இலங்கை பிரதான செய்திகள்

கடந்த நான்கு (2013-2017) வருடங்களில் வடக்கு சுகாதார அமைச்சு – சாதித்த சாதனைகள்-

முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்:-

வடக்கு மாகாண சபை இதுவரை மக்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வி ஊடகங்களிலும், அரசியல் காரணங்களுக்காக குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளாலும் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகின்றது. மாகாணத்திற்கு ஒதுக்கிய நிதி செலவழிக்கப்படாது மீள அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறை கூறப்படுகின்றது. எனது பொறுப்பிலிருந்த சுகாதார அமைச்சை பொறுத்தவரை அவ்வாறான எந்த விடயமும் நடைபெறவில்லை என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் தமது உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்களுக்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையானது பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களில் இயங்கவில்லை. எனினும் நாட்டின் ஏனைய மாகாணங்களில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் நிலையில் 04 வருடங்களுக்கு முன்னர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எமது மாகாணசபை பல தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டிருந்தாலும் நாங்கள் எங்களால் இயலுமானவரை மக்களுக்கான நலத்திட்டங்களை செய்துவந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆயுதப்போர் 2009ல் மௌனிக்கப்பட்டு மனிதப்பேரவலத்தை சந்தித்த நிலையில் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்பபுள்ளியாக மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாடிதென்று விளங்கிகொண்டபோதும் த.தே.கூட்டமைப்பு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டது. மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயற்படும் மாகாண ஆளுனரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிலையில் அறைகுறை அதிகாரங்களுடன் மாகாண சபையை த.தே.கூ பொறுப்பேற்றுக்கொண்டது.

 மட்டுப்படுத்தப்பட்ட அதிகார வரையறை
 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சட்ட அதிகாரத்தை மாகாண சபையின் நடைமுறை அதிகாரமாக மாற்ற தயாரிக்கப்படவேண்டிய நியதிச்சட்டங்களை உருவாக்குதல்
 ஆளணிப்பற்றாக்குறை
 நிதிப்பற்றாக்குறை
 போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கும் மாகாண சபையின் சேவை வழங்கும் கொள்ளவுக்கும் இடையிலான இடைவெளி

ஆகிய சவால்களுடனேயே நாம் பணியை ஆரம்பித்தோம்.

வட மாகாணத்தில் மொத்தமாக 110 வைத்தியசாலைகள் அடங்கலாக 250 சுகாதார சேவை வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

2013ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் சுகாதார துறை அபிவிருத்திக்காக மாகாண பாதீட்டிலிருந்து செலவழிக்கப்பட்ட மூலதனச்செலவுகள் மொத்தமாக இதுவரை ரூபா 4,271.65 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகப்படியாக ரூபா 957.91 மில்லியனும், அதற்கடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ரூபா 909.96 மில்லியனும், வவுனியா மாவட்டத்திற்கு 869.74 மில்லியனும், மன்னார் மாவட்டத்திற்கு ரூபா 755.33 மில்லியனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு ரூபா 705.17 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்த நான்கு வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான அடைவுகளை நாங்கள் அடைந்திருக்கின்றோம்.

01 மாகாணத்திற்கான சுகாதார மூலஉபாய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 போரினால் சிதைந்த தேசம், நாட்டின் ஏனைய மாகாணங்களின் தேவையுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணத்தின் தேவைகள் முற்றிலும் வேறுபட்டவை. இதனால் மாகாணத்தின் (சுகாதார) தேவைகள் தொடர்பிலும், அதற்காக தீர்வுகள் தொடர்பிலும் நீண்டகால திட்டமொன்றை வகுக்கவேண்டிய தேவை எழுந்தது. 17 உப குழுக்களை அமைத்து துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் பங்கேற்பு முறையிலான “நீண்டகால சுகாதார மேம்பாட்டு திட்டம்” ஒன்றினை தயாரித்தோம். அதனடிப்படையிலேயே மாகாண சுகாதார அபிவிருத்தியானது நடைபெறுகின்றது. (இலங்கையில் வேறெந்த மாகாணத்திலும் இவ்வாறான திட்டம் இல்லை என்ற பெருமையை எமது மாகாணம் பெறுகின்றது)

 சுதேச மருத்துவத்திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் சமூக சேவைகள் திணைக்களங்களுக்கான மூன்றாண்டு திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

 முதன்முறையாக சர்வதேச நியமங்களின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கான “மீள்குடியேற்றக் கொள்கையொன்று” தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதன்மூலம் மீள்குடியேற்றம் என்பதன் அடிப்படையில் நடாத்தப்படும் திட்டமிட்ட வகையிலான, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் குடியேற்றங்களை தவிர்க்கமுடியும்.

 பெண்கள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலான பங்கேற்பு முறையிலான சமூகமட்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு “நிலைபேறான அபிவிருத்தியில் பெண்களின் பங்கு” எனும் மூலஉபாய திட்டம் தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 விசேட தேவையுடையோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மலசலகூடங்கள், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள், நாள்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்தக்கொடுப்பவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

02. நியதிச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

 இதுவரையில் மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கான 06 நியதிச்சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

03. திட்ட முகாமைத்துவ பிரிவு நிறுவப்பட்டுள்ளது

மாகாண சுகாதார அமைச்சில் நீண்டகால அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் “திட்ட முகாமைத்துவ பிரிவு” ஒன்றினையும் நிறுவியுள்ளோம். தொடர்ச்சியாக 2017 தைமாதம் வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்தி தொடர்பான சர்வதேச கலந்துரையாடலொன்று புலம்பெயர் மருத்துவத்துறைசார் அமைப்புகள் மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் அனுசரணையுடன் கனடாவில் நடாத்தப்பட்டதுடன் அதன் தொடர் நடவடிக்கையாக இவ்வருடம் வடக்கு மாகாணத்தில் சர்வதேச சுகாதார மாநாடொன்றும் நடாத்தி அதன்மூலம் நீண்டகால திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புறச்சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

04.தரவு சேகரிப்பும் தரவுத்தள முகாமைத்துவமும்

மேற்கூறப்பட்ட திட்டமிடலுக்கு அடிப்படை தகவல்கள் தேவைப்பட்டன. தற்போதெல்லாம் அரசியல் நோக்கங்களுக்காக போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எழுந்தமானமாக புள்ளிவிபரங்களை எம்மவர்கள் தெரிவித்து வந்தாலும் முறைப்படியாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் எம்மிடம் இருக்கவில்லை. இதற்காக நவீன தொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்தி (ருளந வுயடிள) முறையான தகவல் திரட்டும் பணியை ஆரம்பித்துள்ளோம். இதற்காக களத்தில் பணியாளர்கள் இறக்கப்பட்டுள்ளனர். தற்போது 02 மாவட்டங்களில் தரவுத்திரட்டல் முடிவடைந்துள்ளதுடன் ஏனைய 03 மாவட்டங்களில் தரவுத்திரட்டல்கள் நடைபெற்று வருகின்றன.
இதன்மூலம் மாகாணத்தில் வதியும் நலிவடைந்த பிரிவினரான
 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
 விசேட தேவையுடையவர்கள்,
 பெற்றோரை இழந்த பிள்ளைகள்
 புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள்
 தடுப்பிலுள்ளவர்கள்

போன்ற இன்னொரென்ன தகவல்களை பெற்றுக்கொள்ளமுடிவதுடன் அவர்களுக்கான திட்டங்களை தயாரிக்கவும் முடியும்.

05.வடக்கு மாகாண மக்களுக்கான பிரத்தியேக செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மக்களின் தேவைகள் வேறுபட்டவை, அவசரமானதும் அவசியமானதுமானவை. இவ்வாறானவற்றை வழமையான எமது அமைச்சின் நடைமுறை திட்டங்களினூடாக செய்துவிடமுடியாது. எனவே இருக்கும் வளங்களைக்கொண்டும், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் அமைப்புகளின் உதவியுடனும் வெளிநாட்டுப்பல்கலைக்கழங்களின் உதவியுடனும் பல்வேறு விசேட செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

அவையாவன….

i. போரினால் காயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் படுக்கையில் இருக்கும் நோயாளிகளை கருத்தில்கொண்டு வவுனியா மாவட்டத்தில் “வைகறை” எனும் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியப்பிரிவை 2014ம் ஆண்டில் ஆரம்பித்துள்தோம். இங்கு ஒரே தடவையில் 20 நோயாளர்களை தங்கவைத்து சிகிச்சை வழங்கக்கூடிய அடிப்படை மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

ii. வடக்கின் முன்று மாவட்டங்களில் (முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்) முதற்கட்டமாக சுயமாக நடமாடமுடியாது படுக்கையில் இருக்கும் நோயாளர்களின் நலன்கருதி வீடுவீடாக சென்று சிகிச்சை வழங்கும் “நடமாடும் மருத்துவ சேவை” ஒன்றினை வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் அமைப்புக்களான கனேடிய தமிழர் தேசிய அவை, சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு மற்றும் செந்தில்குமரன் நிவாரண நிதியம் ஆகிய ஆகியவற்றின் ஆதரவுடன் ஆரம்பித்துள்ளோம்.

iii. முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயாளர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட ரூபா 122,000 பெறுமதியான 530 மலசலகூடங்களை இதுவரையில் கட்டிக்கொடுத்துள்ளோம்.

iv. முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயாளர்களுக்கென மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கிவருகின்றோம்.

v. மக்களின் அவசர நிலைகளை கருத்தில்கொண்டு “அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை” எனும் சேவை வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பித்துள்ளோம். 100 நோயாளர் காவு வண்டிகளை இந்த சேவையில் இணைத்துள்ளோம். இதற்கான மத்திய அழைப்பு நிலையம் கிளிநொச்சியில் 24 மணிநேரமும் இயங்குகின்றது பணியாற்றும் பணியாளர்களுக்கு விசேட பயிற்சிகள் லண்டன் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. (இலங்கையின் வேறெந்த மாகாணத்திலும் இவ்வாறான சேவை அரசாங்கத்தினால் செய்யப்படுத்தப்படவில்லை என்ற பெருமையை வடக்கு மாகாணம் பெறுகின்றது)

vi. 2015ம் ஆண்டு மாகாணத்திற்கு 27 புதிய நோயாளர் காவு வண்டிகள் மத்திய அரசிடம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடமும் மேலதிக காவு வண்டிகளை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
06. கடந்த நான்கு ஆண்டுகளில்….

 புதிய வைத்தியசாலைகள்
 புதிய விபத்துச்சேவை பிரிவுகள்
 நாள்ப்பட்ட சிறுநீரக நோய்களை கண்டறியும் நிலையங்கள்
 மது மற்றும் போதைபொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு மையங்கள்
 சிறுவர்பாதுகாப்பு இல்லங்கள்
 மூலிகை தோட்டங்கள்
 திண்ம திரவ கழிவு முகாமைத்துவ நிலையங்கள்
 செயற்கை அவயவம் பொருத்தும் நிலையம்

ஆகியன எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான நிதி மாகாண பதீட்டினூடாகவும், புலம்பெயர் உறவுகளின் உதவியுடனும், மத்திய சுகாதாரம் தவிர்ந்த ஏனைய அமைச்சுகளிடமிருந்தும் பெறப்பட்டது

அத்துடன் வவுனியா பொது வைத்தியசாலையில் நாள்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவு 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு சிகிச்சைக்கு சென்றவர்கள் தமது மாகாணத்திலேயே சிகிச்சைகளை பெறுகின்றனர்.

எனக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இதுவரை 25ற்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு குடிநீர் வடிகட்டும் இயந்திரங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

07. வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நிதிபங்களிப்புடனான வடக்கின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்

14,065 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் விசேட வைத்திய சிகிச்சை பிரிவுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடன் நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து 9,700 மில்லியன் ரூபாவை (60 மில்லியன் யூரோ) பெற்றுக்கொள்வதுடன் மிகுதித் தொகையான ரூபா 4,300 மில்லியன் மத்திய சுகாதார அமைச்சு வழங்குவதற்கு இணங்கியுள்ளதுடன் அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.
இதனூடாக பின்வரும் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

01.வவுனியா பொது வைத்தியசாலையில் அதிநவீன வசதிகளைக்கொண்ட இருதய மற்றும் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கான விசேட பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

02.முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் விசேட தேவையுடையோருக்கான மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலையும், அவசர விபத்து சிகிச்சை பிரிவும், உளநல மருத்துவ புனர்வாழ்வு பிரிவும் அமைக்கப்படவுள்ளது.

03.கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திசாலையில் பெண்நோயியல் தொடர்பான விசேட வைத்தியசிகிச்சை பிரிவும் விபத்து அவசர சிகிச்சை பிரிவும் அமைக்கப்படவுள்ளது.

04.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடமும், அவசர விபத்து பிரிவும் அமைக்கப்படவுள்ளது.

05.மன்னார் பொது வைத்தியசாலையில் விசேட சத்திர சத்திரசிகிச்சை பிரிவு அமைக்கப்படவுள்ளது.

மேற்படி திட்டங்கள் 03 வருடகால திட்டங்களாகும். இவை நடைமுறைப்படுத்தப்படுமிடத்து வடக்கு மாகாண மக்களுக்கான சுகாதார சேவையின் தரம் மற்றும் வளங்களில் பாரிய முன்னேற்றம் ஏற்படுமென நம்புகின்றேன்.

08.புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டமை

 2014ம் ஆண்டில் வெளியான விசேட வர்த்தமானிக்கமைய வடக்கு மாகாணத்தில் ஏறத்தாள 900 சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 2013 ஆம் ஆண்டில் மாகாணத்தின் ஆளணிப்பற்றாக்குறை 20 வீதமாக இருந்தது. தற்போது இது 10 வீதமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 ஓட்டுமொத்தமாக 2013ம் ஆண்டுக்கு பின்னர் சுகாதார துறையில் 1216 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது

09. மாகாண சுதேச மருத்துவ துறைசார் அபிவிருத்தி.

எமது பாரம்பரிய மருத்துவ துறையான சுதேசமருத்துவ துறையில் பல அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளன.
 வைத்தியத்துறைக்கான மூலஉபாயத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கான மூலிகைத்தோட்டம் 75 ஏக்கரில் அமைக்கப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் இணைந்ததாக சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் சுதேசமருத்துவ துறைசார் சுற்றுலாப்பிரிவு அமைப்பதற்கான திட்ட வரைபுகள் நிதிவழங்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 சித்தமருத்துவத்துறை மாணவர்களுக்கும், வைத்தியர்களுக்கும் இந்தியாவிலிருந்து வருகைதந்தவர்களால் பாரம்பரிய ஏடுகளை வாசிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

அத்துடன் மாகாண முதலமைச்சர் அவர்களினால் மிகக்குறுகிய காலம் எனது அமைச்சுக்கு பொறுப்பளிக்கப்பட்ட பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் சமூக சேவைகள் திணைக்களங்களினூடாக பின்வரும் வேலைத்திட்டங்கள்

 வவுனியா சிதம்பரபுரத்தில் 30 வருடங்களாக அகதிமுகாங்களில் தங்கி வாழ்ந்த 192 குடும்பங்களுக்கு அதே இடத்தில் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், தற்காலிக வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

10. எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள முக்கியமான செயற்திட்டங்கள்

யப்பானிய நிதியுதவியில் வடக்கு சுகாதார துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில் பாரிய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்தேன்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.