இலங்கை பிரதான செய்திகள்

இந்த வாரத்துக்கான வடமாகாண முதலமைச்சருக்கான கேள்வியும் பதிலும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வாரத்திற்கு ஒரு கேள்வி :
மக்களால் கேட்கப்படும்  பொதுவான கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன்  வாராவாரம் தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். இந்த வாரத்தின் கேள்வியும் பதிலும் இதோ –

கேள்வி – அரசியல் யாப்பை மாற்றக்கூடாதென மகா நாயக்க தேரர்கள் கோரியிருப்பதாக செய்தி வந்தது. தற்போது பிரதமர்   மகா நாயக்க தேரர் ஒருவர் வெளி நாட்டில் இருக்கும் போது இவ்வாறான தவறான செய்தியைப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் – இன்று தமிழர்கள் படும் அவஸ்தைக்குப் போதிய உரித்துக்கள் அவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படவில்லை  என்பதை விட தமிழர்களுக்கு எதுவும் வழங்கப்படாது என்ற, சிங்களவர்களுள் ஒரு சாராரிடம் வெறியாக அமிழ்ந்திருக்கும், எண்ணமே காரணம். அந்த வெறிதான் பண்டா செல்வநாயகம் உடன்பாட்டை கிழித்தெறியச் செய்தது. டட்லி செல்வநாயகம் உடன்பாட்டை கைவிடச் செய்தது. தமிழ் மக்களின் விடிவுக்கென ஒருவரால் நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்புக்காட்டி வந்தமைக்கு இந்த வெறியே காரணம். அதற்கு பிரதமர்  கௌரவ இரணில் விக்கிரமசிங்க ஒரு விதிவிலக்காக இருந்தார் என்று கூறமுடியாது. சந்திரிக்கா அம்மையார் 2000ஆம் ஆண்டில் அரசியல் யாப்புத் திருத்தம் பற்றிப் பேசிய போது அந்தத் திருத்த ஏற்பாடுகளின் பிரதிகளை அவரின் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள்ளேயே எரித்தனர். அந்த வெறியை அப்போது கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமது கட்சிக்கு சார்பாகப் பாவித்தார் என்றும் கூறலாம்.

ஆக மொத்தத்தில் தமிழர்களுக்கு எந்த விதச் சலுகையும் அளித்து விடக்கூடாது என்பதில் சிங்களத் தலைவர்களுள் ஒரு முக்கியமான பிரிவினர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளனர். பௌத்த சங்கத்தினர் அதற்கு விதிவிலக்கல்ல. இவ்வாறான தமிழர் மீதான வெறுப்பின் அடியை அல்லது ஆரம்பத்தை நாம் அடையாளம் காண வேண்டுமானால் 1919ம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும். இலங்கையர்களுக்குக் கூடிய அரசியல்ச் சட்ட சலுகைகளையும் உரிமைகளையுந் தாம் தர இருப்பதாகவும் எல்லாப் பிரிவினரும் அதாவது முக்கியமாகத் தமிழ், சிங்கள மக்கட் தலைவர்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறான அரசியல்ச்சட்டரீதியான திருத்தங்கள் கொண்டுவர வேண்டுமென்று கேட்கின்றார்களோ அவற்றை அவர்கள் தருவதாக ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். முக்கியமாக மக்கள் பிரதிநிதிகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் இரு சாராரும் ஒருமித்த கருத்தை முன்வைத்தால் தாம் அதை ஏற்றுக்கொள்வதாக ஆங்கிலேயர்கள் கூறினர்.

வடமாகாணத் தமிழ் மக்களின் சங்கத் தலைவராக அப்போது கௌரவ சபாபதி அவர்கள் இருந்தார். சிங்கள மக்கட் தலைவர்கள் பிரதேச வாரியாக நாட்டைப் பிரித்து ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒருவரைத் தேர்தல் மூலம் நியமிக்க வேண்டும் என்று கோரிய போது கௌரவ சபாபதி அவர்கள் அது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது என்றும் இனரீதியாக அந்தந்த இனங்களைப் பாதுகாக்கும் வண்ணம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதுவரையில் ஆங்கிலேயர் செய்து வந்ததும் அதைத்தான். அதாவது இனங்கள் எல்லாவற்றையும் சமமாகக் கருதி அந்தந்த இனங்களுக்காக பிரதிநிதிகளை ஆங்கிலேயர் நியமித்து ஆட்சியை நடாத்தி வந்தனர். இதை எப்படியாவது பிரதேசவாரித் தேர்தல் முறைக்கு மாற்ற சிங்களத் தலைவர்கள் கங்கணம் கட்டியிருந்தார்கள். அதாவது அவர்களின் பின்னணியில் நாட்டின் முழுமையான அதிகாரக் கையேற்பு என்ற குறிக்கோள் கரவாக உள்ளிருந்தது. தமிழ் மக்களின் எதிர்ப்பு இருந்ததை அறிந்து அவர்கள் சேர் பொன்னம்பலம் அருணாசலத்தை அண்டினார்கள். ஆங்கிலேயரின் சட்டவாக்க மன்றத்தில் முன்னர் கடமையாற்றியவர் என்ற முறையிலும் பல முக்கியமான அரச பதவிகளை வகித்தவர் என்ற முறையிலும் அவருக்கு சகல மக்களிடையேயுஞ் செல்வாக்கு இருந்தது. அத்துடன் அவர் சிங்கள மக்கட் தலைவர்களை முழுமையாக நம்பியிருந்தார். அவரைப் பொறுத்தவரையில் தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டின் இரு கண்கள் என்றும்; இந்து மதமும் பௌத்தமும் ஒரே பாரம்பரியத்தில் உதித்ததாலும்; இந்து மத ஆதிக்கம் பௌத்தத்தில் நடைமுறையில் காணப்பட்டதாலும் இலங்கையானது மத இணக்கத்திலும், இன இணக்கத்திலும் மேம்பட்டு நல்லிணக்கத்திற்கும் ஒத்துழைப்புக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வருங்காலத்தில் அமையும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.

அவரை அண்டி கௌரவ சபாபதியின் மனதை மாற்றி பிரதேச வாரியான தேர்தலுக்கு அவரை உடன்பட வைக்க வேண்டும் என்று கோரினார்கள் அப்போதைய சிங்களத் தலைவர்களான சேர். ஜேம்ஸ் பீரிசும், ஈ.ஏ.சமரவிக்கிரம அவர்களும். கொழும்பில் தமிழர்களுக்கென ஒரு மேலதிக ஆசனத்தைத் தருவதாக அவர்கள் எழுத்து மூலம் ஒப்புக் கொண்டார்கள். வடமாகாணத்திற்கு மூன்று ஆசனங்கள், கிழக்கிற்கு இரண்டு ஆசனங்கள் கொழும்புக்கு ஒரு ஆசனம் என்று கூறப்பட்டது. மலை நாட்டில் இருந்தும் தமிழ்ப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருந்ததாலும் மேலும் தமிழ்ப்பேசும் முஸ்லீம்கள் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருந்ததாலும்; 55 ஆசனங்களில் இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவழித் தமிழர், தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்கள், தமிழ்ப் பேசும் மலாய் மக்கள் எனப் பலரும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்ற அடிப்படையில் இனரீதியான பிரதிநிதித்துவத்தைக் கைவிட்டு பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்திற்கு உடன்படுமாறு சேர் அருணாச்சலம் அவர்கள் கோர அதைத் தட்டமுடியாமல் கௌரவ சபாபதி அவர்கள் பிரதேசப் பிரதிநிதித்துவத்திற்கு ஒத்துக் கொண்டார்.

சிங்கள மக்கட் தலைவர்கள் மத்தியில் கரவான எண்ணமொன்று இருந்து வந்ததை சேர் அருணாசலம் அவர்கள் அறிந்திருக்க வில்லை. உண்மையில் தமையனார் சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் சிங்கள மக்கட் தலைவர்கள் கபட உள்ளம் கொண்டவர்கள், அவர்களை நம்பாதே என்று தம்பியை எச்சரித்தும் இன்றைய எமது தமிழ் மக்கட் தலைவர்கள் போல் அன்று சிங்கள அரசியல்த் தலைவர்களை சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் நம்பிக் கெட்டார். ஆறு கடந்ததும் நீயாரோ நான் யாரோ என்றனர் அச் சிங்களத் தலைவர்கள்.

பிரதேச வாரியான தேர்தல் முறையைத் தமிழர்களும் சிங்களவர்களும் ஒத்துக் கொண்ட உடனே அதன் அடிப்படையில் தேர்தல்களை நடத்தினார்கள் ஆங்கிலேயர்கள். சிங்களவர்கள் பெரும்பான்மையாக பிரதேச ரீதியாக நியமிக்கப்பட்டார்கள். அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம் போன்றவை சிங்கள மக்கட் தலைவர்கள் வசம் சிக்குண்டன. தமிழர்களுக்கென கொழும்பில் ஒரு ஆசனம் என்றவர்கள் தேர்தலின் போது அதற்கு இடமளிக்கவில்லை. சேர் அருணாசலம் அவர்கள் ஏமாற்றப்பட்டார். சிங்கள ஆதிக்கம் அப்பொழுதிருந்தே ஆரம்பமாகியது. அதிகாரத்தைத் தம்வசம் எடுத்துக் கொண்ட சிங்கள மக்கட் தலைவர்கள் அதனைச் சிறிதும் தளர்த்த முன்வந்தாரில்லை. மாறாக அரச அவை (State Council) தாபிக்கப்பட்ட போது சிங்களவர் மட்டும் அமைச்சரவையை (Pan Sinhala Cabinet) நியமித்தார்கள். அதற்கு அடி எடுத்துக் கொடுத்தவர் எமது மதிப்பிற்குரிய அப்போதைய கணிதப் பேராசிரியர் திரு.சி.சுந்தரலிங்கம் அவர்கள்.

ஆகவே இன்று அரசியல் அமைப்பில் மாற்றம் வேண்டாமென்று மகா நாயக்க தேரர்களோ வேறெந்த சிங்களத் தலைவர்களோ கோருகின்றார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அன்று 1919ம் ஆண்டில் இருந்து தாம் பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரத்தை எவ்வகையிலேனும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே அவர்களின் குறிக்கோளும் அபிலாஷையும். அதிகாரம் பகிரப்பட்டால் இதுவரை சிங்கள மக்கட் தலைவர்கள் முழு நாட்டையும் ஆண்டு வந்த முறைமை இல்லாதொழிக்கப்படும். மீண்டுந் தமிழ் மக்கள் தங்கள் தங்கள் இடங்களில் தலை நிமிர்ந்து வாழத் தலைப்பட்டுவிடுவார்கள் என்ற பயமே அவர்களின் இந்தக் கோரிக்கைக்குக் காரணம்.

எப்பொழுதுமே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் மீது ஒரு பயம் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இரு தரப்பாரும் பரீட்சைகளில் ஒருமித்து ஆஜரானால் தமிழர்கள் எந்த துறையானால் என்ன அவற்றில் சிறப்பாகப் பரீட்சை எழுதி வெற்றி காண்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே தமிழர்களை எழும்ப விடக்கூடாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் கரவாக இடம்பிடித்திருந்தது. அவ்வாறான கரவு எண்ணங்கள் கொண்ட பலர் இன்றும் சிங்கள மக்கட் தலைவர்களிடையே வாழ்கின்றார்கள். அவர்களின் சிந்தனையும் எதிர்பார்ப்புமே அரசியல் யாப்பில் மாற்றம் வேண்டாமென்பது. இதன் அடிப்படை நோக்கம் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கும் போது அதனை நிர்ணயிக்கும் பொறுப்பைத் தாம் தம் வசம் வைத்துக் கொண்டே கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே. தேரர்களோ வேறெவறாயினும் அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டாம் என்றால் அதற்குரிய காரணம் நான் மேலே குறிப்பிட்ட காரணங்களேயாவன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.