Home இலங்கை இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? – நிலாந்தன்

இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? – நிலாந்தன்

by admin

இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா?
‘நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது’ என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது தெரிவித்தார். இருபதாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு பல நியாயங்கள் கூறப்படலாம். ஆனால் பிரயோக நிலையில் இப்போதைக்கு தேர்தல்களை ஒத்தி வைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு கிழக்கிற்கு வெளியே வைக்கப்படும் எந்தவொரு தேர்தலும் அரசாங்கத்திற்கும், மகிந்தவிற்கும் இடையிலான பலத்தைச் சோதிக்கும் ஓர் அமிலப் பரிசோதனையாக அமையக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.

இருபதாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்த அதே காலப்பகுதியிலேயே யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. அது ஓர் இடைக்கால அறிக்கை. அது இறுதியானது அல்ல. அது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. அதில் இருப்பவற்றை அடிப்படையாகக் கொண்டு முழு நிறைவான ஒரு விவாதத்தை இப்பொழுது நடத்த முடியாது. அந்த அறிக்கை மொத்தம் 116 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. அதில் 44 பக்கங்கள் மட்டுமே வழிநடத்தற் குழுவால் தயாரிக்கப்பட்டவை. மிகுதி 72 பக்கங்களும் கட்சிகளின் கருத்துக்களை கொண்ட பின்னிணைப்புக்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி அறிக்கை வழிநடத்தற்குழுவின் பொதுக்கருத்துக்கு வெளியே நிற்கிறது. குறிப்பாக கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்கும் பொதுக்கருத்துக்குமிடையே முரண்பாடுகள் உண்டு. கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்கும் ஏனைய கட்சிகள் முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்குமிடையே முரண்பாடுகள் உண்டு. இடைவெளிகள் உண்டு. இப்படிப் பார்த்தால் இவ் இடைக்கால அறிக்கையானது நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையின் ஒரு குறுக்குவெட்டுமுகத்; தோற்றம் என்று கூறலாம்.

தாயகக் கோட்பாடு அதாவது வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, ஒற்றையாட்சிக்குப் பதில் கூட்டாட்சி போன்ற அடிப்படைகளை  இவ் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அது பதின்மூன்றைத் தாண்டிச் செல்கிறது என்று சம்பந்தர் கூறுகிறார். ஆனால் மகிந்த அணி பதின்மூன்றுக்குள் நின்றால் தான் நாம் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறது. இப்போதுள்ள நிலவரங்களின்படி இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு அதன் இறுதி வடிவத்தை தயாரிப்பது என்று சொன்னால் இந்த அறிக்கை மேலும் வளர்ந்து செல்லுமா? அல்லது தேய்ந்து செல்லுமா? என்ற கேள்வியே தமிழர்களுக்கு முக்கியமானது. இக்கேள்வியை மறுவளமாகக் கேட்டால் இந்த அறிக்கையானது மேலும் வளரக்கூடிய ஓர் அரசியற்சூழல் உண்டா? அல்லது தேயக்கூடிய ஓர் அரசியற்சூழல் உண்டா? என்ற கேள்வியே இங்கு முக்கியமானது.

இருபதாவது திருத்தத்தின் மூலம் மகிந்தவோடு ஒரு பலப்பரீட்சை செய்வதை அரசாங்கம் ஒத்திப்போட்டிருக்கிறது. மகிந்தவுடனான பலப்பரீட்சை என்பது அதன் ஆழமான பொருளில் சிங்கள இனவாதத்துடனான பலப்பரீட்சைதான். இந்த இடத்தில் தான் சில கேள்விகளை எழுப்பவேண்டியிருக்கிறது. மகிந்த இனவாதி என்றால் ரணிலும், மைத்திரியும் இனவாதிகளில்லையா? இனவாதத்தோடான மோதல் எனப்படுவது ராஜபக்ஷ சகோதரர்களுடனான மோதல் மட்டும்தானா? பல நூற்றாண்டுகளாக நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்புடனான மோதல் இல்லையா? இதில் மைத்திரியும், ரணிலும் அக்கட்டமைப்புக்கு வெளியே காணப்படுகிறார்களா? அல்லது அக்கட்டமைப்புக்குள் நின்று கொண்டு வெளியில் வேறொரு முகத்தைக் காட்டுகிறார்களா? அல்லது ஒரு கதைக்காக அவர்கள் இனவாதிகள் இல்லையென்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் இனவாதத்தை தோற்கடிப்பதற்கான நிறுவனமயப்பட்ட செயற்பாடுகள் எதையாவது அவர்கள் இதுவரையிலும் முன்னெடுத்திருக்கிறார்களா?

இக்கேள்விகளுக்கு விடை தேடிச் சென்றால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். இடைக்கால அறிக்கையானது மேலும் வளர்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே தெரிகின்றன. அது சிறுத்துப் போகக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. மகிந்த அச்சம் எனப்படுவது ஒரு தனிநபருக்கெதிரான அச்சம் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளாக நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த கட்டமைப்புக்கு எதிரான ஓர் அச்சம்தான். நன்கு கட்டமைக்கப்பட்ட அந்த சிந்தனைக்கு எதிராக நிறுவனமயப்பட்ட செயற்பாடுகள் எதையும் கூட்டரசாங்கம் இதுவரையிலும் முன்னெடுத்திருக்கவில்லை.

உதாரணமாக புதிய யாப்புக்கான வெகுசன வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நோக்கத்தோடு கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையில் ‘எலிய’ என்ற ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. யுத்த வெற்றிவாதத்தை முடுக்கி விடுவதே இந்த அமைப்பின் நோக்கம் என்று தெரிகிறது. ஆனால் ஒரு வெகுசன வாக்கெடுப்பிற்காக சிங்களப் பொது உளவியலை தயார்ப்படுத்தும் நோக்கத்தோடு வெண்தாமரை இயக்கத்தைப் போன்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பல வாரங்களுக்கு முன்னரே அரசுத்தலைவருடனான சந்திப்பு ஒன்றின் போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரையிலும் அது செயல்வடிவம் பெறவில்லை. கட்டமைக்கப்பட்ட, நன்கு நிறுவனமயப்பட்ட சிங்கள – பௌத்த மேலாதிக்கச் சிந்தனைக்கு எதிராக அதே போன்று நிறுவனமயப்பட்ட ஒரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான திராணி கூட்டரசாங்கத்திடம் உண்டா? நிச்சயமாக இல்லை. ஒரே நேரத்தில் இனவாதிகளாகவும், லிபரல் ஜனநாயகவாதிகளாகவும் முகம் காட்டும் ஒரு வித வழுவழுத் தலைமை இது. இப்படிப்பட்ட தலைமையால் இனவாதத்தை எதிர்கொள்வதற்கு விசுவாசமான அர்ப்பணிப்போடு கூடிய கட்டமைப்புக்களை உருவாக்க முடியாது. மாறாக மேற்கு நாடுகளுக்கு கணக்குக் காட்டும் மேம்போக்கான வீட்டு வேலைகளைச் செய்ய  மட்டுமே முடியும்.

இடைக்கால அறிக்கையை மேலும் வளர்த்துச் செல்வதென்றால் கூட்டமைப்பின் பரிந்துரைகளில் காணப்படும் அம்சங்களை உள்ளடக்க வேண்டியிருக்கும். அதைச் செய்வதற்கு இனவாதம் விடாது. அதை மீறிச் செய்தால் அது மகிந்தவை பலப்படுத்துவில் போய் முடிந்து விடும். எனவே மகிந்தவைப் பலப்படுத்தக்கூடாது என்று சொன்னால் அதாவது இனவாதத்தைப் பலப்படுத்தக் கூடாது என்று சொன்னால் இடைக்கால அறிக்கையை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்வது கடினமாயிருக்கும்.

இத்தகையதோர் அரசியற் சூழலில் பதின்மூன்றாவது திருத்தத்தை திருப்பகரமான விதங்களில் தாண்டிச் செல்லாத ஒரு தீர்வுக்கான வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. பதின்மூன்றைப் பலப்படுவத்துவது அல்லது மகிந்த கூறிய பதின்மூன்று பிளஸ் போன்றவற்றுக்கான வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. மகிந்தவோடான ஒரு பலப்பரீட்சைக்கு போவது என்று சொன்னால் அப்படிப்பட்ட ஒருதீர்வைத்தான் முன்வைக்க முடியும். அப்படி ஒரு பலப்பரீட்சையை எவ்வளவு காலத்திற்கு இந்த அரசாங்கம் ஒத்தி வைக்கும்? ஒன்றில் புதிய யாப்பைக் கைவிட வேண்டும்.அல்லது என்றைக்கோ ஒரு நாள் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒரு நிலை வரும் பொழுது தமிழ் முஸ்லிம் மலையக வாக்குகளே கூட்டரசங்காத்தின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகின்றன. கடும் போக்குச் சிங்கள வாக்குகள் முழுவதும் மகிந்தவிற்கே விழும். கூட்டரசங்காத்தில் விரக்தியுற்ற சிங்கள வாக்காளர்களும் மகிந்தவிற்கே வாக்களிப்பர். இதில் தமிழ் – முஸ்லிம் வாக்குகளே தீர்மானிக்கும் வாக்குகளாக அமையக்கூடும்.

தமிழ் வாக்காளர்கள் கூட்டரசாங்கத்தின் மீதும் , சம்பந்தர், சுமந்திரன் மீதும் முன்னரை விட அதிகமான அளவிற்கு அதிருப்தியுற்று விட்டார்கள். 2015ல் ஆட்சி மாற்றத்தின் போது காணப்பட்ட அதே தமிழ்ப்பொது உளவியல் இப்பொழுதும் உள்ளது என்று கூறமுடியாது. அல்லது அதன் பின் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காணப்பட்ட அதே தமிழ்ப்பொது உளவியல் இப்பொழுதும் உள்ளது என்று கூற முடியாது.இடைக்கால அறிக்கைக்குப் பின்னரான விவாதங்கள் சம்மந்தர் – சுமந்திரன் அணிக்கு எதிரான அணித்திரட்சி ஒன்றை ஊக்குவிக்கலாம். ஆனால் ஒரு மாற்று அணிக்கான ஏற்பாடுகள் எவையும் எதிர் காலத்தில் வெற்றி பெறாவிட்டால் தமிழ் மக்கள் புதிய யாப்பிற்கு விளக்கமின்றி ஆதரவாக வாக்களிக்கக்கூடும்.

ஒரு மாற்றுத்தலைமை இன்று வரையிலும் உருவாக முடியவவில்லை என்பது சம்பந்தருக்குள்ள மிகப்பெரிய பலமாகும். விக்னேஸ்வரனை தன்னுடைய செல்வாக்கு எல்லைக்குள் வைத்திருப்பதும் அவருக்குப் பலம்தான். இப்பொழுது இடைக்கால அறிக்கையை முன்வைத்து சம்பந்தருக்கு எதிராக ஓர் அணித்திரட்சிக்கு போகக்கூடிய வாய்ப்புக்கள் அவரை எதிர்ப்பவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ஒரு  மாற்று அணி உருவாகக்கூடும் என்ற அழுத்தம் ஏற்படும்போதே இடைக்கால அறிக்கை மீதான விவாதங்களில் சம்பந்தரும், சுமந்திரனும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை விட்டுக்கொடுக்காது போராட முனைவர். இல்லையென்றால் புதிய யாப்பிற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுக்கும் தரகர்களாக அவர்களே தொழிற்படுவர். ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தத்துவாசிரியராக இருக்கும் சுமந்திரன், அந்தக் கடமையை சம்பந்தனுக்கு செய்யாமல் ரணிலுக்கே நிறைவேற்றினார்’ என்று கபே தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான  கீர்த்தி தென்னக்கோன் அண்மையில் தெரிவித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே ஒரு மாற்று அணிக்கான புதிய சேர்க்கைகளே புதிய யாப்பு தமிழ் மக்களுக்கு ஒரு பொறியாக மாறுவதைத் தடுக்கப் போகின்றன.

கடந்த பல மாதங்களாக ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்காக பல சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இச்சந்திப்புக்களில் ஈடுபட்ட கட்சித்தலைவர்கள் தங்களுக்கிடையே ஒரு பொது உடன்பாட்டிற்கு இன்று வரையிலும் வந்ததாகத் தெரியவில்லை. ஒரு புறம் விக்னேஸ்வரனை நோக்கிய காத்திருப்பு. இன்னொரு புறம் ஒரு தமிழ்த்தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபடாத ஒரு வெற்றிடம். இவ்விரண்டு பலவீனங்களின் பின்னணியில் ஒரு மாற்று அணிக்கான யோசனைகள் யாவும் தேர்தல் கூட்டுக்களாகவே காணப்படுகின்றன. கூட்டமைப்பைப் போல ஒரு புதிய கூட்டு. இப்பொழுது விக்னேஸ்வரன் மாற்று அணிக்கு தலைமை தாங்கமாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. எனவே அவரைப்பற்றிய மயக்கங்கள் எதுவுமின்றி ஒருமாற்று அணியானது தனக்குரிய தலைமையை தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரனுக்காகக் காத்திருப்பது என்பது ஏனைய தலைவர்கள் தங்களுடைய தலைமைத் தகுதியை தாங்களே குறைத்து மதிப்பிடுவதுதான். தங்களை பேராளுமைகளாக கருதாத அல்லது பேராளுமைகளாக வளர்த்தெடுக்க தயாரற்ற ஒரு போக்குத்தான். மாற்று அணி என்பதை ஒரு தேர்தல் கூட்டாகவே சிந்திப்பதுதான் இதற்குக் காரணமா?

மாறாக தமிழ்மக்களின் ஒட்டுமொத்த அரசியலைக் குறித்த ஒட்டுமொத்த வழி வரைபடத்தைக் கொண்ட ஒரு தமிழ்த்தேசிய அமைப்பை கட்டியெழுப்ப முற்பட்டால் அதற்குள்ளிருந்து புதிய தலைமைகள் துலங்கக்கூடும். அதாவது ஐன்ஸ்ரீன் கூறியது போல ஒரு பிரச்சினைக்கு எங்களால் தீர்வு காண முடியவில்லை என்றால் அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எமது வழிமுறைகளைத்தான் நாம் மாற்றிச் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்று பொருள். எனவே தலைவர்களுக்காக காத்திருப்பதை விடவும் தாங்களே தலைவர்களாக மேலெழுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சம்பந்தருக்கு வெளியே இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும். 2015ல் நோர்வேயில் கலாநிதி ரகுபதியைச் சந்தித்த பொழுது அவர் ஒரு பழமொழியை எனக்குச் சொன்னார். ‘யானைகளின் ஓட்டப்பந்தயம் முடிவடைந்து விட்டது. இ;பபொழுது சுண்டெலிகள் மைதானத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன’ என்று. அரங்கில் இ;ப்பொழுதுள்ள தமிழ்த்தலைவர்கள் தாங்கள் சுண்டெலிகளா? அல்லது யானைகளா? என்று நிரூபிக்கத் தேவையான ஒரு வாய்ப்பை இடைக்கால அறிக்கை வழங்கியிருக்கிறது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Rajan September 24, 2017 - 4:42 am

சிறந்த சேவை மேலும் தொடரட்டும்

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More