இலங்கை பிரதான செய்திகள்

மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டி தமிழர்களை வாய்மூடச் சொல்கிறது மைத்திரி அரசு –பொ.ஐங்கரநேசன்

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு, தமிழ்மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய அரசியல் வேணவாக்களை மிக நாசுக்காக நிராகரித்துள்ளது. மாறாக, நாட்டில் ஏற்கனவே கோலோச்சுகின்ற பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை உறுதி செய்வதாகவே அமைந்திருக்கிறது. தமிழ்மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்தால் சிங்கள இனவாதத்தைத் தூண்டி மகிந்த ராஜபக்ச மீண்டும் பலம்பெற்று விடுவார் என்று அரசு தரப்புச் சொல்கிறது. மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே மைத்திரி அரசு தமிழர்களை வாய்மூடச் சொல்கிறது என்று வடக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மல்லாகம் கல்லாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.09.2017) மாதர் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசால் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்துக்கே முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதை எமது தமிழ்த்தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். இலங்கையின் அரசியல் தலைவிதியை வரலாற்றுக் காலம் தொட்டு பௌத்த மதபீடங்களே தீர்மானித்து வருகின்றன. சிங்களப் பேரினவாதக் கருத்துகளின் ஊற்றுக் கண்களாகவும் இவையே விளங்கி வந்திருக்கின்றன. இந்நிலையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்குத் தமிழ்த்தலைமைகள் ஏற்றுக் கொண்டிருப்பது தமிழர்களின் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது.
தமிழ்க்கட்சிகளின் தலைமைகளைத் தனக்குச் சாதகமாக வளைத்துப் போடுவதில் நல்லாட்சி அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. அரசாங்கம் சொல்வதைப் போன்றே, இவர்களும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கூறி வருகிறார்கள். வடக்கு மாகாணசபையில் இருந்தும் ஏகோபித்த விதமாக ஒரு தீர்மானம் வந்து விடக்கூடாது என்பதற்காக மாகாணசபையைப் பல அணிகளாக உடைப்பதிலும் ரணில் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் பௌத்த சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்வதில் தமிழர் தரப்பு மிகவும் பலவீனமாகவே உள்ளது.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது, எம்மீதான சர்வதேசக் கவனம் மிக அதிகமாக இருந்தது. விட்டஇடத்தில் இருந்து தொடரும் அஞ்சலோட்லோட்டம்போல, எமது போராட்டத்தை ஜனநாயக வழிமுறைகளிலான போராட்டமாகத் தீவிரமாகத் தொடர்ந்திருந்தால் சர்வதேச சூழலை எமக்கானதாக மாற்றியிருக்க முடியும். ஆனால், நாங்கள் ஆட்சி மாற்றம்தான் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வைத்தரும் என்று சொல்லி எமது கட்சித் தலைவர்களை நம்பி ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்தோம். அதையே ஒரு பெரும் புரட்சியாக நம்பிய  நாம் இன்று கடைசியில் எல்லோராலும் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.