Home இலங்கை ஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்! 27 ஆண்டுகள்!!:

ஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்! 27 ஆண்டுகள்!!:

by admin

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:-

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.

செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது.

என்ன நடந்தது?

1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.

வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (UTHR) நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது.

“ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 138 இளைஞரை (இவ்வெண்ணிக்கை 158 ஆகப் பின்னர் திருத்தப்பட்டது[3]) தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தோம். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.”

மூடப்பட்ட அகதிமுகாம்

முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது.

பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்.

நீதி தராத அரச விசாரணை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.

எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது.

குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

ஆண்டுதோறும் நினைவு நாள்

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள்  நடைபெற்று 27 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும்.

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More