

1983 உம் நியூசீலாந்து தமிழ்ச் சங்கமும்

1983 இல் இனவன்முறைகள் இலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளையில் தாய்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் வாழ்ந்த நாட்டின் உயர் பீடங்களுடன் தொடர்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இவர்.

அவ்வகையில் ஆராம்பிக்கப்பட்ட நியூசீலாந்து தமிழ்ச் சங்கத்தின் மூலம் நியூசீலாந்து அரசினால் 83 இல் பாதிக்கப்பட்ட பலர் குடியேறுவதற்கு வழிவகை செய்யப்பட்டமையில் திரு “ராஸ் ” அவர்களின் பங்கு முக்கியமானது. இதன் முதற் தலைவரும் இவரே.

அன்று முதல் புகலிடம் தேடி வந்தவர்கள் பலருக்கு “ராசின் ” பணி அவரது உடற் துடிப்பும் அசைவும் ஓயும்வரை தொடர்ந்தது.

நியூசீலாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இவர் தம் பணியைத் தொடங்கியபோது ஐந்து பேருடன் ஆரம்பமாகிய தமிழ்ச் சங்கம் இன்று 400 க் குமதிகமானவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

சேவைப்பணிகள்

நியூசீலாந்தின் தொன்மைச் சமுகமாகிய மவூரி இனத்தின் சமூக மேம்பாட்டிலும் அன்னாரது வகிபாகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது. பல்லினக்குழுமங்கள் வாழும் இந்நாட்டின் பல அமைப்புகளிலும் இவரது சேவைப்பணிகளின் பெறுமானங்களை அவதானிக்க முடியும்.

ஓக்லாந்து பல்லின சங்கம் , ஓக்லாந்து அகதிகள் சங்கம் , நியூசீலாந்து அகதிகள் சபை ஆகியவற்றின் தலைவராகவும் தலைவராகப் பணியாற்றிய இவர் “பல்லினங்களின் குரல்-நியூசீலாந்து” என்ற அமைப்பை உருவாக்கினார்.

பதக்கமும் விருதும்

அவரது சமூகச் சேவைகளை கெளரவித்து அன்னாருக்கு 1990 இல் மகாராணி சேவைப்பதக்கம் வழங்கப்பட்டது.

இவர் , 2000 ஆம் ஆண்டில் நியூசீலாந்து ஓடர் ஒப் மெரிட் (Order of Merit) விருதும் 2005 இல் ஓக்லாந்து “மேயரினால்” (நகரபிதா) “வியத்தகு மனிதர்” ( Living Legend) விருதும் நியூசீலாந்தின் கிவி வங்கியினால் “உள்ளூர் நாயகன்” ( Local Hero) என்ற விருதினையும் பெற்றார்.

தமிழ் மொழியும் பண்பாடும்

80 களின் இறுதிகளில் நியூசீலாந்தில் தமிழ்ப்பாடசாலைகளை உருவாக்குவதில் முக்கிய கவனம் செலுத்திய அவர் நியூசீலாந்தின் கல்வித்திணைக்களத்தின் தொடர்புடனும் அனுசரணையுடனும் இணைந்த முதற் தமிழ்ப்பாடசாலையான “பூங்கா” தமிழ்பாடசாலையின் ஆரம்பச்செயற்பாட்டாளராக விளங்கினார்.

மனித உரிமை ; அகதிகள் வாழ்க்கை

2001 இல் நியூசீலாந்து தமிழ் அமைப்புகளின் ஒன்றியங்கள் தலைவராக பணியாற்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல விடயங்களையும் தகவல்களையும் நியூசீலாந்து அரசுக்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் விளக்குவதில் முக்கிய பங்காற்றினார் .

ஓ க்லாந்து அகதிகள் சபை (Auckland Refugee Council) தலைவராக பல தசாப்தங்கள் பணியாற்றிய இவர் – ஓ க்லாந்து பல்லின சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராகவும் பணியாற்றி இங்குள்ள பல “அகதிச் சமூகங்கள்” பல்வேறு தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள வசதி செய்தார். இருப்பிட பவசதிகள் ,சுகாதார வைத்திய சேவை வசதிகள் என்பவற்றிலுள்ள கட்டணங்கள் , கொடுப்பனவுகள் போன்றவை இங்கு குறிப்பிடக்கூறியவை.

நியூசீலாந்தின் அகதிகளுக்கான உளவியல், வைத்திய உதவி அமைப்பான Refugees As Survivors New Zealand அமைப்பின் செயற்பாட்டுக்குழுவின் அங்கத்தவராகவும் அவைத்தலைவராகவுமிருந்தார்.

ஆசிய சூதாட்ட சங்கத்தின் உறுப்பினராக இருந்து – சமூகத்தை சூதாட்டப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உதவினார் என்பதும் குறிக்கத்தக்கது..

“ராசும் ” அவர் தாயகமும்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமது தாய் நாட்டை விட்டு அவர் வந்த போதிலும் தமது தாயக மக்களின் நலன்களில் என்றும் தொடர்ந்தும் கவனமெடுத்து இணைந்து பணி யாற்றியவராகவே என்றும் திகழ்ந்தார் . தாயக மக்களுக்கு பலவகையில் உதவிகளை மேற்கொண்டார். தமிழரின் விடு லைப்போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதை நியூசீலாந்தின் அரசுக்கும் பிரதிநிதிகளுக்கும் பரப்புரை செய்வதில் முன்னின்றவர் அவர்.

பிறப்பும் கல்வியும்

இலங்கையில் யாழ்ப்பாணம் தென்மயிலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் மாணவர் தலைவராக , தமது பத்தொன்பதாவது வயதில் பூப்பந்தில் தேசிய சாம்பியனாக, தோமஸ் ஒற்றை வீரர் கிண்ணத்தை 1955 முதல் 1962 வரையில் நான்கு தடவை பெற்ற இலங்கை வீரராக , கொழும்பு மருத்துவக் கல்லூரி மாணவராக இவரது வாழ்க்கையின் சிறப்பின் தொடக்கம் தாயகத்தில் அமைகிறது .

அன்னார் அவரது அன்பு மனைவி மலர் , பிள்ளைகள் ரவி , ரோசினா , பேரப்பிள்ளைகளை தமதில்லத்தில் விட்டுச் சென்றுள்ளார்.

நியூசீலாந்தில் தமிழ் நெஞ்சங்கள் உள்ளவரை டொக்டர் இ ராசலிங்கத்தின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More