இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் கைதிகளின் விடயம் சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானவையாகக் கருதப்பட முடியாது:-

அரசியல் கைதிகளின் விடயத்தில், அரசியல் அடையாளங்களும் காணப்படும் நிலையில், இவர்கள் தொடர்பான வழக்குகள், சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானவையாகக் கருதப்பட முடியாது என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் வலியுறுத்தவுள்ளார்.

இப்பிரேரரணை சமர்ப்பிக்கப்படுமென, ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், பிரேரணையின் உள்ளடக்கங்கள், நேற்று (16) வெளியிட்பட்டுள்ளன.

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள் அனைவரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும், அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும், இலங்கை அரசாங்கத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக உள்நாட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக, உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.

“இந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை, இலங்கை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசாங்கத்தின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது” எனக் குறிப்பிடுவார்.

தொடர்ந்து அவர், கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் போன்று, இக்கைதிகளும் ஏன் மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட முடியாதவர்களாக உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலிருப்பதாக, சபையில் தெரிவிப்பார்.

மேலும், இக்கைதிகள் விடயத்தில், அரசியல் தலையீட்டையும் அவர் வலியுறுத்தவுள்ளார். “இந்த வழக்குகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் முழுமையாக உள்ளவையென்பதாகக் கருத முடியாது. இவ்வழக்குகள், அரசியல் அடையாளங்களைக் கொண்டிருப்பதனால், இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது. இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால், கைதிகளாக உள்ளவர்களில் அநேகமானவர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்க மாட்டாதென்பதும், அவர்கள் பயனுள்ள பிரஜைகளாக இருந்திருப்பார்கள் என்று கூறுவதில் நியாயமிருப்பதைத் தெரிவிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாகவும் நோக்க வேண்டிய கடப்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்த விடயம், அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பையும் அமைதி நிலைமையையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும்” என்று அவர் குறிப்பிடுவார்.

தவிர, இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடயங்களுக்காக, இவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் போது அனுபவிக்கும் சிறைத்தண்டனையை விட அதிக காலம், ஏற்கெனவே இவர்கள் சிறையில் காணப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டவுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இவர்களின் குடும்பங்கள், இவர்களின்றி வேதனையில் வாடுவதையும் குறிப்பிடுவார்.

தவிர, வவுனியாவிலிருந்து அநுராதபுரத்துக்கு வழக்கு மாற்றப்படுவதற்கு, சாட்சிகளின் பாதுகாப்பே காரணமாகக் கூறப்படும் நிலையில், சாட்சிகளுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை எனில், வழக்குகளை இடமாற்றாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்பை அதிகரித்திருக்க முடியும் எனக் கூறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர், வழக்குகள் இடமாற்றப்பட்டமையால், சந்தேகநபர்களுக்கு ஏற்பட்டுள்ள மொழிப்பிரச்சினை குறித்தும், சபையின் கவனத்துக்குக் கொண்டுவரவுள்ளார்.

இறுதியாக அவர், “வழக்கு இடமாற்றத்துக்கு எதிராகக் கைதிகள், தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலைமையானது, அவசரமான அடிப்படையில் கையாளப்பட வேண்டியதாகும். அத்துடன் மேற்குறிப்பிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இக் கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்” என்று வலியுறுத்தவுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.