இலங்கை பிரதான செய்திகள்

வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றது. உண்மை குற்றவாளிகள் தப்பி விட்டனர். – எதிரி தரப்பு சட்டத்தரணி

குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்
வழக்கு தொடுனர் தரப்பினால் மன்றில் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றது. எனவும் தமது தரப்பினர் அனைவரும் நிரபராதிகள் எனவும் , உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட்டார்கள் எனவும் , எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும்  எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில்   நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை , வழக்கு தொடுனர் தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.
இன்றைய தினம் புதன்கிழமை  எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  கூடியது.
வழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி  மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் தரப்பில்  1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ,  மற்றும் சட்டத்தரணி லியகே  ஆகியோரும்,  5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் , 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி நம்பகத்தன்மையற்றது. 
அதனை தொடர்ந்து  1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன தனது தொகுப்புரையின் போது , இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இப்ரான் என்பவரின் சாட்சியத்தை வழக்கு தொடுனர் தரப்பு முன் நிறுத்தி உள்ளது.
குறித்த சாட்சி ஏற்கனவே மோசடி குற்றசாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நபராவார். அவரது சாட்சியத்தை முன்னிலைப்படுத்த முடியாது. அந்த சாட்சியம் நம்பகத்தனைமை அற்றது. 
 
சுவிஸ் குமார், குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் எனில் , ஏன் பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி அந்து தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை. 
 
முரண்பாடான சாட்சியங்கள். 
 
அதேபோன்று மன்றில் குற்ற செயலை கண்ணால் கண்ட சாட்சியம் என முற்படுத்தப்பட்ட இரு சாட்சிகளும் , முரண்பாடான சாட்சியங்களை அளித்துள்ளன. 
 
சுரேஷ்கரன் என்பவர் சாட்சியம் அளிக்கையில் வன்புணர்வை வீடியோ புகைப்படம் எடுத்தது தொடர்பில் தெரியாது என சாட்சியம் அளித்துள்ளார். அதே இடத்தில் நின்ற மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் வீடியோ புகைப்படம் எடுத்தது என சாட்சியம் அளித்துள்ளார். இந்த இரு சாட்சியங்களும் முரணான சாட்சியங்களை வழங்கி உள்ளது. 
 
எனவே இந்த குற்ற சம்பவம் தொடர்பில் எனது தரப்பினருக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமின்றி குற்ற சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை. என தெரிவித்தார். 
 
மதுபோதைக்கு அடிமையானவரின் சாட்சி நம்பகத்தன்மையா ?
 
அதனை தொடர்ந்து ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதி தொகுப்புரையின் போது , இந்த வழக்கின் கண்கண்ட சாட்சியாக முற்படுத்தபப்ட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் தினமும் ஒரு போத்தல் சாராயமும் 4 போத்தல் கள்ளும் குடிப்பேன் என சாட்சியம் வழங்கும் போது தெரிவித்து இருந்தார்.
தினமும் மதுபோதையில் இருக்கும் குடிக்கு அடிமையான ஒருவர் குடிபதற்காக எதுவும் செய்ய துணிந்தவர். அவருக்கு குடிக்க கொடுத்து தமக்கு வேண்டிய காரியங்களை எவரேனும் செய்து கொள்ள முடியும். எனவே அவரின் சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது என தெரிவித்தார். 
 
அதன் போது மன்று குடிகாரன் சாட்சி சொல்ல கூடாது என சட்டம் சொல்லி இருக்கா ? என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த சட்டத்தரணி அவ்வாறு இல்லை இந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளது என கூறினார். 
 
சட்டவிரோத செயலில் ஈடுபடுபவரின் சாட்சி நம்பகத்தன்மையா ?
 
தொடர்ந்து தொகுப்புரையில் தெரிவிக்கையில் , அடுத்த கண்கண்ட சாட்சியமாக முற்படுத்தப்பட்ட மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் , இவர் சட்டவிரோதமாக வீட்டில் கள்ளு விற்பனை செய்பவர். அதற்காக பல தடவைகள் போலீசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தண்டம் செலுத்தி உள்ளார். 
 
அவர் தனது சாட்சியத்தில் 2ஆம் ,  3ஆம் , 5 ஆம் , மற்றும் 6ஆம் எதிரிகள் தன்னுடைய வீட்டில் இருந்து கள்ளு அருந்தும் போது தான் வித்தியாவை கடத்த திட்டம் தீட்டியதாகவும் , தன்னுடைய வீட்டில் வைத்து தான் பொறுப்புக்கள் பகிரப்பட்டதகவும் சாட்சியம் அளித்துள்ளார். அத்துடன் மாணவி கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு , படுகொலை செய்யப்படும் வரையில் கூட இருந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். அவ்வாறு எனில் அவர் சாட்சியமாக இந்த மன்றில் முற்படுத்தப்பட்டு இருக்க வேண்டியவர் இல்லை எதிரியாக மன்றில் நிற்க வேண்டியவர். ஏன் அவரை எதிரியாக சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை. 
 
மோசடி காரனின் சாட்சி நம்பகத்தன்மையா ?
 
அடுத்த முக்கிய சாட்சியாக முற்படுத்தப்பட்ட இப்ரான் , இவர் மோசடி வழக்கில் குற்றவாளியாக கண்டு தண்டனை கைதியாக சிறையில் இருப்பவர். அவ்வாறான மோசடி குற்ற சாட்டில் உள்ள ஒருவரின் சாட்சியம் நம்பகத்தன்மை உடையதா ?
 
இக் குற்றத்திற்கு இரு நோக்கங்களா ?
 
ஒரு குற்றத்திற்கு ஒரு நோக்கம் இருக்கலாம் ஆனால் இந்த குற்றத்திற்கு இரு நோக்கங்கள் உள்ளதாக வழக்கு தொடுனர் தரப்பு குற்றம் சாட்டுகின்றது. 6ஆம் எதிரி மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகவும் , அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து அவமானப்படுத்தியதால் பழிவாங்க செய்யப்பட்டதாகவும். மற்றையது சுவிஸ் நாட்டில் வசிக்கும் நபர் அங்குள்ள மாபியா கும்பல் கேட்டதற்கு இணங்க ஆசிய பெண் ஒருவர் கடத்தபப்ட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யும் நேரடி வீடியோ காட்சியாக இக் குற்றம் புரியப்பட்டதாகவும். 
 
இதில் முதாலவது நோக்கமாக கூறப்படும் ஒரு தலை காதல் பிரச்சனை தொடர்பில் மாணவியின் தாய் சாட்சியம் அளிக்கவில்லை. அவரிடம் பிரதான விசாரணையின் போது , மாணவி பாடசாலை சென்று வரும் போது பிரச்சனை ஏதேனும் இருந்ததா ? மாணவிக்கு காதல் தொடர்பு இருந்ததா ? என கேட்ட போது இல்லை என பதில் அளித்துள்ளார். குறுக்கு விசாரணையின் போது பாடசாலை சென்று வரும் போது யாரேனும் தொந்தரவு செய்வதாக வீட்டில் கூறியுள்ளாரா என கேட்ட போது அதற்கும் இல்லை என பதில் அளித்துள்ளார். 
 
மாணவியை 6ஆம் எதிரி ஒரு தலையாக காதலித்து தொந்தரவு பண்ணி இருந்தால் , மாணவியின் வீட்டாருக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும். 
 
முரணான சாட்சியம். 
 
அடுத்து சம்பவ இடத்தில் நின்றதாக கண்கண்ட சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மற்றும் மாப்பிள்ளை எனும் புவனேஸ்வரன் ஆகியோர் முரணான சாட்சியங்களை அளித்துள்ளனர். 
 
சுரேஷ்கரன் வீடியோ எடுத்தது தெரியாது என சாட்சியம் அளிக்கின்றார். மாப்பிள்ளை வீடியோ எடுத்தார்கள் என சாட்சியம் அளித்தார். அதேபோன்று சுரேஷ்கரன் மாணவியை இழுத்து சென்றதாக சாட்சியம் அளித்தார். மாப்பிள்ளை மாணவியை நால்வர் கைகள் மற்றும் கால்களை பிடித்து தூக்கி சென்றதாக சாட்சியம் அளித்துள்ளார். அதேபோன்று சுரேஷ்கரன் மாணவியின் உடைகளை பாழடைந்த வீட்டுக்குள் வைத்து கழட்டியதாக சாட்சியம் அளித்தார். மாப்பிள்ளை பற்றைக்குள் வைத்து உடைகளை கழட்டியதாக சாட்சியம் அளித்தார். 
 
உண்மை குற்றவாளிகள் தப்பி விட்டனர். 
 
சட்ட வைத்திய அதிகாரி சாட்சியத்தின் போது மாணவியின் நகங்கலினுள் தசை துண்டுகள் இருந்ததாகவும் அதனால் அதனை பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் கூறி இருந்தார். 
 
நகங்கலினுள் தசைகள் இருந்து இருப்பின் மாணவி எதிரிகளுடன் போராடியதால் அவர்களுக்கு நக கீறல்கள் ஏற்பட்டமையால் தான் எதிரிகளின் தசைகள் நகங்கலினுள் இருந்து இருக்கும். அவ்வாறு எனில் மாணவியின் கைகள் சுதந்திரமாக எதிரியுடன் போராட கூடிய நிலையில் இருந்து இருக்கு.அவ்வாறு எனில் மாணவியின் கைகளை அழுத்தி பிடிக்கவில்லை. ஆனால் கண்கண்ட சாட்சியம் என சாட்சி அளித்தவர்கள் கைகளை எதிரிகள் பிடித்து இருந்ததாக கூறினார்கள். 
 
அதேபோன்று மாணவியின் தலையில் ஏற்பட்ட காயம் விழுந்ததால் ஏற்பட்ட காயம் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஏனெனில் விழுந்து இருந்தால் மண்டையோடு வெடித்து இருக்கும் என , தலையில் ஏற்பட்ட காயம் மட்டமான ஆயுதத்தால் தாக்கியதால் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார். அதனால் மனைவியை தலையில் தாக்கிய பின்னர் வன்புணர்வு செய்துள்ளனர். 
 
போதுமான ஆதாரங்கள் இல்லை. 
 
இந்த குற்ற செயலுடன் தொடர்புடைய போதுமான சான்று பொருட்கள் ஜின்டேக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கபப்ட்டு இருந்தது. அதன் பரிசோதனையில் எந்த அறிக்கையும் எதிரிகளுடன் ஒத்து போகவில்லை. 
 
எனவே இந்த குற்ற சாட்டுகள் தொடர்பில் எதிரிகள் மீது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. உண்மை குற்றவாளிகள் தப்பி சென்றுவிட்டனர்.  என தெரிவித்தார். 
 
பொய் சாட்சியம் வழங்கினார். 
 
அதனை தொடர்ந்து 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் தொகுப்புரையின் போது ,
கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மாணவியின் கையை யார் பிடித்தது , காலை யார் பிடித்தது என தெளிவாக சாட்சியம் அளித்தவர் , வீடியோ புகைப்படம் எடுத்தது தொடர்பில் தெரியாது என சாட்சியம் அளித்துள்ளார். 
 
வீடியோ எடுத்த பார்த்ததாக கூறிய மாப்பிள்ளையின் சாட்சியம் நம்பகத்தன்மையற்றது என 5 ஆம் எதிரியின் சட்டத்தரணி கூறியள்ளார். அதனையே நானும் கூறுகிறேன். 
 
ஆலடி சந்தியில் 12ஆம் திகதி (மாணவி கடத்தப்படுவதற்கு முதல் நாள்) சுவிஸ் குமார் உள்ளிட்டவர்களை வாகனத்தில் கண்டதாக சாட்சியம் அளித்த இலங்கேஸ்வரன்,  தான் கடையில் நின்று பார்த்த போது சுவிஸ்குமார் கறுத்த கண்ணாடி அணிந்து வித்தியாவை பார்த்ததை பார்த்தேன் என சாட்சியம் அளித்தார். 
 
கறுப்பு கண்ணாடியினால் பார்க்க முடியாது. 
 
பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் கறுப்பு கண்ணாடி அணிந்து பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். ஏனெனில் அவர்கள் யாரை எங்கே பார்க்கின்றார்கள் என்பதனை எதிரில் உள்ளவர்கள் அவதானிக்க முடியாது என்பதனால் , அப்படி இருக்கையில் சுவிஸ் குமார் கறுப்பு கண்ணாடி போட்டு வித்தியாவை தான் பார்த்தார் என எவ்வாறு அவரால் சாட்சியம் அளிக்க முடிந்தது. என தெரிவித்தார். 
 
அதன் போது சட்டத்தரணி மன்றுக்கு கறுத்த கண்ணாடி கொண்டு வந்து அதனை தான் அணிந்து காட்டி தன்னுடைய கருமணி எங்கே பார்க்கின்றது என அவதானிக்க முடியாது என மன்றில் கூறினார். 
 
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் பார்க்கும் திசையை வைத்து யாரை பார்க்கிறீர் என கூற முடியும். என தெரிவித்தனர். அதன் போது நீதிபதி மா.இளஞ்செழியனும் கறுத்த கண்ணாடியை அணிந்து பார்த்தார். 
 
மோசடி செய்தவர் மன்றில் பொய் சாட்சி அளித்தார். 
 
அதனை தொடர்ந்து மற்றுமொரு முக்கியமான சாட்சியமாக முற்படுத்தபப்ட்ட இப்ரான் என்பவர் மோசடிக்காரன். அவர் மோசடி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிப்பவர். அவர் இந்த கௌரவ மன்றிலும் மோசடி சாட்சி அளித்துள்ளார். 
 
தனக்கு இந்த குற்ற செயல்கள் தொடர்பில் சுவிஸ் குமார் மாத்திரம் தான் கூறியதாகவும் வேறு எந்த எதிரிகளும் இந்த குற்ற சம்பவம் தொடர்பில் தன்னுடன் கதைக்க வில்லை என சாட்சியம் அளித்துள்ளார். 
 
அதேபோன்று தான் சிறையில் , சிறைசாலை அத்தியட்சகரின் அறையில் வைத்திய பரிசோதனையை முடித்து வெளியே வந்த போதே குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகரை கண்டதாக சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியம் அளிக்கையில் ,அவ்வாறு மருத்துவர்கள் எவரையும் தான் காணவில்லை என சாட்சி அளித்தார்.
அதேபோன்று தான் கடனட்டை (கிரடிட்கார்ட்) மோசடி வழக்கில் தான் தண்டனை பெற்றதாகவும், அதுவும் தான் செய்யாத குற்றம் எனவும் , தனது நண்பன் செய்த குற்றத்திற்காகவும் தான் சிறை தண்டனை அனுபவிப்பதாக சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியம் அளிக்கையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதனால் தான் சிறை தண்டனை அனுபவிப்பதக சாட்சியம் அளித்தார்.
 
ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா ?
இப்ரான் தனது சாட்சியத்தில் சொல்கின்றார் , சுவிஸ் நாட்டில் மாபிய கும்பல் உள்ளது. அவங்கள் ஆசிய பெண்ணை கடத்தி கற்பழித்து படுகொலை செய்வதனை நேரடி வீடியோ எடுக்க வேண்டும் என சுவிஸ் குமாருடன் ஒப்பந்தம் செய்ததாக , 
 
ஏன் ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா ? சிங்கப்பூரில் எந்த அழகான பெண்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் இலங்கையில் புங்குடுதீவில் பாடசாலையில் கற்கும் மாணவி தான் வேண்டுமா ? அந்த சுவிஸ் மாபியா கும்பலுக்கு, இந்த கதை எல்லாம் திரைப்பட கதை போன்று உள்ளது. இந்த கதையை மோசடி குற்ற சாட்டில் சிறை தண்டனை பெற்றவர் சட்சியமாக கூறியுள்ளார். இதனை நம்பவே முடியாது. 
 
12ஆம் திகதி சுவிஸ்குமார் கொழும்பில் நின்றார். 
 
அத்துடன் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் எனது தரப்பான 4ஆம் எதிரி , 7ஆம் எதிரி மற்றும் 9ஆம் எதிரி ஆகியோர் கொழும்பில் தான் நின்றனர். 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனத்தில் எனது தரப்பை சேர்ந்தவர்களை கண்டதாக இலங்கேஸ்வரன் என்பவர் இந்த மன்றில் கூறிய சாட்சி சொல்லிக்கொடுக்கபப்ட்ட பொய் சாட்சி ஆகும். 
 
இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய 1 தொடக்கம் 22 வரையிலான சான்று பொருட்கள் எவையும் எனது தரப்பினர் குற்றவாளிகள் என காண்பதற்கு எதுவாக இல்லை. எனது தரப்பினர் மீதான குற்ற சாட்டுக்கள் எவையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என தனது தொகுப்புரையில் தெரிவித்தார். 
 
எழுத்து மூல சமர்ப்பணங்களை 15ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க உத்தரவு. 
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு தொகுப்புரை முடிவுறுத்தப்பட்டது. வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் எழுத்து மூலம் சமர்ப்பணங்கள் இருப்பின் அதனை எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு மன்று உத்தரவு இட்டது. 
 
27ஆம் திகதி தீர்ப்பு. 
 
அதனை அடுத்து எதிர்வரும் 27ஆம் திகதி மாணவி கொலை வழக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தீர்ப்பாயம் அறிவித்தது. அன்றைய தினம் மாணவியின் தாயாரை மன்றுக்கு வருமாறு மன்று அறிவித்தது. 
 
11ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டு உள்ளார். அவரை 27 ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு மன்று சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு இட்டது. 
 
அதனை தொடர்ந்து ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 27ஆம் திகதி  வரையில் விளக்க மறியிலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது. 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.