இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

தீர்வை நோக்கி அரசை நகரச் செய்யும் போராட்ட வடிவம் அவசியம் – பி.மாணிக்கவாசகம்

அரசியல் உரிமை சாரந்த பிரச்சினைகள் காரணமாகவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போராட்டம் என்பது அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு விடயமல்ல. நாட்டில் உள்ள சன இனத்தவர்களுடன் சமநிலையிலான உரிமைகளோடு, ஐக்கியமாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்பதே அவர்களுடைய ஆழ் மன விருப்பமாகும்.
அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகளாயினும்சரி, அதனையொட்டி கிளை பரப்பியுள்ள அடிப்படை உரிமைகள், அரசியல் பிரச்சினைகள், அன்றாடப் பிரச்சினைகளாயினும்சரி, தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்பதே இந்த நாட்டின் அரசியல் வரலாறு.
மாறி மாறி ஆட்சிக்கு வந்த பேரினவாத அரசாங்கங்கள், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அவர்களுடைய அரசியல் வெற்றிக்கும், அரசியல் இருப்புக்கும், அதிகார சுகபோகங்களுக்கும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டன. அந்த மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து அவர்களுடன் நிரந்தரமான நல்லிணக்கத்தோடு ஐக்கியமாக வாழ்வதற்கு இந்த அரசாங்கங்கள் இதய சுத்தியுடன் முயற்சிக்கவில்லை.
ஒரு கட்சி அரசாங்கமாகவும், மறு கட்சி எதிர்க்கட்சியாகவும்  மாறி மாறி செயற்பட்டு வருகின்ற இரண்டு பிரதான தேசிய அரசியல் கட்சிகளுமே பேரினவாதத்திலும், அரசியல் முலாம் பூசிய பௌத்த மதமோகத்திலும் மீள முடியாத வகையில் மூழ்கியுள்ளன. இதனால், இந்த நாட்டின் தேசிய சிறுபான்மை இன மக்களுடைய அரசியல் உரிமைகள், அரசியல் நலன்கள், அரசியல் ரீதியான பிரச்சினைகள் என்பவற்றை இனவாத, மதவாத கண்ணோட்டத்துடனேயே இந்தக்கட்சிகள் நோக்கிச் செயற்பட்டு வருகின்றன.
 
செவிடன் காதில் ஊதிய சங்கு
ஒரு கட்சி ஆட்சி நடத்தும்போது, எதிர்க்கட்சியாக உள்ள மற்ற கட்சி, சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மேற்கொள்கின்ற முயற்சிகளுக்கு இனவாதத்தைக் கிளப்பி முட்டுக்கட்டை போடுவதை, இதன் காரணமாகவே வழமையான செயற்பாடாகக் காண முடிகின்றது.
எனினும், இரண்டு தேசிய அரசியல் கட்சிகளும் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் இணைந்து இப்போதைய அரசாங்கத்தை அமைத்திருப்பதன் மூலம், வழமையான தமது ஆட்சி முறை போக்கில்  இருந்து வேறுபட்டிருக்கின்றன.
எதிரும், புதிருமான செயற்பாடுகளைக் கொண்ட இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியும், ஏனைய பிரச்சினைகளiயும் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்பப்பட்டது.  இரண்டு தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்திருப்பது, இதற்கு அரசியல் ரீதியாகக் கிடைத்துள்ள, கிடைத்தற்கரிய நல்லதொரு வாய்ப்பாகவே கருதப்பட்டது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இதில் மிக ஆழமான  நம்பிக்கை கொண்டிருந்தார். அதன் காரணமாகவே, 2015 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நல்லாட்சி அரசாங்கத்தில் அடுத்த வருடமே – 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடத்திலும், தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாக வேரூன்றச் செய்திருந்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு  கடந்து, 2017 ஆம் ஆண்டு முடிவை நெருங்கியிருக்கின்ற நிலையிலும், அந்த எதிர்பார்ப்பு  நிறைவேறவில்லை.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்துள்ள, எதிரும் புதிருமான போக்கைக் கொண்ட இரண்டு தேசிய கட்சிகளுமே, அரசியல் தீரவு உட்பட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்  விடயத்தில் அரசியல் ரீதியாக உற்சாகத்தைக் காட்டவில்லை. துடிப்புடன் செயற்படுவதற்கு முன்வரவில்லை. மாறாக மந்த கதியிலான போக்கே கடைப்பிடிக்கப்படுகின்றது.  இதனால், பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு வேதனை குரல்களும், அந்த மக்களின் நியாயமான பல கோரிக்கைகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இந்த இரண்டு கட்சி அரசாங்கத்திடம் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
போராட்ட அரசியல் போக்கு 
இதனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இந்த ஏமாற்றமே, தாங்களே உருவாக்கிய அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடுவதற்கு அவர்களைத் தூண்டியிருக்கின்றது. இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள தமது சட்டரீதியான உரித்துடைய காணிகளை மீட்பதற்காக அவர்கள் வீதியில் இறங்கியிருக்கின்றார்கள். அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்;டவர்களுக்கு பொறுப்பு கூறுமாறு வலியுறுத்தி மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் இப்போது வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் ஒருங்கிணைக்கப்பட்ட வழிமுறைகளைக் காண முடியவில்லை. அரசியல் தலைமைகளை எடுத்தெறிந்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண முற்பட்டுள்ள தீவிரமானதோர் அரசியல் போக்கே, இதில் வெளிப்பட்டிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற போதிலும், மக்களுடைய எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வலுவான செயன்முறைகளை முன்னெடுப்பதிலும்பார்க்க, நல்லாட்சி அரசாங்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதிலேயே அது, கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்து ஆதரவளிக்கின்ற தலைமையின் இந்தப் போக்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை வெறுப்படையச் செய்திருக்கின்றது. அந்தக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் மாத்திரமே அரசியல் ரீதியான இந்தக் கசப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றது. ஏனைய கட்சிகள் பட்டும் படாத, தொட்டும் தொடாத ஒரு போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மத்தியிலும் இந்த கசப்பான உணர்வு காணப்படுகின்ற போதிலும், தலைமையின் சீற்றத்திற்கு அஞ்சியும் தமது அரசியல் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும் அவர்கள் அதனை மென்று விழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலைமைகளின் அடிப்படையிலேயே, தமிழ் மக்களுக்கான ஒரு மாற்று அரசியல் தலைமைக்கான சிந்தனையும், அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் துளிர்விட்டிருக்கின்றன.
மாற்றுத்தலைமைக்கான செயற்பாடுகள் ஒருபுறமிருக்க, செயல்வலிமையற்ற அரசியல் தலைமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு சிவில் அமைப்புக்களும் பொது அமைப்புக்களும் முற்பட்டிருக்கின்ற ஓர் அரசியல் போக்கு தலையெடுத்துள்ளது. தாங்களே தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு இது வலு சேர்த்திருப்பதையும் காண முடிகின்றது.
குறிப்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதரபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றிய சட்டமா அதிபரின் நடவடிக்கையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்த அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரியும் மாகாணம் தழுவிய அளவில் வடக்கில் நடத்தப்பட்ட கடையடைப்பு, அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கறுப்புக்கொடி போராட்டமும், இந்த புதிய அரசியல் போக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.
அழுத்தம் கொடுப்பதற்கான போராட்டம்
அது மட்டுமல்லாமல், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கறுப்புக்கொடி போராட்டம், தமிழ் மக்களுடைய அரசியல் போராட்ட வழிமுறைகள் குறித்து  ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.
அரசியல் கைதிகளின் விடுதலை, பொதுவாக அரச தலைவராகிய ஜனாதிபதியின் கைகளில் குறிப்பாக அவருடைய தீர்மானத்திலேயே தங்கியிருப்பதாகக் கருதப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகிய ஜனாதிபதி மைத்திரிபால நினைத்தால், அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பு வழங்க விடுதலை செய்ய முடியும் என்பது அநேகரின் எதிர்பார்ப்பு.
முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது, தன்னைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினார் என்று சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான சிவராஜா ஜெனிபன் என்ற இளைஞனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார். ஜனாதிபதி பதவியில் தனது ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற வைபவம் ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றிருந்தது.
அத்துடன் முன்னைய அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச இராணுவத்தின் பிடியில் இருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 12 ஆயிரம் பேரை மன்னித்து, இராணுவ புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்திருந்தார். இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது சிறைச்சாலைகளில் உள்ள 132 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஏந்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கை தமிழ்மொழித்தின விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கறுப்புக்கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவருக்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கம்.
மன்னார் எச்சரிக்கையும் யாழ்ப்பாண போராட்டமும்
இந்தப் போராட்டத்திற்கு முன்னர், மத நல்லிணக்கத்திற்கு முரணான வகையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையின் திறப்புவிழாவுக்கு வருகை தரவிருந்த அவருடைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி விழாவைப் பகிஸ்கரித்து போராட்டம் நடத்தப்படும் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் எச்சரிக்கை செய்திருந்தது. அந்த ஒன்றியத்தின் தலைவர் சிவகரன் இந்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிகழ்வுக்கு வருகை தரவில்லை. அதனால் போராட்டம் நடைபெறவில்லை.
இலங்கையின் தமிழ்ப்பிரதேசத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கு கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நல்லாட்சி அரசாங்கத்திற்கு உள்ளுரிலும், சர்வதேச அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே பலராலும் கருதப்பட்டது. இத்தகைய எதிர்ப்புக்கு அச்சமடைந்ததன் காரணமாகவே, மன்னாருக்கான ஜனாதிபதியின் விஜயம் இம்பெறவில்லை என்று அப்போது பலரும் எண்ணினார்கள். அதேபோன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடாகியிருந்த கறுப்புக்கொடி போராட்டம் காரணமாக அவருடைய விஜயம் இடம்பெறாமல் போகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிசார் நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்றிருந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்தார். திட்டமிட்டவாறு கறுப்புக்கொடி ஏந்திய ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. ஆனால் இத்தகைய போராட்டங்களின்போது, அரசியல்வாதிகளும்சரி முக்கியஸ்தர்களும்சரி, போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முகம் கொடுக்காமல் விலகிச் செல்வதைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணப் போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டுச் செல்லவில்லை.
மாறாக தனது வாகனத்தில் இருந்து இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நாடிச் சென்று, என்ன பிரச்சினை என்று வினவினார். அந்த இடத்தில் போராட்டத்தின் முன்னணியில் இருந்த வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் இந்த விடயம் குறித்து தெரியாத வகையில் தொனி செய்த அவர், அதுபற்றி பேச்சுக்கள் நடத்தலாம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களினால் நிரகாரிக்கப்பட்டது.
எச்சரிக்கை
இந்த நிகழ்வு குறித்து யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்த்தின விருது வழங்கும் விழாவில் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கறுப்புக்கொடி ஏந்துவதை விடுத்து, வெள்ளைக்கொடியை ஏந்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் கூறியிருந்தார். வன்முறை வேண்டாம். சமாதானமாகப் பேச்சுக்களை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்பதையும் அவர் அங்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களுடைய வாக்குப் பலத்தினால் பதவிக்கு வந்துள்ளதை நினைவூட்டிய அவர் தனது கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவ்வாறு பலப்படுத்தாவிட்டால், பேய்கள் தiயெழுத்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் போராட்டத்தை எதிர்கொண்ட விதம் குறித்து, பல்வேறு விதமான அரசியல் வியாக்கியானங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், கறுப்புக்கொடி போராட்டத்தை துணிச்சலோடு எதிர்கொண்டிருந்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனை அவரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களுடைய அரசியல் நலன்களுக்கான பிரசாரங்களுக்குப் பயன்படுத்துவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், இத்தகைய போராட்டங்கள் தங்களுடைய அரசியல் போக்கில் எந்தவிதமான மாற்றங்களையும் கொண்டு வரப் போவதில்லை என்பதை, தனது வாகனத்தில் இருந்து இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்து, பேசலாம் வாருங்கள் என அழைப்பு விடுத்ததன் மூலம் அவர் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.
அத்துடன் கறுப்புக்கொடி ஏந்தாதீர்கள். வெள்ளைக் கொடியை ஏந்துங்கள். வன்முறையைக் கைவிடுங்கள். எனது கரங்களைப் பலப்படுத்துங்கள். இல்லையேல் பேய்கள் பலம் பெற்றுவிடுவார்கள் என கூறியதன் மூலம் அவர் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கூற்று, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, அவருடைய ஆட்சி;க் காலத்தில் வன்முறைகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்களை நோக்கி, சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர் என கர்ச்சனை செய்திருந்ததை நினைவுட்டச் செய்திருக்கின்றது.
வன்முறையில் ஈடுபடாதீர்கள் வெள்ளைக் கொடியை ஏந்துங்கள். பேய்களை பலம் பெறச் செய்யாதீர்கள் என்ற கூற்றை ஆழ்ந்து செவிமடுக்கும்போது, அரசாங்கத்துடன், இணைந்து செல்லுங்கள், அரசாங்கம் தருவதை ஏற்றுக்கொண்டு அமைதியடையுங்கள். இல்லையேல் விபரீதங்கள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை தொனியின் சாயலை உணர முடிகின்றது.
தீர்வை நோக்கி நகரச் செய்யும் போராட்ட வடிவம் அவசியம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் வன்முறைகள் இருக்கவில்லை. அசம்பாவிதங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தி உரைக்கும் வகையிலும், அதன் அழுத்தத்தை உணர்ந்து அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதியைத் தூண்டும் வகையிலும் அந்தப் போராட்டம் காரசாரமாக அமைந்திருந்தது.
ஆனல் அந்தப் போராட்டம் அந்த இலக்கை எட்டவில்லை. மாறாக அந்தப் போராட்டத்தை தூசு தட்டியதைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தட்டிச்சென்றுள்ளார் என்றே கருத வேண்டியிருக்கின்றது. இந்தப் போராட்டத்தின் போது ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த விழாவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. அநதப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அரச தரப்பிடமிருந்து கிடைத்த எதிர் உணர்வும், ஜனாதிபதியைப் போலவே அரசாங்கமும் இந்தப் பிரச்சினையைத் தூசு தட்டும் விடயமாகவே கருதியிருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
இருந்த போதிலும், அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு போராட்டங்கள் அவசியமானவை என்பதிலும் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் அந்த மக்கள் எதிர்பார்க்கின்ற அளவில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பது, ஆட்சியாளர்களின் அரசியல் இருப்பை ஆட்டம் காணச் செய்கின்ற ஒரு விடயமாகவே நோக்கப்படுகின்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களுடைய ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஐக்கியம், ஒற்றுமை, அரசியல், பொருளாதார முன்னேற்றம் என்பவற்றுக்கு அடிப்படையானவை என்பதை அரச தரப்பினர் இன்னும் சரியான முறையில் உணரவில்லை என்பதே அரசியல் யதார்த்தமாகும்.
செயல்வலு மிக்க அரசியல் தலைமையும், ஒருங்கிணைந்த – சீராக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டச் செயற்பாடுகளும், தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையும் அவசியம் என்பது இப்போது உணரப்பட்டிருக்கின்றது. அதேவேளை, வழமையான போராட்ட வடிவங்களிலும் பார்க்க, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற புள்ளியை நோக்கி அரசாங்கத்தை நகரச் செய்கின்ற வகையிலான போராட்ட வடிவங்கள் குறித்தும் உணர வேண்டிய தருணம் இது என்பதும் உணரப்பட வேண்டும்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap