இலங்கை பிரதான செய்திகள்

இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு:

தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை தீர்க்கமாக  வெளிப்படுத்தும் ஒரு வரைபை  உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது.

நாளாந்தம் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற நீண்ட அமர்வுகளின் பின்னர் 2016 தை 31 அன்று ஓர் அரசியல் தீர்வு முன்வரைபினை மக்கள் கருத்தறிவதற்காக எமது அரசியல் உபகுழு வெளியிட்டது.

தமிழர் தாயகம், இலங்கைத் தீவு மற்றும் அனைத்துலக நாடுகளில் வாழும் பல்வேறு தமிழ் தரப்புக்களிடமிருந்து எழுத்து வடிவிலும், வாய்மொழி மூலமாகவும் பெறப்பட்ட பெருமளவான அறிவுரைகளை உள்வாங்கி, குறித்த தீர்வுத் திட்டம் இறுதி வடிவம் செய்யப்பட்டது. 2016 ஏப்ரல் 10 ஆம் திகதி அந்த இறுதி வரைபு எம்மால் வெளியிடப்பட்டது.

இவ்வாறாக, தமிழ் மக்களின் ஏகோபித்த பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இந்த தீர்வுத்திட்ட வரைபானது, இலங்கை அரசமைப்பு சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் எம்மால் வழங்கப்பட்டது. அத்துடன்,  சிறீலங்கா அரசாங்கத்தின் அரசமைப்புக்கான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிடமும் எம்மால் நேரடியாகக் கையளிக்கப்பட்டது. மேலும் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் அந்தத் தீர்வுத்திட்டம் நேரடியாகச் சேர்ப்பிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதியாகவே இந்த அசியல் தீர்வுத் திட்டத்தை வெளியிட்டது என்பதனை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்!’ பேரணிகள் நிரூபித்தன. இந்தத் தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள், பல்லாயிரக் கணக்கில் திரண்டு அங்கீகரித்திருந்தனர்.

அந்த வகையில் தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வு இன்னதுதான் என்பது மீளவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் – தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசத்தின் அடிப்படை அரசியற் பிறப்புரிமைகளான – பிரிபடாத தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரம் என்பவற்றை சிறீலங்காவுக்கான அரசமைப்பு உருவாக்க சபையின் வழிகாட்டல் குழுவால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை முற்றாக நிராகரித்துள்ளது.

அரசமைப்பு உருவாக்க சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட, தமிழ் மக்களின் அடிப்படை அரசியற் பிறப்புரிமைகளை வழிப்படுத்தல் குழுக் கூட்டங்களில் வலியுறுத்தவில்லை என்பது மட்டுமன்றி, இந்த அடிப்படைப் பிறப்புரிமைகளை மறுதலிக்கும் நிலைப்பாட்டுக்கு ஒப்புதலும் அளித்துள்ளனர்.

வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு தாம் வழங்கியுள்ள பின்னிணைப்பில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிறப்புரிமைகள் மறுதலிக்கப்படுகின்ற இந்த இடைக்கால அறிக்கையை பிரதான இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் தாமும் அதனை ஏற்றுக் கொள்ளத் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எழுத்துமூலம் வாக்குறுதி அளித்துள்ளமை மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது.

புதிய அரசமைப்பு உருவாக்கம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு காணப்படுதல் என்பதனை விடுத்து, ‘தீர்வு’ இன்னதுதான் என்ற விடயத்தில் அரசாங்கத்துடன் முதலில் ஓர் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். அதன் பிற்பாடு, அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்பதுவே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடாகும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள குறித்த இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கமானது – இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்கள் குழுமங்கள் ஒவ்வொன்றையும் இனரீதியான தனித்துவத்தின் அடிப்படையில் அங்கீகரிக்காமல், இலங்கை மக்கள் அனைவரையும் ‘சிறீலங்கர்கள்’ என்கின்ற ஒரே அடையாளத்தின் கீழேயே கொண்டுவருகின்றது. ஒட்டு மொத்தமான இலங்கை மக்களையும் ‘சிறீலங்கர்கள்’ என்று அடையாளப்படுத்துவதானது சிங்கள பௌத்த மேலதிக்கத்தை மேலும் பலப்படுத்துவதாக மட்டுமே அமையும் என்பதனையே வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது. அறுதிப் பெரும்பான்மையாக சிங்கள பௌத்தர்களே வாழும் ஒரு நாட்டில் – வரலாற்று ரீதியான இன முரண்பாடும் இருக்கின்ற ஒரு பின்னணியில் – ஜனநாயக விழுமியங்கள் இங்கு பாதுகாக்கப்படமாட்டாது என்பதனால், இந்த இடைக்கால அறிக்கையைத் தமிழ் மக்கள் பேரவை  முற்றாக நிராகரிக்கின்றது.

இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் அல்லாமல் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும். எனவே, அரசமைப்பு உருவாக்க முயற்சிகளுக்கு முன்னதாக தமிழர்கள் ஒரு தனித் தரப்பாகவும் சிறீலங்காக அரசாங்கம் ஒரு தனித் தரப்பாகவும் கொள்ளப்பட்டு, ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் ஊடாக, சமூக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதன் மூலமாக மட்டுமே தமிழ்த் தேசியத்தின் அடிப்படைப் பிறப்புரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும் என்றே தமிழ் மக்கள் பேரவை நம்புகின்றது.

அதன் காரணமாகNவு தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட தீர்வு திட்டத்தில் ஒரு சமூக உடன்பாட்டின் ஊடாக தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும், அதன் பின்பே அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் தாம் கொண்டுள்ள நலன்களைப் பாதுகாக்க முனைகின்ற உலக சக்திகள், இங்கு ஐக்கியத்தையும் அமைதியையும் பேண விரும்புகின்றன. தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சனைக்குத் தீர்வு காணவல்ல ஒரு சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மட்டுமே நிரந்தரமான ஐக்கியமும் அமைதியும் இந்த தீவில் பேணப்பட முடியும் என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால், அத்தகைய ஒரு சமூக ஒப்பந்தத்தைச் சாத்தியமாக்குவதற்கு சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்கின்றது.

03.10.2017                                    தமிழ் மக்கள் பேரவை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers