இந்தியா பிரதான செய்திகள்

கருணை கொலையை அங்கீகரிப்பது சாத்தியம் இல்லை:-

கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்கினால், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சாத்தியம் இல்லை என உச்ச நீதிமன்றில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு, ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றில்   தாக்கல் செய்த ஒரு மனுவில்  நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள், குணமடைய வாய்ப்பு இல்லாதநிலையில்,   அவர்களது செயற்கை சுவாச கருவிகளை அகற்றி, அவர்கள் மரணத்தை தழுவ அனுமதிக்கும் கருணை கொலை முறைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரியிருந்தது.
இந்த கருணைக்கொலை முறையானனது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது எனவும் அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு, வாழ்வதற்கு மட்டுமின்றி, சாவதற்கும் உரிமை வழங்கி இருப்பதால், கருணை கொலை முறைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்  எனவும் தெரிவித்திருந்தது.

இந்த மனு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் முன்னிலையான  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா  கருணை கொலை அங்கீகரிக்கப்பட்டால், அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதை பொது கொள்கையாக உருவாக்க முடியாது எனத் தெரிவித்தார்.

ஒருவரது மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது எனவும்  ஒருவர் நல்ல மனநிலையில் இல்லாதவராக இருந்தால், அவர் தனது சிகிச்சையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்க உகந்தவர் அல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும் மருத்துவ வாரியம்தான் அதை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் எனவும்  அதுதான் இறுதி அதிகாரம் படைத்தது எனவும் அந்த அளவுக்கு அதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவற்றை உச்ச நீதிமன்றமே உருவாக்கலாம் எனவும் தெரிவித்தர்h.

இவ்விவகாரத்தில், அருணா ஷான்பாக் என்பவரது வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில், ஒரு வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளதாகவும்    சட்ட ஆணையமும் சிபாரிசுகளை அளித்துள்ளது எனவும்  அவை அரசின் பரிசீலனையில் உள்ளன எனவும்  தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை இன்றும்  தொடர்கிறது.

 

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.