உலகம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

40 ஆயிரம் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியன்மாரை விட்டு வெளியேறி உள்ளனர்: ஐ.நா:-

மியான்மரின் ரகைன் மாகாணத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இதுவரை சுமார் 40,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்காள தேசத்துக்கு அகதிகளாக வெளியேறியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

வங்கதேசத்தில் உள்ள ரொஹிஞ்சா அகதிகள்
எல்லை தாண்டி தஞ்சம் அடைந்துள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் தேவை என்று தொண்டு அமைப்புகள் கூட்டுகின்றன.

கடந்த ஓகஸ்ட் 25 அன்று ரொஹிஞ்சா தீவிரவாதிகள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு கொத்துக்கொத்தாக ரொஹிஞ்சா முஸ்லிம்கள் இறந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களால் எல்லா சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தப்பி ஓடுகின்றனர். பங்காள  தேசத்தை அடைவதற்காக நாஃப் நதியைக் கடக்க பல ரொஹிஞ்சாக்கள் முயன்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று, அந்நதியில் மேலும் 16 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இதன் மூலம், படகு நீரில் மூழ்கியதால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40-ஐ நெருங்கியுள்ளது. மியான்மர் எல்லையில் உள்ள பங்காள  தேச நகரான டெக்நாஃபின் காவல் துறை தலைமை அதிகாரி, மைனுதீன் கான், ஒரு சிறுமியின் உடல் உள்பட இறந்தவர்களின் உடல்கள் அந்த நதியில் மிதந்தாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம்  கூறியுள்ளார்.

மியான்மரின் மனித உரிமை விவகாரங்களுக்கான, ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி யாங்கீ லீ, “மோசமடைந்து வரும் வன்முறைச் சுழல்” மிகுந்த கவலை தருவதாகவும், அச்சுழல் உடனே உடைக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். தஞ்சம் தேடி இதுவரை தோராயமாக 38,000 பேர் மியான்மரில் இருந்து எல்லை தாண்டி வந்துள்ளதாக பங்காள  தேசத்தில் உள்ள ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“சாலை ஓரங்களில் பல தற்காலிக கூடாரங்களையும் குடில்களையும் நாங்கள் பார்த்துக்கொண்டுள்ளோம். இருக்கும் எல்லா இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன,” என்று ஐ.நா அகதிகள் ஆணையத்தின் பிராந்திய செய்தித் தொடர்பாளர் விவியன் டேன் பிபிசியிடம் தெரிவித்தார்.

Map

எல்லையைக் கடக்க முயலும் மக்கள் சுட்டுக்கொல்லபடுவதாக செய்திகள் வருவதாகவும், அவர்களை சுடுபவர்கள் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்லை கடந்து வங்கதேசம் வருவதற்காகக் காத்திருப்பதாக செய்திகள்தெரிவிக்கின்றன. எல்லையைக் கடப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன.

12 காவல் படையினர் கொல்லப்பட்ட, காவல் துறையின் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, மியான்மனர் ராணுவமும் புத்த மதக் கும்பல்களும் பழி வாங்கும் நோக்குடன் தாக்குதல் நடத்துவதாக ரொஹிஞ்சா செயல்பாட்டாளர்களும், தப்பி வந்தவர்களும் கூறுகின்றனர். ராணுவத்தினர் ரொஹிஞ்சாக்கள் வசிக்கும் கிராமங்களை எரித்து, அங்கு வசிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரொஹிஞ்சா ஆண்கள் சேர்ந்துள்ளதால் எண்ணிக்கை பெருகியிருக்க வாய்ப்புள்ள தீவிரவாதக் குழுக்களுடன் தாங்கள் போராடுவதாக பர்மிய ராணுவம் கூறுகிறது. தீவிரவாதிகள் பிற இனக் குழுக்களின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் செய்திகள் வருகின்றன.

மியன்மார் இராணுவத்துக்கும் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கும் மீண்டும் மோதல்

ஊடகத்தினர் சுதந்திரமாக அனுமதிக்கப்படவில்லை என்பதால் இத்தகவல்களை களத்தில், சுயேச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை. கடந்த வாரம் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் சுமார் 400 பேர் இறந்துள்ளதாக ராணுவத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், அச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின்படி, அப்பாவி குடிமக்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்பது, உதவி தேவைப்படுபவர்களை எளிதில் அடைய உதவுவது உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினர் பின்பற்ற வேண்டும் என ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, வியாழக்கிழமை கூறியுள்ளார்.

மியான்மரின் மிகவும் ஏழ்மையான பகுதியான ரகைன் மாகாணம், சுமார் 10 லட்சம் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு வாழ்விடமாக உள்ளது. புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில், பல தசாப்தங்களாக அடக்குமுறைகளை அவர்கள் சந்தித்து வருகின்றனர். வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாக அவர்கள் கருதப்படுவதால் அந்நாட்டின் குடிமக்களாக அவர்கள் கருதப்படுவதில்லை.

ரகைன் மாகாணத்தில் உள்ள புத்த குடும்பம்
படத்தின் காப்புரிமைAFP
Image captionரகைன் மாகாணத்தில் உள்ள சுமார் 11 ஆயிரம் புத்த குடும்பங்களை வெளியேற்றியுள்ளதாக மியான்மர் அரசு கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான வன்முறைச் சம்பவங்கள் அங்கு நடைபெற்றுவருகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு, ஒரு எல்லைப்புற சோதனைச் சாவடியில் நடந்த தாக்குதலில், ஒன்பது காவல் துறையினர் கொல்லப்பட்ட பின்னர் அவை பெரும் அளவில் அதிகரித்துள்ளன.

இனக்குழுக்கள் இடையே பதற்றம் நிலவி வந்தாலும், அதுவரை ஆயுதப் போராட்டம் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 25-இல் நடந்த இரு சம்பவங்களும் ‘அர்ஸா’ என்று அழைக்கப்படும் அரூக்கான் ரொஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டன.

மியான்மரில் உள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்களை அரசின் ஒடுக்குமுறைகளில் இருந்து பாதுகாப்பதே தங்கள் நோக்கம் என அந்த அமைப்பு கூறுகிறது. ஆனால், அது ஒரு தீவிரவாதக் குழு என்று அரசு கூறுகிறது.

ஒக்டோபர் 2016-இல் நடந்த தாக்குதலுக்குப் பிறகு எதிர் நடவடிக்கைகளை ராணுவம் வேகப்படுத்தியது. கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அப்போது ராணுவத்தினர் மீது வைக்கப்பட்டது. அப்போதும் பல்லாயிரக்கணக்கான ரொஹிஞ்சாக்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

பர்மிய ராணுவம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், இவ்விவகாரத்தில் முறையான விசாரணை ஒன்றை ஐ.நா நடத்தி வருகிறது.

BBC

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers