Home இலங்கை சவச்சாலையாகிய யாழ் மருத்துவமனை!!! 30 வருடங்கள் கடந்து போயின…

சவச்சாலையாகிய யாழ் மருத்துவமனை!!! 30 வருடங்கள் கடந்து போயின…

by editortamil

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ் மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 30 வருடங்கள் கடந்துவிட்டன.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ஊடாக தமது அரசியல் பிராந்திய நலன்களை இந்தியா சாதிக்க நினைத்தது. இந்திய இலங்கை உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்கள் தரப்பால் புறக்கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இலங்கை இந்திய ஒப்பந்ததத்தை பாதுகாக்கவும் இந்தியப் படைகள் தமிழ் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதிராக யுத்தத்தை தொடங்கினர். 1987 ஒக்டோபர் மாதம் இந்தியப் படைகள் யுத்தம் தொடங்கிய மாதம். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற யுத்தம் செய்வதாக இந்தியா கூறியது. இதன்படி இலங்கை அரசுகள் தமிழ் மக்கள்மீது எவ்வாறு இனப்படுகொலைகளை புரிந்ததோ அவ்வாறே இந்திய அரசும் ஈழத் தமிழர்கள்மீது இனப் படுகொலைகளைப் புரிந்தது. அத்தகைய இனப்படுகொலைகளில் ஒன்றே யாழ் போதனா வைத்தியசாலை இனப்படுகொலையும்.

யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் வைத்தியசாலை வடக்கிழக்கு மக்களின் வைத்திய தேவையை நிவர்த்தி செய்யும் மையமாகும். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்ட அன்றைய நாட்களில் மக்கள் வீடுகளுக்குள்ளும் பதுங்குகுழிகளுக்குள்ளும் பதுங்கி இருந்தனர். போரில் காயமடைந்த மக்கள் வைத்தியசாலைக்கு மருத்துவத்திற்காக கொண்டு வரப்பட்டனர். அத்துடன் இந்தியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களும் வைத்தியசாலையில் நிறைந்து கிடந்தன. 1987 அக்டோபர் 21 தீபாவளி நாள். விடுமுறை நாளன்று அனர்த்த காலத்தில் மருத்துசேவைக்கு வந்த வைத்திய சேவையாளர்களே இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

யாழ் கோட்டையை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படைகள், அன்றைய தினம் காலையிலேயே அங்கிருந்து பீரங்கிக் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். அத்துடன் ஹெலிகப்டர்களும் தாக்குதலில் ஈடுபட்டன. யாழ் நகரமே போர்க் கோலம் பூண்டிருந்தது. இந்தியப் படைகளின் ஏவுகணை ஒன்று காலை வேளையில் வெளிநோயளர் பிரிவில் வந்து வீழ்ந்து வெடித்தது. அத்துடன் ஏழாம் கூடத்தில் விழுந்த எறிகணையினால் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள். அத்துடன் மருத்துவமனைமீது துப்பாக்கிச் கூடுகளும் நடாத்தப்பட்டன.

மருத்துவமனைக்குள் விடுதலைப் புலிகள் நடமாடுவதாக சொல்லிக் கொண்ட இந்தியப் படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து எல்லோரையும் உள்ளே செல்லுமாறு கூறினர். மேற்பார்வையாளர் அலுவலகம் முதல் மருத்துவனை வளாகமெங்கும் சராமாரியாக துப்பாக்கிச் கூடு நடாத்தினர். கண்டவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். ஒரு இந்தியப் படை சிப்பாய் நோயாளி ஒருவரை நோக்கி கிறினைட்டை கழற்றி எறிந்தார். அதில் பலர் கொல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் இருந்த சில நோயாளிகள் இறந்தவர்களைப் போல தரையில் வீழ்ந்து கிடந்தமையால் உயிர் தப்பினர். இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சும் மருத்துவமனையை அதிரச் செய்தது. மறுநாள் 22 ஆம் திகதி காலை டொக்டர் சிவபாதசுந்தரம் என்பவருடன் மூன்று தாதிமார் கைகளை உயர்த்தியபடி நாம் மருத்துவர்கள் தாதியர்கள் நாம் சரணடைகிறோம் என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை வாசலால் வந்தனர்.

அவர்கள்மீதும் இந்தியப் படைகள் சுப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். சிவபாதசுந்தரம் டொக்டர் அவ்விடத்தில் கொல்லப்பட்டார். இதைப்போலவே டொக்டர் கணேசரத்தினமும் வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இத் தாக்குதல்களில் மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் என 70 பேர் வரையில் கொன்று வீசப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நடந்த சண்டையின் இடையே சிக்கிய மக்களே உயிரிழந்தனர் என்று இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். செனரல் டெப்பிந்தர் சிங் தமது படுகொலை நடவடிக்கையை மூடி மறைத்தார்.

காலம் காலமாக ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசே இந்தப் படுகொலையை இனப்படுகொலை என்று கூறியது. மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என 2008இல் இலங்கை அரசு கூறியது.(ஆனால் அதே ஆண்டிலும் தனது இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்திக்கொண்டிருந்தது) விடுதலைப் புலிகள் இயக்கமும் மனித உரிமைக் குழுக்களும் இதனை இனப்படுகொலை என்றே குறிப்பிடுகின்றன. இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த ஏனைய படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள் என்பனவும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களாகவே நடந்தேறியுள்ளன.

ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும் என என 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2ஐ எழுதியது. இதன்படி இது ஒரு இனப்படுகொலைச் செயலாகும்.

துப்பாக்கிளும் போரும் தவிர்க்கப்படவேண்டிய இடங்களில் வைத்திய சாலை முதன்மையானது. வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆயுதத் தடைக் குறியிடுகள் வைக்கப்பட்டிருக்கும். உயிரை காக்க வேண்டிய வைத்தியசாலையை உயிரை அழித்தனர் இந்தியப் படைகள். அமைதி காப்பதற்காக வந்ததாக கூறிய படைகள் உயிர்களை பாதுகாக்க வேண்டிய அமைதி வலயமாக மதிக்க வேண்டிய வைத்தியசாலையை போர்க்களமாக்கினர்.

வைத்தியசாலைகளை போர்த் தவிர்ப்பு வலயமாக மதிக்க வேண்டிய போர் தர்மத்தை ஈழத்தில் மீறியவர்களில் இந்தியப் படைகளும் அடங்குகின்றனர். இவர்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினர் தமது உட்கட்சி முரண்பாட்டில் தாஸ் உட்பட்ட போராளிகளை வைத்தியசாலை வளாகத்தில் சுட்டுக்கொன்றனர். பின்னர் இலங்கை அரசுகள் வைத்தியசாலைகள்மீது பல தாக்குதல்களை நடாத்தி மக்களை இனப்படுகொலை செய்தது. ஈழத் தமிழ் இனப்படுகொலை விடயத்தில் இந்தியா இலங்கையை ஊக்குவித்தது. அதைப்போலவே வைத்தியசாலைகள்மீது தாக்குதலை நடத்தும் விடயத்திலும் இந்தியாவே இலங்கைப் படைகளுக்கு முன்னோடி.

சந்திரிக்கா அரசாங்கத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலை எவரும் மறக்க முடியாது. பிறந்து சில நிமிடங்களேயான பச்சிளங் குழந்தைகள் கூட மண்ணில் புதைந்தனர். குழந்தையை பெற்றெடுக்க வைத்தியசாலை வந்த தாய்மாரும் குழந்தைகளும் ஒன்றாக விமானக் குண்டுகளினால் மண்ணில் புதைக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அந்த தாக்குதலை எவரலாறும் மறக்க இயலாது. ஈழத்தில் வைத்தியசாலைமீது நடந்த மற்றொரு இனப்படுகொலை தாக்குதல் அது.

இதைப்போல மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீதும் கொடும் எறிகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். ஒரு நேர்காணலின் அப்போது இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீது ஒரே ஒரு எறிகணைதான் எறிந்ததாக சொன்னார். எத்தனை அதிர்ச்சிகரமான ஒப்புதல்? போரால் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் பரவியிருந்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இலங்கைப் படைகள் பிண வைத்தியசாலையாக மாற்றினர்.

மிகவும் மனித உரிமை மீறல் கொண்ட மனி குலத்திற்கு விரோதமான இப் படுகொலைகளுக்காக இதுவரையில் இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை. அத்துடன் இப் படுகொலைகளை தாம் புரிந்ததாக ஒப்புக்கொள்ளவுமில்லை.. ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளினால் அழிக்கப்பட்டமைக்கான நீதி கோரும் காலத்தில், இந்திய அரசு ஈழத்தில் மேற்கொண்ட படுகொலை நடவடிக்கைகளுக்கு என்ன நீதி கிடைத்தது என்பதையும் மதிப்பிடுவது இன்றைய நாட்களில் அவசியமானது.
.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More